அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, June 17, 2010

அகிம்சைக் கப்பல்கள்

விடுதலை அணிக்கப்பல்கள் (Freedom Flotilla) என்று பெயிரிடப்பட்டு, மே 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சைப்ரஸ் நாட்டுக் கடற்கரையிலிருந்து கஸ்ஸாவை நோக்கி, ஆறு கப்பல்களின் அணிவகுப்பு ஒன்று புறப்பட்டது. அதில் 10,000 டன் பொருட்கள் இருந்தன. வெடிமருந்து, குண்டு, ஆயுதம் போன்ற கெட்ட சமாச்சாரம் எதுவும் இல்லை. அனைத்தும், உணவு, மருந்து, கட்டடங்கள் சீரமைக்க சிமென்ட் இப்படியான சில அத்தியாவசியப் பொருட்கள். தவிர 700 பிரயாணிகள் இருந்தனர். அவர்களில் எவரும் தீவிரவாதிகளோ, கொள்ளைக்காரர்களோ, மாஃபியாக்களோ அல்லர். உலகறிந்த நல்லவர்கள். நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டு மைரியட் கோர்ரிகன் மெக்கொயர் (Mairead Corrigan Maguire), ஹிட்லரின் யூதப் படுகொலைகளில் தப்பித்த யூதர், மற்றும் ஜெர்மனி, துருக்கி, ஜோர்டான் நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், டாக்டர்கள், நர்ஸுகள் இப்படி சமூகத்தில் நல்ல நிலையிலுள்ள நல்லுள்ளம் கொண்ட மக்கள்.

இந்த 10,000 டன் பொருட்களுடன் கிளம்பிய அவர்களுக்கு முக்கியமான ஜோலி ஒன்று இருந்தது. சக மனிதர்கள் சிலர் அத்தியாவசியப் பொருட்கள் ஏதுமின்றி வாழ்வா, சாவா என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டும். என்பதன்றி உள்நோக்கம் வேறு எதுவும் இல்லை. கப்பல்களின் பயணம் துவங்கியது.


மே 30, இரவு 10:30 மணி. விடுதலை அணிக்கப்பல்களை இஸ்ரேலிய இராணுவம் நெருங்கியது; நிற்கும்படி கட்டளையிட்டது. ஆனால் அவை அடிபணியாமல் தம் பயணத்தைத் தொடர்ந்தன.


மே 31, அதிகாலை 1:30 மணி. இஸ்ரேலியர்கள் அந்த ஆறு கப்பல்களையும் குறிப்பிட்ட தொலைவில் பின் தொடர ஆரம்பித்தனர்.


மே 31, அதிகாலை 4:30 மணி - கமாண்டோ படைகளுக்குத் தலைமையிடத்திலிருந்து சமிக்ஞை வந்து சேர்ந்தது. அவ்வளவுதான், விடுதலை அணியின் தலைமைக் கப்பல் மேவி மார்மரா (Mavi Marmara) விற்குள் ஹெலிகாப்டரில் இருந்து கமாண்டோக்கள் குதித்தனர். தடுத்து எதிர்கொண்டனர் அதிலிருந்த மக்கள். சலசலப்பும் களேபரமும் ஏற்பட்டன. யூதர்களால் ஒன்பது செயல்வீரர்கள் கொடூரமாய்ச் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தச் செயல்வீரர்கள் அனைவரும் துருக்கி நாட்டவர். கப்பல் தரையில் இரத்தம் தெறித்துப் பரவியது.


கஸ்ஸாவின் வெளியே, கடலில் 65 கி.மீ. தொலைவில் சர்வதேச நீர்ப் பரப்பில் இது நிகழ, அதிகாலை சேவல் கூவுவதற்கு முன்பாகவே, இந்த அயோக்கியத்தனமான கொலைச் செயலை எதிர்த்து உலக நாடுகள் பல கோபத்துடன் கூவ ஆரம்பித்தன. கடும் கண்டன அலை எழுந்து பரவியது.


அதையெல்லாம் பெரிதாய் ஏதும் பொருட்படுத்தாத இஸ்ரேல், "கப்பலில் இருந்த அந்த ஒழுக்கமற்ற கும்பல் எங்கள் படை வீரர்களை உயிர்க்கொல்லி ஆயுதமான மட்டைகளாலும் கம்புகளாலும் தாக்க ஆரம்பித்தனர். எங்கள் அப்பாவி வீரர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள லேசாய்ச் துப்பாக்கியால் தடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதில் ஒன்பது பேர் செத்துப் போனால் நாங்கள் என்ன செய்வது?" என்று சொல்லிவிட்டு ஹீப்ருவில் சிரித்துக் கொண்டது.


என்ன இது அக்கிரமமாய் இருக்கிறதே என்று தோன்றுகிறதா? அல்லது இது ஒன்றுமே புரியவில்லையா? ஒன்றும் பிரச்சனையில்லை. இஸ்ரேல் அப்படித்தான். அவர்களது நியாயம் அப்படித் தான்.
* * * * *

ஒரு தகவலுக்காக மற்றுமொரு அக்கிரமத்தை இங்குத் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரின் அருகே உள்ள மற்றொரு நகரம் ஒலிம்பியா. இந்த நகரைச் சேர்ந்த 24 வயது மாணவி ஒருவர் தனது படிப்பிற்கு ஒரு வருடம் விடுமுறை எடுத்துக் கொண்டு பயணம் சென்றார். உல்லாசப் பயணமல்ல, ஃபலஸ்தீனில் உள்ள கஸ்ஸாவிற்கு. அது 2003ஆம் ஆண்டு. அப்பொழுது கஸ்ஸாவில் உள்ள வீடுகளை யூத ராணுவம் புல்டோசர்களைக் கொண்டு சகட்டு மேனிக்கு இடித்துத் தள்ளிக் கொண்டிருந்தது. சர்வதேச ஒருமைப்பாட்டு இயக்கத்தின் (International Solidarity Movement - ISM) சார்பில் ஃபலஸ்தீனர்களுக்கு உதவுவதற்காகவும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராகவும் உலகம் முழுவதிலிருந்தும் பல தன்னார்வலர்கள் வந்திருந்தார்கள். அதற்குத்தான் அந்த மாணவியும் வந்து சேர்ந்தார்.


மார்ச் மாதம் 16ஆம் தேதியன்று ஒரு ஃபலஸ்தீனியரின் வீட்டை புல்டோசர் ஒன்று இடித்துத் தள்ள புறப்பட்டு வந்தது. இந்த மாணவியும் மற்றும் சிலரும் அதைத் தடுத்து நிறுத்தி மறியல் செய்தனர். கொஞ்சங்கூட ஈவிரக்கமில்லாமல், அமைதி இயக்கத்தைச் சேர்ந்த செயல்வீரர்கள் அவர்கள் என்பதையும் கருதாமல், அந்த மாணவியை புல்டோசரால் நசுக்கிக் கொன்றது யூத ராணுவம். "அடடா, இது ஒரு விபத்து. அந்த மாணவி நின்றது டிரைவர் கண்ணுக்குத் தெரியவேயில்லை" என்று ஒப்புக்கு வாதாடியது இஸ்ரேல். ஒன்றல்ல, இரண்டல்ல அதைக் கண்ணால் பார்த்த அனைத்து சாட்சிகளும் அது விபத்தல்ல, அப்பட்டமான கொலை என்று அடித்துச் சொல்லினர். "ஸோ வாட்?" என்றது இஸ்ரேல்.


உலகின் எந்த மூலையிலும் தன் நாட்டுக் குடிமகனுக்கு ஒரு பிரச்சனை என்றால் வரிந்து கட்டிக் கொண்டு உடனே ஓடி வருமே அமெரிக்கா! இந்தக் கொலை விஷயத்தில் மட்டும் இஸ்ரேலிடம் ஒரு சம்பிரதாயத்திற்குக்கூட விசாரணை நடத்தவில்லை. அவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டது!

* * * * *

கஸ்ஸா எனும் ஊர் அல்லது பிராந்தியம், ஃபலஸ்தீன் நாட்டை யூதர்கள் ஆக்கிரமித்து மேய்ந்தபின் தென் மேற்குப் பகுதியில் ஒதுங்கிய ஒரு மிச்ச சொச்சம். இங்குச் சுமார் 15 இலட்சம் மக்கள் வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பகுதி மேற்குக் கரை (West Bank). இதை ஃபதாஹ் அமைப்பு நிர்வகித்து வர, கஸ்ஸாவை ஹமாஸ் நிர்வகித்து வருகிறது. ஆண்டாண்டு காலமாய், பிறந்து வளர்ந்து வந்த மக்கள் தங்களது நிலம், உடைமை அனைத்தும் பறிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாய் ஆகிவிட்டிருக்க, மேற்குலகிலிருந்து வெளியேறி வந்த யூதர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் அசுரனாய் தங்களின் அரசாங்கத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஃபலஸ்தீன் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடி வரும் ஹமாஸிற்கும், இஸ்ரேலுக்கும் என்றுமே ஒவ்வா உறவு. ஏனெனில் இஸ்ரேலின் நியாயத்திற்கு சொரணை மரத்துப்போன மனிதனாலும்கூட இணங்கிப் போக முடியாது. அப்பேற்பட்ட யோக்கியதை யூதர்களுடையது. ஹமாஸ் போராளிகள் கஸ்ஸா மக்களின் ஏகோபித்த அபிமானத்திற்கு உள்ளானவர்கள். அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கஸ்ஸாவில் அரசு அமைத்தவர்கள். ஆனால் தாங்கள் ஆட்டுவிக்கும் பொம்மைகள்போல் இல்லை அவர்கள் என்பது தெரிந்ததும் என்ன செய்வார்கள் சட்டாம் பிள்ளைகள்? ஹமாஸ் என்பது தீவிரவாத முத்திரை குத்தப்பட்ட இயக்கமாகிவிட்டது. விடுதலைப் போருக்கு அயோக்கியர்கள் இட்ட நாமகரணம் அது.

ஓயாத, ஒழியாத தொல்லை தரும் இந்த கஸ்ஸாவையும் ஹமாஸையும் நசுக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இஸ்ரேல் ஓர் உபாயம் செய்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக கஸ்ஸா மக்களின்மேல் அக்கிரமமான முறையில் பொருளாதாரத் தடை நிகழ்த்தி வருகிறது. சுருக்கமாய்ச் சொல்வதென்றால் உங்கள் வீட்டிற்குள் சிலர் புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டு, ஓர் அறையில் உங்களையும் குடும்பத்தினரையும் பூட்டி வைத்து விட்டு, துண்டு ரொட்டியைத் தூக்கிப் போட்டு, "இதைச் சாப்பிட்டு பிழைத்துக் கொள்" என்றால் எப்படி இருக்கும்? மிகையற்ற உதாரணம் இது.

இந்தப் பொருளாதாரத் தடை "உலகத்தின் மிகப் பெரும் மனித உரிமை மீறல்". தவிர, சர்வதேச சட்டத்தின்படியும் மிக முறைகேடானது. யார் தட்டிக் கேட்பது? கேட்க வேண்டியவர்களுக்குதான் எப்பொழுதுமே ஒரு பக்கக் காது மந்தமாயிற்றே!

American Near East Relief Association (ANERA) என்பது இஸ்ரேல், ஃபலஸ்தீன் என எந்தச் சார்பும் அல்லாத அமைப்பு. அரசியல் ஆதாயம் எதுவும் இன்றி வெறும் மனிதாபிமான அடிப்படையில் பணி புரிந்து வருகிறார்கள். ஏதோ போனால் போகட்டும் என்று கண் துடைப்பாக இஸ்ரேல் (மற்றும் அமெரிக்கா) அனுமதிக்கும் அளவிற்கு கஸ்ஸா மக்களுக்கு அவர்களால் நிவாரணம் எடுத்துச் செல்ல முடிகிறது.

அவர்கள் இன்றைய கஸ்ஸா நிலவரம் பற்றித் தகவல் தொகுத்து வைத்திருக்கிறார்கள். மிகவும் சங்கடமான விபரங்கள் அவை. அதில் கொஞ்சம் கீழே:

  • கஸ்ஸாவில் சுமார் 15 இலட்சம் மக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பது அதிகாரபூர்வத் தகவல்களின் கணிப்பு. இவர்களில் பாதிக்கும் மேல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்-சிறுமியர், குழந்தைகள்.
  • 10இல் 8 பேர் வெளியிலிருந்து வரும் உதவியைக் கொண்டே உயிர் பிழைக்கும் நிலையில் உள்ளனர்.
  • உலக உணவு திட்டம் எனும் அமைப்பின் கூற்றுப்படி குறைந்த பட்சம் நாளொன்றிற்கு 400 லாரிகள் அளவிற்காவது உணவுப் பொருட்கள் தேவைபடுகின்றன. ஆனால் ஒரு வாரத்துக்கே தோராயமாய் 171 லாரிகள்தான் கஸ்ஸாவிற்குள் நுழைகின்றன.
  • தானமாய் வந்து இஸ்ரேலிய துறைமுகத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாய்க் கிடந்து மக்கிய உடைகள்தாம் கஸ்ஸா மக்களை வந்தடைகின்றன - உபயோகப்படுத்த இயலாத வகையில்.
  • தண்ணீர்? உலக சுகாதார அமைப்பின் தர நிர்ணயபடி 95 சதவிகிதம், உபயோகத்திற்கே லாயக்கற்றது.
  • சிறு குழந்தைகள் சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தொழிற்சாலை உபகரணங்கள் அனுமதிக்கப்படாததால் மாசு நீக்கப்படாத 7 கோடி 50 இலட்சம் லிட்டர் கழிவுகள் கடலில் கலந்து வருகின்றன.

இத்தகைய நிலைமையில்தான் வாழ்ந்தும் போராடியும் வருகிறார்கள் கஸ்ஸா மக்கள். விஷயம் இவ்வாறிருக்க இவர்களால் தங்கள் நாட்டிற்கு பிரச்சனை அதிகமாகியுள்ளது என்று எகிப்து அரசாங்கம் தன் பங்கிற்குத் தனது எல்லையை இவர்களுக்கு அடைத்து விட்டது. எல்லை தாண்டி நாட்டிற்குள் ஊடுருவி விடுகிறார்களாம். உயிர் பிழைக்க என்னதான் செய்வார்கள் அவர்கள்? அயராத கஸ்ஸா மக்கள் சுரங்கம் தோண்டினார்கள். அத்தியாவசியப் பொருட்களை அந்தச் சுரங்கங்களின் வாயிலாய் எகிப்திலிருந்து கஸ்ஸாவிற்குள் கொண்டு வர ஆரம்பித்தார்கள். அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எகிப்திற்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்து சேர்ந்திருக்க வேண்டும். உடனே எகிப்து அதிபர், கோடிக் கணக்கில் செலவிழத்து திட்டம் ஒன்று தீட்டினார். காஸா மக்களுக்கு உதவி வழங்கும் திட்டமெல்லாம் இல்லை. பூமிக்கு அடியிலுள்ள அந்த சுரங்கங்களை எஃகுத் திரை கொண்டு மூட! எப்படியும் கஸ்ஸா மக்களை ஒழித்துக் கட்டியே ஆகவேண்டும் என்பதுபோல்தான் அனைத்தும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில்தான் கஸ்ஸாவை விடுவி (Free Gaza) எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. மொழி, மதம் கடந்து சமூகத்தின் பல்வேறு துறையைச் சார்ந்த செயல் வீரர்களால் (activist) தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு. அவர்களின் நோக்கம், மிகவும் தெளிவானது, எளிதானது. அக்கிரமமான இந்தத் தடைக்கு சாத்வீக முறையில் சவால் விடுக்க வேண்டும். கஸ்ஸா மக்களுக்கு எப்பாடுபட்டாவது உதவிப் பொருட்கள் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும், அவ்வளவே.


2008ஆம் ஆண்டு இறுதியிலேயே இவர்கள் அதை ஆரம்பித்து விட்டார்கள். இரு சிறிய மீன்பிடி படகுகளில் சில நிவாரணப் பொருட்கள் எடுத்துச் சென்று கஸ்ஸா துறையில் இறங்கினார்கள். இவர்களின் நோக்கத்திற்கு ஆதரவு பெருகி உலகளவிலும் பலர் இணைய ஆரம்பித்தார்கள். மலேஷியாவின் முன்னாள் பிரதம் டாக்டர் மஹாதீர் முஹம்மது இதற்கென நிதி திரட்டி உதவியுள்ளார்.


அன்றிலிருந்து அவ்வப்போது இப்படி இந்த அமைப்பின் மூலம் கப்பல் சென்று கொண்டிருக்க, அவ்வப்போது அதையும் இஸ்ரேல் தடுத்தே வருகிறது. அதன் உச்சக்கட்டம்தான் விபரீதத்தில் முடிந்த மேற்சொன்ன நிகழ்வு.


இந்தக் கப்பல் அணிவகுப்பில் பங்கெடுத்துக் கொண்ட நாடுகள், பிரிட்டன், அயர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ் மற்றும் துருக்கி. இன்ஸானி யார்டிம் வக்ஃபி (Insani Yardim Vakfi) எனும் மனித உதவி அமைப்பிற்குச் சொந்தமானவை அந்தக் கப்பல்கள். அந்த அமைப்பு துருக்கி நாட்டு அரசாங்கம் சாரா நிறுவனம் (NGO). இதுதான் அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தது. இந்தக் கப்பல்கள் அனைத்தும் அயர்லாந்து, கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து கிளம்பி சைப்ரஸ் வந்து சேர்ந்து அங்கிருந்து அணியாய்க் கிளம்பின. Free Gaza அமைப்பு ஏற்பாடு செய்து, அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் அளித்துள்ள நன்கொடைகள் மற்றும் தன்னார்வச் செயல்வீரர்களின் துணையுடன் 10,000 டன் உதவிப் பொருட்களைத் திரட்டியிருந்தது. மலேஷிய நாடு மிக அதிக நன்கொடை அளித்திருந்தது. அதில் மருந்து, கல்வி, மற்றும் கட்டட புனர்நிர்மாணப் பொருட்கள் ஆகியன அடங்கும்.


கப்பல்கள் கிளம்பும்முன் துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் இஸ்ரேலிடம் முறையான கோரிக்கை வைத்தார். ஆனால், "இஸ்ரேலுக்கு எதிரான வன்முறைப் பிரச்சாரம் இது. எங்கள் நாட்டு இறைமைக்கு பங்கம் விளைவிக்க விடமாட்டோம்" என்று இஸ்ரேல் மறுத்து விட்டது. அந்தக் கப்பல்களைத் தங்கள் நாட்டு துறைமுகம் அஷ்டோடுக்கு (Ashdod) இழுத்துச் செல்வோம் என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு விட்டது.


கப்பலில் இருந்தவையோ நிவாரணப் பொருட்கள். உடன் சென்றவர்கள் சமூக ஆர்வலர்கள். கடலில் நடந்த அஹிம்சை யாத்திரை அது. அதற்குத்தான் இஸ்ரேல் துப்பாக்கியால் முடிவுரை எழுதியது. அந்த அரசாங்கத்தையும் அந்த வீரர்களையும் தீவிரவாதிகள் என்று சொல்வதில் என்ன தயக்கம் வேண்டியிருக்கிறது?


துருக்கி இதற்குமுன்வரை இஸ்ரேலுக்குத் தோழன்தான். ஆனால் இந்த நிகழ்வு அதற்குப் பெரும் கோபாவேசத்தைத் தோற்றுவித்து விட்டது. இறந்தவர்கள் அனைவரும் துருக்கியர்கள். அதில ஒருவர் துருக்கியைச் சேர்ந்த அமெரிக்கர். தனக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும் திருகு வலியும்? இஸ்ரேலுக்கான தன்னுடைய வெளியுறவுத் தூதரை திரும்பப் பெற்றுக் கொள்வதாய்த் அறிவித்தது துருக்கி. தவிர, "தனது இந்த நடத்தையின் பின்விளைவை இஸ்ரேல் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று துருக்கியின் வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது சற்று எதிர்பாராததுதான். துருக்கியிடமிருந்து யூதர்களே எதிர்பாராத சற்றுக் கடினமான சொற்கள் அவை. அந்த அளவிற்குத் துருக்கிக்கு வீரியத்தை அளித்து விட்டது அந்த நிகழ்வு. இஸ்ரேலியப் பொருட்களைப் புறக்கணிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இது தவிர ஐரோப்பாவில் கிரீஸ், டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளும் தங்களது நாட்டிலுள்ள இஸ்ரேலிய வெளியுறவுத் தூதரை அழைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் அமெரிக்கா மட்டும், "உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த நிகழ்வைச் சுற்றியுள்ள பின்னணியை அறிந்து கொள்வதில் முயற்சி எடுத்துள்ளோம்" என்று வாழைப்பழத்தை விளக்கெண்ணெய்யில் தோய்த்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


துணை ஜனாதிபதி ஜோ பிடேன் (Joe Biden), இஸ்ரேல் சர்வதேச நாடுகளை இணைத்து ஒரு புலன் விசாரண செய்யலாம் என்று இந்த நிகழ்வுக்கு ஆலோசனை தெரிவித்தார். ஐ.நா.வின் விசாரணைக்கு எல்லாம் இடமே இல்லை என்று அடித்துச் சொல்லிவிட்ட இஸ்ரேல் இதற்கு மட்டும் ஒத்துக் கொண்டது. ஏனெனில் விசாரணை செய்யப்போவது இஸ்ரேலிய அதிகாரிகள், மற்ற நாடுகள் பார்வையாளர்கள், அவ்வளவே!


ஏன் ஐ.நா. விசாரணை வேண்டாமாம்? டிசம்பர் 2008 கஸ்ஸாவில் இஸ்ரேல் புரிந்த அட்டூழியத்தை விசாரணை செய்த ஐ.நா., இஸ்ரேலியத் துருப்புகள் நிச்சயமாய்ப் போர்க் குற்றங்கள் புரிந்துள்ளன என்று பலமான ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவித்துவிட்டிருந்தது. அதனால் துளியூண்டு யோக்கியத்தை மிச்சம் வைத்திருக்கும் ஐ.நா. விசாரணை சரிவராது என்ற காரணம்தான்.


எத்தனையோ கொடுங்கோலான அட்டூழியங்களை இஸ்ரேல் நிகழ்த்தியுள்ளது. இது அந்த வரலாற்றில் இணையும் மற்றொரு அத்தியாயம். என்ன, இந்த ஒரு நிகழ்வு அனைத்து உலக நாடுகளுக்கும் அரக்க இஸ்ரேலின் தோற்றத்தை சற்று அதிகம் உணர வழிவகுத்துள்ளது. அவ்வளவுதான். மற்றபடி அமெரிக்காவின் கண்கள் வழக்கம்போல் மூடியே உள்ளன.


இந்த நிகழ்வு இஸ்ரேல்-பாலஸ்தீன் அமைதிப் பேச்சுவார்த்தையைப் புதிப்பிக்க ஒரு வாய்ப்பளிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இந்தக் கூத்தை என்னவென்று சொல்வது?


இவ்வளவு களேபரத்தைத் தொடர்ந்து அசரவில்லை Free Gaza. அடுத்து உடனே மற்றொரு கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றி அதேபோல் கஸ்ஸாவிற்கு அனுப்பி வைத்தது. இம்முறை அயர்லாந்து அந்தக் கப்பலை அனுப்பியது. 1000 டன் நிவாரணப் பொருட்களுடனும், 9 மாலுமிகள் மற்றும் ஐந்து நாடுகளைச் சேர்ந்த 11 பயணிகளுடனும் கப்பல் பயணித்தது. அதில் பெரும்பாலானவர்கள் அயர்லாந்து, மற்றும் மலேஷியா நாட்டுச் செயல் வீரர்கள். பெஞ்சமின் நெடன்யாஹு (Benjamin Netanyahu) தன்னுடைய படைகளுக்குக் கூறினார். "அதையெல்லாம் அனுமதிக்காதீர்கள். ஆனால் பார்த்து கவனமாகவும் மரியாதையாகவும் அவர்களைத் தடுத்து அழைத்து வாருங்கள்" இம்முறை குதர்க்கம் புரியாமல் ஆனால் வலுக்கட்டாயமாக, கஸ்ஸாவை நோக்கி முன்னேறிச் சென்ற அந்தக் கப்பலை, தனது துறைமுகத்திற்கு இழுத்து வந்து சேர்த்தது யூத இராணுவம்.


இந்தக் கப்பலுக்கு ரேச்சல் கோரி (MV Rachel Corrie) என்று பெயரிட்டிருந்தார்கள். ரேச்சல் கோரி வேறு யாருமல்ல, 2003-ஆம் ஆண்டு இஸ்ரேலிய புல்டோசரால் நசுக்கப்பட்ட அமெரிக்க மாணவி.

எல்லாஞ் சரி. அரபு நாடுகள் என்ன செய்கின்றன? அவர்கள் இப்பொழுது தான் கார் விட ஆரம்பித்துள்ளார்கள்.

- நூருத்தீன்

Wednesday, June 16, 2010

"ஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருக்கின்றார்" - அஹ்மதிநிஜாத்





அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், அவருடைய பேச்சையோ அல்லது உரையாடல்களையோ கேட்டதோ, பார்த்ததோ இல்லை.

அவருடைய சமீபத்திய நேர்க்காணல் ஒன்றை தமிழில் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. சென்ற மாதம் நான்காம் தேதி, ABC தொலைக்காட்சியின் "குட் மார்னிங் அமெரிக்கா" நிகழ்ச்சியில் பங்கேற்றார் அஹ்மதிநிஜாத். அவரை பேட்டி கண்டது பிரபல தொலைக்காட்சி செய்தியாளரான ஜார்ஜ் ஸ்டீபனோபவ்லோஸ் அவர்கள்.

அதிரடியான நேர்க்காணல் அது.

அணு ஆயுத பரவல் உடன்பாட்டைப் பற்றிய கலந்தாய்வில் ஐக்கிய நாடுகள் சபையில் அஹ்மதிநிஜாத், "ஈரானின் அணு செறிவு நடவடிக்கை உலகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. மாறாக அமெரிக்காவே உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது" என்று உரையாற்றியதற்கு மறுநாள் இந்த நேர்க்காணல் நடைப்பெற்றது.

"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்" என்று தன்னுடைய பேச்சை தொடங்கிய ஈரான் அதிபர், தன்னுடைய பதில்களால் பார்வையாளர்களை அசர வைத்தார்

அப்போது கேட்க பட்ட கேள்விதான்,

ஒசாமா பின் லேடன் ஈரானில் இருக்கின்றாராமே?

அதற்கு அஹ்மதிநிஜாத் அவர்கள் அளித்த பதில்,

"அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்க்கான வாய்ப்புகள் தான் அதிகம்....."

இந்த பதில் உங்களுக்கு வியப்பை அளித்திருந்தால் இது தொடர்பான முழுமையான உரையாடலை தொடர்ந்து வாசியுங்கள்...



......ஒரு ஆவணப்படம் சமீபத்தில் வெளிவந்திருக்கின்றது, அது ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவிக்கின்றது. அதில் ஈரானில் வசிக்கும் அலன் பாரோட் என்ற நபர், 2003 ஆம் ஆண்டு முதல் பலமுறை ஒசாமா பின் லேடனுடன் தான் பேசியதாக குறிப்பிடுகின்றார். ஒசாமா பின் லேடன் தெஹ்ரானில் (Tehran-Capital of Iran) இருக்கின்றாரா?

(சிரிக்கின்றார்)...உங்கள் கேள்வி என்னை சிரிக்க வைக்கிறது.

ஏன்?

அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் நுழைந்ததே ஒசாமா பின் லேடனை பிடிக்கத்தான். அவர்களுக்கு பின் லேடன் எங்கிருக்கின்றார் என்று தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அப்படி தெரிந்திருக்கவில்லையென்றால் ஏன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய வேண்டும்?

அவர்களுக்கு தெரிந்திருந்தால் அவரை கண்டுபிடித்திருப்பார்கள். அவரைப் பிடித்திருப்பார்கள்.

முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று அறிந்து கொள்ள முயற்சித்திருக்க வேண்டும், பிறகு தான் நுழைந்திருக்க வேண்டும். அவர் எங்கிருக்கின்றார் என்றே தெரியாமல் ஒரு நாட்டிற்குள் நுழைந்து விட்டு பிறகு தேடுவதென்பது தர்க்க ரீதியாக ஒத்துவருகின்றதா? இது தர்க்க ரீதியாக சரியென்று உணர்கின்றீர்களா?

என் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன். அவர் தெஹ்ரானில் இருக்கின்றாரா இல்லையா?

எங்கள் நிலை தெளிவாகவே இருக்கின்றது. சில பத்திரிக்கையாளர்கள், பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் தீவிரவாதம் மீதான எங்கள் நிலைப்பாடு தெளிவாகவே இருக்கின்றது.

அது உண்மையா இல்லையா?

உங்களுக்கு தெரிந்திருக்கலாம், எனக்குத் தெரியவில்லை.

நான் உங்களை கேட்கின்றேன். நீங்கள் தான் ஈரானின் அதிபர்.

எனக்கு அப்படி எதுவும் தெரியாது. நீங்கள் தான் மிக விசித்திரமான செய்தியை சொல்லுகின்றீர்கள்.

சரி, நான் வேறு விதமாக கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா?

ஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்.

இல்லை. நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது.

ஆம், நான் கேள்விப்பட்டேன். அவர் அங்கு தான் இருக்கின்றார். ஏனென்றால் அவர் புஷ்ஷினுடைய பழைய பங்குதாரராக இருந்திருக்கின்றார். அவர்கள் தோழர்களாக இருந்திருக்கின்றார்கள். அது உங்களுக்கு தெரியும். அவர்கள் எண்ணெய் வியாபாரத்தில் ஒன்றாக ஈடுபட்டிருக்கின்றார்கள். ஒன்றாக சேர்ந்து பணி புரிந்திருக்கின்றார்கள். பின் லேடன் ஈரானுடன் ஒத்துழைத்ததே இல்லை, ஆனால் அவர் புஷ்ஷுடன் ஒத்துழைத்திருக்கின்றார் --

உங்களிடம் இன்னும் ஒரேயொரு முறை கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா?

எங்களுடைய எல்லைகள் சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு மூடப்பட்டுள்ளன. அது யாராக இருபினும் சரி. .......ஒசாமா பின் லேடனாகட்டும், இல்லை வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். எங்கள் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எங்கள் நிலை தெளிவாக உள்ளது.

நீங்கள் உங்கள் வாழ்க்கையை, தினமும் வெளியாகும் செய்திக்கேற்ப அனுசரித்து செல்வது எனக்கு ஆச்சர்யத்தை தருகின்றது. இது போன்ற செய்திகளுக்கேற்ப தான் அமெரிக்க அரசாங்கம் தன் நிலைப்பாட்டை எடுக்கின்றதோ என்று வருத்தப்படுகின்றேன். அப்படியிருந்தால் அது மிகவும் வேதனையானது.


செய்திகள் துல்லியமாக இருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் அது இரு நாடுகளுக்கு மத்தியிலான உறவை பாதிக்கும், இதோ இது போன்று.


அமெரிக்க அரசாங்கத்திற்கு பின் லேடனின் இருப்பிடம் தெரிந்திருந்ததா? அதற்கு நீங்கள் என்ன கூறுகின்றீர்கள், "இல்லை, அவரை அங்கு கண்டுபிடிக்க சென்றார்கள் என்று". முதலில் நீங்கள் அவர் இருப்பிடத்தை---

அவர்கள் பின்னடைந்து விட்டார்கள்.

அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறாரா என்று பார்க்க போனதாக கூறுகின்றீர்கள். முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று தெரிந்துகொண்டு பிறகு அந்த நாட்டிற்குள் நுழைந்திருக்க வேண்டும். இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு நீதிபதி முதலில் ஒருவனை கைது செய்ய சொல்லி விட்டு பிறகு ஆதாரங்களை கேட்பது போலிருக்கின்றது.

ஒசாமா பின் லேடன், தெஹ்ரானில் இல்லை என்று சொல்லுகின்றீர்கள்?

அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்க்கான வாய்ப்புகள் தான் அதிகம்.

என்னால் உடன்பட முடியவில்லை.....


அஹ்மதிநிஜாத் அவர்களின் இது போன்ற பதில்கள் என்னை வியக்க வைத்தன.


ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் (Uranium enrichment) குறித்து நடந்த உரையாடல் இன்னும் சுவாரசியமானது.


அமெரிக்கா மட்டுமல்ல, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும் கூட. நான் (ரஷ்ய) அதிபர் மெத்தடெவுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பேசினேன் அவரும் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கூறினார். ஈரான் அதிவிரைவாக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றது.

எங்கள் மீது திணிக்கப்படும் எந்த ஒன்றையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு அறிக்கையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.


மூன்று அல்லது நான்கு நாடுகள் அணுகுண்டுகள் வைத்துக்கொண்டு, ஆனால் மற்ற நாடுகள் அமைதியான முறையில் அணுசக்தி உற்பத்தி செய்வதை தடுப்பதென்பது சட்டத்தை மீறுவதாகும். இது அநியாயமானது. எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது.


காலம் கடந்து விட்டது, எங்களை அச்சுறுத்துவதன் மூலமோ அல்லது அழுத்தம் கொடுப்பதன் மூலமோ பணிய வைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை சட்டத்திற்குட்பட்டு எங்களுடன் அனுசரித்து செல்வதே சிறந்தது.

...நீங்கள் சர்வதேச சட்டங்களைப் பற்றி பேசுகின்றீர்கள், நட்பு மற்றும் நியாயங்களை பற்றி பேசுகின்றீர்கள். ஆனால், உலகில் பலரும் அணு ஆயுதங்கள் தொடர்பான உங்களது நிலையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியவில்லையா ?

118 அணி சேரா உறுப்பினர்கள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள். 57 இஸ்லாமிய நாடுகள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்திருக்கின்றார்கள், இவை அவர்களது கணக்கில் வரவில்லையா?

ஆனால், விதிகளுக்குட்பட்டு ஏனைய நாடுகளும் அணு சக்தியை உபயோகப்படுத்தலாமென ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.

இல்லை, அவர்கள் அப்படி செய்யவில்லை. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை (NPT) பொறுத்தவரை ஆயுதக் குறைப்பு நடந்திருக்க வேண்டும். எத்தகைய ஆயுதக் குறைப்பு இதுவரை நடந்து விட்டது?


NPT-ன் நான்காம் பிரிவை பொறுத்தவரை (Article IV), எல்லா உறுப்பு நாடுகளும், எந்த ஒரு முன் நிபந்தனைகளுமின்றி, தொழில்நுட்பம் மற்றும் அணு எரிபொருள் உற்பத்தி போன்றவற்றிற்கு பரஸ்பரம் உதவிக்கொள்ள வேண்டும்.


அதேபோல, உறுப்பு நாடுகள் செறிவூட்டல் செய்வதை தடுப்பதற்கு எந்த ஒரு காரணமும் சொல்லக் கூடாது. இதுதான் NPT. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை வாசியுங்கள்.

உறுப்பு நாடுகள் தங்கள் வசதிகளை ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டுமே?

என்னைப் பேச விடுங்கள். இதுதான் NPT சொல்லுவது. இப்போது, சிலர் எங்களுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்கவும், எங்களது நிலைப்பாட்டை கட்டாயப்படுத்தி மாற்றவும் முயற்சித்தனர். ஆனால் இவையெல்லாம் எங்களை கட்டுப்படுத்தாது. நேற்று எங்களது நிலைப்பாடு குறித்து பதிலளித்தேன், ஐக்கிய நாடுகள் சபையில் நேற்றைய தினம் நான் ஆற்றிய உரையை நீங்கள் வாசித்தீர்களேயானால் என்னுடைய பதில்களை அங்கேயே காணலாம்.

உங்களுடைய உரையை நான் வாசிதேன். அதுமட்டுமின்றி, ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டதாக சொல்லியிருந்ததையும் வாசிதேன். ஆனால், IAEA (International Atomic Energy Agency, சர்வதேச அணுசக்தி கழகம்) ஒப்புக்கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் செயலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நிச்சயமாக அமெரிக்க அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை.

எதற்காக உடன்பட மறுக்கின்றார்கள்?

நீங்கள் உடன்பாட்டை எட்டவில்லை. அவர்கள் சொல்லுகின்றார்கள், நீங்கள் உங்கள் செயல்களை மாற்றிக்கொள்ள---

அவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை? நாங்கள் செறிவூட்டல் பண்ணுகின்றோமோ இல்லையோ, இதில் அவர்கள் ஏன் தலையிட வேண்டும்? நான்காம் விதி சொல்லுகிறது அவர்களுக்கு அந்த உரிமை இல்லையென்று.


கவனியுங்கள், தலைமை செயலாளரோ, IAEA -வின் மற்ற எந்தவொரு உறுப்பு நாடுகளோ, அல்லது எந்தவொரு அரசாங்கமோ நாங்கள் செறிவூட்டல் செய்வதை தடுக்க முடியாது. இது தெளிவாகவே இருக்கின்றது. அவர்கள் தான் சட்டத்தை மீறுகின்றார்கள். நாங்களல்ல. அவர்கள் NPT -ன் விதிகளை மீறுகின்றார்கள். அவர்கள் அப்படி செய்வது நியாயமுமல்ல.


விதிமுறைகளை மீற உங்களுக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாதென்று நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரிடம் கூறினேன்.


உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விருப்பம். ஐக்கிய நாடுகள் சபை, ஈரானை மையமாக வைத்து இயங்கினால், அதன் தலைமைச் செயலர் இதையே கூறுவாரா?

இது----என்னால் இதற்கு பதில் சொல்ல முடியாது---

என்னை பேச அனுமதியுங்கள்.


ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவில் எங்களுக்கு வீட்டோ அதிகாரம் இருந்தால், நாங்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவின் நிரந்தர உறுப்பினராக இருந்தால், தலைமைச் செயலர் இதையே கூறுவாரா? அல்லது மாற்றிக் கூறுவாரா?


இத்தகைய நியாயமற்ற விதிமுறைகளே பாதுகாப்பின்மை, போர்கள் போன்றவை தோன்றுவதற்கு அடிப்படை காரணமென்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.


சீர்திருத்தங்களுக்கு தெளிவான ஆலோசனைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். இன்றைய நிலையில், உலகின் பெரும்பான்மையான நாடுகள் நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு நிறுவப்பட்ட விதம் நியாயமில்லாதது என்றும் நினைக்கின்றார்கள்.


வீட்டோ அதிகாரம் உள்ள நிரந்தர உறுப்பினர்கள், கழகத்திடம் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது. IAEA வின் நிர்வாகிகள் சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது.


ஏன் அறுபது ஆண்டுகளுக்கு பின்னரும் ஆயுதக் குறைப்பு நிகழவில்லை?


நான் உங்களை கேட்கிறேன். அணு குண்டுகள் வைத்திருப்பது அல்லது அணு குண்டு வைத்திருக்க முனைவது, இதில் எது மிகவும் ஆபத்தானது?


நேற்று அமெரிக்கா "எங்களிடம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருக்கின்றன" என்று அறிவித்தது. ஐந்தாயிரம் அணுகுண்டுகள் ஆபத்தானதா? அல்லது ஒரு நாடு அணுகுண்டு உருவாக்கலாமென்று எண்ணுவது ஆபத்தானதா? இதில் எந்தவொன்று உலக பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றது?


ஈரான் அதிபரின் வார்த்தைகள் தெளிவாக, கூர்மையாக வந்து விழுந்தன.


இஸ்ரேல் பற்றி உரையாடல் திரும்பிய போது,


உங்களிடம் உரையாடியதிலிருந்து எனக்கு என்ன புரிகிறதென்றால், நீங்கள் உங்கள் மீதான மற்றுமொரு நடவடிக்கைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், இதை கவனிக்கும் பெரும்பாலானவர்களுக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால், ஈரான் தன்னுடைய தற்போதைய பாதையை தொடர்ந்தால், இஸ்ரேல், பிரச்னையை தானே எதிர்க்கொள்ள முன்வரும். ஈரானின் அணு திட்டங்களை இராணுவத்தின் மூலம் எதிர்க்கொள்ளும்.

ஈரான் தற்போது எந்த பாதையில் செல்கின்றதோ, அதே பாதையில் தொடர்ந்து செல்லும். அதில் உங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் வேண்டாம்.

ஆனால், நீங்கள் நெருப்போடு விளையாடுவதாகத் தெரியவில்லையா?, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி கவலை இல்லையா?

இல்லை.

ஏன்?

குண்டுகளை குவித்துக் கொண்டும், தங்கள் விருப்பங்களை மற்றவர்கள் மேல் திணித்துக்கொண்டும் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் அவர்கள் தான் நெருப்புடன் விளையாடுகின்றார்கள்.


நாங்கள் குண்டுகளை குவித்து வைத்திருக்கின்றோமா? எங்களிடம் அணு குண்டுகள் இருக்கின்றதா?, அணு குண்டை இதுவரை உபயோகப்படுத்தியது யார்?, யார் தங்களிடமுள்ள குண்டுகளை வைத்து மற்றவர்களை அச்சுறுத்துவது?, நாங்களா அல்லது அமெரிக்க அரசாங்கமா?

இராணுவ நடவடிக்கைப் பற்றி?

பேச விடுங்கள். யார் ஆபத்தானவர்கள்? யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது?

என்னையா ?

ஆம், உங்களைத் தான் கேட்கின்றேன். யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது?

இல்லை. ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாமென்று தான் சொல்லுகின்றேன்.

இவ்வாறு நீங்கள் சொல்லும்போது உங்களிடம் நான் கேட்க விரும்புவது, எங்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பார்களென்று யாரை தாங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? அமெரிக்காவையா? அமெரிக்கா எங்களைத் தாக்க போகின்றதா?

இல்லை. நான் கேட்டது, நீங்கள் இது பற்றி கவலைக் கொள்ளவில்லையா என்று?

நீங்கள் இது வரை இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்...

நாங்கள் இஸ்ரேலை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை.

அப்படி ஒருவேளை அது நடந்தால் உங்களிடம் எந்த திட்டமும் இல்லையா?

அவர்கள் முடிந்து விட்டார்கள். சியோனிஸ ஆட்சி முடிந்து விட்டது. அவர்களால் காசாவைக் கூட சமாளிக்க முடியவில்லை. எங்களிடம் வரப்போகின்றார்களா? எல்லோருக்கும் இது தெரியும். பத்திரிகைத் துறையில் வல்லுனரான உங்களுக்கு இது தெரியாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கின்றது. உலக அரசியல் வல்லுனர்கள் அனைவருக்கும் இது தெரியும்.


சியோனிஸ ஆட்சியால் காசாவை சமாளிக்க முடியவில்லை. எங்களுடன் பிரச்னைக்கு வருவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

ஆக, நீங்கள் ஐக்கிய நாடுகள் சபை பற்றி கவலைப்படவில்லை. இஸ்ரேல் பற்றியும் கவலைப்படவில்லை.


நீங்கள் உங்கள் நாட்டில், உங்களுக்கு எதிராகவுள்ள மக்களைப் பற்றியாவது கவலைப்படுகின்றீர்களா?, இதற்கு ஆதாரம் உள்ளது. ஏனென்றால், வெளிப்புற பார்வையாளருக்கு, ஈரானிய அரசின் நடவடிக்கைகள், அவர்கள் போராடுபவர்களை சிறையிலிடுவது, போராடுபவர்களை தூக்கிலிடுவது போன்றவை உங்கள் அரசுக்கு எதிராக மக்கள் இருப்பதைக் காட்டுகின்றது. நீங்கள் இது பற்றி கவலைக் கொள்வதாக தெரிகின்றது.

எந்த நாடு எங்களைத் தாக்கும் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டு கொண்டிருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? இது போன்றதொரு பாதுகாப்பைத் தான் அமெரிக்கா உலகில் ஏற்படுத்தியிருக்கின்றதா? இத்தகைய நாகரிகத்தை தான் அமெரிக்கா உலகிற்கு பரிசாக கொடுத்துள்ளதா? இது தான் அமெரிக்க சுதந்திரம் மற்றும் ஜனநாயகமா?


நாங்கள் சுதந்திரமானவர்கள், எங்கள் நாடுகளில் எங்கள் விஷயங்களை கவனித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மற்றவர்களின் தாக்குதலைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? சியோனிஸ ஆட்சியிடமிருந்து? அமெரிக்காவிடமிருந்து?


நீங்கள் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றீர்கள் என்று புரிந்திருக்கவில்லையா? உங்கள் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை, திருமதி கிளிண்டனுக்கும் புரியவில்லை. இல்லை, இங்கே என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை.


ஏழாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த நாடான ஈரான், என்றென்றும் அமைதி மற்றும் நட்பையே விரும்பி இருக்கின்றது, நாகரிகத்தின் மத்தியில் இருந்த நாடு. எந்த ஒரு நாட்டின் மீதும் படையெடுத்ததில்லை, எப்போதும் நியாயத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றது. ஆனால் நீங்கள் சொல்கின்றீர்கள் நாங்கள் அச்சத்திற்கு நடுவே வாழ வேண்டுமென்று.


நீங்கள் பிரதிபலிக்கக்கூடிய அமெரிக்காவைப் பற்றிய பிம்பம் சரியானதன்று. அமெரிக்காவை எதிர்ப்பது ஈரான் மட்டுமன்று. அமெரிக்காவின் நடவடிக்கையால் எல்லா நாடுகளும் அதை எதிர்க்கின்றன. ஐரோப்பாவில் மட்டும் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டால், மக்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகத்தான் இருப்பார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.


அவர்கள், ஈரான் அச்சத்துடன் தான் வாழ வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். எதற்காக? எதற்காக அவர்கள் எங்களை தாக்க நினைக்க வேண்டும்?


தீவிரவாதம் மற்றும் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து அவர் கூறியது,


நீங்கள் அமைதியை விரும்புவதாக சொல்லுகின்றீர்கள். ஒரு முஸ்லிமாக நீங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பதாக சொல்லுகின்றீர்கள். இங்கே அமெரிக்காவில், டைம்ஸ் சதுக்கத்தை குண்டு வைத்து தகர்க்க முயற்சி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் அமெரிக்க நகரங்களை தாக்கப் போவதாக சொல்லியிருக்கின்றது. ஒரு முஸ்லிமாக இவற்றை நீங்கள் எதிர்க்கின்றீர்களா?

நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம். மிக கடுமையாகவே எதிர்க்கின்றோம். நாங்கள் ஏராளமானவர்களை தீவிரவாதத்திற்கு பலி கொடுத்து விட்டோம். ஈரானில் அதிபர், பிரதமர், சட்டத்தலைவர், 26 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் என்று பலரும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அதே சமயம் அது சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும்.


உங்களிடம் நான் கேட்கின்றேன். அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் நுழைந்து இது பத்தாவது வருடம். தீவிரவாதம் குறைந்திருக்கின்றதா, அதிகமாகி இருக்கின்றதா?. அமெரிக்காவின் அணுகுமுறை தவறென்று தெளிவாக தெரிகின்றது. அமெரிக்கா உள்ளே நுழைந்ததிலிருந்து இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தீவிரவாதமும் பெருகி இருக்கின்றது.


சமீபத்தில் 400 ஈரானியர்களை கொன்ற ரெகி என்பவனை நாங்கள் கைது செய்தோம். அவன் எங்கே ஒளிந்திருந்தான்?, பாகிஸ்தானிலா?, இல்லை ஆப்கானிஸ்தானிலா? யார் அவனுக்கு ஆதரவளித்தது? அமெரிக்க இராணுவம் தான்.


இது மிகவும் மோசமானது. ஏன் இப்படியிருக்க வேண்டும்? நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அப்பாவி மக்களின் வாழ்விற்கு அச்சுறுத்தலாய் இருப்பதை எதிர்க்கின்றோம்.


பேட்டி முழுவதும் மிகுந்த நிதானத்துடன் பதிலளித்தார் மஹ்மூத் அஹ்மதிநிஜாத். ஈரான் அதிபரின் உரையாடலிருந்து நான் புரிந்து கொண்டது,

  • ஈரானிய அரசாங்கம், தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றது.
  • யாரையும் பார்த்து அச்சப்படும் நிலையிலும் அவர்கள் இல்லை.
  • தாங்கள் செய்வது சட்டத்திற்கு உட்பட்டது என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.

இந்த நேர்க்காணல் குறித்து ABC ஊடகத்தின் இணையத்தளத்தில் கருத்து தெரிவித்த பலரும் ஈரான் அதிபரின் வாதங்களில் அர்த்தம் இருப்பதாக குறிப்பிட்டனர்.

ஒரு அமெரிக்கர் அந்த தளத்தில் கூறியது,
இந்நாட்களில் அமெரிக்கா தான் உண்மையான எதிரியாக கருதப்படுகிறது.
நாம் மற்ற நாடுகள் மீது போர்த்தொடுத்து அவர்கள் எப்படி வாழ வேண்டுமென்று சொல்லவேண்டுமா?, நாம் மற்றவர்களுக்கு செய்வது போல, யாராவது நமக்கு செய்தால் நாம் என்ன நினைப்போம்?
அமெரிக்க வீரர்களை திரும்ப பெறுங்கள். அந்த நாடுகளை நிம்மதியாக வாழ விடுவோம். பிறகு நாமும் நம்முடைய வாழ்வை அமைதியான முறையில் அமைத்துக் கொள்வோம்.

புரிய வேண்டியவர்களுக்கு என்று புரியுமோ?....

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....


This article is the extract of Iran President's Interview with George Stephanopoulos which was translated by Aashiq Ahamed for Unnatham Magazine.


My sincere thanks to:
1.Unnatham Magazine.

References:
1. Mahmoud Ahmadinejad on Nuclear Programme - ABC News dated 5th May, 2010.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

அந்த இரண்டணா



சிறந்த மார்க்க விற்பன்னரான அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீப் ஆலம்கீர் பாதுஷாவின் ஆன்மிக ஆசானாக விளங்கினார். புனித ரமழான் மாதத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழவும் ஒன்றாகச் சேர்ந்து தொழவும் செய்துவந்தனர். ரமழான் மாதம் முடிந்து ஈத் பெரு நாளும் வந்தது. வழக்கம்போல் அன்றும் பெருநாள் தொழுகையை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றினார்கள்.

பின்னர் அஹ்மத் ஜீவன், பாதுஷாவிடம் விடைபெற விரும்பிய பொழுது, “சற்றுப் பொறுங்கள்”! என்று கூறிவிட்டுத் தம் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஏதேனும் இருக்கிறதா? என்று துழாவினார் பாதுஷா.

ஆம்! இரண்டு அணா நாணயம் ஒன்று அதில் கிடந்தது. அதை எடுத்துத் தம் ஆசானிடம் கொடுத்து வழி அனுப்பினார். அவர், தம் மாணவர் தந்த இரண்டணா நாணயத்தை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு தம் இல்லம் திரும்பினார்.

ஒளரங்கசீப் பதினான்கு ஆண்டுகள் தக்காணத்தில் தங்கிவிட்டு டில்லி திரும்பினார். அவர் வந்ததும் அவருடைய முதல் அமைச்சர் அவரை அணுகி, “ஆலம்பனாஹ்! பெரும் நிலக்கிழாராக விளங்கும் அஹமத் ஜீவனிடமிருந்து அவருடைய சொத்துக்களுக்கான வரியை இதுகாறும் வசூலிக்கவில்லை. அதனை அவரிடமிருந்து வசூலிக்கத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்என்று கூறி நின்றார்.

அதுகேட்டு ஒளரங்கசீபுக்குப் பெரிதும் வியப்பாக இருந்தது.

என்ன சாதாரண, எளிய வாழ்க்கை, வாழ்ந்து வந்த ஆசான் அஹ்மத் ஜீவன் பெரும் பணக்காரராகி விட்டாரா? எனக்கு என்னவோ இது புரியாப் புதிராக உள்ளதேஎன்று எண்ணியவராய் சிறிது நேரம் சிந்தனையில் வீற்றிருந்தார்.

பின்னர் தாம் டில்லி திரும்பிவிட்டதாகவும் தம்மை வந்து சந்திக்கு மாறும் அஹ்மத் ஜீவனுக்கு மடல் தீட்டினார்.

மீண்டும் ரமழான் மாதம் வந்தது. அஹ்மத் ஜீவன் டில்லி வந்து சேர்ந்தார். அவர் எப்பொழுதும் அணியும் எளிய அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. எனவே ஒளரங்கசீப் அவரிடம் யாதும் கேட்காது வெறுமனே இருந்து விட்டார்.

பின்னர் ஒருநாள், அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீபை நோக்கி, “ஈத் அன்று தாங்கள் கொடுத்த அந்தப் புனிதமான இரண்டணா நாணயம் என் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. என்று கூற அதைக் கேட்ட ஒளரங்கசீப், “என்ன திருப்பம் அது? என்று வியப்புடன் வினவினார்.

அப்பொழுது அஹ்மத் ஜீவன், “அந்த இரண்டணா நாணயத்தைக் கொண்டு பருத்தி விதை வாங்கி விதைத்தேன், இறையருளால் அது செழித்து வளர்ந்து பன்மடங்கு இலாபத்தைத் தந்தது. அந்த மூலதனத்தைக் கொண்டு மேலும் உற்பத்தியைப் பெருக்கினேன். இன்று அது பல லட்சம் மடங்காகப் பெருகிவிட்டதுஎன்று கூறினார்.

அதுகேட்ட ஒளரங்கசீப் தம்முடைய ஊழியர் ஒருவரை அழைத்து, சாந்தினி செளக்கில்லேவாதேவி வாணிபம் செய்யும் சேட் உதம் என்பவரை ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் அவருடைய கணக்கேட்டை எடுத்துக்கொண்டு உடனே தம்மை வந்து காணுமாறு கூறும்படி பணித்தார்.

அரச ஆணை ஏற்றதும் தம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் கணக்கேட்டை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தார் சேட் உதம்.

அப்பொழுது அவருடைய மனம் என்னவென்னவோ எண்ணிப் புண்ணாகியது.

அரண்மனையை அடைந்த அவர் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாதுஷாவுக்கு வாழ்த்துரை வழங்கித் தம்முடைய கணக்கேட்டை அவர் முன் சமர்ப்பித்தார்.

அவருடைய அச்சத்தை முகக்குறியால் விளங்கிக்கொண்ட பாதுஷா, “ஒன்றுக்கும் கவலற்க ! இங்கு வந்து உம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் வரவுசெலவுக் கணக்கை படித்துக்காட்டும்என்று கூறினார்.

சேட் உதம் கணக்கேட்டைத் திறந்து படித்துக்கொண்டே வந்தார். அப்பொழுதுஇரண்டணா நாணயம்என்று படித்தவர், அதை யாருக்குக் கொடுத்தோம் என்பதை அறியாது விழித்தார்.

உடனே ஒளரங்கசீபின் முகத்தில் புன்னகை மின்னியது. “கூறும் யாருக்கு அந்தப் பணம் கொடுக்கப்பட்டது?” என்று வினவினார்.

அதைக்கேட்ட சேட் உதம், பெருமூச்சு விட்டவராய்ஆலம்பனாஹ் ! அது ஒரு சோகக்கதைஎனக்கூறி அக்கதையைக் கூறத்தொடங்கினார்.

ஆலம்பனாஹ் ! ஓர் இரவு, இந்த டில்லி மாநகரில் கனத்த மழை பெய்தது. அதன் காரணமாக புதியதாகக் கட்டப்பட்ட என் வீட்டின் கூரை ஒழுகி அதனால் வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிட்டது. நான் ஓட்டையை அடைக்க எவ்வளவோ முயன்றும் பயனில்லை. மழைநீர் ஒழுகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் வெளியில் சென்று எவரேனும் உதவுவார்களா என்று சுற்றிலும் நோக்கினேன். அப்பொழுது விளக்குக் கம்பத்தின் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அவர் ஒரு கூலியாள் போன்று தோன்றியது. எனவே அவரை அழைத்து கூரையைச் செப்பனிடச் சொன்னேன். அதற்குச் சம்மதித்து அவர் மூன்று நான்கு மணிநேரம் வேலை செய்து கூரையைச் செப்பனிட்டார். உடனே நீர் ஒழுகுவது நின்று விட்டது. அவர் வேலையை முடிக்கும்பொழுது வைகறைத் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டது. அப்பொழுது வேலையை நிறுத்தி விட்டு தொழுகையை நிறைவேற்றினார். அதன் பின் தம்முடைய வேலையை முடித்துவிட்டதாகவுன், தாம் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.

அப்பொழுது, அவருக்கான கூலையைக் கொடுக்க எண்ணி என் சட்டைப் பைக்குள் கைவிட்டேன். அங்கு இரண்டே இரண்டு அணாதான் இருந்தது. சற்று நேரம் எனக்கு என்ன செய்வதென்றே விளங்க வில்லை. ‘எனக்கு இந்நேரத்தில் உதவியவருக்கு இது போதா தென்றுஎண்ணி என் மனம் வருந்தியது. வேறு வழியின்றி அதனை அவர் கையில் கொடுத்து, “உமக்கு இச்சொற்பத் தொகையை அளிக்க வருந்துகிறேன். விடிந்ததும் என் கடைக்கு வாரும் ! அங்கு உமக்கு வேலைக்கான முழுக்கூலியையும் தந்து விடுகிறேன்என்று கூறினேன். அதற்கு அவர், “எனக்கு இதுவே போதும். நான் மீண்டும் வரமாட்டேன்என்று கூறினார். நானும் என் மனைவியும் எவ்வளவோ கூறியும் அவர் கேளாது விறுவிறுவெனச் சென்று விட்டார்.

அன்றிரவு எங்களுக்கு உதவிபுரிந்து எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படாமல் காத்த அந்த நல்லவரை நான் இதுவரை எங்கு தேடியும் காணவில்லை. எனவே அவரைப்பற்றி ஒன்றும் தெரியாததால் நான் கணக்கேட்டில் அவரின் பெயரைக் குறிப்பிடாது செலவை மட்டும் எழுதிவைத்தேன்.”

-இவ்விதம் கூறி முடித்தார் சேட் உதம்.

இதன் பின் பாதுஷா அவருக்கு அரசாங்க அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்க அதனை மரியாதையுடன் வாங்கிக் கொண்டு விடை பெற்றுச் சென்றார்.

அவர் சென்றதும் ஒளரங்கசீப் அஹ்மத் ஜீவனை நோக்கி, “என்னுடைய ஆன்மீக ஆசானாகிய தாங்கள் எனக்கு நற்பண்புகளைக் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அதன் காரணமாக நான் என்னுடைய சொந்தத் தேவைகளுக்கு ஒருபோதும் பொதுக்கருவூலத்தை நாடுவ தில்லை. நான் மணிமுடி சூடிய நாளிலிருந்து இரவில் இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒரு மணிநேரம் திருக்குர்ஆனை பிரதி எடுப்பதிலும், ஒரு மணிநேரம் தொப்பி நெய்வதிலும் கழித்து பொருள் ஈட்டி வருகின்றேன். மேலும் வாரத்தில் இரண்டு இரவுகளில் மாற்றுடை அணிந்து மக்களின் தேவைகளை அறிய நகரைச் சுற்றி வருகின்றேன். அப்படி ஓர் இரவு சுற்றி வந்த பொழுது, அந்த மனிதருக்கு உதவி செய்ததால் கிடைத்த பணமே அந்த இரண்டணா நாணயம்என்று கூறினார்.

அது கேட்ட அஹ்மத் ஜீவனின் புருவங்கள் மேலேறின.

நிச்சயமாக என்னுடைய மாணவர் கடின உழைப்பின் மூலம் இப்பணத்தை ஈட்டி இருப்பார். அதனால்தான் இறைவன் அதில்பரக்கத்செய்துள்ளான் என்று நானும் ஏற்கனவே எண்ணினேன். ஆனால் இத்துணை கடின உழைப்புச் செய்து அந்த இரண்டணாவை ஈட்டி இருப்பீர்களென்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களை போன்ற ஒரு தூய்மையாளரை மாணவராகப் பெற்ற என்னுடைய பேறே அதினினும் நற்பேறு !!” என்று வாயாரப் புகழ்ந்து பாதுஷாவை வாழ்த்தினார் அஹ்மத் ஜீவன்.

( வரலாற்றில் சில பொன்னேடுகள் எனும் நூலிலிருந்து )

நன்றி : இனிய திசைகள் ( டிசம்பர் 2002 )

25 டெராபைட்ஸ் டைட்டானியம் ஆக்ஸைட் சூப்பர் டிஸ்க் அறிமுகம்

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அதிக சேமிக்கும் (கொள்ளவு) இடம்
கொண்ட ஒரு பிரத்யேக டிஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளனர்
இதைப் பற்றிய சிறப்பு பதிவு.

எளிதாக எங்கும் எடுத்துசெல்ல சிடி, டிவிடி டிஸ்க் வந்த போதும்
மிக மிக அதிக அளவு கொள்ளவு கொண்ட ஒரு பிரத்யேக டிஸ்க்
ஒன்றை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.இதன்
சேமிக்கும் அளவு 25 TB சற்று விரிவாக பார்ப்போம்.

8 Bits = 1 Byte
1024 Bytes = 1 Kilobyte (KB)
1024 Kilobytes = 1 Megabyte (MB)
1024 Megabytes = 1 Gigabyte (GB)
1024 Gigabytes = 1 Terabyte (TB
)

இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் CD யின் சேமிப்பு
இடம் 700 MB ,அதே போல் இப்போது நாம் பயன்படுத்திக்
கொண்டிருக்கும் DVD -யின் சேமிப்பு இடம் 4.7 GB . தற்போது
ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த டிஸ்க்-ன் சேமிப்பு
இடம் 25 TB . இந்த டிஸ்க் டைட்டானியம் ஆக்ஸைடு
மெட்டிரியல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது .ஒளிக்கற்றைகளை
இந்த டிஸ்க் -ன் மீது செலுத்தி தகவல்களை சேமிக்கின்றனர்
ஒளிக்கற்றைகளை செலுத்தும் போது வெவ்வேறு வண்ணம்
மூலம் இங்கு சேமிக்கப்படுகிறது.இதனால் இங்கு தகவல்களை
சேமிக்கும் நேரமும் எடுக்கும் நேரமும் மிகக் குறைவாகத்தான்
ஆகும். இதன் விலையும் அதிகமாக இருக்கப்போவதில்லை
என்று அறிவித்துள்ளனர்.

நன்றி: வின்மணி

அக்டோபர் கவியொன்று

அக்டோபர் வானம்
புதியதாக ஒரு கல்லறை
ஒரே ஒரு வெண்ணிறக்கொடி
வேதனையில் ஓலமிடும்
உனக்குப் பிடித்திருந்தால் அதனை
நிலா என்றழை

எமக்கென்றொரு சினேகிதன் இருக்கிறான்
பற்களால் சிரித்திடும்
விழிகளால் கதைத்திடும்
அக்டோபர் மாதத்தில் உயிர்த்தெழுந்து
மீள மரித்துப் போகும்படியான

துப்பாக்கி ரவைக்கும் இருக்கிறது
நிமிட நேர வாழ்க்கை
நண்பனுக்கென இருப்பது
அக்டோபரின் நாளொன்று மட்டுமா

கண்ணீருக்கும் இருக்கிறது
உஷ்ணத்தாலோ குளிராலோ ஆன ஒரு இருப்பிடம்
தாய்நிலமற்ற தோழனுக்கென இருப்பது
இருப்பிடம் கூட அற்ற மரணம் மாத்திரமா

அந்த நண்பனுக்குத்தான்
அக்டோபரில் உயிர் வருவதுவும்
அதே நண்பன்தான்
திரும்பத் திரும்ப மரித்துப் போவதும்

# மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர் ஆவார். 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று, இவர் இலங்கை இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து ஆயுததாரி ஒருவரால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டு , அக்டோபர் 19, 2009 க்கு 9 வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு எழுதப்பட்ட கவிதை.

தினம் ஒரு குர்ஆன் வசனம்

"அல்லாஹ்வின் திருப்பெயரால்."

[C9365209.gif]

June 16, 2010

அல்லாஹ்விடம் பயபக்தி கொண்டு

அழகிய நன்மை செய்தால்...!

(நபியே!) நீர் கூறும்; "ஈமான் கொண்ட நல்லடியார்களே!
உங்களுடைய
இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில்
அழகாய் நன்மை
செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் -
அல்லாஹ்வுடைய பூமி
விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை
நிச்சயமாகக்
கணக்கின்றிப் பெறுவார்கள்."
(அல்குர்ஆன்:39:10)


இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது,
தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

வசந்த உதயம்





தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்,

களப்பில் எப்போதேனும் அலையெழும்.
வேதனைமிகுந்த மீனொன்று மேலெழுந்து
நெஞ்சில் அடித்தழுது
தடதடவென்று செட்டைகளை அசைத்து
வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி
நீரில் வீழ்ந்து மறைந்து போகும் - அதுவும்
உறுதியான கணமொன்றில் மாத்திரமே.

தூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும்
களப்பு நீரில் நீண்ட தம் வெளிச்ச ரேகைகளை வரையும்.

கல்லடிப்பாலம்
அரண் போல உயர்ந்து எழுந்தாலும்
தன் தலை கவிழ்ந்து விழி புதைத்து
புன்னகைக்க மறந்து துயர் தாங்கும்
ஓர் அப்பாவைப் போல.

சிந்தனை மறந்த வாகனங்கள்
பாலத்தை அவசரமாய்க் கடந்து செல்லும்
அர்த்தமற்ற தம் வெளிச்சங்களை
களப்பின் மீது நீண்ட கோடுகளாய்த் தீட்டி

இந்தக் களப்பு அம்மாவைப் போன்றது.
ஆழ்ந்த விழிகளால் மெளனித்து
அனைத்துத் துயரத்தையும் தாங்கும்
முகத்தில் அலையெழுப்பும் தென்றலுக்குப் புன்னகைக்கும்
எல்லா ஒளிக்கோடுகளையும் கலக்கும் இணைக்கும்
களப்பின் மார்பு அலைகளையும் சுழிகளையும் உயிர்ப்பிக்கும்.

புத்தரின் நினைவெழும் நிக்கினி போயாகூட - வெறும்
சுண்ணாம்பாய்க் களப்பினுள் கரைகிறது,
புத்தபிரான் சொர்க்கம் நுழைந்த பினர பௌர்ணமியும் - கடும்
இருளாயே இங்கு விடிகிறது.
வசந்தம் உதயமானாலும் உதிக்க மறுக்கிறது சூரியன்
இது கிழக்கு!

நண்பர்களே, பழைய நண்பர்களே...!


உங்களுக்கு
கேட்காத போதிலும்
மலருக்கும் குரலொன்று உள்ளது.

கிள்ளிப்போட்ட பின்னர் காம்பிலிருந்து
எழும் முனகல் கேட்பது
மரத்துக்கு மாத்திரமா?

இறந்தவர்களுக்குக் கூட
வாழ்வொன்று இருப்பதாக
நாம் கூறுகையில்
கண்ணீர்
ஆனந்தத்தில் பிறக்குமென்றா
நீங்கள் சொல்கிறீர்கள்?

காம்பிலிருந்து
பூவைக் கிள்ள முன்பு
உறைந்திருந்தது இதழொன்றின் மீது
குளிர் பனித்துளியொன்று.

அது
மலரின் ஆனந்தமா?
உங்களது குதூகலமா?

சுய துரோகம்


நேற்று
நீ நான் காதலில் பின்னிப் பிணையாதிருந்தோம்
காதல் வார்த்தைகளைப் பகராதிருந்தோம்
காதல் கவிதைகளை எழுதாமலிருந்தோம்
காதல் கீதங்களை இசைக்காமலிருந்தோம்
எதிர்கால இனிய கனவுகளைக் காணாதிருந்தோம்

நேற்று
நாங்கள் சந்திக்காதிருந்தோம்
இரு கரங்களையும் கோர்த்துக் கொள்ளாமலிருந்தோம்
காதலுடன் அரவணைத்துக் கொள்ளாமலிருந்தோம்
பெருமூச்சொன்றின் உஷ்ணத்தை
அனுபவிக்காதிருந்தோம்

நேற்று
நான் கண்ட அதே நிலவை
நீ காணாதிருந்தாய்
நான் அனுபவித்த தென்றலின் தழுவலை
நீ அனுபவிக்காதிருந்தாய்

நேற்று
நீயென்று ஒருவர் இருக்கவில்லை
நான் மாத்திரமே இருந்திருக்கக் கூடும்
இன்றும் அவ்வாறே
நான் மாத்திரமே
பாதம் பதிக்க இடமற்ற
வெற்று வெளியொன்றில்
புவியொன்றா பிரபஞ்சமொன்றா
பொருளொன்றா
சக்தியொன்றா
எண்ணமொன்றா
உணர்வொன்றா
இவை ஏதுமற்ற
வெற்று வெளியொன்றில்
வெறுமனே தரித்திருக்கிறேன்

நேற்று
சூரியன் உதித்திடவில்லை
நிலவும் நட்சத்திரங்களும் கூட இருக்கவில்லை
அதுவுமன்றி
நேற்றென்றோர் நாள் கூட இருக்கவில்லை

எல்லாமே வெறுமையாய்...

நாளொன்றுக்குப் பத்து லட்சம் கேலன் எண்ணெய்...






கேத்தரினா சூறையாடிய லூசியானா மாகாணக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது BP எண்ணெய்க் கம்பெனியின் ஆழ்கடலில் எண்ணெய்த் தோண்டும் நிலையம். போன மாதம் ஏற்பட்ட ஒரு வெடிப்பினால் அங்கே வரலாறு காணாத எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, ஒரு நாளில் சராசரியாக பத்து லட்சம் கேலன் எண்ணெய், கடலில் கலக்கிறது. ஒரு மாதமாக
அந்தக் கசிவை அடைக்கப் பலவிதமான முயற்சிகள் செய்து வருகிறார்களாம். BP நிர்வாகிகள் வழக்கம் போல அரசுக்கும் மக்களுக்கும் தவறாக தகவல்களை அளித்துப் பிரச்னையை திசை திருப்பிய வண்ணம் உள்ளனர். முதலில் ஏதோ சொற்ப அளவே கசிகிறது, நிலைமை விரைவில் சீராகிவிடும் என்று அறிக்கை அளித்தனர். வால்வ் இணைப்பை சரியாக அடைக்கவில்லை என்று BP காண்ட்ராக்ட் கம்பெனியான ஹாலிபர்ட்டனைக் கைகாட்ட, அவர்கள், கண்ட்ரோலர் செய்யும் கம்பெனியைக் கைகாட்ட, அந்தக் கம்பெனி, வால்வ் கண்ட்ரோலரில் இருக்கும் பேட்டரியை சரியான கவனிக்காமல் விட்ட BP -யைக் கைகாட்டுகிறது. எது எப்படியோ, இன்னும் கசிவை அடைத்தபாடில்லை. இவர்களை எல்லாம் கண்காணிக்க வேண்டிய MMS என்ற அரசுத்துறை வழக்கம் போல 'மாமூலாக' எல்லா ஆய்வுகளையும் 'திருப்தியுடன்' முடித்து சான்றிதழ்களும் வழங்கியுள்ளனர். செனேட்டர்களும் பிரதிநிதிகளும் ஆயில் கம்பெனி பாக்கெட்டில். BP -யின் தலைவர், 'கடலின் பரப்பளவோடு ஒப்பிட்டால், இந்தக் கசிவு மிகவும் சிறிதுதான்' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். சர்வ வல்லமை படைத்த கார்ப்பரேஷனை, ஓட்டுப்பொறுக்கி அரசாங்கத்தால் என்ன செய்து விட முடியும்?

கசிவை அடைக்க அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது. வெடித்த பகுதியின் மேல் முதலில் ஒரு தொப்பி மாதிரி போட்டுப் பார்த்தார்கள். அது வேலைக்கு ஆகவில்லை என்றதும் சிறிய நீர்மூழ்கி ரோபோக்களை அனுப்பிப் பார்த்தார்கள்.. பிறகு எண்ணெயை எரித்துப் பார்த்தார்கள்.. அப்புறம் என்னென்னவோ செய்தும், கசிவு நிற்கவில்லை. ஒரு மைல் ஆழமும் மூன்று மாகாணங்கள் பரப்பளவும் என்ற அளவுக்குக் கடலில் கச்சா எண்ணெய் மிதக்கிறது. மேலும் அது ஏற்கனவே கடற்கரை ஓட்டியுள்ளா சதுப்பு நிலங்களை வந்து அடைந்துள்ளது. ஏராளமான கடல் வாழ் இனங்கள், பறவைகள் முதலியன எண்ணெயில் தோய்ந்து, இறந்து கரையில் ஒதுங்கிய வண்ணம் இருக்கின்றன. மிகப்பிரம்மாண்டமான அளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டாலும் உடனடி பாதிப்புக்குள்ளானவர்கள் அந்தக் கடற்பகுதியை ஒட்டிய மீனவர்கள். அவர்கள் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டதுடன், எந்த இழப்பீடும் கிடைக்காது. இது என்ன ஐரோப்பாவா அல்லது இந்தியாவா, உடனே அரசாங்கம் இவர்களுக்கு நிவாரணம் வழங்க.. அடுத்துப் பல மாதங்களுக்கு இவர்களால் மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல முடியாததால், இவர்களுக்குக் கிடைக்ககூடிய வேலை கடலில் மிதக்கும் எண்ணெயைச் சுத்தம் செய்வதுதான். அதற்கு அவர்கள், இதனால் ஏதேனும் வியாதி வந்தால், BP அதற்குப் பொறுப்பாகாது என்று கையெழுத்திட்டுத் தரவேண்டும். சிறைக் கைதிகளையும் சுத்தப் படுத்தும் வேலைக்குப் பயன் படுத்தப் போகிறார்கள்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் பெரிதாக ஏதும் கண்டு கொண்டது மாதிரி தெரியவில்லை. இந்த அழகில் இந்த வாரம்தான் ஆர்க்டிக் பகுதியில் புதிய கிணறுகளைத் தோண்ட ஷெல் கார்ப்பரேஷனுக்குக் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. கன்சர்வேட்டிவ்கள் மற்றும் வலதுசாரிகளைப் பற்றிச் சொல்லவே தேவை இல்லை. இவற்றை எல்லாம் இயேசு பார்த்துக் கொள்வார் என்றும், மேலும் பல எண்ணெய்க் கிணறுகளைத் தோண்ட உடனே ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூவ ஆரம்பித்து விட்டனர். ஆமாம், இவர்கள் அப்படி என்னத்தைதான்
சாப்பிடுகிறார்கள்

கல்விச் செய்திகள் இரண்டு

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

ஜார்ஜியாவில் மருத்துவ படிப்பு: சென்னையில் மாணவர் சேர்க்கை

சென்னை, ஜூன் 15: ஜார்ஜியா நாட்டில் உள்ள டிபிலிசி அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தின் 6 ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கருத்தரங்கம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் உடனடி மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டு 20 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்தியாவுக்கான ஜார்ஜியா நாட்டின் தூதரக அதிகாரி ஜுராப் கட்ச்கட்சிஷிவிலி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரிமா பெரியாஷிவிலி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:- கடந்த 92 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தப் பழமையான பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டு மருத்துவப் படிப்பு எம்.டி. என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இப் பல்கலைக்கழகத்தில் இப்போது 400 இந்திய மாணவர்கள் உள்பட 5,000 பேர் படிக்கின்றனர்.

6 ஆண்டு படிப்பை முடிக்க பயணச் செலவு, விசா செலவு, கல்விக் கட்டணம், தங்குமிடம், உணவு என எல்லாவற்றுக்கும் சேர்த்து சுமார் ரூ. 13 லட்சம் வரை செலவாகும். பல்கலைக்கழகத்தில் சேருவது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள 98841 93351 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

நல்ல பி.இ. கல்லூரிகள் எவை? மாணவர்களே தேர்வு செய்ய வசதி- அமைச்சர் பொன்முடி தகவல்

நல்ல, தரமான பி.இ. கல்லூரிகளை மாணவர்களே தேர்வு செய்ய வசதியாக, கல்லூரிகள் பற்றிய தகவல்கள்www.tndte.com என்ற தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

அதன்படி, கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் தகுதி போன்ற தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி கூறினார்.

பி.இ. கலந்தாய்வுக்கு முன்பு, கல்லூரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வசதியாக, மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று அது பற்றிய விவரங்களைச் சேகரிக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள், பெற்றோர் கல்லூரிகளின் நுழைவு வாயிலிலேயே நிறுத்தப்படுகின்றனர். அதனால் கல்லூரிகள் பற்றிய உண்மை நிலையை அவர்களால் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அவர்கள் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் சேர்ந்த பின்னர், தங்கள் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லை, ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லை, தங்களை வேறு ஒரு கல்லூரிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆகியவற்றில் புகார் செய்கின்றனர்.

மாணவர்கள் இவ்வாறு அவதிப்படுவதைத் தவிர்க்கும் வகையில் கல்லூரிகளைப் பற்றிய உண்மை விவரங்கள் அதாவது கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களின் தகுதி போன்ற விவரங்கள் அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தினமணியில் கடந்த 3-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.இ. விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வாய்ப்பு (ரேண்டம்) எண்களை வழங்கினார். அதன் பின்னர் அமைச்சர் கூறியது: நாட்டில் இருக்கின்ற பொறியியல் கல்லூரிகளை மேம்படுத்துவது, புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவது ஆகியவற்றில் ஏ.ஐ.சி.டி.இ. புதிய நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது. அதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள சில கல்லூரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளன. அதனால் ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பின் தென் மண்டல கல்லூரிகள் பற்றிய விவரங்கள் அந்த அமைப்பின் இணையதளத்தில் இல்லை. எனவே, மாணவர்கள் நல்ல கல்லூரிகளைத் தேர்வு செய்ய வசதியாக, கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், அவற்றில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட விவரங்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு தகுதி வழங்குவதற்காக, அண்ணா பல்கலைக்கழகங்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஆய்வு செய்து, கல்லூரிகளில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை அவர்களின் தகுதி போன்ற விவரங்களைச் சேகரித்துள்ளன. அந்த விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும். அரசு ஒதுக்கீட்டிலேயே தேவையான பி.இ. இடங்கள் உள்ளன. எனவே, பி.இ. இடம் வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.

அரசு ஒதுக்கீட்டிலேயே தேவையான பி.இ. இடங்கள் உள்ளன. எனவே, பி.இ. இடம் வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று அமைச்சர் கூறியுள்ளார். +2 தேர்வு முடிவு வெளியாகி 2மாதங்கள் முடிந்த பிறகுதான் கவுன்சிலிங் நடைபெறுகிறது. இது தனியார்கல்லூரிகளுக்கு அரசு செய்யும் மறைமுக உதவி. இதனைத் தவிர்த்து அரசு உடனடியாக கவுன்சிலிங்கை நடத்த வேண்டும்.

Tuesday, June 15, 2010

வீரச் செம்மல்களின் தியாக வரலாறுகள்

உம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா (ரழி)

அன்னையவர்களின் இயற்பெயர் ஹிந்த் பின்த் உமைய்யா என்றிருந்த போதும், உம்மு ஸலமா (ரழி) என்றே மிகப் புகழோடு அழைக்கப்பட்டு வந்தார்கள். வரலாறு அவ்வாறே அவர்களது பெயரைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. பிறப்பு மற்றும் வம்சா வழிச் சிறப்புகளின் அடிப்படையில், இயற்கையிலேயே புத்திக் கூர்மையுள்ள, கல்யறிவுள்ள, நேர்மையான மற்றும் உறுதியான செயல்பாடுகள் கொண்டவர்களாக அன்னையவர்கள் திகழ்ந்தார்கள்.

அன்னையவர்களின் முதற் கணவரின் பெயர், அபூ ஸலமா என்றழைக்கப்படக் கூடிய அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி (ரழி) என்பவராவார். இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தந்தை வழி மாமியான பர்ரா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவார். இஸ்லாத்தினைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஆரம்ப கால முஸ்லிம்களின் பட்டியலில் அபூ ஸலமா அவர்களும் இடம் பிடித்த, சிறப்புக்குரியவர்களாவார்கள். அந்த கால கட்டத்தில் இஸ்லாத்தினைத் தழுவிய 11 நபர்களில் இவரும் ஒருவர். இன்னும் இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பால் குடிச் சகோதரரும் ஆவார்.

உம்மு ஸலமா (ரழி) அவர்களும் இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஆரம்பகால முஸ்லிம்களில் ஒருவராவார். இவரது தாயார் பெயர் அதீகா பின்த் ஆமர் பின் ரபீஆ பின் மாலிக் பின் கஸீமா ஆகும். இன்னும் இவரது தந்தையின் பெயர் உமைய்யா பின் அப்துல்லா பின் அம்ர் பின் மக்சூம் என்பதாகும். இவரது பொதுநலச் சேவைகள் மற்றும் தான தர்மங்களின் மூலமாக அரபுலகில் மிகவும் பிரபலமாக மதிக்கப்பட்டவர்களாவார்கள். இவருடன் பயணம் செய்யக் கூடியவர்கள் தங்களது தேவைக்காவென எந்தப் பொருட்களையும் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தன்னுடன் வரக் கூடியவர்கள் அனைவரும் தனது விருந்தாளிகள் என மதிப்பளித்து, அவர்களது உணவிலிருந்து அத்தனைச் செலவுகளையும் பொறுப்பேற்றுச் செலவு செய்யக் கூடிய தனவந்தராக உம்மு ஸலமாவின் தந்தை திகழ்ந்தார். எனவே, தனது தந்தையைப் போலவே உம்மு ஸலமா அவர்களும் ஏழைகளுக்கு இரங்கக் கூடியவராகவும், இன்னும் தான தர்மங்களில் அதிகம் ஈடுபடக் கூடியவராகவும் திகழ்ந்தார்கள். தமது அண்டை வீட்டுக்காரர்களுடன் உணர்வுப்பூர்வமாக மிகவும் நெருக்கமான உறவும் கொண்டிருந்தார்கள். உம்மு ஸலமா அவர்களின் கோத்திரம் எவ்வாறு உபகாரத்திலும், பிறருக்கும் உதவுவதிலும் இன்பங்கண்டதோ, அதே போலவே குணங்கள் அமையப் பெற்றவரும், மக்காவில் அன்றைய தினம் வாழ்ந்த குறிப்பிடத்தக்க செல்வந்தக் குடும்பங்களில் ஒன்றான மக்சூம் குலத்திலிருந்து வந்தவராக அபூ ஸலமா அவர்களைக் கைப்பிடித்து, மணமகளாக மக்சூம் கோத்திரத்தாரின் இல்லத்திற்கு சென்ற உம்மு ஸலமா அவர்கள், அங்கும் தனது பெருந்தன்மையான குணங்களின் மூலம் அனைவருக்கும் பிடித்தமான நங்கையாகத் திகழ ஆரம்பித்தார்கள். இப்பொழுது மக்சூம் குடும்பங்களில் அன்பும், விருந்தோம்பலும் இன்னும் அனைத்து வித சந்தோஷங்களும் கரை புரண்டோட ஆரம்பித்தன.

ஆனால், இந்த சந்தோஷங்களும், குதூகுலங்களும் அபூ ஸலமா தம்பதியினர் இஸ்லாத்தைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டதன் பின்பு, தலைகீழாக மட்டுமல்ல, அடியோடு அந்தச் சூழ்நிலைகள் மாற்றம் பெற ஆரம்பித்தன.

முழு கோத்திரத்தாரும் இவர்களுக்கு எதிராகப் புயலெனக் கிளர்ந்தார்கள். பிறரைக் கொடுமைப்படுத்தி அதில் இன்பங் காண்பதே பிழைப்பாகக் கொண்டு திரியும், வலீத் பின் முகீரா போன்றவர்கள் இவர்களுக்கு தினம் தினம் புதுப் புதுப் பிரச்னைகளைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இறுதியாக, மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத நிலைக்குச் சென்ற பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை, மற்ற மதத்தவர்களுடன் அணுசரணையாகவும், சகிப்புத் தன்மையுடனும் நடக்கக் கூடியவரான நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு அபீஸீனியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த முதல் குழுவில் இருந்த 16 நபர்களில், 12 பேர் ஆண்களும், 4 பெண்களும் இடம் பெற்றிருந்தார்கள். இந்தப் 16 பேர் கொண்ட குழுவில் அபூ ஸலமாவும், உம்மு ஸலமாவும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் 16 பேர்களின் பெயர்கள் வருமாறு :-

1. உதுமான் பின் அஃப்பான் (ரழி)

2. அபூ ஹுதைஃபா பின் உத்பா(ரழி)

3. அபூ ஸலமா அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி(ரழி)

4. ஆமிர் பின் ரபீஆ(ரழி)

5. ஸுபைர் பின் அவ்வாம் (ரழி)

6. முஸ்அப் பின் உமைர்

7. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)

8. உதுமான் பின் அவ்ஃப் (ரழி)

9. அபூ ஸிப்ரா பின் அபீ ரஹம் (ரழி)

10. ஹாதிப் பின் அம்ர்(ரழி)

11. சொஹைல் பின் வஹ்ப் (ரழி)

12. அப்துல்லா பின் மசூத் (ரழி)

பெண்களின் பெயர்கள் வருமாறு :-

1. ருக்கையா பின்த் முஹம்மது (ரழி) (ஸல்) (உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களின் மனைவி)

2. ஸிஹ்லா பின்த் சொஹைல் (ரழி) (அபூ ஹுதைஃபா பின் உத்பா(ரழி) அவர்களின் மனைவி)

3. உம்மு ஸலமா (அபூ ஸலமா (ரழி) அவர்களின் மனைவி)

4. லைலா பின்த் அபீ ஹஷ்மா (ரழி) (ஆமிர் பின் ரபீஆ (ரழி) அவர்களின் மனைவி)

இந்தக் குழுவினர் அபிஸீனியாவிற்குச் செல்வதற்கு கடற்கரையை அடைந்த பொழுது, இரண்டு கப்பல்கள் அந்தத் துறைமுகத்தில் அபீஸீனியாவிற்குச் செல்வதற்காகக் காத்திருந்தன. அதில் ஏறிக் கொண்ட இந்தக் குழுவினர், அபிஸீனியாவைச் சென்றடைந்தனர்.

இந்த முதல் குழுவிற்கு அடுத்தாக ஒரு குழு அபிஸீனியாவிற்குக் கிளம்பியது. அதில் 83 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவர். இந்தக் குழுவில் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களும் இடம் பெற்றிருந்தார். அபிஸீனியாவில் தொடங்கிய புது வாழ்க்கை எந்தவித அடக்குமுறைகளும் இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பித்தது. இவ்வாறு சென்ற குழுவில் முதன் முதலாக உம்மு ஸலமா (ரழி) அவர்கள், ஜைனப் என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். இதனை அடுத்து உமர் என்ற மகவையும் பெற்றெடுத்தார்கள். இறுதியாக இன்னொரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்கள், அதன் பெயர் துர்ரா.

அபிஸீனியாவின் மன்னர் நஜ்ஜாஸி அவர்கள் இந்தப் புது மார்க்கத்தை கடை பிடிப்பவர்களுடன் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். எனவே, மக்காவின் வாழ்க்கையோடு அபிஸீனியா வின் வாழ்க்கையை ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக, மிகவும் அமைதியாகக் கழிந்து கொண்டிருந்தது.

முஸ்லிம்கள் அபிஸீனியாவில் மன்னரது நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டதுடன், அங்கு அமைதியான வாழ்வை வாழ்கின்றார்கள் என்று கேள்விப்பட்ட மக்கத்துக் குறைஷிகள், இது புதுமார்க்கத்துக் கிடைத்த அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தை நீடிக்க விட்டால், அதுவே நமது பாரம்பரிய சமுதாயத்திற்கான சாவு மணி என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள், இந்த அமைதியை நீடிக்க விடக் கூடாது என்று அதற்கான சதித் திட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள். வளர்ந்து வரும் இஸ்லாத்தை, அதன் தூதை இனி வளரவே விடக் கூடாது, அதற்காக நாம் ஏதாவதல்ல, எதையாவது செய்தாக வேண்டும் என்று நிலைக்கு வந்தனர்.

மிக நீண்ட ஆலோசனைகளின் அடிப்படையில் அவர்கள், உறுதியான நடவடிக்கைகான செயல்முறைக்கு ஆயத்தமானார்கள். அன்றைக்கு அரபுலகின் மிகச் சிறந்த அரசியல் வல்லுநர்களாகக் கணிக்கப்பட்ட அம்ர் பின் ஆஸ் மற்றும் அப்துல்லா பின் ரபீஆ ஆகிய இருவரையும் பரிசுப் பொருட்களுடன் நஜ்ஜாஸி மன்னரது அவைக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் மூலம் நஜ்ஜாஸி மன்னரைச் சந்தித்து, முஸ்லிம்களைக் கைதிகளாக மக்காவுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டார்கள்.

நஜ்ஜாஸி மன்னரைச் சந்திப்பதற்கு முன்பாக, அவரது அமைச்சர்களையும், ஆலோசகர்களையும் முதலில் சந்தித்த இந்த மக்கத்துத் தூதுக் குழுவினர், இறுதியாகத் தான் நஜ்ஜாஸி மன்னரைச் சந்தித்தார்கள். அமைச்சர்களுக்கும், ஆலோசகர்களுக்கும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கி, மன்னரைச் சந்திக்கும் பொழுது, மக்காவிலிருந்து வந்து குடியேறியுள்ள முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு ஒருபக்கச் சார்பாகவும், தங்களுக்கு சாதகமான முறையில் மன்னருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

இறுதியாக, பரிசுப் பொருட்களுடன் மன்னரைச் சந்தித்த மக்கத்துக் குறைஷிகளின் குழு, மன்னருக்கு மரியாதை செலுத்தி விட்டு பரிசுப் பொருட்களையும் கொடுத்து விட்டு, தாங்கள் வந்ததன் காரணமென்னவென்பதை விளக்க ஆரம்பித்தார்கள்.

மன்னரே..! உங்களது நாட்டில் நீங்கள் அடைக்கலம் கொடுத்திருக்கின்ற இந்த முஸ்லிம்கள், எங்களது முந்தைய மார்க்கத்தைத் துறந்து விட்டு புதியதொரு மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு கலவரக்காரர்களாக இவர்கள் மாறி விட்டார்கள். அவர்களது புதிய மார்க்கத்தின் கொள்கையின் காரணமாக, இரத்த பந்தங்களுக்கிடையே பிரிவினையை உண்டு பண்ணுகின்றார்கள். தந்தையை மகனுக்கு எதிராகவும், சகோதரர்கள் சகோதரர்களுக்கு எதிராகவும் எதிர்த்து நிற்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள். எங்களது பாரம்பரியப் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் முன்னோர்களது வழிமுறைகளைக் கூட இவர்கள் உடைத்தெறிகிறார்கள். உங்களது பரந்த மனப்பான்மையின் காரணமாக இவர்களை நீங்கள் அமைதியாக இங்கு வாழ விட்டிருக்கின்றீர்கள், ஆனால் இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர். இந்த நாட்டிலே குழப்பத்தை உண்டு பண்ணக் காரணமாகி விடுவார்கள், ஏனெனில் இவர்கள் உங்களது மார்க்கமான கிறிஸ்துவத்தின் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை. எங்களைப் போல நீங்களும் பிரச்னைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால், இவர்களை நீங்கள் எங்கள் கையில் ஒப்படைத்து நாடு கடுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை, இவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை எங்களைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள் என்று கூறி முடித்தார்கள்.

இப்பொழுது, நஜ்ஜாஸி மன்னர் தனது அவையோரைப் பார்த்து, நடக்கின்ற வழக்கில் நாம் என்ன தீர்ப்புச் சொல்வது என்று கேட்பது போல இருந்தது அவரது பார்வை. மந்திரிப்பிரதானிகளோ, இது அவர்களது உள்நாட்டுப் பிரச்னை நாம் ஏன் தலையிட வேண்டும், மேலும், குறைஷிகள் தங்களிடம் ஏன் அவர்களை ஒப்படைக்கச் சொல்கின்றோம் என்பதற்கு அவர்கள் கூறிய காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகத் தான் இருக்கின்றது என்றும் அவர்கள் கருத்துக் கூறினார்கள். எனவே, இவர்களை அரசியல் குற்றவாளிகளாகக் கருதி, குறைஷிகளிடமே ஒப்படைத்து விடுவது நல்லது என்று கூறினார்கள்.

மன்னர் நஜ்ஜாஸி அனைவருடைய கருத்தையும் கேட்டுக் கொண்டு, நடுநிலையான, தொலைநோக்குச் சிந்தனை கொண்டு, எதனையும் வெளிப்படையாகப் பேசக் கூடிய அவர், இப்பொழுது தனது கருத்து என்னவென்பதைக் கூற ஆரம்பித்தார்.

தீர்ப்பு என்பது இருபக்கங்களின் விவாதங்களைக் கேட்ட பின்பே வழங்க வேண்டும் என்று முடிவெடுத்த மன்னர் நஜ்ஜாஸி, அகதிகளின் தலைவரை அழைத்து உங்களது பக்க வாதம் என்னவென்பதைக் கூறுமாறு பணித்தார். எனவே, தங்களது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக, முஸ்லிம்கள் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களை தலைவராகக் கொண்ட குழுவை அனுப்பி வைத்தார்கள்.

மன்னர் நஜ்ஜாஸியின் அவைக்கு வந்த முஸ்லிம்களின் குழு மன்னருக்கு முகமன் தெரிவித்து விட்டு, தங்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டு, தங்களது கருத்துக்களைக் கூற ஆரம்பித்தார்கள்.

பார்த்தீர்களா..! இந்த முஸ்லிம்களை..! இவர்கள் மிகவும் அகம்பாவம் பிடித்தவர்கள் என்று எதையோ குறை கண்டு பிடித்தவர் போலப் பேசிய அம்ரு இப்னுல் ஆஸ் அவர்கள், இந்த அவைக்கென மரியாதை இருக்கின்றது. இவர்கள் இந்த அவைக்குள் நுழைந்தவுடன் மன்னருக்கு சிர வணக்கம் செய்திருக்க வேண்டும் என்று குற்றச்சாட்டாகக் கூறினார்.

இப்பொழுது, மன்னர் முஸ்லிம்களைப் பார்த்துக் கேட்டார். நீங்கள் இந்த அவையின் ஒழுங்குகளை ஏன் பேணவில்லை..!?

நாங்கள் முஸ்லிம்கள்..! படைத்தவனை மட்டுமே வணங்கக் கட்டளையிடப்பட்டிருக்கின்றோமே ஒழிய, அவனது படைப்புகளை வணங்குமாறு எங்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. நாங்கள் படைப்புகளுக்கு சிரம்பணிய மாட்டோம் என்று தனது பக்க நியாயத்தைக் கூறினார், ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள்.

நீங்கள், ஏதோ ஒரு புதிய மார்க்கத்தைக் கண்டுபிடித்து அதனைப் பின்பற்றி வருவதாகக் கேள்விப்பட்டேனே..?! அதுபற்றி என்ன கூறுகின்றீர்கள் என்று கேட்டார் மன்னர் நஜ்ஜாஸி. இப்பொழுது, மீண்டும் தனது பதிலை ஆரம்பித்தார் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள்..!

மேன்மை தங்கிய மன்னர் அவர்களே..! நாங்கள் நாகரீமற்ற மக்களாக சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம், செத்த பிராணிகளைத் தின்று கொண்டிருந்தோம் மற்றும் வடித்தெடுக்கப்பட்ட போதையூட்டும் மது பானங்களையும் அருந்திக் கொண்டிருந்தோம். எங்களுடைய சமூகத்தில் ஒரு குலம் இன்னொரு குலத்தாரை விட உயர்வாக எண்ணிக் கொண்டு, எங்களுக்குள் மாச்சரியங்களை வளர்த்துக் கொண்டு, அதன் காரணமாக நூறாண்டுகளுக்கும் மேலாகக் கூட பகைமையை வளர்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள் சொந்த பந்த உறவுகளை என்றுமே எங்களுக்குள் பேணிக் கொண்டதில்லை. எங்களிடம் காட்டுச் சட்டம் தான் மிகைத்திருந்தது. வலிமையுள்ளவன் செய்தது சரி என்ற சட்டமே மேலோங்கி இருந்தது. சுருங்கச் சொன்னால் நாங்கள் மிருகத்தைப் போலத்தான் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

பின் அல்லாஹ் எங்களிடையே ஒரு தூதரை அனுப்பி, எங்களை நேர்வழிப்படுத்தினான். அவர் எங்களில் ஒருவராகத் தான் இருந்து வருகின்றார், இன்னும் அவருடைய குலம் கூட எங்களால் நன்கு அறியப்பட்டது தான். அவரைப் பொறுத்தவரை அவரை நாங்கள் உறவுகளை ஒன்றிணைக்கக் கூடியவராக, மேன்மைக்குரியவராக இன்னும் கண்ணியமிக்கவராகக் காண்கின்றோம். அவர் எங்களை அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், உண்மையையே பேச வேண்டும் என்றும், கொடுக்கல் வாங்கல்களில் நீதத்தைப் பேணுமாறும் இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் எங்களுக்கு அவர் அறிவுறுத்துகின்றார். இன்னும் அவர் எது அனுமதிக்கப்பட்டது என்றும், எது தடை செய்யப்பட்டது என்றும் அவர் எங்களுக்கு அறிவுறுத்துகின்றார். அநாதைகள், ஏழைகள், மற்றும் நோயாளிகள், பெண்கள் ஆகிய யாவரும் சம அந்தஸ்துடையவர்களே, நமது சமூகத்தில் அவர்கள் அனைவருக்கு உரிமைகள் உள்ளன என்றும் கூறுகின்றார். இன்னும் அவர்களது உரிமைகளைப் பறிப்பது தவறானது என்றும் கற்றுத் தந்திருக்கின்றார். கற்பையும் மற்றும் மானத்தையும் இன்னும் நல்லொழுக்கத்தையும் பேணிக் கொள்ளுமாறும், குற்றம் பிடிப்பது, கோள் சொல்லுதல் போன்றவற்றிலிருந்து விலகி இருக்குமாறும் அவர் எங்களுக்குப் போதிக்கின்றார். இன்னும் தொழுகையை முறையாகப் பேணுமாறும், இறைவனுக்காக நோன்பு இருப்பதையும், வருமானத்திலிருந்து ஏழைகளுக்கென ஒரு பங்கை ஒதுக்கி ஜகாத்தாக கொடுக்குமாறும் அவர் எங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றார்.

இதனைப் பின்பற்றியே, உங்கள் முன் நாங்கள் இப்பொழுது முஸ்லிம்களாக இருந்து கொண்டிருக்கின்றோம் என்று கூறி விட்டு, சட்டம், ஒழுங்கைப் பேணக் கூடியவர்களாகவும், குற்றங்களிலிருந்தும், ஒழுக்கக் கேடுகளிலிருந்தும் தவிர்ந்து வாழக் கூடியவர்களாகவும், ஜெம்ன விரோதங்கள், பகைகளை மறந்து வாழக் கூடிய மனிதர்களாக நாங்கள் இன்று மாற்றம் பெற்றிருக்கின்றோம். அன்றைக்கு சமூகத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருந்த நாங்கள் தான், இன்று சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய மக்களாக மாறி இருக்கின்றோம். தனக்கு எதனை விரும்புகின்றாரோ அதனையே தனது சகோதரனுக்கும் விரும்பக் கூடிய மக்களாகவும் நாங்கள் மாற்றம் பெற்றிருக்கின்றோம்.

இதன் காரணமாக எங்களது சமூகம் எங்கள் மீது வெறுப்புக் கொண்டு, எங்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்யாத குறையாக எங்களைத் தொந்தரவு செய்கின்றார்கள். ஆனால் அவர்களின் கொடுமைகளின் காரணமாக நாங்கள் மீண்டும் அந்தப் படுபாதகப் படுகுழியில் விழத் தயாராக இல்லை. எங்களின் மீது சொல்லொண்ணாக் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு அதன் உச்சத்தை அந்தக் கொடுமைகள் தாண்டிய போது தான், நாங்கள் எங்களது வாழ்விடங்களை விட்டு விட்டு, அகதிகளாக உங்களது நாட்டில் வந்து தஞ்சமடைந்திருக்கின்றோம். இன்னும் நீங்கள் நீதமான, நேர்மையான ஆட்சியாளர் என்பதையும், மத சகிப்புத் தன்மை கொண்டவர் என்பதையும், எங்கள் மீது கருணை காட்டக் கூடியவர் இன்னும் நல்லமுறையில் நடத்தக் கூடியவர்கள் என்பதையும் அறிந்த காரணத்தால் தான் இங்கு வந்திருக்கின்றோம்....,

... என்று கூறி முடித்தார் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள்.

ஜாஃபர் (ரழி) அவர்களின் விளக்கத்தைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த மன்னர் நஜ்ஜாஸி அவர்கள்,

உங்களது இறைத்தூதருக்கு இறைவனிடமிருந்து தூதுச் செய்தி வருவதாக நான் கேள்விப்பட்டேன், அதிலிருந்து சிலவற்றை ஓதிக்காட்டுங்கள், அதனை நான் செவிமடுக்க விரும்புகின்றேன் என்று கூறினார்.

கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஜாஃபர் (ரழி) அவர்கள், அத்தியாயம் மர்யம் லிருந்து சில வசனங்களை கேட்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் அளவுக்கு ஓத ஆரம்பித்தார்கள். திருமறையின் வசனங்களைச் செவிமடுத்த மன்னர் நஜ்ஜாஸியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடி, அவரது தாடியை நனைத்துக் கொண்டிருந்தது. இறுதியாக, சுயநினைவிற்கு வந்த மன்னர், இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் வசனங்களைப் போலவே இருக்கின்றது, இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை தான் என்று கூறினார். இப்பொழுது அவையிலிருந்தோர் என்ன செய்வதென்றே தெரியாது திகைத்தவர்களாக, மக்காவிற்குள் நுழையும் மக்களை எவ்வாறு இவர்கள் மந்திர வித்தை கொண்டு கட்டிப் போடுவதைப் போல கட்டிப் போடுகின்றார்களோ, அதே மாயா ஜால வித்தையை மன்னரிடமும் காட்டி விட்டார்கள் என்றே குறைஷிகள் எண்ணினார்கள்.

இப்பொழுது, மக்காவிலிருந்து வந்திருந்த குறைஷிகளின் பிரதிநிதிகளை நோக்கிய மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், இவர்கள் உயர் பண்புகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றார்கள், இன்னும் இவர்கள் விரும்பும் காலம் வரைக்கும் இந்த அபீசீனிய மண்ணில் வாழ்ந்து கொள்ளலாம் என்று பதிலளித்தார். இன்னும் அவர்களுக்குத் தேவையான அனைத்து வித பாதுகாப்புகளும் கொடுக்கப்படும் என்றும் கூறிய அவர், எனக்கு நீங்கள் கொண்டு வந்திருக்கின்ற இந்தப் பரிசுப் பொருட்களையும் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் ஒரு மலையளவு தங்கத்தைக் கொண்டு வந்து கொட்டினாலும், இந்த நேர்வழி பெற்ற மக்களை நான் உங்களது கைகளில் ஒப்படைக்க மாட்டேன் என்று கூறி குறைஷிகளைத் திருப்பி அனுப்பி விட்டார்.

மன்னரின் இந்தப் பதிலைக் கேட்ட அம்ர் இப்னுல் ஆஸ் அவர்களும், அப்துல்லா பின் அபீ ராபிஆ அவர்களும் சிறுமை அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, எந்த முகத்தைக் கொண்டு நாம் மக்காவுக்குத் திரும்புவது, நம்முடைய தலைவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று கேட்டுக் கொள்வது போல அவர்களது பார்வை அமைந்திருந்தது.

அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இரைத்த நீராய் ஆகி விட்டதே..! இன்னும் அவர்கள் முடங்கி விடவில்லை, மக்காவிற்குத் திரும்புவதற்கும் விரும்பவில்லை. மாறாக, அவர்களுக்குள் கூடி ஆலோசனை செய்து, இன்னுமொரு சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்தனர்.

இறுதியாக, ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி அம்ர் அவர்கள், இந்த திட்டத்தின்படி நாம் நடந்தால் உண்மையிலேயே நஜ்ஜாஸி கண்டிப்பாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார். இந்தத் திட்டம் நிச்சயமாக நமக்குத் தோல்வியைத் தராது என்றும் அவர் கூறினார். இதனைக் கேட்ட அப்துல்லா அது என்ன திட்டம் சொல்லுங்கள் என்று கேட்டார்.

அதாவது, முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்களை மனிதராகவும், இறைவனுடைய தூதராகவும் தான் நம்பிக்கை கொள்கின்றார்கள், ஆனால் கிறிஸ்தவர்களோ அவரை கடவுளாகக் கருதுகின்றார்கள். முஸ்லிம்களுடைய புதிய வேதமானது, இன்னும் முஸ்லிம்களின் அந்த நம்பிக்கையானது, முஸ்லிம்கள் மீது மன்னர் நஜ்ஜாஸி வைத்திருக்கக் கூடிய நம்பிக்கையைத் தகர்த்தெறியக் கூடியதாக இருக்கும். இன்னும் முஸ்லிம்கள் தரக் கூடிய பதிலால் மன்னரது அனைத்துப் பிரதானிகளும் கடுமையாகக் கொதித்தெழுவார்கள் என்றும் கூறினார்.

அடுத்த நாள் காலையில் மன்னரது அவைக்குச் சென்ற குறைஷிகளின் தூதுக் குழுவினர், நேற்றைய தினம் நாங்கள் ஒரு தகவலை உங்கள் முன் கொண்டு வரத் தவறி விட்டோம், அதாவது இந்த முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்களை இறைவனது மகனாக ஏற்றுக் கொள்வதில்லை, மாறாக, அவரை ஒரு மனிதராகவும் இன்னும் இறைவனது அடிமையாகவும் தான் கருதுகின்றார்கள். எனவே, நீங்கள் அந்த முஸ்லிம்களை மீண்டும் அழைத்து, ஈஸா (அலை) அவர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கை என்னவென்பதைக் கேட்டறிய வேண்டும் என்ற கோரிக்கையை மன்னர் நஜ்ஜாஸி முன் வைத்தனர்.

இப்பொழுது முஸ்லிம்கள் அவைக்கு வரவழைக்கப்பட்டு, ஈஸா (அலை) அவர்கள் பற்றிய உங்களது நம்பிக்கைகள் என்ன என்று கேட்கப்பட்டது. ஜாஃபர் (ரழி) அவர்கள் சத்தியத்தை முழங்கினார்கள். எங்களது இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஈஸா (அலை) அவர்கள் பற்றிக் கூறும் போது, அவர் அல்லாஹ்வின் அடியாரும், அவனது திருத்தூதருமாவார்கள், இன்னும் அல்லாஹ்வினுடைய ஆவி (ரூஹ்)யினாலும், இன்னும் அவனது வார்த்தை (கலிமா) யினாலும் வந்துதித்தவராவார் என்றும், தனது பதிலை முடித்தார்.

ஜாஃபர் (ரழி) அவர்களிடமிருந்து, ஈஸா (அலை) பற்றித் தெரிவித்த அந்த முழுமையான கருத்தைச் செவிமடுத்த மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், தனது பாதங்களை தரையில் அடித்துக் கொண்டு, ஆச்சரியத்துடன், ''நான் எதனை உங்களிடமிருந்து கேட்டேனோ அவை அனைத்தும் சத்தியம், ஈஸா (அலை) அவர்கள் தன்னைப்பற்றி என்ன கூறியிருக்கின்றார்களோ, அதிலிருந்து நீங்கள் எதனையும் மாற்றவுமில்லை, சேர்க்கவுமில்லை, மிகச் சரியாகச் சொன்னீர்கள் என்று கூறினார்.

இப்பொழுது முஸ்லிம்களின் பக்கம் திரும்பிய மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், நீங்கள் எனது தேசத்தில் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழலாம், உங்களுக்கு எந்த சிறு தொந்தரவுகளும் அணுகாது.

பின்னர் குறைஷிகளின் தூதர்களின் பக்கம் திரும்பிய மன்னர், ''இறைவனுடைய மிகப் பெரும் கருணையால், நாங்கள் எங்களுக்குத் தேவையான பதிலையும், விளக்கத்தையும் பெற்றுக் கொண்டோம்''. நீங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு, உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லலாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

மக்காவிலிருந்து சதித் திட்டத்தை நிறைவேற்றும் எண்ணத்துடன் வந்த அந்தத் தூதுக் குழுவினர், வெறுங்கையுடன் ஏமாற்றத்துடன் நாடு திரும்பினார்கள்.

அபீசீனியாவில் நடந்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியை படம் பிடித்தவாறு நம்முடைய நினைவலைகளுக்கு விருந்தாக்கி வைத்திருப்பவர், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள். அவர்கள் இந்த முழு வரலாற்றையும் பதிவு செய்து வைத்து, நமக்கு வரலாற்றுப் பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார்கள்.

உம்மு ஸலமா (ரழி) அவர்கள், அபீசீனியா வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பது பற்றியும், அங்கு அவர்கள் அனுபவித்த அமைதியான வாழ்வு பற்றியும், மன்னர் நஜ்ஜாஸி அவர்களது உயர்ந்த பண்புகள், குணநலன்கள் பற்றியும் விவரித்திருந்தாலும், தமது சொந்த மண்ணைப் பிரிந்து வாழ்ந்த அவர்களது மனங்களில் மக்காவைப் பற்றி நினைவுகள் அடிக்கடி வந்து போய் அவர்களை நோய் பிடித்தவர்கள் போல வாட்டியது. அதுவே ஒரு மனநோயாகவும் மாறியது.

எப்பொழுது மக்காவில் அமைதி திரும்பும், எப்பொழுது நாம் நமது சொந்த மண்ணை மிதிப்போம் என்றே அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருநாள், உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள், இப்பொழுது மக்காவின் நிலைமை முற்றிலும் மாற்றம் பெற்று விட்டது என்ற செய்தியைக் கேள்விப்பட்டார்கள். உமர்(ரழி) அவர்கள் இஸ்லாத்தினைத் தழுவியதன் காரணமாக, அவர்களது தலையீட்டின் காரணமாக மக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள் குறைந்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இந்தச் செய்தியைக் கேட்ட அபீசீனியாவில் இருந்த முஸ்லிம்கள் மிகவும் சந்தோசமடைந்தார்கள். இன்னும் தங்களது நாட்டிற்குத் திரும்பவும் முடிவெடுத்தார்கள். அவர்களுடன் உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களும் தனது குடும்பத்துடன் மக்காவுக்கு திரும்பத் தீர்மானித்தார்கள். ஆனால் அவர்கள் மக்காவை அடைந்த போது தான், இது வெறும் புரளி என்பதையும், மக்காவில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை, கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் அறிந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் அறிந்து கொண்ட செய்தி அவர்களுக்கு எந்தப் பலனும் அளிக்கவில்லை.

ஒரு நபிமொழி அறிவிப்பின்படி, கீழ்க்கண்ட சம்பவத்தின் பின்னணி தான் அபீசீனியாவிலிருந்து மக்காவிற்கு அவர்களைத் திரும்பத் தூண்டியது. ஒருமுறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதிக் கொண்டிருந்த பொழுது, அதனைக் கேட்டுக் கொண்டிருந்த இறைநிராகரிப்பாளர்கள் அனைவரும் தங்களையறியாமலேயே, நிலத்தில் சிரம் தாழ்த்தினார் (சுஜுது செய்தார்)கள். இந்தச் சம்பவம் தான் பெரிதாக்கப்பட்டு, புரளியாக அபீசீனியாவிற்குச் சென்று, குறைஷிகள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள் என்ற செய்தியாகப் போய்ச் சேர்ந்தது. இந்தச் செய்தியை உண்மை என நம்பித்தான் அவர்கள் நாடு திரும்பினார்கள்.

முஸ்லிம்களுக்கெதிரான குறைஷிகளின் கொடுமைகள் குறையவில்லையாதலால், முஸ்லிம்கள் மீண்டும் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்ய முடிவெடுத்தனர். அதேகால கட்டத்தில் முஸ்லிம்கள் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்வதை நிறுத்தி விட்டு, மதீனாவிற்குச் செல்லுமாறு பணித்தார்கள். அகபாவில் உடன்படிக்கை எடுத்துக் கொண்ட மதீனத்து முஸ்லிம்கள், இப்பொழுது மக்காவில் உள்ள முஸ்லிம்களை ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருமாறு அழைத்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, அபீசீனியாவை விடுத்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு பணித்தார்கள். இன்னும் ஹிஜ்ரத் (இடம் பெயர்ந்து) வருகின்ற முஸ்லிம்களை தங்களது சொந்த சகோதரர்கள் போல கவனித்துக் கொள்வதாகவும் அன்ஸார்கள் (மதீனத்து முஸ்லிம்கள்) வாக்குறுதி அளித்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) குடும்பத்தினரின் ஹிஜ்ரத்

அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனது குடும்பத்தாருடன் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஒட்டகத்தில் ஏறி பயணமாகத் தொடங்கினார். இதனை அறிந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களது குடும்பத்தார் ஓட்டகத்தை மறித்து, ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு,

அபூ ஸலமாவே..! நீங்கள் எங்கு விரும்புகின்றீர்களோ.. அங்கு நீங்கள் போய்க் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, ஆனால் உங்கள் மனைவியோ எங்களைச் சேர்ந்தவள், எனவே, அவரை நீங்கள் விட்டு விட்டுத் தான் போக வேண்டும்.

நேற்றைக்கு அபிசீனியாவிற்கு கூட்டிக் கொண்டு போனீர்..! இன்றைக்கு மதீனாவிற்குக் கூட்டிக் கொண்டு போகின்றீர், அவளை வைத்து நிம்மதியாக குடும்பம் நடத்தத் தெரியாத உமக்கு எதற்கு மனைவி என்று அவர்கள் ஏளனமாகச் சிரித்தார்கள்.

உம்மு ஸலமா (ரழி) அவர்களது குடும்பத்தினர் நடந்து கொண்ட விதத்தைக் கேள்விப்பட்ட அபூ ஸலமா குடும்பத்தினர் உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் வந்து, நீ பெற்றிருக்கின்ற பிள்ளைகள் எங்களது இரத்த வழி வாரிசுகள், அதனை உன்னுடைய வளர்ப்பில் நாங்கள் விட முடியாது, அவர்கள் எங்களது இரத்தமும், சதையும் ஆவார்கள், எனவே அவர்களை நாங்கள் எடுத்துச் சென்று வளர்த்துக் கொள்கின்றோம் என்று கூறி, பிள்ளைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று விட்டார்கள்.

சற்று முன் மதீனாவை நோக்கிய பயணத்தில் இருந்து கொண்டிருந்த ஒட்டு மொத்த குடும்பமும் இப்பொழுது, தனித்தனியாக மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு விட்டது. இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த பொழுது, அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனது மனைவியை விட்டு விட்டு தன்னந்தனியாக மதீனாவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தார், உம்மு ஸலமா (ரழி) அவர்களை அவர்களது உறவுக்காரர்கள் அழைத்துச் சென்று விட்டார்கள், உம்மு ஸலமாவின் பிள்ளைகளை அபூ ஸலமா (ரழி) அவர்களின் குடும்பத்தவர்கள் அழைத்துச் சென்று விட்டார்கள்.

ஆக, மொத்த குடும்பமே இப்பொழுது முற்றிலும் பிரிந்து போய் நிற்க, நடப்பது அத்தனையும் நிஜமா..! என்று கண் கலங்கிய உம்மு ஸலமா (ரழி) அவர்கள், பிரிவுத் துயரால் வாடி நின்றார்கள். ஒவ்வொரு நாளும் தனது கணவரையும், பிள்ளைகளையும் பிரிந்த அந்த இடத்திற்கு வந்து அந்த சோக நினைவுகளில், தன்னை இழந்து அழுது கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் அந்த வழியே போய்க் கொண்டிருந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களின் கோத்திரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அந்த இடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, உம்மு ஸலமாவே..! உமக்கு என்ன நேர்ந்தது, ஏன் இப்படி அழுது கொண்டிருக்கின்றாய்? என்று கேட்டார். நடந்த அந்தத் துயர நிகழ்வுகளை அவரிடம் சொன்னார். அந்த மனிதர் உம்மு ஸலமா (ரழி) மற்றும் அபூ ஸலமா (ரழி) ஆகியோர்களின் உறவினர்களிடம் போய், இந்த பெண்ணை ஏன் நீங்கள் இப்படி சித்தரவதை செய்கின்றீர்கள். நீங்கள் இந்தப் பெண்ணை இப்படி குழந்தைகளைப் பிரித்து வைத்து அழகு பார்ப்பது முறையா? என்று அவர்களது தவறை தெளிவான முறையில் எடுத்துச் சொன்னதன் பின்பு, அவர்கள் தங்களது தவறை உணர்ந்து, குழந்தைகளை திருப்பிக் கொண்டு வந்து உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள். அத்துடன் மதீனாவுக்குச் செல்வதற்கும் அவர்கள் அனுமதி தந்தார்கள்.

ஆனால் எப்படி அவரால் தன்னந்தனியாக மதீனாவுக்குச் செல்ல முடியும்? அவருடன் மதீனா வருவதற்கு யாரும் தயாராக இல்லை. இறுதியாக, தைரியத்தை வரவழைத்துக் கொண்ட உம்மு ஸலமா (ரழி) அவர்கள் தன்னந்தனியாகவே தனது பிள்ளைகளுடன் ஒட்டகத்தில் தனது பயணத்தைத் தொடர்ந்தார்கள். தன்ஈம் என்ற இடத்திற்கு அருகே செல்லும் போது, அந்த வழியே வந்து கொண்டிருந்த உதுமான் பின் தல்ஹா அவர்களை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் சந்தித்தார்கள். இந்த உதுமான் பின் தல்ஹா அவர்கள் அப்பொழுது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.

உம்மு ஸலமா (ரழி) அவர்களைப் பார்த்த உதுமான் பின் தல்ஹா அவர்கள், உம்மு ஸலமா அவர்களே..! தன்னந்தனியாக நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார். உம்முடன் வருவதற்கு உமது குடும்பத்தில் எவருமா கிடைக்கவில்லை? என்று வினா எழுப்பிய அவருக்கு, நான் எனது இறைவனை முழுமையாகச் சார்ந்து இந்தப் பயணத்தைத் துவங்கினேன், அவனே எனது பாதுகாவலன், அவனே எதிரிகளிடமிருந்து என்னைச் சூழ்ந்து காக்கிறவன், அவனால் மட்டுமே என்னைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் பயணத்தைத் தொடங்கிவிட்டேன் என்று கூறினார்.


உதுமான் பின் தல்ஹா அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு துணைக்காக மதீனா வரை வரச் சம்மதித்தவராக, ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

உம்மு ஸலமா (ரழி) அவர்கள் உதுமான் பின் தல்ஹா அவர்களது இந்த உதவியைப் பின்னாளில் இவ்வாறு நினைவு கூரக் கூடியவராக இருந்தார். அந்த அறியாமைக்காலத்திலும் இப்படியும் ஒரு மனிதரா! இவரைப் போல நல்ல எண்ணம் கொண்ட மனிதரை நான் பார்த்ததே இல்லை, அவர் எனக்கு எந்தக் கெடுதலும் நினைக்கவில்லை, எந்த தொந்தரவும் செய்யவில்லை. எப்பொழுதெல்லாம் ஓய்வெடுக்க ஒட்டகத்தை நிறுத்தினாலும், ஒட்டகத்தைக் கட்டிப் போட்டு விட்டு, அவர் எங்களை விட்டு தூரப் போய் விடுவார். அதன் மூலம் எனக்கு அவர் சங்கோஜமும், சங்கடமும் ஏற்படுவதிலிருந்து என்னைப் பாதுகாத்தார். பின்பு பயணத்தைத் துவங்கும் போது, நானும் எனது பிள்ளைகளும் ஒட்டகத்தில் ஏறி உட்காரும் வரைக்கும் தூர நின்று கொண்டு விட்டு, நாங்கள் ஏறி முடித்ததும், ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விடுவார்.

சில நாட்கள் கழித்து மதீனாவின் வெளிப்புறப் பகுதியில் அமைந்த இடமான கூபாவிற்கு உம்மு ஸலமா (ரழி) அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கு பனூ அம்ர் பின் அவ்ஃப் கோத்திரத்தார்கள் அந்த இடத்தில் தான் குடியிருந்தார்கள். எனவே, அபூ ஸலமா (ரழி) அவர்களும் கூட இங்கு தான் இருக்க வேண்டும், நீங்கள் அவருடன் போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள் நான் திரும்பிப் போகின்றேன் என்று கூறி உதுமான் பின் தல்ஹா அவர்கள் திரும்பிப் போய் விட்டார்கள்.

உதுமான் பின் தல்ஹா அவர்கள் செய்த, இந்த காலம் அறிந்து செய்த உதவியானது மறக்கக் கூடியதல்ல, அவரது நற்பண்பு என்னை மிகவும் பாதித்து விட்டது என்று கூறுக் கூடியவர்களாக உம்மு ஸலமா (ரழி) அவர்கள் இருந்தார்கள்.

இறுதியாக, உம்மு ஸலமா (ரழி) அவர்கள் தனது கணவருடன் சேர்ந்து கொண்டார்கள், அளவில்லா சந்தோஷமடைந்தார்கள். இப்பொழுது உடைந்து சிதறிப் போன அபூ ஸலமா (ரழி) அவர்களின் குடும்பத்தவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தார்கள், குழந்தைகளும் தங்களது பெற்றோர்களின் கண்காணிப்பில் சந்தோஷமடைந்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) ஏற்கனவே பத்ருப் போரில் கலந்து கொண்டு, சிறப்புப் பெற்றிருந்தார்கள், அதனைப் போலவே உஹதுப் போரிலும் கலந்து கொண்ட சிறப்புக்குரியவராகத் திகழ்ந்தார். உஹதுப்; போரில் அபூ உஸமா ஜஸ்மி என்பவர் எறிந்த கத்தி ஒன்று மிக ஆழமான காயத்தை அபூ ஸலமா (ரழி) அவர்களுக்கு ஏற்படுத்தியது, அதன் மூலம் அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்கள். மாதக் கணக்கில் அதற்கான மருத்துவம் செய்தும் பலனளிக்கவில்லை. மேற்புறத்தில் ஆறிய புண், உள்பகுதியில் சீழ் வைத்து அதிக ரணத்தைத் தந்து கொண்டிருந்தது.

உஹதுப் போர் முடிந்து சற்று இரண்டு மாதங்கள் இருந்த நிலையில், பனூ அஸத் குலத்தவர்கள் முஸ்லிம்களைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பனூ அஸத் குலத்தவர்களை எதிராகப் போர் செய்வதற்குத் தயாராகும்படியும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பனூ அஸத் குலத்தவர்களுக்கு எதிராகப் புறப்பட்ட படைக்குத் தலைமைத் தளபதியாக அபூ ஸலமா (ரழி) அவர்களைத் தான், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். இந்தப் படையில் மிகப் பெரும் படைத்தளபதிகளாக விளங்கிய அபூ உபைதா அல் ஜர்ராஹ் (ரழி) மற்றும் சஅத் பின் அபீவக்காஸ் (ரழி) போன்ற மிகச் சிறப்புப் பெற்ற தளபதிகளும் இடம் பெற்றிருந்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) அவர்களிடம் இஸ்லாமியக் கொடியைக் கொடுத்து விட்டு, போர் உத்திகளை எவ்வாறு வகுத்துச் செயல்பட வேண்டும் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.

பனூ அஸத் குலத்தவர்கள் வசிக்கக் கூடிய பகுதியின் எல்லைக் கோட்டுக்கருகே நமது படைகளை நிறுத்துங்கள். அவர்கள் வந்து தாக்குதவற்கு முன்பாக நீங்கள் அவர்களை தாக்க ஆரம்பித்து விடுங்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் அளித்து விடாதீர்கள் என்று கட்டளையிட்டார்கள்.

இப்பொழுது, அபூ ஸலமா (ரழி) அவர்களது தலைமையில் 150 பேர் கொண்ட இஸ்லாமியப் படை கிளம்பியது. பனூ அஸத் குலத்தவர்களது எல்லைக் கோட்டுக்கருகே வந்த இஸ்லாமியப் படை சற்றும் தாமதிக்காது தங்களது தாக்குதலைத் தொடுத்தார்கள். உஹதுப் போரின் வெற்றிக்குப் பின், நடந்த இப்போரில் முஸ்லிம்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. ஏனெனில் சுற்றி உள்ள யூத மற்றும் எதிரிகளுக்கு இதன் மூலம் சிறந்த பாடத்தையும், முஸ்லிம்களைப் பற்றிய அச்ச உணர்வையும் ஊட்ட வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இருந்த காரணத்தால், தங்களது முழு பலத்தையும் பிரயோகித்து, வெற்றி அல்லது வீர மரணம் என்ற உயர்ந்த நோக்கத்தில் போரை, வெற்றியை நோக்கிக் கொண்டு சென்ற முஸ்லிம்கள், இறுதியில் பனூ அஸத் கோத்திரத்தாரை வேரறுத்து வெற்றி வாகை சூடினார்கள்.

இந்தப் போரில் தனக்கு ஏற்பட்ட காயத்தையும் மறந்து தன் மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்காகவும், இறைத்திருப்தியைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் அபூ ஸலமா (ரழி) அவர்கள் போரிட்டார்கள். அவர்களது வாள் அனைத்துப் பக்கமும் சுழன்று, எதிரிகளை நிலைகுலைய வைத்தது. இறுதியில், முஸ்லிம்களின் வீரத்திற்கு முன்னால் மண்டியிட்டு, தோற்று ஓடினார்கள் பனூ அஸத் குலத்தவர்கள்.

இப்பொழுது ஏற்கனவே காயம் பட்ட இடத்தில் இருந்து ரணம், வலியாக மாறி, அந்த இடத்தில் இரத்தம் ஒழுக ஆரம்பித்தது. முஸ்லிம்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அதிகமான கனீமத் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மதீனாவை விட்டுக் கிளம்பி 29 நாட்கள் கழித்து மீண்டும் ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் 8 ம் தேதியன்று முஸ்லிம்கள் மீண்டும் மதீனாவிற்குள் நுழைந்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) அவர்களின் காயத்தைப் பார்த்த உம்மு ஸலமா (ரழி) மிகுந்த மன வேதனை அடைந்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) மரணம்

அபூ ஸலமா (ரழி) அவர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் படுக்கையில் கிடக்கும் பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ ஸலமாவைப் பார்க்க வீட்டிற்கு வந்தார்கள். அபூ ஸலமா (ரழி) அவர்களுக்கு மரணம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபூ ஸலமா (ரழி) அவர்களின் மீது கையை வைத்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ ஸலமா (ரழி) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள், இன்னும் அபூ ஸலமா (ரழி) அவர்களும் இறைவனிடம் பிரார்தித்தார்கள், இறைவா! என்னைப் போலவே என்னுடைய குடும்பத்தை பாதுகாத்துக் கவனித்துக் கொள்கின்ற ஒருவரை, துணைவராக ஆக்கி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள். இன்னும் உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு கவலையையும், கடினமான வாழ்வையும் தராத ஒருவரை அவருக்கு துணைவராக ஆக்கி வைப்பாயாக..! என்றும் தனது மனைவிக்காகப் பிரார்த்தித்தார்கள்.

இந்தப் பிரார்த்தனைக்குப் பின்பு, அபூ ஸலமா (ரழி) அவர்களை மரணம் வந்தடைந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கரங்களால் அபூ ஸலமா (ரழி) அவர்களின் கண்களை மூடினார்கள். அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனக்காகப் பிரார்த்தித்ததை அறிந்த உம்மு ஸலமா (ரழி) அவர்கள், அபூ ஸலமாவை விட மிகச் சிறந்த கணவர் யார்? என்று ஆச்சரியப்பட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நான் எனக்காக இறைவனிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கேட்டார்கள்.

நீங்கள் உங்களுடைய மற்றும் அபூ ஸலமா (ரழி) அவர்களுடைய பாவ மன்னிப்பிற்காக இறைவனிடம் துஆச் செய்து கொள்ளுங்கள், உங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தரும்படி இறைவனிடம் முறையீடு செய்து கொள்ளுங்கள் என்ற பிரார்த்தனையை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவாறு நான் பிரார்த்தித்தேன், இறைவன் என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். கணவர் இறந்ததன் பின்பு முஸ்லிம் பெண்கள் அனுஷ்டிக்கக் கூடிய அந்த இத்தா என்ற காத்திருப்புக் காலம் முடிவடைந்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் திருமணம்

இப்பொழுது இறைவன் உம்மு ஸலமா (ரழி) அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டதற்கிணங்க, முதலில் அபுபக்கர் (ரழி) அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் ஒரு தூதுவரை அனுப்பி, அவர்களை மணந்து கொள்ளத் தயாராகக் இருப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அபுபக்கர் (ரழி) அவர்களை மணந்து கொள்ள மறுத்து விடுகின்றார்கள்.

பின்பு உமர் (ரழி) அவர்கள் மணந்து கொள்ளத் தயாராக இருந்தும், அதனையும் மறுத்து விடுகின்றார்கள்.

பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தான் மணக்கத் தயாராக இருப்பதாகச் செய்தி சொல்லி அனுப்பி விடுகின்றார்கள்.

இப்பொழுது உம்மு ஸலமா (ரழி) அவர்களை மணந்து கொள்ள மூன்று நபர்கள் காத்திருக்கின்றார்கள். தலை வெடித்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு..! அதற்குக் காரணமும் இருந்தது.

முதலாவதாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வேண்டுகோளை நான் உதாசிணம் செய்தால், நான் செய்து வைத்திருக்கின்ற நற்செயல்கள் அழியக் காரணமாகி விடுமே..!

இரண்டாவதாக, நானோ வயதான பெண்.

மூன்றாவதாக, எனக்கோ அதிகமான பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் நான் எந்த முடிவை எடுப்பது என்று திணறிக் கொண்டிருந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஆலோசனை கூறினார்கள்.

உம்மு ஸலமா (ரழி) அவர்களே..! நீங்கள் அவசரப்பட வேண்டாம். இறைவனிடம் முறையிட்டு, இதற்கு சரியான தீர்வை வழங்குமாறு அவனிடமே உதவி கோருங்கள், நானும் உங்களுக்காக துஆச் செய்கின்றேன் என்று கூறி அவர்களது மன உலைச்சலுக்கு தீர்வு சொன்னார்கள்.

இன்னும் உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) இவ்வாறு பதில் கூறினார்கள். நீங்கள் வயதான பெண்மணி என்றால் நானும் வயதானவன் தான், பிள்ளைகளைப் பொறுத்தவரை நீங்கள் கவலைப்பட வேண்டாம், அவர்களுக்கு நான் பாதுகாவலனாக இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்கவும் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்று வாக்குறுதியளித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த பதிலால், மனம் மகிழ்ந்த உம்மு ஸலமா (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணக்கச் சம்மதித்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தார்களுடன் இணைவதை மிகப் பெரும் பாக்கியமாகக் கருதினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொண்டதன் மூலம் அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனது மனைவிக்குச் செய்த பிரார்த்தனைகள் நிறைவேறியது. ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும், உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கும் திருமணம் நடந்தது.

அன்னையின் சிறப்புக்கள்

அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் அறிவிப்பின்படி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நாளின் அஸர் தொழுகையின் பின்பு தனது மனைவிமார்களின் வீட்டிற்குச் சென்று, அவர்களின் நலம் மற்றும் தேவைகள் குறித்து விசாரித்து வரக் கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறு அவர்கள் மனைவிமார்களின் வீடுகளுக்குப் புறப்படும் பொழுது, எங்களில் மூத்தவரான உம்மு ஸலமா (ரழி) அவர்ளின் வீட்டிலிருந்து ஆரம்பித்து, இறுதியில் எனது (ஆயிஷா (ரழி)) வீட்டோடு முடித்துக் கொள்வார்கள்.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களின் அழகு, கல்வி மற்றும் ஞானத்தின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் சிறந்த இடத்தினை வகித்தார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு, தங்களுடன் கொண்டு வந்திருக்கும் பலிப் பிராணிகளைக் அறுத்துப் பலியிட்டு விட்டு, தங்களது தலைமுடியை சிரைத்துக் கொள்ளும்படி தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை உடனே செயல்படுத்துவதில் தோழர்கள் சற்று ஆர்வங்குன்றி இருந்தார்கள் என்பதோடு, யாரும் பலிப்பிராணிகளை அறுக்காமல் தாமதித்துக் கொண்டிருந்தார்கள்.

நிலைமையைப் புரிந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் இந்தப் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்று ஆலோசனை கலந்த பொழுது அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்,

நீங்கள் யாரிடமும் எதுவும் பேச வேண்டாம். முதலில் நீங்கள் சென்று உங்களது பலிப்பிராணிகளை நீங்கள் அறுத்துப் பலியிடுங்கள். நீங்கள் அதனைச் செய்த பின்பு, உங்களது தோழர்கள் உங்களுக்குக் கட்டுபட வேண்டியது அவசியமாகி விடும் பொழுது, அவர்கள் தானாகவே வந்து அவரவர் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிட்டு விட்டு, முடிகளை சிரைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் என்று ஆலோசனை கூறினார்கள்.

அதன்படியே நடந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கொடுத்த ஆலோசனை நன்கு வேலை செய்வதைப் பார்த்தார்கள். தனது தோழர்களும் இப்பொழுது தங்கள் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிட ஆரம்பித்து விட்டதுடன், அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் அவர்கள் கல்வியறிவு பெற்றிருந்ததுடன், ஏழைகளுக்கும் இன்னும் தேவையுடையவர்களுக்கும் உதவி செய்யக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களின் வீட்டில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலங்களில் பல முறை திருமறையின் வசனங்கள் அருள் செய்யப்பட்டிருக்கின்றன. சூரா அஹ்ஸாப் ன் இந்த வசனங்கள் அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களின் வீட்டில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் தான் அருள் செய்யப்பட்டது.

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்;. முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான
். (33:33)

இன்னும் சூரா அத் தவ்பா வின் பல வசனங்கள் அன்னையவர்களின் இல்லத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் தான் அருள் செய்யப்பட்டது.

வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்ட காரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்
. (9:102)

இன்னும் இந்த வசனமும்,

(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான
். (9:118)

மேலே உள்ள இறைவசனங்கள், கஅப் இப்னு மாலிக் (ரழி), ஹிலால் பின் உமைய்யா (ரழி), மராரா பின் அர்ராபிஆ (ரழி) ஆகியோர்கள், இறைவனிடம் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து கொண்டதன் பின்பு, அதன் பலனாக அவர்களை மன்னித்து மேற்கண்ட வசனத்தை இறக்கியருளினான். மேலே உள்ள மூன்று தோழர்களும், எந்தவித நியாயமான காரணமுமின்றி தபூக் யுத்தத்திற்குச் செல்லாமல் மதினாவிலேயே தங்கி விட்டார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி, இந்த மூன்று நபர்களுடன் யாரும் எந்தவித உறவும், கொடுக்கல் வாங்கல், பேச்சு வார்த்தை எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மதீனத்து முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டார்கள். இந்த உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மூன்று பேரும், இறைவனிடம் மன்றாடி முறையிட்டு பாவ மன்னிப்புத் தேடியதன் பின்பு, இறைவன் இந்த மூன்று பேர்களையும் மன்னித்துத் தான் மேற்கண்ட வசனத்தை இறக்கியருளினான்.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களது இல்லத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த பொழுது தான், மேற்கண்ட வசனம் அருள் செய்யப்பட்டது. இரவின் இறுதிப் பகுதியில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்த மூன்று நபர்களின் பாவ மன்னிப்பை இறைவன் ஏற்றுக் கொண்டான் என்று அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

இதனைக் கேட்ட அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இந்த நற்செய்தியை அவர்களிடம் தெரிவிக்கச் சொல்வோமா? என்று கேட்டார்கள். இந்த அகால நேரத்தில் அவர்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம். காலை பஜ்ருத் தொழுகைக்குப் பின்பு யாரிடமாவது சொல்லி அனுப்பி, அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வோம் என்று கூறினார்கள். இந்த செய்தியைக் கேட்ட அந்த மூன்று பேரும் மகிழ்ச்சி அடைந்தார்கள், இன்னும் அனைத்து நபித்தோழர்களும் சந்தோஷமடைந்தார்கள்.

இன்னும் அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பல போர்களுக்குச் சென்றுள்ளார்கள். பனீ முஸ்தலக் போர், தாயிஃப் போர், கைபர், ஹுனைன் மற்றும் மக்கா வெற்றியின் பொழுதும் அன்னையவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இன்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பொழுதும் அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இன்னும் பைத்அத்தும் செய்து கொண்டார்கள்.

சல்மான் அல் ஃபார்ஸி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒருமுறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உரையாடுவதற்காக வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு தஹிய்யா கல்பி (ரழி) என்ற தோழரும், இன்னும் அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அங்கிருந்தார்கள். பேசி முடித்த பின், சற்று முன் உரையாடி விட்டுச் சென்ற நபர் யார் என்று தெரியுமாக இருந்தால் கூறுங்கள் என்று கூறினார்கள்.

அவர் உங்களது மதிப்பிற்குரிய தோழர் தஹிய்யா கல்பி (ரழி) அவர்கள் என்று அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள். அதன் பின், இல்லை..! வந்தவர் ஜிப்ரீல் (அலை) அவர்களாவார்கள், அவர் தஹிய்யா கல்பி (ரழி) அவர்களுடைய உருவத்தில் வந்திருந்தார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் மார்க்க விசயங்களில் நல்ல கல்வி ஞானம் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகளில் 387 நபிமொழிகளை மனனமிட்டு வைத்திருந்தார்கள். இஸ்லாமிய சட்டங்களில் உறவு முறைகள் குறித்தும், தத்தெடுத்தல் மற்றும் மணவிலக்கு குறித்தும் நுணுக்கமான சட்டங்களை அறிந்து வைத்திருந்தார்கள். இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை அப்துல்லா பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் அன்னையிடம் வந்து கலந்தாலோசனை செய்து விளக்கம் பெற்றுக் கொள்வார்கள்.

இஸ்லாமியச் சட்ட வழங்கல்களில் மற்றும் தீர்ப்பு வழங்குவதில் தனிச்சிறப்புப் பெற்ற நபித்தோழர்கள் பலர் அன்னையின் பெயரால் பல மார்க்கத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள். அன்னையின் பெயரால் அறிவிக்கப்படும் பல சட்டத்தீர்ப்புகளைக் கொண்டு, அந்தத் தீர்ப்புகள் செல்லத்தக்கவை என்று அவர்கள் சான்று பகர்ந்திருக்கின்றார்கள்.

நீதித்துறையில் தீர்ப்பு வழங்கும் தகுதி பெற்ற நபித்தோழர்களின் பட்டியலில் அன்னையவர்களும் இடம் பெற்றிருந்தார்கள். அவர்களாவன :

1. உம்மு ஸலமா (ரழி)

2. அனஸ் பின் மாலிக் (ரழி)

3. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரழி)

4. அபூ ஹுரைரா (ரழி)

5. உதுமான் பின் அஃப்பான் (ரழி)

6. அப்துல்லா பின் அம்ர் பின் ஆஸ் (ரழி)

7. அப்துல்லா பின் ஜுபைர்(ரழி)

8. அபூ மூஸா அல் அஷ்அரீ (ரழி)

9. ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரழி)

10. ஸல்மான் ஃபார்ஸி(ரழி)

11. ஜாபிர் பின் அப்துல்லா(ரழி)

12. முஆத் பின் ஜபல் (ரழி)

13. அபுபக்கர் சித்தீக் (ரழி)

14. தல்ஹா பின் உபைதுல்லா(ரழி)

15. ஸுபைர் பின் அவ்வாம் (ரழி)

16. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)

17. இம்ரான் பின் ஹுஸைன் (ரழி)

18. உபாதா பின் ஸாமித் (ரழி)

19. முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரழி)

மொழித்துறையிலும் அன்னையவர்கள் சிறந்து விளங்கினார்கள். அவருக்கு நிகராக இருந்தவர்கள் மிகச் சிலரே. அவர்கள் பேசும் பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டே பேசுவார்கள், அவர்களது கருத்துக்கள் தெளிவான உச்சரிப்புடன் வெளிப்படும். இன்னும் அவர்களது எழுத்துக்களும், நல்ல மொழிநடையைக் கொண்டதாக இருக்கும்.

அன்னையவர்கள் தனது 84 ஆம் வயதில் ஹிஜ்ரி 62 ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள். நேர்வழி பெற்ற கலீபாக்களின் ஆட்சியை கண்டு களிக்கும் நற்பேறு பெற்றவர்களாக இருந்தார்கள். அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரழி) அவர்கள் அன்னையவர்களில் முதலாவது மரணமடைந்தவர்கள் என்றால், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அன்னையர்களிலேயே இறுதியாக மரணமடைந்தார்கள். யஸீத் பின் முஆவியா அவர்களது ஆட்சியின் பொழுது தான் அன்னையவர்கள் மரணமடைந்தார்கள். அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீயில் மற்ற தோழர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

(... அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ உன் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்.
(89:27-30)