அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, March 28, 2011

கைமேல் தரும் அன்பளிப்புக்கு தடை; வருங்கால கவனிப்புக்கு அனுமதியா?

தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் கமிஷனின் நெருக்குதல் அதிகமாவதால் திருமங்கலம் பார்முலாவை அமுல்படுத்த முடியாமல் திண்டடுகின்றன பிரதான கட்சிகள். சாலைகளில் செல்லும் வாகன சோதனையில் லட்சகணக்கில் பணம் கைப்பற்ற பட்டுள்ளது. பறக்கும் படையின் வாகன சோதனையில் வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தகுந்த தகவல் இன்றி சோதனையிடுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்கும் அளவுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு எனும் மூக்கனாங்கயிரை கச்சிதமாக செயல்படுத்தி வருகிறது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை பாராட்டுக் குரியதாகும். அதே நேரத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் எதற்காக விதிக்கப்படுகிறதோ அந்த இலக்கை தேர்தல் கமிஷன் அடைய வேண்டுமெனில் மற்றொரு சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும். அதாவது தேர்தல் அறிக்கை என்ற பெயரில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வருங்கால 'அன்பளிப்புகளை' தடுக்க வகை செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும்.
ஒரு காலத்தில் தங்கள் கட்சிகளின் கொள்கையை சொல்லி வாக்கு கேட்டவர்கள் இன்று, வாக்குகளை இலவசங்களால் அள்ள நினைத்து, தேர்தல் அறிக்கை என்ற பெயரில் பெரும்பகுதி இலவசங்களை அறிவித்து மக்களை மயக்கி வாக்குகளை அறுவடை செய்கின்றனர்.
ஒருவர் கிரைண்டர் அல்லது மிக்சி என்கிறார். மற்றொருவர் கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி மூன்றும் இலவசம் என்கிறார்.
ஒருவர் ஒரு ரூபாய் அரிசி என்கிறார் . மற்றொருவர் 20 கிலோ அரிசி, முற்றிலும் இலவசம் என்கிறார்.
ஒருவர் 58 வயது உடையோர், அரசு பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் என்கிறார்.
மற்றொருவர் 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்.ஆதரவற்ற ஆண்கள், பெண்கள், முதியவர்களுக்கு தங்கும் இடம், உணவு இலவசம் என்கிறார்.
ஒருவர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக, "லேப்-டாப்' வழங்கப்படும் என்கிறார். மற்றொருவர் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச, "லேப்-டாப்!'
அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச, "லேப்-டாப்!'என்கிறார்.
இவ்வாறு இவர்கள் போட்டி போட்டு அறிவித்துள்ள இலவசங்களைஅடுக்கிக்கொண்டே போகலாம் . வாக்குக்கு பணமோ-அன்பளிப்போ கொடுத்து அதை பெற்று விடாமல் தடுப்பதுதான் தேர்தல் கமிஷனின் நோக்கம் எனில், கைமேல் தரும் அன்பளிப்பை மட்டும் தடுத்து, வருங்கால வைப்பு நிதி போன்று, தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அன்பளிப்புகளை கண்டு கொள்ளததது சரியல்ல. எனவே தேர்தல் அறிக்கையில் வெறுமனே நாட்டின் முன்னேற்ற திட்டங்கள் மட்டுமே இடம்பெறும் வகையில், சட்டதிருத்தம் கொண்டு வந்தால்தான் இலவசங்கள் மூலம் வாக்குகளை கொள்ளையடிக்கும் நிலை மாறும்.

No comments: