2007-ல் அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி, இன்று பல உலக நாடுகளின் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கணக்கான சிறு நிதி நிறுவனங்கள் மூடப்பட்டோ, நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டோ காணாமல் போய்விட்டன. அவற்றில் முதலீடு செய்தவர்களின் பணம் காற்றில் கரைந்து போனது. HSBC, Merrill Lynch, Citigroup, Lehman Brothers போன்ற பெரும் நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி AIG போன்ற காப்புறுதி நிறுவனங்கள்கூட பெருமளவில் பாதிப்படைந்தன.
இந்த அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி ஒரு தொற்றுநோயைப் போல உலகமெங்கும் பரவி, பல நாடுகளின் நிதி நிறுவனங்களைப் பாதித்தது. சிறியது பெரியது என்ற பாகுபாடுகளில்லாமல் சகட்டுமேனிக்கு நிதி நிறுவனங்கள் பாதிப்படைந்து, நிதிஉலகின் எதிர்காலமே சட்டென்று இருண்டு போனது. பாதிப்படைந்த நாட்டு அரசாங்கங்கள், மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும்படி தங்கள் நாட்டுப் பொருளியல் நிபுணர்களை பணித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில், சாவின் விளிம்பை எட்டிப் பார்க்கும் தங்கள் நாட்டு நிதி நிறுவனங்களைத் தூக்கி நிறுத்த அரசாங்கங்கள் பெரும் தொகையைச் செலவு செய்து கொண்டிருக்கின்றன.
ஆனால் மக்களோ இதுநாள்வரை இந்த நாடுகளின் பொருளியலின் இயங்கு சக்தியாக இருந்த முதலாளித்துவக் கொள்கையின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். "முதலாளித்துவம் பொய்த்து விட்டது!" என்ற கோஷம் மேற்கத்திய நாடுகளிலிருந்தே உரக்க ஒலிக்கிறது. முதலாளித்துவக் கொள்கைகள் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களையும் மாற்று வழிகளைப் பற்றியும் பொருளியல் நிபுணர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.
இத்தனைப் பிரச்னைகளுக்கும் முதல் காரணம் அமெரிக்காவில் ஏற்பட்ட ‘subprime நெருக்கடி’ எனப்படும் திரும்பச் செலுத்தப் படாத வீட்டுக் கடன்கள்தான் என்கிறார்கள். அமெரிக்காவில் ஏற்பட்ட இந்தக் கடன் பிரச்னை உலகமெங்கும் பரவியது எப்படி? அதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இந்தப் பிரச்னை எப்படித் தோன்றியது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்கப் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும்பகுதி கடன் அடிப்படையில் நடத்தப் படுகின்றன. ஒவ்வொரு சராசரி அமெரிக்கரும் தனது வருமானத்தில் கால் பங்கை கிரெடிட் கார்டு கடன்களை அடைக்கப் பயன்படுத்துகின்றனர். வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற பெரிய கடன்களை அடைக்க இன்னொரு கால்பங்கு வருமானம் தேவைப்படும். கடன் வாங்குவதில் தேக்கநிலை ஏற்படும்போதெல்லாம் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் குறைத்து, மக்களை மேலும் கடன் வாங்கத் தூண்டும். அதாவது கடனிலிருந்து மக்களை மீளவிடாமல் பார்த்துக் கொள்ளும்.
1990-களின் ஆரம்பத்தில் உழைப்பாளர் மற்றும் நடுத்தர வருமானம் உடைய மக்களை இலக்காக வைத்து மிகக் குறைந்த வட்டிக்கு வீட்டு அடமானக் கடன்கள் வாரி வாரி வழங்கப் பட்டன. "குறைந்த வட்டியில் சொந்தமாக வீடு" என்று ஆசை காட்டப் பட்டு, பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் கடனாளிகளாக்கப் பட்டனர்.
கொஞ்ச நஞ்சம் தயக்கம் காட்டியவர்களைக் கூட, "நீங்கள் வாங்கப் போகும் வீட்டின் மதிப்பு 10 வருடங்களில் பல மடங்கு உயர்ந்து விடும். ஒருவேளை உங்களுக்குக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டால்கூட அந்த வீட்டை விற்று, கடனையும் அடைத்து மேற்கொண்டு நீங்கள் லாபமும் பார்க்கலாம்" என்று ஆசை காட்டிக் கடன் வாங்க வைத்தார்கள். ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இந்தப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டன. வீடுகள் விற்க விற்க அவர்களுக்கும் லாபம்தானே!
குறைந்த பட்ச மாத வருமானம் உடைய ஒருவர் 5 லட்சம் டாலர் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்க விரும்பினாலும், அவர் 5 லட்சத்தையும் வங்கியிலிருந்து கடனாகப் பெற்று, விரும்பும் வீட்டை வாங்கி விட முடியும். மாதாமாதம் அவர் 1000 டாலர் திரும்பச் செலுத்தினாலும் முழுக் கடனையும் வட்டியுடன் அடைத்து முடிக்க 60-70 வருடங்களாகி விடும்.
'இதெல்லாம் எளிதில் திரும்பி வராதக் கடன்கள்' என்று கடன் கொடுத்த நிதி நிறுவனங்களுக்குத் தெரியாதா என்ன? இதைச் சமாளிக்க அவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். இந்தக் கடன்களையெல்லாம் 'கடன் பத்திரங்களாக' மாற்றி உலகச் சந்தையில் விற்று விட்டார்கள். இவ்வாறு விற்கப் பட்ட கடன்களின் மதிப்பு 11.8 டிரில்லியன் டாலர்கள் என்ற கணக்கு இப்போது வெளியாகி இருக்கிறது (ஒரு டிரில்லியன் என்பது, இலட்சம் கோடி). அமெரிக்க ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதாகப் பெருமையுடன் நினைத்துக் கொண்டு, பல நாட்டு நிதி நிறுவனங்களும் இந்தக் கடன் பத்திரங்களை வாங்கின.
ஆரம்பத்தில், புதிதாகத் தொடங்கப்பட்ட நம்மூர் ஹோட்டல்களைப்போல் எல்லாம் சுவையாக இருந்தது. வீட்டு விலைகள் ஏறிக் கொண்டே இருந்தன. அதற்கேற்றாற்போல் மக்களின் கடன் சுமையும் அதிகரித்துக் கொண்டிருந்தது. பெரும் தொகையைக் கடனாகப் பெற்று வீடு வாங்கிய மாதச் சம்பளக்காரர்கள் நாளாக ஆக கடன் தவணை கட்ட சிரமப்பட ஆரம்பித்தார்கள். வாடகை வீட்டிற்கு 1000 டாலர் கட்டிக் கொண்டிருந்தவர்கள், சொந்த வீட்டிற்கு 3000 டாலர் கட்ட வேண்டியிருந்தது. தவணைகள் தவறத் தொடங்கின. அமெரிக்காவில் வேலையின்மையும் அதிகரித்துக் கொண்டிருந்தது.
கடன் வாங்கி வீடு வாங்கியவர்களின் பெரும் நம்பிக்கை, 'வீட்டு விலை உயர்ந்து கொண்டே போகும்' என்பதுதான். அந்த நம்பிக்கையில் இடி விழுந்தது! சூட்சுமம் அவிழத் தொடங்கியது! வீட்டு விலைகள் எதிர்பாரா விதமாக சரியத் தொடங்கின. அதாலபாதாளச் சரிவு என்றுகூடச் சொல்லலாம். 5 லட்சத்திற்கு வாங்கிய வீட்டின் மதிப்பு 1 லட்சத்துக்குக் கீழிறங்கி விட்டது. இப்போது கடன் வாங்கியவர்கள் வீட்டை விற்றாலும், வங்கியிடமே திருப்பிக் கொடுத்தாலும், கடன் வாங்கிய 5 லட்சத்தைத் திருப்பிச் செலுத்தியே ஆக வேண்டும்.
வீட்டு விலைகள் ஏறியதே இயல்பானதல்ல. நிதி நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் சந்தை விலையை மதிப்பிடும் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து நடத்திய கூட்டுக் கொள்ளை. இவர்கள் ஒன்று சேர்ந்து வீட்டு விலைகளை இருமடங்கு, மும்மடங்கு என ஏற்றி விட்டார்கள். போதாக்குறைக்கு வீடு வாங்கச் செலவு செய்யும் பணத்திற்கு வரி விலக்கு அளித்து ரியல் எஸ்டேட் சந்தையை மேலும் ஊக்கப் படுத்தி, மக்களை நிரந்தரக் கடன்காரர்களாக ஆக்கியது அரசு.
மாத வருமானக் காரர்களால் கடன் தவணைகளைத் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. வீடுகளை வங்கியிடமே ஒப்படைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள். ஆளில்லா வீடுகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது. புது வீடுகளின் கட்டுமானப்பணிகள் அப்படியப்படியே நிறுத்தப் பட்டன. மக்களிடம் பணப்புழக்கம் வெகுவாக குறைந்தது. கடன் கொடுத்த வங்கிகளுக்கு இரண்டு பக்கம் இடி. கொடுத்த கடன் திரும்பவில்லை. அந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்தவர்கள் தங்கள் பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ள விரைந்தனர். இதன் விளைவாகப் பல வங்கிகள் திவாலாயின.
வங்கிக் கடனை நம்பியே தொழில் நடத்திக் கொண்டிருந்த பல வணிக நிறுவனங்கள் சிக்கலில் விழுந்தன. அவர்களுக்கு வேண்டிய அளவிற்குக் கடன் பெற முடியவில்லை. கிடைக்கும் கொஞ்சக் கடன் தொகைக்கும் அதிகமான வட்டி கொடுக்க வேண்டியிருந்தது. தொழில் முதலீடுகள் சுருங்கின. வேலையிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது. பங்குச் சந்தைகள் சரிந்தன. நாட்டின் முழுப் பொருளாதாரமும் ஸ்தம்பித்தது.
அமெரிக்க நிதி நிறுவனங்கள் அடமானக் கடன்களை, 'கடன் பத்திரங்களாக' மாற்றி உலகச் சந்தையில் விற்றுவிட்டதை முன்னர் பார்த்தோம். அக்கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்த, அக்கடன்களைக் காப்பீடு செய்திருந்த பல வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் பெரும் நட்டமடைந்தன. அமெரிக்கா என்ற தனியொரு நாட்டின் கடன் பிரச்னை, முழுஉலக நிதிச் சந்தையின் பிரச்னையாக மாறியது இப்படித்தான்.
ஆனால், இத்தனைப் பிரச்னைகளுக்கும் ஒரே காரணம் ‘Subprime நெருக்கடி’தான் என்றால் அது முழுஉண்மையல்ல. மயிலிறகேயானாலும் வண்டியின் தாங்கும் சக்திக்கு மேலாக ஏற்றிக் கொண்டேயிருந்தால் ஒரு சந்தர்ப்பத்தில் வண்டியின் அச்சு முறிந்து போகும் (பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் - குறள்). கடைசியாக ஏற்றப்பட்ட இறகுதான் அச்சை முறித்தது என்று சொல்ல முடியாது. அதுபோல Subprime நெருக்கடியைக் கடைசியாக வைக்கப் பட்ட இறகு என்று வேண்டுமானால் சொல்லலாம். அப்படியானால் இந்தப் பொருளாதாரப் பிரச்னையின் அடிப்படைக் காரணம் என்ன?
பொருளியலில் நோபல் பரிசு பெற்ற மாரிஸ் அலைஸ், "உலகப் பொருளாதாரம் எந்தக் கொள்கைகள், சட்டதிட்டதிட்டங்களின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருக்கிறதோ, அவை குறைபாடுடையவை. விரைவிலேயே அவை சரிசெய்யப்படவில்லை என்றால், உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு அவையே காரணமாகி விடும்" என எச்சரிக்கைச் செய்திருக்கிறார். "எந்த ஆதாரமும் இல்லாமல் இன்றைய மத்திய வங்கிகள் அச்சடிக்கும் பணத்திற்கும் திருட்டுத்தனமாக அச்சடிக்கப்படும் கள்ள நோட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதைச் சொல்வதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை" என்றும் சொன்னவர் மாரிஸ் அலைஸ்.
இந்தப் பொருளியல் நிபுணரின் கூற்றுப்படி, உலகப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த வேண்டுமென்றால், இன்றைய நடைமுறைப் பொருளியலின் அடிப்படையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட்டு, சீர்திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், உலகப் பொருளாதாரத்தின் இயங்குதளமாக இருப்பது இஸ்லாமியப் பொருளியலாக இருக்கும்.
- தொடரும், இன்ஷா அல்லாஹ் |
Saturday, June 20, 2009
பொய்த்துப்போன முதலாளித்துவம்! (பகுதி-1)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment