அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, April 21, 2011

2ஜி வழக்கு -அமலாக்கப் பிரிவு அறிக்கை

இந்திய உச்சநீதிமன்றம்
இந்திய உச்சநீதிமன்றம்
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை அமலாக்கப் பிரிவு செவ்வாய்க் கிழமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த முறைகேடுகள் தொடர்பாக, 31 நிறுவனங்களை கண்காணித்து வருவதாகவும், அவற்றில் 26 நிறுவனங்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்திருப்பதாகவும் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கப் பிரிவு அறிக்கையில், அந்த முறைகேடுகளில் தொடர்புடைய பணம் 6 நாடுகளில் இருந்து பரிமாறிக் கொள்ளப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், சைப்ரஸ் உள்ளிட்ட சில நாடுகளுக்கு இது தொடர்பாக கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் இரு நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், அமலாக்கப் பிரிவின் சார்பில் ஆஜராகி, அந்த அறிக்கையை வாசித்தார்.

பணப்பரிவர்த்தனை

சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ ராசா
சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ ராசா

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கிடையில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அதன் பிறகு, அந்தத் தொகை கடனாகப் பெறப்பட்டதாகவும், அது வட்டியுடன் திருப்பித் தரப்பட்டுவிட்டதாகவும் ஒரு நிறுவனம் கூறியது. ஆனால், அதைத் தொடர்ந்து அந்தத் தொகை அந்த நிறுவனத்தின் மொரீஷஸ் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது என்று வேணுகோபால் தெரிவித்தார். ஆனால் அந்த நிறுவனங்களின் பெயர்களை வேணுகோபால் வெளியிடவில்லை.

டி.பி. ரியால்டீஸின் துணை நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் அளித்ததாகவும், அது பங்குகள் வாங்குவதற்காக தரப்பட்ட முன்பணத் தொகை என்றும், ஆனால் பங்கு விலையில் ஏற்பட்ட முரண்பாட்டால் அந்தத் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் கலைஞர் தொலைக்காட்சி சார்பி்ல் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் மத்திய புலனாய்வுத்துறை சென்னையில் விசாரணை நடத்தியது. நேற்று, அந்தத் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் ஷரத் குமாரிடம் டெல்லியில் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அலைக்கற்றை உரிமம் பெற்ற பிறகு, ஒரு நபர் தனது பங்குகளை விற்றதன் மூலம் பெரும் லாபம் பெற்றிருப்பதாகவும், அது மொரிஷஸ் வங்கிக் கணக்கில் போடப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் அமலாக்கப்பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், பூர்வாங்க அடிப்படையில் பார்க்கும்போது சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள்.

அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, பொது நல வழக்குகளுக்கான மையம் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த பூஷண் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் மத்தியப் புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மத்திய புலனாய்வுத்துறையும் விசாரணை நிலவர அறிக்கையை இன்று தாக்கல் செய்திருக்கிறது. அது நாளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புலனாய்வுத்துறை கடந்த மார்ச் 1-ம் தேதி விசாரணையின் போது, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக, 10 நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்பட 63 பேர் தங்கள் கண்காணிப்பில் உள்ளதாகத் தெரிவித்திருந்தது. இந்த மாத இறுதியில் அந்த அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: