அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 15, 2010

இரகசிய சமுதாயம்-2

இரகசிய சமுதாயம் - தொடர்-2

யார் இந்த லூசிஃபர்?

அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் ஆவான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான். ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - வழி கெடுக்கும் ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள். அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள் அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர் (2:257).

லூசிஃபர்! முஸ்லிம்களிடத்தில் இந்த வார்த்தை பிரபலமில்லாதிருப்பினும், யூத கிருஸ்தவ உலகத்திற்கு நன்கு பரிட்சயமான ஒன்று இந்த லூசிஃபர். இலத்தின் மொழியில் லூசிஃபர் என்பதற்கு வெளிச்சத்தை வழங்குபவன்(?) என்று பொருள். சூரிய உதயத்திற்கு முன்னர் பிரகாசிக்கும் அதிகாலை நட்சத்திரமான வீனஸூக்கும் இப்பெயருக்கும் சில தொடர்புண்டு. அதாவது லூசிஃபா என்பது அந்த அதிகாலை நட்சத்திரத்திலிருந்து 'இறங்கும் தேவதை' என்ற மூடநம்பிக்கைதான் அது.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, யூத, கிருஸ்தவர்களின் நம்பிக்கைபடி லூசிஃபர் என்பவன் ஆதாம் ஏவாளை சுவனத்தில் தடுக்கப்பட்ட கனியை புசிக்கச்செய்து இறை சாபத்தால் பூமிக்கு தூக்கி எறியப்பட்ட சாத்தானியத் தலைவன் என்பதே. இதுதான் சரியான கருத்து. இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சொல்வதென்றால் இப்லீஸ் என்ற ஷைத்தானைத்தான் யூத, கிருஸ்தவர்கள் லூசிஃபர் என்று அழைக்கின்றனர்.

இத்தொடர் கட்டுரையின் நோக்கம் வெறுமனே லூசிஃபரை பற்றி அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக லூசிஃபர் என்ற இந்த ஷைத்தானை வணங்கி அவனுடைய ஆட்சியை இவ்வுலகில் நிலை நிறுத்த இரகசியமாக பாடுபடும் மேற்கத்திய அரசகும்பலையும், அவர்களின் ஜாஹிலியாவையும், உலகமக்களுக்கு விளக்குவதுமேயாகும். மேலும் தன்னைத்தானே கடவுள் என்று பிரகடனப்படுத்திய கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் வாரிசுகளாகச் செயல்படும் இந்த யூத-கிருஸ்தவ நெட்வொர்க், ஷைத்தானின் ஒட்டுமொத்த உருவமான தஜ்ஜால் மீது எந்த அளவிற்கு பற்றும்-பாசமும் வைத்து அவனுடைய வருகைக்காக வழிமீது விழிவைத்துக் காத்திருக்கின்றனர் என்பதையும் தமிழ் இஸ்லாமிய உலகிற்கு வெளிப்படுத்துவோம் - இன்ஷா அல்லாஹ்.


லூசிஃபரை கடவுள் என்று பிரகடப்படுத்தப்படுவதை கீழுள்ள வீடியோ தொகுப்பில் காண்க

Click here to download this video


இந்த ஷைத்தானிய லூசிஃபரை பற்றி கிருஸ்தவ உலகில் கீழ்க்காணும் இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

1) லூசிஃபர் என்பவன் ஷைத்தான்தான் என்ற கிருஸ்தவர்களின் கருத்து

ஆவியானது தோன்றும் போதே அளவில்லா வல்லமையுடன் இரண்டு விதமாகவும் இருந்தன.

1. படைக்கும தன்மையும், பகுத்தறியும் தன்மையும் உள்ள நல்லதையே செய்யக்கூடிய பரிசுத்தமான ஆவி.
2. பகுத்தறியும் தன்மை அற்ற, படைத்ததை கெடுக்கும் தன்மையுள்ள தீமையையே செய்யக்கூடிய தீய ஆவி.

ஆதமும் ஏவாளும் என்று பாவம் செய்தார்களோ அன்றிலிருந்து சாத்தான் இந்த பூமியில் தனது ஆதிக்கத்தை தொடங்கிவிட்டான். மனம் திரும்புவான் என்று எதிர்பார்க்கப்பட்ட தேவதூதன் இறைவனுக்கு மிக பெரிய எதிரியாக நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம் என்று தேவனுக்கு எதிரான கடின நிலையை அடைந்தான்.

அசுத்த ஆவிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு அவைகளை அடைத்து வைக்க தேவனால் உருவாக்கப்பட்ட பாதாளத்தை தனது உறைவிடமாக கொண்டுள்ள சாத்தான் ஆண்டவரின் சந்நிதிவரை சென்று வரும் வல்லமை படைத்தவனாக இருந்தான்.

முதல் மனிதனாகிய ஆதாம் இறைவனின் வார்த்தைகளை மீறி புசிக்க கூடாது என்ற கனியை புசித்து சாத்தானின் அடிமை ஆகிவிட்டதால் அவன் சந்ததியாகிய எல்லா மனிதர்களும் தொடர்ந்து சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் பிறக்கின்றனர். அந்த மனிதர்களுக்கு பூமியில் முடிந்த அளவு துன்பங்களை கொடுத்தும், முடிவில் மரித்த உடன் அவர்களை தன்னுடைய இடமாகிய பாதளம் கொண்டு சென்று நித்ய நித்யமாக துன்புருத்துவதன் மூலம் இறைவனுக்கு தாங்கொண்ணா மனவேதனையை கொடுத்துக்கொண்டே இருப்பது தான் இவன் திட்டம்.

இன்றுவரை அவன் நினைத்ததுபோல உலகத்தின் அதிபதி போல உலகத்தின் தேவனாக இருந்துகொண்டு அந்த லூசிபர் என்ற சாத்தனை ஆட்சி செய்து வருகிறான்.ஆனால் தீமையை அழிக்க இறைவனால் படைக்கப்பட்ட எல்லோரும் தங்கள் எதற்கு படைக்கப்பட்டோம் என்று கொஞ்சமும் கவலை இல்லாமல் தீமைக்கு அடிமையாகி இறைவனை விட்டு பிரிந்து தங்கள் விருப்பம் போல வாழ்ந்து வருகின்றனர்.


கடவுளின் சக்தியோடு லூசிபரின் சாத்தானிய சக்தி சண்டையிடுவதுபோல எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி

Click here to download this video

2)லூசிஃபர் என்பவன் ஷைத்தான் அல்ல என்பதற்கு சில கிருஸ்தவர்கள் கூறும் காரணம்.

விடிவெள்ளி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் தோன்றும் பிரகாசமுள்ள நட்சத்திரமாக (வீனஸ் கிரகம்) இருப்பதனால், ஏசாயா 14:12ல் பாபிலோனிய அரசன் "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி" என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இத்தகைய அர்த்தத்துடன் 2 பேதுரு 1:19ல் விடிவெள்ளி (லத்தீனில் லூசிபர்) என்னும் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தல் 22:16ல் இயேசுகிறிஸ்துவும் "விடிவெள்ளி" என்று அழைக்கப்பட்டுள்ளார். லத்தீன் வேதாகமத்தில் இவ்விடத்திலும் லூசிபர் என்னும் சொல்லே உள்ளது. வெளிப்படுத்தல் 2:28லும் விடிவெள்ளி என்னும் சொல் உள்ளது. லூசிபர் என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சாத்தானுடைய பெயராயிருந்தாலும் வேதாகமத்தில் இப்பெயர் சாத்தானுக்கு கொடுக்கப்படவில்லை. வேதாகமத்தில் "பிசாசு" (மத் 4:1), "சர்ப்பம்" (2கொரி 11:3), "வலுசர்ப்பம்" (வெளி 12:7), "இப்பிரபஞ்சத்தின் தேவன்" (2கொரி 4:4), "இந்த உலகத்தின் அதிபதி" (யோவா 12:31,16:11), "சோதனைக்காரன்" (மத் 4:3), "பொல்லாங்கன்" (மத் 13:19, 1யோவா 5:18,19), "ஆகாயத்து அதிகாரப் பிரபு" (எபே 2:2), "பெயல்செபூல்" (மத் 12:24) என்னும் பெயர்கள் சாத்தானுக்கு உள்ளன.

எது எப்படி இருந்தாலும் லூசிஃபர் என்பவன் இறைவன் இல்லை. இறைவனைத் தவிர வேறெதையும் வணங்கக் கூடாது என்பதை வேதம் வழங்கப்பட்ட எந்த சமூகத்தினரும் மறுக்கமாட்டார்கள். மேலும் வணங்கத்தகுதியான ஒரே இறைவனுக்கு இணையாக மற்றொன்றை சிந்திக்க வைப்பது ஷைத்தானுடைய வேளைதான் என்பதும் திண்ணம். திருமறைக்குர்ஆன் இத்தகைய ஷைத்தான்களையும், அவற்றை வணங்குபவர்களையும் பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னறிவிப்பும் எச்சரிக்கையும் செய்துவிட்டது. அத்தகைய வசனங்களில் ஒரு சில...

அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர், அறிந்து கொள்க: ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்! (58:19).

மேலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களை வழிகெடுப்பதற்காக பொய்த் தெய்வங்களை அவனுக்கு இணையாக்குகின்றனர். நபியே! அவர்களை நோக்கி, ''இவ்வுலகில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக நீங்கள் இறுதியாகச் சேருமிடம் நரகம்தான்'' என்று நீர் கூறிவிடும்.
(14:30)

எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம். ஆகவே என்னுடைய நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!. (39:17)

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான். மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.
(4:120)

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
(5:91)

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை ஏமாற்றிச் சோதனைக்குள்ளாக்க வேண்டாம் நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
(7:27)

ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான் இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
(7:30)

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், செய்ய நிச்சயமாக ஏவுவான். அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் தவ்பா செய்து தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
(24:21)

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான் ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள் அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான்.
(35:6)

தொடரும் இன்ஷா அல்லாஹ்...

No comments: