தேசீய வேலைவாய்ப்பு நிறுவன ஆய்வின்(என்.எஸ்.எஸ்.ஓ) 2000-2005 ஆண்டுக்கான அறிக்கையின்படி பட்டப்படிப்பு பெற்ற 15 சதவீதம் முஸ்லிம் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சி மிகு தகவலை அளித்துள்ளது. ஆனால் இந்து பட்டதாரிகள் 7 சதவீதம்த்hன் வேலை கிடைக்காமல் உள்ளனர். இன்னொரு அறிக்கையில் ஒரு மதத்தினர் மற்ற மதத்தினருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற தகவலையும் கூறுகிறது.
அதே போன்று மேல்நிலை பள்ளி கல்விக் கற்ற 48 சதவீதம் இந்துக்கள் வேலையில் உள்ளனர். ஆனால் முஸ்லிம் 10 சதவீதம் தான் என்பது அதிர்ச்சியாக உள்ளது.
மாண்புமிகு பிரதமர் 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் பேசுகையில் முஸ்லிம்களுக்கு பொதுத்துறையில் இருப்பது போல் தனியார் பெரிய தொழிற்துறையிலும் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். 2009 வருடம் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய தனியார் தொழில் அதிபர்கள் ரிலையன்ஸ் அனில் அம்பானியும், இரும்பு ஆலை அதிபர் சுனில் மிட்டலும் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி இந்திய நாட்டுன் பிரதமராக வந்தால் நலமாக இருக்கும் என்று கூறியதாக பத்திரிக்கை செய்தி. எந்த மோடியை? அப்பாவி 2000 முஸ்லிம்களுக்கு மேல் மனித கொலையினை நடத்தியும், பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதி முகாமிலிருந்து தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் செய்யும் குஜராத் அரசினை தலைமை ஏற்று நடத்தும் மோடியைத்தான் சொல்கின்றனர். பின் எவ்வாறு அனில் அம்பானியும், சுனில் மிட்டலும் பிரதமர் சொல்வது போன்று முஸ்லிம்களுக்கு வேலை கொடுப்பார்கள்.
ஏன், அரசாங்கத்தால் நடத்தப்படும் வேலைகளிலேயே அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட 15 கொள்கை அறிக்கையின்படி முஸ்லிம்களுக்கு வேலை பூரணமாக கொடுக்கவில்லையென்று மைனாரிட்டி அமைச்சர் ஏ.ஆர். அந்துலே சொன்னதாகவும், ஒரு மத்திய அமைச்சருக்கு உள்ள ஒரு அமைச்சகம் கூட இல்லை என்று பத்திரிக்கை செய்திகளை படிக்கும் போது பரிதாபமாக நமக்குத்தெரியவில்லையா? முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து அமைக்கப்பட்ட
நீதிபதி சச்சார் குழு தன் அறிக்கை தயாரிக்க ராணுவத்தில் முஸ்லிம்களின் வேலை பற்றி கேட்டதற்கு இந்துத்துவா அரசியல் வாதிகள் மட்டும் எதிர்க்கவில்லை- மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ராணுவ அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றால் ஆச்சரியமில்லையா? மேலும் சச்சார் அறிக்கையில் முஸ்லிகள் கல்வியிலோ, வேலையிலோ ஆதி திராவிடர்களை விட மிகவும் பின் தங்கி உள்ளனர், பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் முஸ்லிம்கள் அதிகமாக சிறைக்கோட்டங்களின் கம்பிகளை எண்ணிக்கொண்டுள்ளனர். முன்னாள் உச்சமன்ற நீதிபதி ஜே,எஸ். வர்மாமுஸ்லிம்கள் நீதித்துறையில் கண்ணுக்குத் தெரியாவிடத்தில் உள்ளனர் என்று கூறுகிறார்.
இந்துத்துவா ஆட்சி செய்கின்ற மாநிலத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றால் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் பொதுவுடைமை பூங்கா கம்யூனிஸ்டுகள் 30 வருடம் ஆட்சி செய்யும் முஸ்லிம் ஜனத்தொகை 25 சதவீதம், ஆனால் வேலைவாய்ப்பு வெறும் 4.2 சதவீதம் தான் என்றால் நம்ப முடிகிறதா? பீகார், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெறும் 3 சதவீதம் தான். தமிழ்நாட்டில் முஸ்லிம் ஜனத்தொகை 6 சதவீதம் இருந்தும், அரசால் 3.5 சதவீதம் வேலை வாய்ப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. அதையாவது முழுமையாகக்கொடுத்தால் சரிதான். இரண்டரை ஆண்டு காலத்தில்(25.12.2009) மொத்தமாக 2,78,294 பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது. அதில் எத்தனை சதவீதம் முஸ்லிம்கள் என்று அரசை ஆதரிக்கும் முஸ்லிம் அமைப்புக்கள் கேட்டுப்பெற வேண்டும்.
மேற்கூறிய தகவல் மூலம் எங்கே படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பே இல்லாத இருண்ட உலகம் உள்ளதோ என்ற ஐயப்பாடு ஏற்படலாம். உலகம் விசாலமானது. நீங்கள் திறமை சாலியாக இருந்தால் உலகம் உங்கள் காலடியில்.
படித்த திறமைசாலிகளை உருவாக்குவது யார் கையில் உள்ளது? பெற்றோர்களின் உதவி, ஆசிரியர்களின் ஊக்கம், மாணவர்கள் தன்னம்பிக்கையிலும்தான் உள்ளது. எல்லோரும் பட்டம் பெற்று விடலாம், ஆனால் அந்த பட்டங்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும் உதவும் வேலை வாய்ப்பு தேடித்தருகின்றதாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட பாடங்களை பள்ளியிலும், கல்லூரியிலும் ஆசிரியர்களை போதிக்கச்செய்வது கல்வி ஸ்தாபனங்களை நிர்வகிப்பவர்களைச்சாரும். கல்வி நிலையங்களை நிர்வகிக்கிறவர்கள் குறைந்தபட்ச
படிப்பு பெற்றிருந்தால் தானே அதைப்பற்றி சிந்திக்க முடியும். ஒரு சமயத்தில் இந்தக் கருத்தினை வழியுறுத்தும் போது ஒருவர் கேட்டார் ஏன் படிக்காதவர்கள் டாக்டர் பட்டம் பெறவில்லையா என்று. படிக்காதவர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் பட்டம் கௌரவ பட்டம் என்று அறியாதவர்களும் நம்மிடையே கல்வி ஸ்தாபனங்களை நிர்வகிக்கிறவர்களின் அறியாமையைத்தான் காட்டுகின்றது.
பல்கலைக்கழக(யு.ஜி.சி) அறிவித்த கொள்கைபடி அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளிலும் தரமான கல்வியைத் தந்தால் தான் தரச்சான்றிதழ் தரமுடியும் என்றும், கல்லூரிகளில் விரிவுரையாளர்களுக்கு டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.யு.ஜி.சி தலைவர் திரு. சுக்தேவ் தோரட் கூற்றின்படி 24 சதவீத கல்லூரிகளும், 30 சதவீத பல்கலைக்கழகங்களும் மட்டுமே தர(நாக்)அங்கீகாரம் பெற்றுள்ளன என்பது ஆச்சரியமாயிருக்கிறதா, ஆனால் அதுதான் உண்மை.சமீபத்தில் எனது பள்ளித் தோழர் தன்னுடைய எம்.பி.ஏ படித்த மகனை அழைத்துக்கொண்டு வந்து வேலைக்கு சிபாரிசு செய்யச் சொன்னார். நானும் வெஸ்ட்ஆசியா மனிதவள மேலாளர் திரு. ஜாபர் அவர்களிடம் சிபாரிசு செய்தேன். அவர் என் நண்பரின் மகனிடம் பி.சி.ஏ சம்பந்தமான கேள்யினை கேட்டபோது தெரியாது என்று சொல்லியுள்ளார்.மேலாளர் கேட்ட ஒரு கேள்விக்குக் கூட ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியவில்லையாம்.பின்பு என் நண்பனின் மகன் என்னிடம் காரணம் சொல்லும் போது எல்லாம் மறந்து விட்டது என்றார்.
போட்டிகள் நிறைந்த உலகில் யார் எதிர் நீச்சல் போடுகிறாரோ அவர்தான் வெற்றிபெற முடியும். ஒரு தகுதியான மாணவனை உருவாக்குவது ஆசிரியரின் கடமையாகும். போதிக்கும் கல்வி ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது மனதில் புதிய உத்வேகம், கண்டுபிடிப்பு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறமை, தொழில் நுட்பம், நிர்வாகத்திறமை, மனதைரியம் ஆகியவற்றை கற்றுத்தறுவதாக இருக்க வேண்டும்.
மதுரையைச்சார்ந்த 7வயது சிறுமி சுபிக்சா கம்யூட்டரில் புதிய உக்தியை கையாண்டதிற்காக உலகம் மெச்சத்தகுந்த பரிசினை பெற்று ஜனவரி ஒன்பதாம் தேதி 2009 ஜனாதிபதி சென்னை வந்தபோது நேரில் அழைத்துப் பாராட்டினார். நாகர்கோவில் இஸ்லாமிய மாணவி ரயிலில் கழிவுகளை தானியங்கி மூலம் கொட்டும் கருவியினை கண்டுபிடித்து பாராட்டுப் பெற்றார், அதே போன்று நாகப்பட்டிணம் இஸ்மாயில் என்ற மாணவர் சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் 4ம் ஆண்டு இ.சி.இ இன்ஜினிரிங் படிப்பில் செல்போன், டிவி, ரோடியோ ஆண்டனாக்களை இணைக்கும் தொலைதொடர்பில் புதிய கருவி மைக்ரோ ஸ்டிரிப் பேட்ச் ஆண்டனாவினை கண்டு பிடித்துள்ளார். நான் குறிப்பிட்ட மூவர் சாதனை பின்னணியில் அவர்களுடைய ஆசிரியர்களும், பெற்றோர்கள் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். ஏன் நீங்களும் உங்கள் குழந்தைகளை அவர்கள்போல் உருவாக்கக்கூடாது?
கிராமப்புற சூழ்நிலையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் போதிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். முதுகலை பட்டங்களை பெற்றுக்கொண்டு ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச வரவில்லை என்றால் வாய்ப்பு கதவு மூடப்படும் என்பதினை மாணவர்களுக்கு எடுத்து உரைக்க வேண்டும். நான் பள்ளியில் என்.சி.சி சார்ஜன்ட்டாக பணியாற்றியபோது கமாண்டிங் வார்த்தைகள் ஹிந்தியில் இருந்தது. ஆனால் ஹிந்தியை கற்றுக்கொள்ளாது 11 வது பரீட்சையில் ஹிந்தி வினாத்தாளையே பதிலாக எழுதி, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பின்பு ஹிந்தி ஏன் படிக்கவில்லை என்று நான் 1982ம் வருடம் மதுரை
தல்லாகுலம் டி.எஸ்.பியாக இருந்தபோது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பயிற்சிக்காக மவுண்ட் அபுவிற்கு சென்றபோதுதான் உணர்ந்தேன்.ஹிந்தி தெரியவில்லை என்றால் நாம் வட நாடுகளில் மட்டுமல்ல பக்கத்திலுள்ள ஆந்திர மாநிலத்திலும், பிழைக்கப் போகும் வளைகுடா,அரபு நாடுகளிலும்தான்.பின்பு ஹிந்தியின் முக்கியத்தை உணர்ந்து 1988ம் வருடம் தர்மபுரியில் எஸ்.பி யாக இருந்தபோது ஹிந்தி பிராத்மிக் பரீட்சை எழுதி வெற்றி பெற்றேன். அப்போது என் வயது 42. ஆகவே ஒரு முஸ்லிம் மாணவன் தமிழ் மொழியோடு ஆங்கில, ஹிந்தி மொழியையும் தெரிந்திருப்பதின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமென்றால்
மறுக்க முடியாது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு மேற்படிப்பு படிக்க ஆங்கில அறிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆகவேதான் ஜி,ஆர்.இ, டோப்பல், ஐ.இ.எல்.டி.எஸ் போன்ற பரீட்சைகள் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிப்பதோடு’புல்பிரைட்’ போன்ற ஸ்காலர்சிப்களும் வழங்கப்படுகிறது. அதேபோன்று இந்தியாவில் புதுடெல்லியில் இயங்கும் மவுலானா அப்துல் கலாம் ஆஜாத் அரக்கட்டளை பெண்கள் கல்வி கற்பதை ஊக்கப்படுத்த ஸ்காலர்சிப்பும், சென்னையில் சீதக்காதி டிரஸ்டிலும், முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாதிக் பொறுப்பேற்றிருக்கும் ‘ஓமியட்’ அறக்கட்டளையும், யு.ஜி.சி. கிராண்ட் கமிசன் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் முதுகலை பட்டப்படிப்பை தொடர்வதற்காக மாதம் தோறும் மானியமாக ரூ.2000 வழங்கப்படுகிறது. தமிழக அரசு கல்விக்காக இலவச சைக்கிள், பள்ளிவரை இலவச படிப்பு , இலவச கம்யூட்டர் போன்ற சலுகைகலையும் பள்ளி கல்விக்காக அறிவித்த வாய்ப்பை முஸ்லிம் மாணவர்கள் தவற விடலாமா? சமீபத்தில் 8வது முதல் 12வது படிக்கும் இந்து மாணவர்களுக்கு ‘இந்து ஸ்காலர்சிப் எபிசியன்சி டெஸ்ட்’ நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் சேறுவதிற்கான ஊக்க உதவித்தொகையினை இப்போதே வழங்குகிறார்கள். ஏன் நம்மால் முடியாதா? வசதி படைத்த முஸ்லிம் தன்வந்தர்கள் ஒவ்வொரு வருடமும் கொடுக்கும் சக்காத், சதக்கா போன்ற தான தர்மங்களின் ஒரு பகுதியை தங்கள் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் பயன்பெற அறக்கட்டளையும், மானியங்களையும் வழங்கி ஊக்கப்படுத்தலாம்.
சிறிய ஊர்களில் பெரிய ஆடம்பரமான பள்ளிவாசல்கள் கட்டும் போது பொதுஅறிவை விரிவுபடுத்தும் படிப்பகங்கள் ஏற்படுத்தலாம். நான் புதுக்கல்லூரியிலும், மாநிலக்கல்லூர்யிலும் பயிலும் போது எங்கள் ஊர் இளையான்குடியில் ஐக்கிய முஸ்லிம் படிப்பகம் இருந்ததால் ஹிந்து ஆங்கிலப்பத்திரிக்கை, இல்லஸ்ட்ரேட் வீக்கிலி ஆப் இந்தியா, ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற பத்திரிக்கைகளில் வரும் பொது அறிவு விசயங்கள் பிற்காலத்தில் எனக்கு அரசு தேர்வுகள் எழுத உதவியாக இருந்தது. அதே போன்ற படிப்பகங்கள் தங்கள் பகுதியில் நிறுவலாம்.ஹிந்துக்கள் வீடுகள் கட்டும் போது தனியாக பூஜை அறை ஒன்றை ஏற்படுத்துவார்கள். நாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு படிப்பறை கட்டி அதில் கனிணி, இன்டர்நெட் வசதி செய்து கொடுப்பதின் மூலம் உலகில் ஒருமூலையில் உள்ள லைப்பரியில் தேவைப்படும் புத்தகங்களைவீட்டில் இருந்தே படித்து தெரிந்து கொள்வதோடு, ஆன்லைன் வர்த்தகம், வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் கலந்துரையாடலும் செய்ய ஏதுவாக இருக்கும்.
பள்ளி இறுதிப்படிப்பினை முடித்ததுமே மாணவர்களை வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிந்து வைக்கச்சொல்லவதின் மூலம் மேல்படிப்பினை தொடர முடியாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பினை ஏற்படுத்தலாம். கல்லூரிகளிலும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவக்கூடிய பாடங்களை புகுத்தலாம். பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் எம்.பி.ஏ படிக்க உதவும் ஜிமேட்,கேட், பிட், ஜிஇஇ, சேட் போன்ற படிப்புகளுக்கு கோச்சிங் கொடுக்கலாம். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் ‘கேரியர் கைடன்ஸ்’ அமைப்பை ஏற்படுத்தி இது போன்ற பயிற்சிகளை ஆசிரியர்கள் கொண்டே செயல்படச்செய்யலாம். சென்னை ஜார்ஜ் டவுண் என்வீட்டிலிருந்து கோட்டைவரை நடைபயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது ஒரு நாள் ஒரு இளைஞர் என்னை வழி மறித்து ‘சார் நான் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றார். நான் அவரிடம் நீ என்ன செய்கிறாய் என்றேன், அதற்கு அவர் பிளஸ்2 படிக்கிறேன் என்றார். அந்த பையனின் கேள்வி என்னை 40 வருட சம்பவத்திற்கு கொண்டு சென்றது. நான் சென்னை புதுக்கல்லூரியில் படிக்கும்போது 1968 வருடம் ஒரு நாள் என் நண்பர் தாகிருடன் ராயப்பேட்டை காவல் நிலைய அருகில் இருந்த ஐயர் ஐ,ஏ,எஸ் அகடாமியில் சென்டரில் விசாரித்தபோது அங்கே இருந்த மேலாளர் சொன்னார் நீங்கள்முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு வாருங்கள் அதன்பின் பார்க்கலாம் என்று அனுப்பிவிட்டார்.. ஆனால் உண்மையில் ஐ.ஏ.எஸ் படிக்க முதுகலை பட்டம்பெற தேவையில்லை என்பது பின்புதான் தெரிந்தது. என்னிடம் கேள்வி கேட்ட மாணவனை நிச்சயமாக பாராட்டவேண்டும், ஏனென்றால் நாங்கள் பட்டப்படிப்பில் கேட்டக் கேள்வியை பிளஸ் 2 படிக்கும்போதே கேட்டிருக்கிறார். உண்மையில் இந்திய ஆட்சிப்பணிக்கோ அல்லது அதற்கு இணையான மாநில பரிட்சை எழுதுவதிற்கு ஆயத்தப்பணியை பிளஸ்2 முடித்தவுடனேயே ஆரம்பித்துவிடவேண்டும். இளங்கலை பட்டப்படிப்பில் என்ன என்ன விருப்பப்பாடம் ஐ.ஏ.எஸ் பரீட்சைக்கு எடுக்கலாம் என்று தீர்மானிக்கலாம். இதன் மூலம் ஒரு மாணவன் 21லிருந்து 24 வயதுக்குள் இந்திய ஆட்சிப்பணி பரீச்சைக்கோ அல்லது அதற்கு இணையான பரீட்சையிலோ வெற்றி பெறலாம்.
53000 ஊழியர்களைக் கொண்ட சத்தியம் நிறுவனமே ஊழியர்களை நட்டாற்றில் விட்டபோது அரசு ஊழியம் நிரந்தர வேலை வாய்ப்பும், பல்வேறு சலுகைகளையும் கொண்டது எவ்வளவோ மேல். நாடார் சமூகத்தினருக்கு சாதாரண காவலர்,கிளார்க் பதவியிலிருந்து ஐ,ஏ,எஸ் அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் வீரபாண்டிய பட்டிணம் ஆதித்தனார் கல்லூயில் குறைந்த சலுகையில் நடத்தப்படுகிறது.. அது போன்ற அமைப்பு நமக்கு சென்னையில் இல்லை. அதற்காக
புதுக்கல்லூரியை நிர்வகித்து வரும் மியாசி அமைப்பில் கொண்டு வர வேண்டும் என்று ஒரு தீர்மானம் 15.10.2008 அன்று நான் கொண்டு வந்தபோது பதவியை மட்டும் அனுவிக்க வேண்டும் ஆனால் முஸ்லிம் மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடாது என்ற சிலரால் எதிர்க்கப்பட்டது என்றால் பாருங்களேன். சென்னை வண்டலூரில் ஐ.ஏ.எஸ்க்கு மட்டும் கிரசண்ட் பொறியல் கல்லூரியில் நடத்தப்படுகிறது. அதேபோன்று முன்னாள் எம்.எல்,ஏ சைதை துரைசமியும் சைதைப்பேட்டியிலும், ஈ.வெ,ரா. அறக்கட்டளை சார்பிலும், அரசு சார்பில் அண்ணா நகரிலும் நடத்தப்படுகிறது.ஆனால் எம்.பி.ஏ, மட்டும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் படிப்பில் சேரவும், மேல் படிப்பிற்காக மேல் நாட்டிற்கு செல்லவும் தேவையான காம்ரகன்சிவ்(ஒருங்கிணைப்பு) பயிற்சி அளிக்க முஸ்லிம் அமைப்புகள் தற்போது இல்லாத குறையை நிவர்த்தி செய்ய கல்லூரிகளை நடத்துகின்றவர்கள் அல்லது தொண்டு நிறுவனம் முயல வேண்டும்.
No comments:
Post a Comment