அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, February 9, 2009

தங்கக்காசு வலையில் சிக்கிய நடிகை நடிகர்கள் யார்? யார்? தங்கக் காசுகள் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்!

தங்கக் காசுகள் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்!அட தங்கப் பைத்தியங்களே, கொஞ்சமாவது சிந்தித்தீர்களா?

விநோத தங்கப் பைத்தியங்கள்!
மனிதர்களுக்குத்தான் குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து, குபேரர்களாகிவிட எத்தனை எத்தனை கொள்ளை ஆசை!நாளேடுகளில் அன்றாடம் வரும் செய்திகளைப் படித்தால் வெட்கத்தால் நாகரிக உணர்வும், பகுத்தறிவுச் சிந்தனையும் உடைய எவரும் தலை கவிழ வேண்டியிருக்கிறது!

ஆங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்டு ஒருவர் ஆரம்பித்த மோசடி வியாபாரம் மளமளவென காட்டுத்தீயைப்போல பரவியது!பல மடங்கு செல்வத்தை நீங்கள் பெற்றுவிட முடியும் உடனே உங்கள் பணத்தை எங்களிடம் முதலீடு செய்யுங்கள் என்று விளம்பரம்; தொடக்கத்தில் சிலருக்கு வைரக் கடிகாரம் - சங்கிலித் தொடர் வியாபாரத்தில் முதலில் ஈடுபட்ட சிலருக்கு - மற்றவர் நாக்கு ஊறும் அளவுக்கு வருவாய் குவிப்பு.

விளைவு...? பாடுபட்டுச் சேர்த்த பணத்தைக் கொண்டுபோய் கியூவில் நின்று கட்டிவிட்டு, இன்று பட்டை நாமத்தைப் போட்டுக்கொண்டு, சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு கியூவில் அழுத கண்ணீருடன் புலம்பும் சோகக் காட்சி!

பல மடங்கு தங்கம் - தங்கக் காசுகள் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்!அட தங்கப் பைத்தியங்களே, கொஞ்சமாவது சிந்தித்தீர்களா?எதற்கு நாம் இந்த முதலீட்டை எவனோ அடையாளம் தெரியாத ஒரு வாணிபக் குழுமத்தில் போட்டு நொந்து நூலாக வேண்டும்? பிறகு அழுது புரண்டு அன்றாடக் கஞ்சிக்கே அல்லாடவேண்டும் என்று சிந்தித்தீர்களா?

அதிருஷ்டம் என்ற சொல்லுக்கே பொருள் தெரியாமல், அதிர்ஷ்டசாலிகளாகப் போவது எப்படி? எப்போது என்று அலையும் அன்பர்களே,
திருஷ்டம் என்ற வடமொழி வார்த்தைக்குப் பார்வை என்று பொருள்!அதிருஷ்டம் என்றால், பார்வையற்றது, குருட்டுத்தனம் என்று பொருள்!
நான் அதிர்ஷ்டசாலியாக வேண்டும் என்றால், நான் பார்வையற்ற குருடன் ஆகவேண்டும் என்பது அல்லவா பொருள்?

பார்வையை இழக்க எவனாவது ஆசைப்படுகிறான் என்றால், அவனைப் பைத்தியம் என்று அழைக்காமல் எப்படி அழைப்பது?

அந்த ஏமாற்று மோசடிக் கம்பெனி முதலாளிகள் என்ற தங்கச் சுரங்கத்திலிருந்து தோண்டியெடுத்து தரணி முழுவதும் தங்க மழை பொழிய ஏற்பாடு செய்யும் நவீன விஞ்ஞானியா? அல்லது பழைய கற்பனை தங்க வருண பகவானா?

இந்த மோசடிச் செய்தி - தங்கக் காசு வரும்போதே! அட்சயத் திருதியை - அன்று தங்கம் வாங்கினால் தங்கம் வட்டியுடன் குட்டி போடும் என்ற கப்சா கதையளக்கும் நகைக்கடை விளம்பரங்கள் - இதற்கு மோசடி ஜோதிடர்கள் வியாக்யானம் - விளக்கம் எல்லாம்!

போன வருடம் வாங்கிய தங்க நகைகளில் பல கொள்ளை போய், போலீஸ் அல்லவா அதை கொள்ளைக்காரர்கள், திருடர்களிடமிருந்து திருப்பிக் கொண்டு வந்து கொடுத்துள்ளனர்!அட்சயத் திருதியை அன்று வாங்கும் தங்கம் திருட்டுப் போகாது என்ற குறைந்தபட்ச உத்தரவாதத்தை, அதை விற்போர் தரத் தயாராக உள்ளார்களா?

தந்தை பெரியார் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகையில் ஒரு கதை சொல்வார்கள்; அதுதான் இப்போது நம் நினைவிற்கு வருகிறது!

ஒரு பிச்சைக்காரன் ஒரு வீட்டில் உள்ள ஒரு தாயிடம், பசியா வரம் தருகிறேன்; கொஞ்சம் பழைய சோறு போடு தாயே என்று கேட்டானாம்!
அந்த ஏழைத் தாய், வீட்டில் இருந்தது பழைய சோறுதான்!யோசித்தார், அந்தத் தாய் - பசிதானே நமக்கு எப்போதும் பிரச்சினை.

அந்தச் சாமியார் - பிச்சைக்காரரிடம் பசியா வரம் வாங்கிவிட்டால், பசிப் பிரச்சினை நிரந்தரமாகத் தீர்ந்துவிடும் என்ற பேராசையுடன், இருந்த பழைய சோற்றை இவனுக்குப் போட்டு அனுப்பி, பசிய வரத்தைப் பெற்றுவிட்டார்!
சற்று நேரம் கழித்து வந்த கணவனிடம், மிகுந்த பெருமையுடன் தனது சாதனையைக் கூறினார் இந்த அம்மையார்!

அடிப்பாவி, மோசம் போய்விட்டாயே! பசியாவரம் தரும் சக்தி அவனுக்கு இருந்தால், அவன் உன்னிடம் பழைய சோறு கேட்பானா என்பதை யோசித்தாயா? மூட ஜென்மமே என்றார். அப்போதுதான் அந்தத் தாய்க்குப் புரிந்ததாம்! அந்த நிலையில்தான் இன்று தங்கப் பைத்தியங்கள் அய்யகோ!
http://viduthalai.com/20080507/chennai_2.html


தங்கக்காசு வலையில் சிக்கிய நடிகை நடிகர்கள் யார் ? யார் ?

அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் அமோகமாகத் தங்கம் பெருகும்’ என்பது நம்மவர்களின் நம்பிக்கை. அந்த அட்சய திரிதியை நெருங்கிவரும் நேரம் பார்த்து ‘கோல்ட் குவெஸ்ட்’ என்ற நிறுவனம், கோல்மால் குற்றச்சாட்டில் சிக்கி குப்புறக் கவிழ்ந்திருப்பது பலரை ஆச்சரியப்படவும், பலரை அழுது புலம்பவும் வைத்திருக்கிறது.

ஏறத்தாழ மோடி மஸ்தான் வேலை மாதிரிதான் இதுவும். ‘‘எங்கள் ‘கோல்ட் குவெஸ்ட்’ நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை நீங்கள் முதலீடு செய்தால் நீங்கள் தூங்கும்போது கூட பணம் குவியும். படுத்துக் கொண்டே சம்பாதிக்கலாம்’’ என்ற பழைய பல்லவியைப் பாடிக்கொண்டே பலரது தலையில் இந்த நிறுவனம் மிளகாய் அரைத்திருப்பதாகக் கேள்வி.

‘கோல்ட் குவெஸ்ட்’ நிறுவனத்தின் பெருந்தலைகள் பலர் கைதாகி அவர்களின் அடுத்த கூட்டம் ‘புழல் சிறையில்’ நடந்து வரும் வேளையில், இந்தத் தங்க மோசடித் திட்டத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக வரும் தகவல்களால் பிரச்னை தகதகக்கத் தொடங்கியிருக்கிறது.

சென்னை, பெரம்பூரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். காய்கறி வியாபாரி. போதிய வருமானம் இல்லாமல் அவதிப்பட்ட அவருக்கு, திருவான்மியூரைச் சேர்ந்த நண்பர் ஸ்ரீகாந்த் என்பவர் ‘கோல்ட் குவெஸ்ட்’ நிறுவனம் பற்றி எடுத்துக் கூறியிருக்கிறார். அவர் பேச்சைக் கேட்டு 2006_ம் ஆண்டு அறுபத்திரண்டாயிரம் கட்டி உறுப்பினராகி இருக்கிறார் தினேஷ்குமார். நாக்கில் தேன் தடவுகிற மாதிரி ஆறு கிராம் தங்க நாணயம் இரண்டைக் கொடுத்திருக்கிறார்கள் அந்த நிறுவனத்தினர்.

‘‘இந்த தங்க நாணயங்கள் வங்கியில் போட்ட பணம் மாதிரி. நீங்கள் ஆட்களைச் சேர்க்காவிட்டாலும்கூட இந்தத் தங்க நாணயங்களை பல லட்சத்துக்கு விற்கலாம்’’ எனக் கூறியிருக்கிறார்கள். ‘‘உங்களுக்குக் கீழ் இரண்டுபேர், அவர்களுக்குக் கீழ் இரண்டு பேர்’’ என ஆள்பிடிப்பு தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் தினேஷ்குமார் அவருக்குக்கீழ் ஆள் பிடிக்காமல் அந்த தங்கச் சங்கிலித் தொடரை அறுத்து விட்டார். இதனால் நிறுவனத்திடம் இருந்து எந்தவித செக்கும் அவருக்கு வரவில்லை. சரி! தங்கத்தையாவது விற்றுக் காசாக்கலாம்’ என அவர் முயற்சித்த போதுதான், ‘இது போதிய விலை பெறாத தங்கம்’ என தெரிய வந்திருக்கிறது.

சேத்துப்பட்டில் உள்ள ‘கோல்டு குவெஸ்ட்’ நிறுவனத்தின் நிர்வாகி புஷ்பம் அப்பள நாயுடுவிடம் தினேஷ்குமார் சண்டை போட, பதிலுக்கு தங்க நிறுவனத்தின் ஆட்கள் மூலம் அவருக்குக் கொலை மிரட்டல் வர, தினேஷ் செம்பியம் காவல்நிலையத்தில் புகார் தர, ‘நிகர லாபமாக’ ‘கோல்ட் குவெஸ்ட்’ நிறுவன நிர்வாக இயக்குனர்கள் புஷ்பம், ஜேம்ஸ் அகஸ்டின், தண்டபாணி, சுமேஷ், ஹரிபிரசாத் ராவ், வித்யா, சந்திரசேகர் ஆகிய ஏழு பேருக்குக் காப்பு மாட்டி விட்டனர் போலீஸார். தங்கக் காசு நிறுவனத்தையும் மூடி சீல் வைத்திருக்கிறார்கள்.

‘கோல்ட் குவெஸ்ட்’ நிறுவனம் அதிக அளவில் தங்க வேட்டையாடிய பகுதி வடசென்னைதான். அங்கே மூலக்கடை பகுதியில் தனி அலுவலகமே திறந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கக் காசு தொழிலில் சிக்கி லட்சக்கணக்கில் இழந்துள்ளனர். ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, அயனாவரம், மூலக்கடை, வில்லிவாக்கம் என பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தினமும் திரண்டு வந்து போலீஸில் புகார் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

நாம் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கருணாநிதி என்பவரிடம் பேசினோம். “அட! அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீங்க? என் பாட்டுக்கு சிவனே என்று வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். பக்கத்தில் வசிக்கும் மாலதி என்பவர் தங்க பிஸினஸ் செய்து மாதந்தோறும் அவருக்கு செக் மூலம் பணம் குவிவதாக என் மனைவி கூறினாள்.

ஆசை யாரை விட்டது? மாலதியிடம் பேசினேன். ‘முதலில் முப்பதாயிரம் கட்டுங்கள். மாதமானால் ஆயிரம், ஆயிரமாக பணம் கொட்டும்’ என்றார். நம்பிச் சேர்ந்தேன். ‘இது ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கக்காசு’ என்று ஒரு தங்கக் காசைக் கொடுத்தார்கள்.

அந்தக் கம்பெனிக்காரர்கள் அபு பேலஸ், தியாகராயர் அரங்கம் உள்பட பல முக்கிய இடங்களில் கூட்டம் போட்டு மூளைச்சலவை எல்லாம் செய்வார்கள்.

நடிகர், நடிகைகள் எல்லாம் அந்தக் கூட்டத்துக்கு வருவார்கள். மாலதிதான் எங்களுக்கு டீம் லீடர். அவர் துணையோடு நானும் நான்கு பேரைச் சேர்த்தேன். ரூபாய் ஒன்பதாயிரம், இரண்டாயிரம் என இரண்டு செக்குகள் வந்தது. நான் கொடுத்த முப்பதாயிரம் பணம் எனக்கு வரவில்லை. தங்கத்தை விற்கப்போனபோது போதிய பணம் கிடைக்கவில்லை. மனம் வெறுத்துப் போய் மாலதியிடம் சண்டை போட்டேன்.

அவரோ, ‘உன்னால் போதிய ஆட்களைத் திரட்ட முடியாததற்கு நான் என்ன பண்ண முடியும்?. கம்பெனியில் கேளு’ என்றார். நானும், எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களும் அங்கே நேரில் போய்க் கேட்ட போது, எங்களைத் திட்டி அனுப்பிவிட்டார்கள். எனக்கு அவர்கள் தந்த தங்கக் காசு, தலைவர்கள் உருவம் பொறித்த தங்க வாட்ச் எல்லாம் வேண்டாம். அவர்களே வாங்கிக் கொள்ளட்டும். எனக்குப் பணம் கிடைத்தால் போதும்’’ என்றார் கருணாநிதி சோகமாக.

“போன வருடம்தான் முப்பதாயிரம் கட்டிச் சேர்ந்தோம். ஒருவரையும் இந்தக் கம்பெனியில் எங்களால் சேர்க்க முடியவில்லை. வெறும் மூன்று கிராம் தங்கத்தைக் கொடுத்து எங்களை ஏமாற்றிவிட்டனர். எங்கள் பணம் எப்ப வரும் என்று தெரியவில்லையே?’’ என்று நம்மிடம் கதறியழ ஆரம்பித்துவிட்டார்கள் நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த மாலதியும், கோகிலாவும்.

‘கோல்ட் குவெஸ்ட்’ நிறுவனம் தமிழ்நாட்டில் மட்டும் பல நூறு கோடிகள் லாபம் பார்த்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் முழு நேரத் தொழிலாகவே தங்கக் காசு வியாபாரத்தைச் செய்து வந்துள்ளனர். ஒரேநாளில் தங்களது பிழைப்பில் மண் விழுந்துவிட்டதால், அதிர்ந்து போன அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஐநூறுக்கும் மேற்பட்டோர், கடந்த 3_ம்தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைக்க வேண்டியதாயிற்று. முப்பத்து நான்கு பேர் கைதானார்கள்.

‘கட்டிய பணம் காந்தி கணக்கா? தங்கக் காசு நிறுவனம் மீண்டு வருமா?’ என்று வாடிக்கையாளர்கள் தவித்துக் கொண்டிருந்த வேளையில் அந்நிறுவன நிர்வாகிகள், கடந்த 4_ம்தேதி சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

அதில், ‘‘எங்களுக்கு இந்தியா முழுவதும் 220 கிளைகள் உள்ளன. ‘இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா, மலேசியா உள்பட பல நாடுகளில் பல மில்லியன் டாலர்களில் பிஸினஸ் செய்து வருகிறோம். போலீஸ் சோதனையால் பல நூறு வாடிக்கையாளர்களுக்குத் தர இருந்த தங்கக் காசுகள், செக்குகளை பறிமுதல் செய்துவிட்டனர்’’ எனப் புலம்பித் தள்ளியிருக்கிறார்கள்.

சேத்துப்பட்டில் உள்ள ‘கோல்டு குவெஸ்ட்’ கம்பெனிக்குச் சென்றோம். மூன்று தளங்களில் செயல்பட்டு வந்திருக்கிறது அந்த நிறுவனம். அங்கே சோதனையிட்டு பொருட்களைப் பறிமுதல் செய்த போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். “இந்த நிறுவனம் ஏற்கெனவே 2003_ம் ஆண்டு இதேபோன்ற மோசடியில் சிக்கியிருக்கிறது. இப்போது கைதாகியுள்ள புஷ்பம் அப்பளநாயுடு அப்போதும் கைதாகி இருக்கிறார். ஆனால் நான்கு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் திரும்பவும் பிஸினஸ் ஆரம்பித்துவிட்டனர். ஏ¬ ழபாழைகளைக் கூட இந்த நிறுவனம் விட்டுவைக்கவில்லை என்பதுதான் வேதனை.

சின்னத்திரையில் தற்போது முன்னணியில் இருக்கும் பல நடிகைகள் ‘கோல்டு குவெஸ்ட்டின்’ ஏஜெண்டுகள் தான். அதிலும் உயரமான ‘ரத்ன’ நடிகர் இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்.

இந்த நிறுவனத்தின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மூளைச் சலவை செய்யும் வேலைகளில் அவர் இறங்கியிருக்கிறார். அதேபோல், சமீபத்தில் கணவனை இழந்த சின்னத்திரை நடிகை,

மூன்றெழுத்து பெயரில் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் நடத்தும் சின்னத்திரை நாயகி என சகலரும் கஸ்டமர்கள்தான்.

அந்தத் தயாரிப்பு நிறுவன மூன்றெழுத்து நாயகி அண்மையில்தான் இந்த பிஸினஸில் இருந்து விலகியிருக்கிறார். மார்க்கெட் இழந்த பல நடிகைகளும் அவர்களது சினிமா துறை நண்பர்கள் வட்டாரத்தை இதில் சேர வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர்.

பெரும் பணக்காரர்களுக்கு முப்பதாயிரம் இழந்தாலும் பெரிய இழப்பாகத் தோன்றாது. கோல்ட் குவெஸ்ட் நிறுவனம் குடிசைப் பகுதி மக்களிடம் தங்க பிஸினஸ் நடத்தி பாதிப்பு ஏற்படுத்தியதால்தான் பிரச்னை அம்பலமாகி விட்டது. ஏழு ஆண்டுகளாக இந்த நிறுவனம் பல ஆயிரம் கோடிகளைச் சுருட்டியிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் திட்டத்தில் சேரும் ஒருவர் அவருக்குக்கீழ் போதிய நபர்களைப் பிடித்துத் தராவிட்டால் அவர்கள் கட்டிய அனைத்துத் தொகையும் நிறுவனத்துக்குச் சொந்தமாகிவிடும்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளரான மலேசியா டத்தோ விஜய் ஈஸ்வரன் ஒரு சொகுசுப் பேர்வழி. 2001_ம் ஆண்டு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்த தங்கக் காசு நிறுவனத் திறப்பு விழாவில் மலேசியாவில் உள்ள ஒரு மாநில ராஜாவைக் கூட்டி வந்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

தனியாக ‘குவெஸ்ட் ஏவியேஷன்’ என்ற பெயரில் வாடிக்கையாளர்களை விமானத்தில் இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துப் போய் அவர் பணத்தை இறைத்ததால், பலரும் இந்த நிறுவனத்தை நம்பியுள்ளனர். ஐ.டி. நிறுவன ஊழியர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என இந்தத் தங்கக் காசு திட்டத்தில் ஏமாறாதவர்களே இல்லை.

தமிழ்நாட்டில் ஸ்கை வேஸ், ஸ்கை பிஃஸ், வீ கேன் என ஏராளமான எம்.எல்.எம். நிறுவனங்கள் கடந்த காலங்களில் செய்த அதே மோசடியைத்தான் ‘தங்கம்’ என்ற பெயரில் இந்த நிறுவனமும் செய்து வந்திருக்கிறது.

நடிகர், நடிகைகளில் நட்சத்திர அந்தஸ்தை இந்த நிறுவனம் சரியாகவே பயன்படுத்தியிருக்கிறது. குறுக்கு வழியில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற அதிகப்படியான ஆசையின் விளைவுதான் இத்தனையும். இனியாவது இதுபோன்ற எம்.எல்.எம். கம்பெனிகளிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்’’ என்றார் அவர்.

தற்போது நிறுவனத்தின் செயல்பாடுகள் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த நிறுவனத்தின் டீம் ஸ்பைடர் துறையின் இயக்குனர்களில் ஒருவரான ஜோஸ் என்பவரிடம், ‘அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்றோம்.

“எங்கள் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்துகிறார்கள். இந்தியா முழுக்கவே மூன்று லட்சம் பேர் இந்த வியாபாரத்தில் முழுநேரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தப் பிஸினஸில் ஈடுபட்டு உழைக்காதவர்களால்தான் பிரச்னையே வருகிறது. எங்கள் சேர்மன் விஜய் ஈஸ்வரனை ஏதோ கடத்தல்காரனைப் போல் சித்திரிக்கிறார்கள். அவர் கெட்டவர் என்றால், மலேசியா அரசு அவருக்கு ‘டத்தோ’ பட்டம் கொடுத்திருக்குமா?

இந்த பிஸினஸில் நல்லமுறையில் தொழில் செய்தால் வாரம் ஐந்து லட்சத்து எழுபத்தைந்தாயிரம் வரை சம்பாதிக்கலாம். லீகலாகத்தான் எங்கள் கம்பெனி நடக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியவில்லை? எங்கள் ஏஜெண்டுகளில் சிலர் பணத்துக்காக கஸ்டமர்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் வியாபாரம் பற்றி மக்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்காததால் ஏற்பட்ட விளைவுதான் இது’’ என ரொம்பவே நொந்து கொண்டார் ஜோஸ்.

அடுத்து நாம் பேசியது இந்த வழக்கை விசாரித்து வரும் புளியந்தோப்பு துணை கமிஷனர் சம்பத்குமாரிடம்.

“ ‘கோல்டு குவெஸ்ட்’ நிறுவனத்தை சீல் வைத்து விட்டோம். இதுவரை நடந்த சோதனையில் எண்பத்தேழு கிலோ சுத்தத் தங்கம், 589 கிலோ வெள்ளிக் காசுகள், 8362 தங்க வாட்சுகள், காந்தப் படுக்கை போல் உள்ள பயோடிஸ்க்குகள் 940, மற்றும் முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம்.

தற்போது வரை அந்த நிறுவனம் மீது எண்பத்தேழு புகார்கள் வந்திருக்கின்றன. இன்னும் புகார்கள் வரும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த சின்னத்திரை நடிகைகள், சினிமா நடிகர், நடிகைகளிடமும் விசாரணை நடத்த முடிவெடுத்து இருக்கிறோம்.

‘கோல்டு குவெஸ்ட்’ தலைவரான விஜய் ஈஸ்வரனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார் உறுதியாக.

ஆ. விஜயானந்த் KUMUDAM REPORTER.

No comments: