அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, August 17, 2009

சவுதி அரேபியா தம்மாமில் இந்தியர்கள் கொண்டாடிய சுதந்திர தினம்

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணம் தம்மாமில் இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம் சார்பில் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15 2009 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளையும்,பொதுமக்களையும் இணைத்து சமூக நல பணிகளில் செயல்பட்டு வரும் இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம் எல்லா வருடங்களைப் போலவும் இந்த வருடமும் சுதந்திர தின விழாவை கொண்டாடியது.

உருது மொழியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலத்தை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

சுரியாக இரவு 8:30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. பீகார் மாநிலத்தை சார்ந்த நவுஷாத் அஹமது திருக்குர்ஆன் ஓதி நிகழ்ச்சியை தொடங்கினார். கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த மீராஜ் அஹமது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம் தம்மாம் தலைவர் மௌலவி ஜபருல்லா கான் தனது வரவேற்புரையை நிகழ்த்தினார். அதில் இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரத்தின் செயல்பாடுகள் மற்றும் சமீபத்தில் செய்த சாதனைகளையும் பட்டியலிட்டார். குறிப்பாக மரண தண்டனை வழங்கப்பட்ட லக்னோவை சார்ந்த அபுராஃபியின் வழக்கை நடத்தி அவரை விடுதலை செய்ததையும், விபத்து வழக்கில் சிக்கி சிறையில் ஆண்டுகளாக கழிந்த சமீர் கான் எனும் கர்நாடக இந்தியரை விடுதலை செய்ததையும் இதுபோல இன்னும் பல சம்பவங்களையும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நிழச்சியின் சிறப்பு விருந்தினரான தம்மாம் இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளி மேனேஜிங் கமிட்டி சேர்மன் அஜ்கர் கான் அவர்கள் தொடங்கி வைத்தார். அவரது அறிமுக உரையில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை பட்டியலிட்டார். திப்பு சுல்தான், ஹைதர் அலி மற்றும் இன்னபிற வீரர்களை நினைவு கூர்ந்தார்.

அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் தேசபக்தி மற்றும் சமூக சிந்தனை பாடல்களை பாடினார்கள். தமிழ்நாட்டின் ஆஷிக், அஸ்ஸாமைச் சார்ந்த நஸருல் இஸ்லாம் சவுத்ரி, மகாராஷ்டிராவின் மஜார் கான்,மற்றும் கேரளா, கர்நாடகாவைச் சார்ந்தவர்கள் பங்கு பெற்றார்கள்.

தொடர்ந்து சவுதி அரேபியாவின் முன்னணி ஆங்கில நாளிதழ் அரப் நியூஸ் பத்திரிகையின் எடிட்டர் சிராஜ் வஹாப் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். அதில் வெளிநாட்டு வாழ் இந்தியாரகள் இப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தியதை பாராட்டினார். மேலும்,அனைத்து மாநில மக்களையும் ஒரே இடத்தில் ஒரே நிகழ்ச்சியில் கூடியது தேசத்தின் ஒற்றுமையை காட்டுவதாக குறிப்பிட்டார். தனக்கு இந்தியா பிரடெர்னிடி பாரம் ஏற்கனவே பரிச்சயமானது தான் என்றும் ஹஜ் நேரத்தில் அவர்கள் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்ததை பாராட்டியதோடு அதற்கு நிகராக எதையுமே ஈடாக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். மேலும்,இவர்களது பணி அனைத்தையும் தான் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவற்றை பிரசுரம் செய்வதாகவும் குறிப்பிட்டார். இந்தியா பிரடெர்னிடி பாரத்திற்காக உதவ தானும் தனது பத்திரிகையும் எந்நேரமும் தயார் என்றும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பீகாரைச் சார்ந்த பர்வேஸ் அஹமது அவர்கள் சுதந்திரதின சிறப்புரை ஆற்றினார்கள். அதில் இன்றைய தினம் இந்தியர்களாகிய நாம் சுதந்திரத்தை கொண்டாடுவதில் உள்ள பிரச்சனைகளை எடுத்துரைத்தார். பல்வேறு மத, இன மக்கள் வாழும் நம் நாட்டில் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதையும், சம நீதி வழங்கப்படாமலிருப்பதையும் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதையும், நிவாரணங்கள் தீர்வுகள் வழங்கப்படாததையும் குறிப்பிட்டார். சமூக மேம்பாட்டின் மூலமே இது சாத்தியம் என்றும் அதற்காக அனைத்து இந்தியர்களும் சேர்ந்து பாடுபட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கர்நாடகாவின் மீராஜ் அஹமது நன்றியுரை வழங்கினார். தேசஒற்றுமைப் பாடலான சாரே சஹான் சே அச்சா பாடல் ஒலிபரப்பப்பட்டது. அத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

No comments: