அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, October 2, 2009

சுனாமியால் லெசா கிராமம் காணாமல் போனது: சமோவா பிரதமர்

தெற்கு பசிபிக் கடலில் ஹவாய் தீவிலிருந்து 2,300 மைல் தொலைவில் அமைந்துள்ளது சமோவா மற்றும் அமெரிக்க சமோவா தீவுகள். சமோவா தீவுகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவற்றில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள சமோவா தீவில் மட்டும் 65 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இந்த தீவுகளில், 8 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டு, தீவுகளுக்குள் கடல் நீர் சாலைகள், வீடுகளில் புகுந்த கடல் நீர், அதே வேகத்தில் கடலுக்குள் வேகமாக திரும்பியதில் ஏராளமானவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். பசிபிக் கடலில் அமைந்துள்ள சமோவா தீவுகளில் ஏற்பட்ட சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. நியூசிலாந்துக்கு அருகில் உள்ள சமோவா தீவின் பிரதமர் குறிப்பிடுகையில், "இந்த தீவின் லெசா என்ற கிராமம், சுனாமியில் காணாமல் போய் விட்டது. மற்ற இடங்களில் ஒரு வீடு கூட உருப்படியாக இல்லை. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளும் சேதமடைந்துள்ளன. இது வரை 110 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன' என்றார்.

அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள சமோவா தீவில் 30 பேரும், டோங்கா தீவில் ஒன்பது பேரும் சுனாமியால் பலியாகியுள்ளனர். "சுனாமி தாக்கிய 10 நிமிடங்களில் இந்த தீவுகளின் வடிவமே மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் குப்பையும், கூளமுமாக மாறி விட்டது' என இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு இந்தியா, இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட சுனாமியை தொடர்ந்து பல இடங்களில் சுனாமி எச்சரிக்கை கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.


No comments: