அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 15, 2010

விளம்பரத்தால் மோடி-நிதீஷ்குமார் மோதல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடையுமா?

பாட்னா:குஜராத் மாநில அரசு வெளியிட்ட விளம்பரத்தால் பாஜக, ஐக்கிய ஜனதாதள கட்சி கூட்டணி உடையும் அளவுக்கு பிரச்சினை வெடித்துள்ளது. குஜராத் அரசின் விளம்பரத்தை விமர்சித்த பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத் அரசு வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் பீகார் முதல்வர் நிதீஷ்குமாருடன், முதல்வர் நரேந்திர மோடி கைகோர்த்திருப்பதைப் போல படம் இடம் பெற்றிருந்தது. இது நிதீஷ்குமாருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி விட்டது. இந்த விளம்பரப் படத்தால் பீகாரில் முஸ்லீம் சமுதாயத்தினரின் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சம் ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த விளம்பரப் படத்திற்கு நிதீஷ் குமார் கடும் ஆட்சேபனையும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தார். தனது எதிர்ப்பைக் காட்டும் வகையில், பீகாரில் தொடங்கியுள்ள பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பாஜக தலைவர்களுக்கு சனிக்கிழமை இரவு அளிப்பதாக இருந்த விருந்து நிகழ்ச்சியை அவர் ரத்து செய்துவிட்டார்.

இந்த நிலையில்,நிதீஷ் குமாரின் எதிர்ப்புக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து நிதீஷ்குமார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பாஜகவைச் சேர்ந்த அமைச்சரான கிரிராஜ் சிங் கூறுகையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து நிதீஷ்குமார் தெரிவித்துள்ள கருத்துக்கள் தேவையற்றவை.

நிதீஷ்குமாருடன் பாஜக கொண்டுள்ள உறவு காரணமாக நாங்கள் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என யாரும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது. பாஜக குறித்து தேவையற்ற, காட்டமான கருத்துக்களைத் தெரிவித்ததன் மூலம் கட்சியை அவர் அவமானப்படுத்தியுள்ளார் என்றார்.

இதற்கிடையே, நிதீஷ் குமாரின் பேச்சால், நரேந்திர மோடியும் கோபமடைந்துள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். இதன் காரணமாக பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்திலிருந்தே வெளியேறி விடலாமா என்று கூட மோடி பரிசீலித்ததாக பாஜக தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும், கட்சித் தலைமை அவரை சமாதானப்படுத்தி கூட்டத்தில் பங்கேற்குமாறு வலியுறுத்ததாக பாஜக தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: