தமிழகம் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேசி அறிவித்தார். அந்த அறிவிப்பில் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 13 அன்றும் அஸ்ஸாம் மாநிலத்துக்கு ஏப்ரல் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும், மேற்கு வங்கத்துக்கு மே 18 ,23 ,27 , மே 3 , 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஆறு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டது.
தேர்தல் முடிந்த பிறகு மொத்தமாக 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சேர்த்து மே 13 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி மேற்கு வங்கத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் வாக்கு எண்ணிக்கை முடிவுக்காக தேர்தல் முடிந்து 1 மாதம் காத்து இருக்க வேண்டும். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஒரு மாத காலம் இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பது இதுவே முதல்முறை. எதற்காக இந்த ஒரு மாத கால இடைவெளி என்று தெரிய வில்லை. கடந்த 2006 தமிழக சட்டசபைத் தேர்தல் மே 8 அன்று தேர்தல் நடத்தப் பட்டு மூன்று நாட்கள் இடைவெளியில் மே 11 அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்திலும் கடந்த 2006 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 17 முதல் மே 8 வரை 5 கட்டங்களாக நடத்தப் பட்டு மே 11 அன்று மூன்று நாட்களிலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அது போலவே இந்த முறையும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தலைத் தாமதமாக நடத்தி வாக்கு எண்ணிக்கையை எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே நாளில் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் அல்லது மேற்கு வங்கத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெற்ற மூன்று நாட்களுக்குள் தேர்தல் முடிவை அறிவிக்கலாம். இரண்டையும் தவிர்த்து விட்டு அரசியல் கட்சிகளின் நலனுக்காக தேர்தல் ஆணையம் இத்தகைய முடிவெடுத்து இருக்கிறதோ என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.
மேலும் அதிகபட்சமாக மூன்று நாட்கள் அல்லது ஒரு வார கால அளவிற்குள் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிப்பது வாக்கு இயந்திரங்களை இரவு பகலாக பாதுகாத்து வரும் காவல்துறையினருக்குப் பெரும் உதவியாக இருக்கும். ஒரு மாத கால இடைவெளி இருப்பதால் தவறுகள் நடைபெறவும் பிரச்சனைகள் ஏற்படவும் சாத்தியக் கூறுகள் உள்ளன. மேலும் தமிழகத்தில் புதிய சட்டசபை தேர்ந்தெடுக்கப் பட மே 16 வரை கால அவகாசம் உள்ள நிலையில் ஏப்ரல் 13 அன்றே தமிழகத்தில் தேர்தல் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருப்பது ஏன் என்ற கேள்வியும் நம்முள் எழவே செய்கிறது.
தேர்தல் ஆணையம் என்பது அரசியல் கட்சிகளுக்குக் கட்டுப் படாத சுதந்திரமான ஒரு அமைப்பு. டி.என் சேஷன் போன்ற சிலர் தைரியமாக சில முடிவுகளை எடுத்த போதும் ஆளும் கட்சிகளுக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்குச் சில ஆணையர்கள் இப்பொறுப்பை வகித்துள்ளனர் என்பதும் நமக்குத் தெரியாததல்ல. 4 மாநில மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல் அறிவிப்பிலும் தேர்தல் ஆணையம் ஆளும் அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
இதற்கிடையில், ஏப்ரல் 13 தேர்தல் தேதி அறிவிப்புக்கு எதிராக கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இறுதியாக தமிழக முதல்வர் கருணாநிதியும் தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இந்த எதிர்ப்புக்குப் பாஜக, "சித்திரை தமிழ் வருடப்பிறப்பு கொண்டாட்டத்துக்கு இத்தேதி அறிவிப்பு தடையாக இருக்கும்" என்று காரணம் தெரிவித்துள்ளது. பள்ளி இறுதி ஆண்டுத்தேர்வுகள் இதே காலகட்டங்களில் நடைபெறும் என்பதால், தேர்தல் பிரச்சாரம் பள்ளி மாணவர்களின் படிப்புக்கு மிகப்பெரிய இடையூறாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அதே போன்று தேர்தலுக்காக அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்படுவர் என்பதால், அதுவும் பள்ளித்தேர்வுகளுக்குப் பல இடையூறுகளை ஏற்படுத்தும்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இப்போதே பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் தேதியை மாற்ற கோரிக்கை விடுத்து வருகின்றன. தமிழக முதல்வரும் தமிழகத் தேர்தல் தேதியை அறிவித்ததில் இவ்வளவு அவசரம் ஏன்? என்று வினவியுள்ளார். ஆனால், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்து விட்டார்.
ஏப்ரல் 13ஆம் தேதி தேர்தல் நடத்தி 15 அல்லது 16ஆம் தேதி தேர்தல் முடிவுகளை வெளியிட்டால், அந்த முடிவுகள் மற்ற மாநிலத்தின் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதினால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த உத்தேசித்துள்ள தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தலை இறுதிக்கட்டமாக நடத்தி இருக்கலாம். அதைவிடுத்து, தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள 1 மாதம் காத்திருக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றத்தையே தருகிறது.
எது எப்படியோ தேர்தல் ஆணையத்தின் இத்தகைய தேர்தல் அறிவிப்பால் பெரிதும் பாதிக்கப் பட போவது மாணவர்களே என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இன்னும் ஒன்றரை மாத காலம் கூட இல்லாத நிலையில் கல்லூரிகள் அனைத்தும் ஏப்ரல் 13 க்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட வேண்டும். தமிழகத்தில் அமைதியான முறையில் மாணவர்களுக்கோ பொதுமக்களுக்கோ பெரிதும் சிரமத்தைத் தராமல் இத் தேர்தல் நடத்தி முடிக்கப் படுவதோடு, ஒரு மாதகாலத்துக்கு ஓட்டு இயந்திரங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும்