அகமதாபாத்: சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் முக்கிய சாட்சியான அஸம் கான்
பெரும் பல்டி அடித்துள்ளார். தன்னை சிபிஐ மிரட்டியதால்தான் பொய்யான சாட்சியம்
அளித்ததாக அவர் கூறியுள்ளதால் வழக்கின் எதிர்காலம் பெரும்
கேள்விக்குறியாகியுள்ளது.
சோராபுதீன் வழக்கில் முக்கிய சாட்சி அஸம்கான். இவர் சமீபத்தில் ஒரு பரபரப்பு
பேட்டி அளித்தார். அதில், சோராபுதீன் ஷேக்கை, ராஜஸ்தானைச் சேர்ந்த மார்பிள்
தொழிலதிபர் கும்பல்தான் பெரும் பணம் கொடுத்து கொலை செய்தது. இந்தக் கொலையை
ராஜஸ்தானில் வைத்து செய்யவே அவர்கள் முதலில் திட்டமிட்டனர்.
ஆனால் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தரப்பிலிருந்து பச்சைக் கொடி
காட்டப்படவில்லை. இதையடுத்தே நரேந்திர மோடியின் ஆட்சியில் உள்ள குஜராத்தில் வைத்து
இதை நடத்த முடிவு செய்தனர். அதன்படி ரூ. 10 கோடி பணத்தை ராஜஸ்தான் முன்னாள்
அமைச்சர் ஒருவரிடம் கொடுத்தனர். அவர் மூலம் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த
அமீத் ஷாவை அணுகி போலி என்கவுன்டர் மூலம் சோராபுதீனைக் கொலை செய்தனர்.
இதை நேரில் பார்த்த ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியையும் இதேபோல போலியான
முறையில் கொன்று விட்டனர். இந்தத் தகவல்களை பிரஜாபதியுடன் நான் சிறையில்இருந்தபோது
அவர்தான் கூறினார். இதையடுத்து தற்போது எனக்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன என்று
கூறியிருந்தார் அஸம்கான்.
எனக்கு எதுவும் தெரியாது!
இந்த நிலையில் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தன்னை சிலர்
துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய வந்ததாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். ஆனால்
அது போலியானது, அவரே தன்னை சுட்டுக் கொண்டு நாடகமாடியுள்ளார் என்று ராஜஸ்தான்
போலீஸார் கண்டுபிடித்து தெளிவுபடுத்தினர். இந்தப் பின்னணியில்தான் தற்போது தான்
கொடுத்த வாக்குமூலமே போலியானது, சிபிஐ மிரட்டலுக்குப் பணிந்து அவ்வாறு கூறியதாக
இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அஸம்கான்.
இதுதொடர்பாக அகமதாபாத் சிறப்பு சிபிஐ கோர்ட்டின் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர்
தவே முன்பு அவர் தாக்கல் செய்த அபிடவிட்டில், கடந்த 2005ம் ஆண்டு சிபிஐ பதிவு
செய்த குற்றப்பத்திரிக்கையில் உள்ள எனது சாட்சியம் உள்பட அனைத்துமே சிபிஐயின்
மிரட்டலுக்குப் பணிந்து தெரிவிக்கப்பட்டதாகும். அதில் உள்ளவை உண்மை இல்லை.
சோராபுதீன் கொலை செய்யப்பட்டது குறித்தோ, பிரஜாபதி கொல்லப்பட்டது குறித்தோ எனக்கு
எதுவும் தெரியாது.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் எனக்கு எதிரான ஹமீத் லாலா கொலை வழக்கை மீண்டும்
திறந்து விசாரித்து கடும் தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்று சிபிஐ என்னை
மிரட்டியது. இதற்குப் பயந்தே நான் பொய்யான வாக்குமூலம், சாட்சியம் அளித்தேன் என்று
கூறியுள்ளார் அஸம்கான்.
ஹமீத் லாலா யார்?
இந்த ஹமீத் லாலா என்பவர் ராஜஸ்தானைச் சேர்ந்த மார்பிள் வியாபாரி ஆவார்.
அஸம்கானும் கூட மார்பிள் வியாபாரிதான். ஹமீதா லாலா கொலை வழக்கில் அஸம்கானின்
பெயரும் அடிபட்டது. பின்னர் இந்த வழக்கு மூடப்பட்டு விட்டது. இதை திறக்கப் போவதாக
கூறி தன்னை சிபிஐ மிரட்டியதாக அஸம் கான் கூறியிருப்பது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தனது வாக்குமூலத்தில் குஜராத் மாநில காவல்துறை அதிகாரி சுடஸ்மாவுக்கு
எதிராக தான் எதுவும் கூறவில்லை என்றும் அஸம்கான் கூறியுள்ளார். அதேசமயம், குஜராத்
மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியாதான் தனது பெயரையும், சுடஸ்மா பெயரையும்
இணைத்து விட்டிருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிபிஐ தரப்பில் சோராபுதீன் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என்றால், பெரும்
பணக்காரர்களை குறிப்பாக மார்பிள் தொழிலதிபர்களின் மோசடிகளை தெரிந்து வைத்துக்
கொண்டு அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதே சோராபுதீனின் வேலை. சோராபுதீனுக்கும்,
குஜராத் போலீஸாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அகமதாபாத் நகர குற்றப் பிரிவு
துணை ஆணையராக இருந்த சுடஸ்மாவும், சோராபுதீனும், பணத்தைப் பங்கு போட்டுக் கொள்வது
வழக்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கை குஜராத் காவல்துறை சரிவர கையாளவில்லை எனவே இதை
சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை
விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இதையடுத்து
அதிரடியாக களத்தில் இறங்கிய சிபிஐ அமீத் ஷா உள்ளிட்ட சிலரைக் கைது செய்தது.
சுடஸ்மாவும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் சிபிஐ சமர்ப்பித்த முக்கிய
சாட்சி பொய் சாட்சியம் சொல்லியதாக கூறியுள்ளார். இதனால் இந்த வழக்கில் பெரும்
திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment