உலக அமைதியை விரும்பும்
அனைத்து நல்லுங்களுக்கும்
இக்கட்டுரை சமர்ப்பணம்....
முன்னுரை:-
உலகெங்கிலும் அமைதியின்மையும் கவலையும் நிறைந்த காலகட்டம் இது. அமைதி என்பது கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிற காலம் இது. மனிதர்கள் அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உலக அமைதிக்குச் சரியான வழி எது என்பதை இத்தருணத்தில் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அமைதியின்மைக்குக் காரணங்கள்:-
உலக அமைதிக்குச் சரியான வழி எது என்பதைப் பற்றி சிந்திப்பதற்கு முன்னால் உலக அமைதியின்மைக்குக் காரணங்கள் எவை என்பதைப் பற்றி இத்தருணத்தில் அறிந்து கொள்ளலாம். மனிதனுடைய பேராசை, குடும்பப் பிரச்சனை, பொது வாழ்வியல் பிரச்சனை, அரசியல் பிரச்சனை, தேசப்பிரிவினைகள், மொழிப் பிரச்சனைகள், மனிதர்களிடையே இருக்கும் ஏற்றத் தாழ்வுகள், வழிப்பறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் திருடுதல் இவைதாம் இன்றைய உலக அமைதிக்குப் பிரதானமாக அறியப்படும் காரணிகளாகும். இவற்றிலிருந்து விலகி உலக அமைதி பெற என்னதான் தீர்வு என்பதைப் பற்றி கீழே நாம் விரிவாக காணலாம்.
உலக அமைதிக்குச் சரியான வழி:-
இன்றைய உலக அமைதிக்கு நிரந்தரமான தீர்வு இஸ்லாம் ஒன்றே என்று நம்மால் உரத்துச் சொல்ல முடியும். ஆம்! இந்த இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனுடைய கட்டளையின் வாயிலாகவும் உலகத் தூதர் முகம்து நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் மூலமாகவும் நடைமுறைப்படுத்தி அதை நிரூபித்தும் காட்டிய மார்க்கமாகும். உலகத்திலுள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்ட மார்க்கம் இஸ்லாம் என்ற சொல்லிலே முழு உலக அமைதியும் அடங்கி விடும். இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு சாந்தி, சமாதானம், மற்றொன்று ஒரே இறைவனுக்கு மட்டுமே கீழ்படிதல் என்பது ஆகும். எவ்வாறு அது உலக அமைதிக்குத் தீர்வு வழங்கியது என்பதை நாம் இனிமேல் காணலாம்.
மனிதர்களிடயே உள்ள ஏற்றத்தாழ்வுகள்:-
மனிதர்கள் தமக்குத் தாமே சில ஏற்றத் தாழ்வுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். தான் பிறப்பால் உயர்ந்தவன் என்றும் இனத்தால், நிறத்தால், மொழியால், தேசத்தால் மற்றும் இன்னும் பல காரணங்களால் தன்னை உயர்ந்தவன் என்றும் கூறிக் கொள்கிறான். இதற்காக பல உலக மாநாடுகள் நடத்தியும் இன்றுவரை தீர்வு காண முடியவில்லை. சட்டங்கள் இயற்றப்பட்டு அது இன்றும்கூட ஏட்டு அளவிலே உள்ளது. அமெரிக்காவின் பொதுத் தேர்தலில் போட்டிட்ட பராக் ஒபாமாவைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. கொலை முயற்சிக்கான காரணம் அவர் ஒரு கறுப்பு இனத்தவர் என்று கூறப்பட்டது. இன்றும் அந்தந்த மொழியைச் சேர்ந்தவன் தன்னுடைய மொழிதான் சிறந்தது என்றும் தேசத்தில் எங்கள் மொழிதான் சிறந்தது என்றும் கூறிக் கொள்கிறான். நமது இந்தியாவின் மும்பையில் அந்நிய மாநிலத்தவர்கள் நுழையக் கூடாது என்ற கோஷத்தை இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இதற்கும் மொழி வெறியே காரணமாகும். இதற்கான தீர்வை ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் உலகுக்கு எடுத்துக் கூறியது.
"மனிதர்களே நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகிக்கொள்ளும் பொருட்டு உங்களைச் சமுகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில் அல்லாஹ்விடம் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான்" - அல்குர்ஆன் 49:13
ஆம்! இந்த ஒரு வாசகமே போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த ஒரு வசனத்தின் கூற்றைப் பின்பற்றினாலே போதும், உலக அமைதி பெறுவது சாத்தியமாகும். மேலும் இன்று உலகில் மொழி வெறி ஆதிக்கத்தைப் போன்று அன்றைய அரபிகளிடத்திலிருந்த மொழி வெறிக்கும் முகமது நபி (ஸல்) அவர்கள் சம்மட்டியடித்தது போன்று பின்வரும் வாசகத்தை உலகுக்குக் கூறினார்கள்.
"கறுப்பனை விட வெள்ளையன் சிறந்தவனில்லை. வெள்ளையனை விடக் கறுப்பன் சிறந்தவனில்லை. அரபியை விட அரபியல்லாதவன் சிறந்தவனில்லை. அரபியல்லாதவனை விட அரபியன் சிறந்தவன் இல்லை". (ஆதாரம் நூல் - அஹ்மத்)
இதைக் குறியதோடு மட்டுமில்லாமல் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தியும் காட்டினார்கள். ஆம்! குறைஷி குலத்தைச் சேர்ந்த அபூபக்கரும் பாரசீக(ஈரான்) நாட்டைச் சேர்ந்த ஸல்மான் பார்ஸியும் ரோம்(இத்தாலி) தேசத்தைச் சேர்ந்த ஸுஹைப் அவர்களும் நீக்ரோ இனத்தைச் சேர்ந்த பிலால் அவர்களும் ஒரே அணியில் தோள் சேர்ந்து நின்றார்கள்.
அதை இன்றும்கூட முஸ்லிம்கள் கடைபிடித்து வருவதை இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜின் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் உலக அமைதிக்கான தீர்வை நாம் காணலாம்.
மனிதர்களிடையே இருக்க வேண்டிய வேறுபாடுகள்:-
உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களிடத்திலும் தவிர்க்க முடியாத சில வேறுபாடுகளை நாம் காணலாம். அந்த வேறுபாடுகள் அவசியம் இருக்க வேண்டிய வேறுபாடுகளாகும். மனிதன் கல்வியின் மூலம் படித்து உயர்ந்தவனாகிறான். மனிதன் உழைத்து உழைத்து முன்னேற்றம் அடைகிறான். இப்படியாக மனிதர்கள் தாங்களாகவே தன்னை உயர்த்திக் கொள்கின்றனர்; கல்வியால், செல்வத்தால் வேறுபாடுகளுடன் திகழ்கிறார்கள். இந்த வேறுபாடுகளை இஸ்லாமும் அவசியம் இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது.
"நபியே! கல்வி கற்றவனும் கற்காதவனும் சமம் ஆக முடியுமா? உயிருள்ளவனும் உயிரற்றவனும் சமம் ஆக முடியுமா?" - அல்குர்ஆன் 39:9
இன்னும் சில மனிதர்கள் ஆட்சியினாலும் அதிகாரத்தினாலும் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் இந்த வேறூபாடுகளினாலும் சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன. இதனால் ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தனக்குக் கீழ் இருப்பவர்களை நசுக்க ஆரம்பிக்கும்போது அங்கே புரட்சிகள் வெடிக்கின்றன. இதனால் நாட்டில் குழப்பங்கள் உண்டாகின்றன. உதாரணமாக இஸ்ரேல் - பாலஸ்தீனை அபகரிக்கும்போது அங்கே புரட்சிகள் வெடித்துக் கொன்டுதான் இருக்கின்றன. இதற்கான தீர்வையும் நாம் இஸ்லாத்தில் மூலமாகக் காணலாம்.
"நீங்கள் மக்கள் மத்தியில் நீதியுடன் தீர்ப்புடன் வழங்க வேன்டும். இன்னும் நீதியுடன் நடக்க வேன்டும்" - அல்குர்ஆன் 4:58.
இந்த இறைமறையின் கூற்று ஒன்றினை ஆட்சியில் இருக்கிறவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் நடைமுறைப் படுத்தினால் போதும். அமைதியின்மை குறையத் தொடங்கி, அமைதியின்மை என்பதே இல்லாமலாகி விடும். இதையே நெப்போலியன் போனப்பார்ட் என்பவர் அழகாகக் கூறினார்:
"அனைத்து நாடுகளைச் சேர்ந்த கல்வி ஞானமுடைய மனிதர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, திருகுர்ஆன் கூறும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருமித்த அரசாட்சியை நான் உருவாக்கக் கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை. அந்த அடிப்படையில் அமையும் ஆட்சிதான் மனிதர்கள் அனைவருக்கு மகிழ்ச்சியை அளிக்கும்" (- நூல் Christian Cherfils எழுதிய Bonapart at Islam, Pedone Ed Paris, France 1914 - Page 105, 125)
மேலும் பெட்ரெண்ட் ரசல் கூறுகிறார்:-
"இந்தியா முதல் ஸ்பெயின் வரை இஸ்லாத்தின் மிகப் பிரம்மாண்டமான நாகரிகம் செழித்தோங்கியது. அக்காலக்கட்டத்தில்தான் கிறிஸ்தவ உலகம் இழப்புகளைச் சந்தித்தது. ஆனாலும் அந்த இழப்பு இஸ்லாத்தின் மூலம் மனித நாகரிகத்திற்குச் சரிசெய்யப் பட்டது" (- நூல் History of Western Philsophy London, 1948 P-419)
மனிதனால் ஏற்படும் அமைதியின்மைகள்:-
இன்று உலகில் ஒவ்வொரு மனிதனாலும் குற்றங்களும் பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனாலும் அமைதியின்மை ஏற்படுவதைக் காணலாம்.
இன்று தனிமனிதனால் அதிகமாக ஏற்படும் கொலை, கொள்ளை, திருடுதல், கற்பழிப்புப் போன்ற செயல்களாலும் நாட்டில் குழப்பங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இன்று மனிதன் ஒருவன் திருடுகிறான் என்றால் அவனை இன்றைய நமது அரசுகள் மக்களுடைய வரிப்பணத்திலே பாதுகாப்பு அளிப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். இதனால் திருடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் செல்கின்றது.
இதற்கும் இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது! திருடுபவனின் கையை நீங்கள் துண்டிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இது கொடூரமாகத் தோன்றும். ஆனால் ஒருவரைத் தண்டிக்கும்போது மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். தண்டனைகள் கடுமையாக்கப்படும்போது குற்றங்கள் குறைகின்றன. இன்று உலகிலேயே குற்றங்கள் குறைவான நாடு, இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை நடைமுறைப் படுத்தும் சவுதி அரேபியா என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்கடுத்தபடியாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொலை செய்வது என்பது இன்று சர்வ சாதாரணமாகி வருகிறது. ஒன்பது கொலை செய்த ஜெயப்பிரகாஷ் என்பவன்கூட இன்று சர்வசாதாரணமாக வெளியே உலா வருகிறான். கொலைக் குற்றம் புரிவதை இஸ்லாம் பெரும்பாவம் எனக் கூறுகிறது.
"இறைவன் தடுத்துள்ள எந்த உயிரையும் கொலை செய்யாதீர்கள்; நியாயத்தின் அடிப்படையிலன்றி" (அல்குர்ஆன் 17:33)
"உயிர்க்கு உயிர் வாங்குவதில் உங்களுக்குப் பாதுகாப்பு உண்டு" என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாமிய வழியில் பிரச்சினைகள் குறைக்கப்படுவதன் மூலம் அமைதி ஏற்படுகிறது.
விபச்சாரத்தினால் ஏற்படும் அமைதியின்மை:-
மனித குலத்திற்கே இன்று பெரும் தீங்காக விபச்சாரப் பெருக்கம் ஆகி விட்டது. ஆண் தன்னுடைய அற்பமான சுகத்துக்காகத் தகாத உறவில் பிற பெண்களுடன் ஈடுபட்டுவிட்டு, தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளிடத்தில் எயிட்ஸ் எனும் கொடிய நோயை பரப்புவதைக் காணலாம். உலகில் உள்ள மார்க்கங்களில் இஸ்லாத்தைப் போன்று வேறு எந்த மதமும் விபச்சாரத்திற்குக் கடுமையான தண்டனையை விதிக்கவில்லை.
"விபச்சாரம் செய்யும் பெண்ணையும் விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேன்டாம். அவ்விருவர் தண்டிக்கப்படுவதை நம்பிக்கைக் கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொள்ளட்டும்" (அல்குர்ஆன் 24:2)
"மேலும் நீங்கள் விபச்சாரத்தின் அருகில்கூட நெருங்க வேன்டாம்" என்று அல்குர்ஆன் (17:33) கட்டளையிடுகிறது. "விபச்சாரத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?" என்று ஒருகாலத்தில் கேட்டவர்கள்கூட, "இதுதான் சரியான தீர்வு" என்று இப்போது கூறுமளவுக்கு வந்து விட்டார்கள். நம்முடைய முன்னாள் உள்துறை அமைச்சர் அத்வானிகூட ஒருமுறை, "விபச்சாரத்திற்கு மரண தண்டனையே சரியான தீர்வு" என்று கூறினார். மேலும் நமது நாட்டில் பதினைந்து வயதுக்கு உட்பட்ட 70,000 குழந்தைகள் ஹெச்.ஐ.வி எனும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதாவது எய்ட்ஸ் எனும் கொடிய நோய்க்கு ஆளாகியுள்ளார்கள். என்பதை நமது மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த 25.08.2007 அன்று இதை ராஜ்யசபாவில் அறிவித்தார். இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள சிறு குழந்தைகள் இன்றைக்கு எய்ட்ஸுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் வேதனை என்னவெனில் இந்தத்தீமையின் ஆணிவேர் என்ன என்பதை இந்த உலகம் இன்னும் உணராமல் இருப்பதுதான். மனித குலத்திற்கே பெரிய தீங்கை ஏற்படுத்தும் இந்த விபச்சாரத்தை இஸ்லாமிய சட்டப்படி தண்டித்தால்தான் இந்த உலகம் கொடிய நோயில் இருந்து விடுதலை பெறும்.
உலக அமைதிக்கு நிரந்தரத் தீர்வு:-
நாம் இதுவரை மேலே கண்ட உலகியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, அதை நடைமுறைப்படுத்தி வெற்றிகண்ட மார்க்கம்தான் இயற்கை மார்க்கம். அதாவது இந்த இஸ்லாமிய மார்க்கம் ஆகும். இது மட்டுமில்லாமல் மனிதர்கள் செய்யும் குற்றங்களையெல்லாம் இறைவன் ஒருவன் பார்த்துக் கொன்டிருக்கிறான்; மரணத்திற்குப்பின் மறுமை எனும் நிலையான வாழ்வு உண்டு. அதில் மனிதர்களுக்குக் கேள்வி கணக்கு உண்டு. அவரவர் குற்றங்களுக்கு ஏற்ப நிரந்தர தண்டனையும் உண்டு என்று இஸ்லாம் எச்சரிக்கிறது.
இன்னும், வணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்புகளைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டு, மனிதனின் வாழ்விற்கு இஸ்லாம் நிரந்தர அமைதியை ஏற்படுத்துகிறது. இஸ்லாம் ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் ஒரு வலுவான சக்தி. இந்தப் பிரபஞ்சத்தில் அமைதியை ஏற்படுத்தவே அது அருளப்பட்டது. மனிதகுலம் முழுவதுமே பின்பற்றப்பட வேண்டிய ஓர் அற்புத மார்க்கமே இஸ்லாம். "இது, உலக மக்களுக்கு நல்லுரையன்றி வேறில்லை" (- அல்குர்ஆன் 68:52). உலகம் உண்மையான அமைதியை விரும்புமானால் "உலக அமைதி என்பது இஸ்லாத்தினூடாகத்தான்" என்பதே உண்மை.
ஆக்கம்: முஹம்மது ரஃபீக்