அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, April 28, 2009

விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்

இலங்கையில் மோதலில் ஈடுபட்டுள்ள விடுதலைப்புலிகள் மூன்றாவது தரப்பு ஒன்றிடம் தமது ஆயுதங்களை கையளித்துவிட்டு சரணடைய வேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்கா, பெரும்பாலான விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு இலங்கை அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் சார்பில் அமெரிக்க அரசுத்துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இரு தரப்பும் உடனடியாக மோதலை கைவிட்டு அங்கு மோதல்களில் அகப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
அத்துடன் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கான மறுவாழ்வுத்திட்டம் மற்றும் இலங்கை பிரச்சினை தீர்வுக்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆகியவை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கோருகிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பான் அடங்கலான, இலங்கைக்கு உதவி வழங்கும் கொடையாளிகளின் சந்திப்பு ஒன்று டோக்கியோவில், கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றதாகவும், அதில், அமெரிக்காவின் சார்பில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணைச் செயலர் ரிச்சர்ட் பௌச்சர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்க அரசுத்துறை, மோதல் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வரத்தொடங்கியுள்ளதை இலங்கைக்கு உதவி வழங்குவதற்கான இணைத்தலைமை நாடுகள் வரவேற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.
மோதல் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கும், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஐ. நா அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரின் கோரிக்கையை தாம் ஆதரிப்பதாகவும் அமெரிக்க அறிக்கை கோரியுள்ளது.

No comments: