அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, February 10, 2009

அன்புமணியின் ஊழல் - சோலை

இந்தியாவிற்கே தேவையான தடுப்பு ஊசி மருந்துக்கள் உற்பத்தி செய்த மூன்று நிறுவனங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி மூடினார்.
அந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்த மருந்துகளை கோடிக்கணக்கான ரூபாய்களுக்குத் தனியார் நிறுவனங்களில் கொள்முதல் செய்ய ஆரம்பித்தனர். இதனை அந்த நிறுவன ஊழியர்களும் எதிர்த்தனர். இடதுசாரி ஜனநாயக இயக்கங்களும் எதிர்த்தனர். இந்த எதிர்ப்பு ஏதோ காலிக்குட்டங்களின் சலசலப்பு என்றே அன்புமணி கருதினர்.
குன்னூர், சென்னை-கிண்டி, இமாச்சலப் பிரதேசம் - கஸொலி ஆகிய இடங்களில் இயங்கிய தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி நிலையங்களைத் தான் மத்திய சுகாததாரத் துறை மூடியது. இவை மூன்றும் மக்களுக்குச் சொந்தமான - அரசுக்கு சொந்தமான போது துறை நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் மூடப்பட்டத்தைப் பற்றி ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம்.
அந்த நிறுவனங்களின் ஊழியர்களும், பணியாளர்களும் அவர்களுக்காக அணி திரண்ட தொழிற்சங்க இயக்கங்களும் எழுப்பிய குரல் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிடுமோ என்ற கவலையும் பிறந்தது.
பொதுத்துறையின் மூன்று நிறுவனங்களையும் மூடியது - தனியார் கம்பெனிகளின் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கான சதியே என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.கே. ராங்கராஜன் பிரதமரிடம் மனுக்கொடுத்தார். அந்த மனுவை பிரதமரை நேரடியாகச் சந்தித்தே கொடுத்தார். அதன் பின்னர் அசைவுகள் தெரிந்தன.
இப்போது அன்புமணிக்கு கேள்விப் பட்டியிலே பிரதமர் அலுவலகம் அனுப்பியிருக்கிறது. பட்டியலைத் தந்திபோல் பாவித்து தக்க பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.
தடுப்புஊசி மருந்துகளைத் தனியாரிடம் வாங்குவதற்காக இதுவரை எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது?
அப்படி வாங்கப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தயார் செய்யப்பட்டதா? அன்னிய நிறுவனங்ககள் தயார் செய்ததா? அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா?
மூடப்பட்ட மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் ISO 9002 தரச் சான்றிதழ் பெற்றவை. அப்படி இருக்கும் போது அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் அந்த நிறுவனங்களை ஏன் மூடினீர்கள்?
இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பு ஊசி மருந்துகள் உலக சுகாதார நிறுவனத்தின் தர நிர்ணாயத்திற்கு உட்படாத நாடுகளிலிருந்தும் வாங்கப்பட்டிருக்கிறதா?
மூடப்பட்ட மூன்று அரசு நிறுவங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகள் தரக் குறைவானது என்றால் அதன் தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறதா? அத்தனை மத்திய சுகாதாரத் துறை செயல்படுத்தாமல் பகாசுரத் தனியார் நிறுவனங்களிடம் எப்படிக் கொள்முதல் செய்ய முன்வந்தீர்கள்? அதனால் ஏற்ப்பட்ட கூடுதல் செலவு எவ்வளவு?
படமெடுக்கும் இந்தக் கேள்விகெல்லாம் யாரும் எழுப்பிவிட்டதல்ல. மத்திய சுகாதார துரையிடம் பிரதமர் அலுவலகம் கேட்டிருக்கும் கேள்விகள்தான் இவை. தொடுக்கப்பட்ட கேள்விகளில் ஒரு சிலவற்றைத் தான் தொட்டுக் காட்டி இருக்கிறோம்.
நமது மூன்று தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி நிலையங்களும் உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கும் தரத்தை அடைந்திட மத்திய சுகாதாரத் துறைக்கு வெறும் 50 கோடி ரூபாய் தான் செலவாகும்.. அதனை விடுத்து இன்னும் பலப்பல கோடிகள் அதிகச் செலவில் தனியாரிடம் மருந்துகள் வாங்குவது ஏன்? என்ற கேள்வி நியாயமாகவே எழுந்திருக்கிறது.. எனவே, இதில் பெரிய சதி, ஊழல், மோசடி நடந்திருக்கிறது. என்று மார்க்ஸிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன் சுட்டிக் காட்டியிருப்பது பொருள் பொதிந்தாகும்.
இதிலிருந்து ஓர் உண்மை தெரிகிறது. தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி நிலையங்களை மூடியது மத்திய அமைச்சரவையின் முடிவல்ல. பிரதமர் அலுவலகத்திற்க்கே தெரியாமல் நடந்த காரியம். மூடுவது என்பது சுகாதாரத் துறை எடுத்த தன்னிச்சிசையான முடிவுதான். அந்த முடிவு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பது இப்போது அமைச்சருக்குத் தெரிந்திருக்கும். இதுவரை எத்தனை கோடி இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது இனி வெளிச்சத்திற்கு வரும்.
இலங்கைப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண வேண்டும் என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்றுக் கொண்ட குறைந்தபட்ச செயல்திட்டங்களில் ஒன்றாகும். அதனை ஏன் மையஅரசு செயல்படுத்த மறுக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்கிறார். நியாயமான கேள்வி. பாராட்ட வேண்டியவாதம்.
ஆனால், அதேபோல் தான் பொதுத்துறை நிறுவனங்களை எக்காரணம் கொண்டும் மூடக்கூடாது என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்தபட்சசெயல் திட்டம் தான். அதனை மறந்து மத்திய அமைச்சரவைக்கும் தெரியாமல் பிரதமர் அலுவலகத்திற்கும் தெரியாமல் எப்படி மூன்று பொதுத்துறை நிறுவனங்களை மூடினார்கள்?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இன்னொரு குறைந்தபட்ச செயல் திட்டம் என்ன கூறுகிறது? மக்களுக்கு மலிவான விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்க வேண்டும். அதற்கான உததரவதத்தை அரசு செயல்படுத்தும் என்று கூறுகிறது ஏதோ பம்பர் பரிசு மாதிரி அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அவருக்கு குறைந்தப்பட்ச செயல் திட்டத்தைத் தெரியுமா? அதனை எப்படித் தயாரித்தார்கள் என்பது தெரியுமா?
மக்களுக்கு மலிவான விலையில் உயிர் காக்கும் மருந்துகள் தருவதற்கு உற்பத்திக்கு என்ன செய்ய வேண்டும்? திட்டம் தருக என்று அன்பு மணியை பிரதமர் அலுவலகம் கேட்டிருக்கிறது. அந்த மருந்துகளும் பொதுத் துறை நிறுவனங்கள் தான் தயாரிக்க வேண்டும் என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறது.
மூன்று பொதுத் துறை நிறுவனங்குகளை மூடிய வேகத்தில் செங்கல்பட்டில் தனியார் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து அதே மருந்துகளைத் தயாரிக்க அன்புமணி தயாரானார். அதற்கான அறிவிப்பும் வெளியனாது.
தடுப்பு ஊசி மருந்துகள் தயாரிக்கும் மூன்று நிறுவங்ககளும் மூடப்படவில்லை என்று நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சூப்பராயனுக்கு எழுதிய கடிதத்தில் அன்புமணி சுட்டிக் காட்டியிருக்கிறார்.. மகிழ்ச்சி.
ஆனால், இன்னும் உற்பத்தி தொடங்கப்படவில்லையே என்ன காரணம்? அந்த நிறுவன ஊழியர்களுக்கு இன்னும் முழுச் சம்பளத்தோடு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறதே என்ன காரணம்?
அதே சமயத்தில் இந்திய மருத்துவத் துறையில் அன்புமணி செய்துள்ள சாதனைகளைக் குறைத்து மதிப்பிடவேண்டாம். தமிழக அரசு துவக்கிய மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் 100 மாணவர் விதம் சேர்க்க அனுமதித்தனர். அதே சமயத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 150 மாணவர் விதம் சேர்க்க அனுமதித்தனர். இந்த பாரபட்சம் ஏன் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு ரொம்பத் தாராளம். ஆனால், அந்த வசதி அரசினர் கல்லூரிகளில் இல்லை என்று ஜி.கே. மணி பெயரில் ஓர் விளக்கம் வந்தது. கேழ்வரகில் நெய் வழிகிற தென்றால் நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்..
சென்னை நகரச் சுற்றி ஆறு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. அனைத்தும் தனியருக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் தான். இப்படி இந்தியா முழுமைக்கும் தனியருக்கு எத்தனை மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றார்? பட்டியல் வெளியிட்டால் சேவையின் சிறப்பு தெரியும்.
ஆதாரம்: ரிப்போட்டார் 12.2.2009 பக்கம் 34,35.

No comments: