அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, April 15, 2009

உள்ளத்தில் ஒளி வேண்டுமா?


உள்ளம் அது ஒரு பெரு வெள்ளம்!
ஒன்றிரண்டல்ல ஓராயிரம் எண்ணங்களை
ஓடவிடும் கணினி -உண்மையாக இருந்தாலும்
உடன்படாத பொய்யாக இருந்தாலும் அதை
உணரச் செய்யும் உன்னத ஊடகம்,!
ஒற்றுமையாக வாழவும் ஓராயிரம் நன்மைகள் செய்ய
உதய கீதம் பாடவும் உதவும் உந்துதல் உணர்ச்சி!
நல்லதைச் செய்ய நாடவைக்கும் உள்ளத்தில்
நனிசிறந்த எண்ணங்களை உருவாக்கும் ஊற்றுக்கண்!

பாசத்தைப் பொழியவும் பகைமையை மறக்கவும்
பசித்தவர்க்கு உதவவும் பரந்த நோக்குடன் அரவணைக்கும்
பாமரர்களின் அன்னை! பள்ளம் எது மேடு எதுவென்று
பகுத்தறிந்து வாழ்க்கைப் பாதையை நேர்வழிக்கோட்டில்
கொண்டு செல்லும் குறிக்கோள்களின் இலக்கு!

பொறாமைத்தீ எரியும்போது புகை வெளி வராமல்
தடுத்து, புத்தியுள்ளவனாக வளர வைக்கும் புனல்!
குறுக்கு வழி செறுக்கு வழியென்றும் நேர்வழிதான்
நித்திரையை கொடுக்கும் நிலையான வழியென்றும்
நினைவுபடுத்தும் நாட்காட்டி! கொள்ளையடிப்பதை
தடுத்து கொள்கைப்பிடிப்பை உருவாக்கும் கருவூலம்!

கண்ட காட்சியே உண்மையென்று உரைக்காமல்
கடுகளவும் தவறு வராமல் தடுக்கும் நவீன கருவி!
கண்கள் போன போக்கில் கருத்தைப் புகவிடாமல்
தடுத்தும் காதில் கேட்பதில் நல்லவைகளை மட்டும்
எடுத்து பிரித்தளிக்கும் அன்னப்பறவை !

கஷ்டம் வரும்போதும் கலகலப்பான சூழ்நிலை
வரும்போதும் கதகதப்பாகவே இருக்கும் வெப்பமானி!
காத தூரம் சென்றாலும் கடுகளவும் பழையதை
மறக்காமல் நிரப்பி வைக்கும் நினைவாற்றல்!

காலத்தை உணர்த்தி கடமையைச் செய்ய வைக்கும்
கருத்துப் பெட்டகம்! கயவர்களின் உறவை
கருவறுக்கச் செய்து கல்லறைக்கு அனுப்பும் தூதுவன்!
உயர்ந்த வெற்றியை உன்னத நோக்கத்துடன்
அடைய வைக்கும் ஒன்றுபட்ட உலகம்!

ஓராயிரம் வாழ்க்கைக் கனவுகளை உள்ளடக்கி
தேவைப்படும் ஒவ்வொரு நேரத்திலும் ஒளிரும்
திரைச்சீலை! இறையச்சத்தை உள்ளடக்கி
இயன்றவரை இறைப்புகழ் பாடும் இன்பக்கருவூலம்!

வாள் கொண்டு போரிட்டும் கிட்டாத வெற்றியை
வாய்மொழியால் கிட்ட வைக்கும் பேரரசன்!
நல்லதிலும் கெட்டதிலும் நல்லதை மட்டும்
நாடச்செய்து நற்பெயர் ஈட்டித்தரும் தந்தை!

நாம் ஏன் பிறந்தோம் என்பதை சிந்தித்து
படைப்பின் இரகசியத்தை பயத்துடன் புரிந்து கொண்டு
நல்லதோர் வாழ்க்கை வாழ நலம்பயக்கும்
நடமாடும் பல்கலைக்கழகம்!

இப்படி
நல்லதையே செய்து இறைவனின் அருள்பெற
நாடும் உள்ளம், ஒருசில நேரங்களில்
நரக வாழ்விற்குச் செல்ல பாலம் அமைக்கும்
நாட முடியாத தீயாக எரிகிறதே! ஏன்?

ஒருவேளை இந்த உள்ளம்
ஓர் இறைக்கொள்கையை ஏற்று உன்னத
வேதத்தின் உள்ளார்ந்த போதனையை துறந்து

உத்தம நபியவர்கள் சொன்னதில் ஒன்றைக்கூட
புரிந்து கொள்ளாமல் உலக வாழ்க்கை இன்பத்தை
மட்டும் உயர்ந்ததொரு வாழ்க்கையாகக் கருதி
உறுதியான மரணத்திற்குப்பின் வரும் உயரிய
வாழ்க்கை சுவர்க்கக் கனியை சுவைக்க வைக்கும்
என்ற அல்லாஹ்வின் அருட்கொடையை உணராமல்

இஸ்லாத்தின் ஐங்கடமைகள் எங்குள்ளது
என்று கூடத் தேடாமல் கண்ணிருந்தும் குருடர்களாய்
காதிருந்தும் செவிடர்களாய் கருத்திருந்தும்
மூடர்களாய் கால்கள் நடக்கும்
பாதையே சரியான பாதையென்று கருவறைமுதல்
கல்லறை வரை நிராகரிப்பாளர்களாய் வாழ்ந்துவிட்டு
கண்மூடும் மாந்தர்களே விழித்துக்கொள்ளுங்கள்!

இப்போதாவது.....

எஞ்சிய வாழ்நாளிலாவது வெள்ளமென ஓடும்
உள்ளத்தின் ஒரு சிறு பகுதியாவது இறைவன் பால்
நாடச் செய்யுங்கள்_ இஸ்லாத்தில் இணைந்திருக்கும்
கருத்துக்கள் இணையற்ற கோடிகள் என்பதை உணருங்கள்!

இயற்கையோடு இணைந்து இறைவன்பால் பிணைந்து
இனிய வாழ்க்கை வாழ இன்றாவது
ஏற்றுக்கொள்ளுங்கள் ஓர் உறுதிமொழியை!

உள்ளத்தில் ஒளி வேண்டுமா? ஓடுங்கள் இறைவனிடம்!
முயன்றால் முடியாதது ஒன்று உலகத்தில் உள்ளதா?

இல்லையே! எதையும் சாதிக்கும் எண்ணத்தில்
நிய்யத் ஒன்றை நிதானமாக ஏற்படுத்திக்
கொள்ளுங்கள! நின்று நிதானித்து யோசியுங்கள்!
நிறைவேற்றும் வல்லமையை நீதிமிகு இறைவன்
வழங்க நம்மை நெருங்கி வருகின்றான்!

நெஞ்சை நிமிர்த்துங்கள்! நேர்வழி வாழ நிறைவுடைய
வாழ்வளிக்கும் இறைக் கட்டளைகளை நிறைவேற்ற
நில்லாமல் ஓடுங்கள்! அப்படி நிறைவேற்றிவிட்டால்
உங்களின் இந்தப் புனித ஓட்டம் ஒருநாள்
நின்றபின் புரிந்துகொள்வீர்கள் சொர்க்கத்தில்!!


- எம்.அப்துல் ரஹீம்,எம்.ஏ.,பி.காம்.,பி.ஜி.எல்.,ப்பி.ஜி.டி.பி.ஏ.

கோவை

No comments: