அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 2, 2009

சேது சமுத்திர திட்டம் : வாசன் சபதம்

""தமிழகத்தின் நீண்டகால கனவு திட்டம் சேது சமுத்திர திட்டம். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்தவொரு அரசியல் காரணங்களுக்கும் இடமளிக்க முடியாது. இத்திட் டத்தை ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் விரைவில் அறிக்கை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள் ளப்படும். தமிழகத்துக்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய பலனை அளிக்கும் இந்த திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிச்சயம் நிறைவேற்றியே தீரும்,'' என்று அமைச்சர் வாசன் அறிவித்தார்.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த வாசன் டில்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். சாலை போக்குவரத்து இல்லத்தில் உள்ள அவரது அமைச்சகத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் தனது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். அவருக்கு உயர் அதிகாரிகள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பொறுப்பேற்றுக் கொண்டவுடன் முதல்முறையாக பத்திரிகையாளர்களிடம் வாசன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தின் கனவு திட்டமாக விளங்கக் கூடியது சேதுசமுத்திர திட்டம். இது தமிழகத்துக்கு மட்டுமல்லாது இந்தியாவுக்கே பலனளிக்க கூடிய மிக முக்கிய திட்டம். பல்வேறு காரணங்களுக்காக இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்த பிரச்னை கோர்ட்டில் உள்ளது. இதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து ஆராய பச்சவுரி தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அவசியம் கருதி பச்சவுரி தலைமையிலான குழு தனது பரிந்துரையை விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன். காலதாமதம் ஏற்படாமல் விரைந்து அறிக்கை பெறுவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளும் முடுக்கி விடப்படும். சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றுவதில் சில தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்த அரசியல் காரணங்களுக்கும் இடமளிக்கக் கூடாது என்றே அனைத்து தரப்பையும் கேட்டுக் கொள்கிறேன். காரணம் இந்த திட்டம் தமிழகத்திற்கு மட்டுமே பொருளாதார ரீதியில் பலன் அளிக்கும் என்று கூறமுடியாது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மிகவும் பலனளிக்க கூடிய திட்டம் இது. இவ்வாறு வாசன் கூறினார்.

அப்போது, சேது திட்டத்தை நிறைவேற்ற மாற்றுவழி குறித்து யோசிக்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு," இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டம். நாட்டின் வளர்ச்சிக்கே அடித்தளமிடப்போகும் திட்டம். எனவே, எந்த பிரச்னைகள் இருந்தாலும் அவற்றுக்கு முறையாக தீர்வு கண்டுவிட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்றார்.

No comments: