சமீப காலமாக, 'பணவீக்கம்’, ‘பொருளாதாரத் தேக்கம்’, ‘பொருளாதார வீழ்ச்சி’ போன்ற சொற்கள் நம் காதுகளில் தினமும் விழும் சொற்களாகி விட்டன. தனிமனிதனிலிருந்து பெரும் அரசுகள் வரை பொருளாதார வீழ்ச்சியால் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. கீழே விழாமல் காலூன்றி நிற்க இடம் கிடைக்குமா என்ற தவிப்பில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வருட ஆரம்பத்தில்கூட செழிப்பான தோற்றம் கொண்டிருந்தது பொருளாதாரம். பங்குகள் விலை ஏறிக்கொண்டே இருந்தன. அதைக் காட்டிலும் அதிகமாக அசையாச்சொத்துகளின் மதிப்புகளும் ஏறிக் கொண்டிருந்தன. சாதாரண வேலை செய்பவர்களுக்குக்கூட அதிக சம்பளம். எங்கும் செழிப்பு, சந்தோஷம். வர்ணஜாலம் காட்டிய நீர்க்குமிழி ஒரே நொடியில் உடைந்தது போல் இன்று உலகம் பொருளாதார நெருக்கடியால் திணறிக் கொண்டிருக்கிறது. பண வீக்கம் இரண்டு இலக்க எண்ணாகி பயமுறுத்துகிறது! திடீரென்று பொருளாதாரம் வீழ்ச்சியடையக் காரணம் என்ன? செழிப்பு, வளர்ச்சி என்று நம் கண்களுக்குத் தெரிந்தது ஒரு மாயத்தோற்றம். இதைப் எளிமையாகப் புரிந்து கொள்ள வலைதளத்தில் சிக்கிய ஒரு குட்டிக் கதை. ஒரு தீவு. அதில் புழக்கத்தில் இருந்தது இரண்டு ‘ஒரு ரூபாய்’ நாணயங்கள் மட்டுமே. அதில் குடியிருப்போர் 3 பேர் - முருகன், அனில், மூர்த்தி. முருகன், அனில் இருவரும் ஆளுக்கு ஒரு ரூபாய் வைத்திருந்தனர். ஆனால் மூர்த்தியிடம் பணம் இல்லை, ஒரு தென்னங்கன்று வளர்த்தான். முருகன் அதை ஒரு பணம் காய்ச்சி மரம் என்று நினைத்து மூர்த்திக்கு ஒரு ரூபாய் கொடுத்து அதை வாங்கினான். இப்போது தீவின் மதிப்பு 3 ரூபாய். அதாவது மூரத்தி, அனில் இருவரிடமும் ஆளுக்கு ஒரு ரூபாயும் முருகனிடம் இருந்த மரத்தின் மதிப்பு ஒரு ரூபாயும் ஆகும். இதைக்கண்ட அனில் பணங்காய்ச்சி மரம் பிற்காலத்தில் உதவும் என்று மூர்த்தியிடம் ஒரு ரூபாய் கடன் வாங்கி தன் ஒரு ரூபாயையும் சேர்த்து இரண்டு ரூபாய்க்கு மரத்தை வாங்கினான். இப்போது தீவின் மதிப்பு நான்கு ரூபாய். அதாவது மரம் 2 ரூபாய், முருகனிடம் 2 ரூபாய். மரத்தின் விலை ஏறிக்கொண்டே போவதைக் கண்ட மூர்த்தி, அதை விற்றதற்காக வருந்தி முருகனிடம் இருந்த 2 ரூபாயைக் கடனாக வாங்கி அனிலிடம் அவன் (அனில்) ஏற்கனவே பட்டிருந்த ஒரு ரூபாய் கடனையும் தள்ளுபடி செய்து மீண்டும் மரத்தை வாங்கினான். இப்போது மரத்தின் மதிப்பு 3 ரூபாய், அனிலிடம் 2 ரூபாய். தீவின் மதிப்பு 5 ரூபாய். அட மரத்தின் விலை கூடிக் கொண்டே போகிறதே என்று முருகன் அனிலிடம் 2 ரூபாய் கடன் வாங்கி, மூர்த்தியின் 2 ரூபாய் கடனை தள்ளுபடி செய்து 4 ரூபாய்க்கு மரத்தை கிரயம் செய்தான். இப்போது மூர்த்தியிடம் 2 ரூபாய். தீவின் மதிப்பு 4+2=6 ரூபாய். திடீரென்று அனிலுக்கு ஒரு கவலை. மரம் நினைத்தபடி பலன் தராவிட்டால் முருகன் தன் 2 ரூபாய் கடனை எப்படித் திருப்பித் தருவான்? மூர்த்திக்கும் அதே கவலை! அதனால் கையில் பணமிருந்தும் அவன் மரத்தை விலை பேச முன்வரவில்லை. என்னதான் சொன்னாலும் காய்க்காத மரத்தின் மதிப்பு ஒரு ரூபாய்தான் என்பதை புரிந்து கொண்டான் அவன். இப்போது மரத்தை வாங்க ஆளில்லை. மூர்த்தியிடம் 2 ரூபாய் இருக்கிறது. முருகனிடன் 4 ரூபாய் மதிப்புள்ள மரம் ஒரு ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. எனவே அவன் அனிலுக்குக் கொடுக்க வேண்டிய 2 ரூபாய் கடனில் ஒரு ரூபாய் மட்டுமே திருப்பித்தர முடியும். முருகன் திவாலாகிப் போனான். முருகன் பட்ட கடனை அனில் திரும்பாதக் கடனாகத் தள்ளுபடி செய்தான். 6 ரூபாயாக இருந்த தீவின் மதிப்பு இப்போது மீண்டும் 3 ரூபாய். இழந்த 3 ரூபாய் எங்கே போயிற்று? இக்கதையின் நீதி: இப்படித்தான் உலகப் பொருளாதாரம் இன்று வீழ்ந்தது. வட்டி அடிப்படையில் கடன் சார்ந்த பொருளாதாரத்தில் என்றும் பொருளாதார உயர்வு இருக்காது. வளர்ச்சிபோல் காட்சியளித்து, நாளடைவில் நசிந்து விடும். "யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழ மாட்டார்கள். இதற்குக் காரணம் அவர்கள், 'நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால் மீண்டும்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்" (2:275). அமெரிக்க முதலாளித்துவத்துவத்தின் சீர்கேட்டால் இன்று உலகமே பொருளாதார நெருக்கடியில் உள்ளது. பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். இது தொழிலகங்களையும் பாதித்து அதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலையிழப்பார்கள். இது ஒரு சங்கிலித் தொடர்போல் எல்லாத் தரப்பினரையும் பாதிக்கும். முதலாளித்துவத்துவத்தின் நிலை இப்படி என்றால், ரஷ்யா, சீனா போன்ற சமவுடமை நாடுகள் நிலை என்ன? அவை தங்கள் மத்திய திட்டமிடல் பொருளாதாரத்தைக் கைவிட்டு முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு மாறும் செயற்பாட்டில் இறங்கியிருக்கின்றன. காரணம் சமவுடைமையிலும் வெற்றி இல்லை. சரி, இப்படி மனிதனால் ஏற்படுத்தப் பட்ட பொருளாதாரக் கொள்கைகள் வீழ்ச்சியடையும்போது படைத்தவனின் வழிகாட்டல் என்ன என்று பார்ப்போம்! எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம், முதலீடு செய்யலாம் என்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. வழிபாடு, வாழ்வியல், அரசியல், சமூகவியலில் மட்டுமல்லாமல் பொருளாதாரத்திலும் சட்ட-திட்டங்களை வகுத்துள்ளான் வல்ல இறைவன். இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை ஒரு நாடு பின்பற்றினால் நிச்சயம் தனிமனித வறுமையை ஒழிக்க முடியும். மைக்கல் ஹார்ட் என்பவர் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார், "... சிலர் நினைப்பதுபோல் நபி (ஸல்) அவர்களுடைய சாதனைகள் தற்காலிகமானவை அல்ல. திருக்குர் ஆனின் நிரந்தரமான நெறிகளின் அடிப்படையில் அமைந்தவை. மனித சரித்திரத்தில் அவர் ஒரு பெரும்புரட்சியை ஏற்படுத்தினார் - பொருளாதாரம் மற்றும் அரசியலில் கூட!’ - Michael Hart (THE 100, pages 3-10). நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்குச் சென்ற சில காலத்திலேயே மக்களின் நிதி நிலைமையில் முன்னேற்றம்! உமர் (ரலி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த காலகட்டத்தில் இஸ்லாமியப் பொருளாதார கொள்கைகள் உச்சகட்டத்தை அடைந்தது என்றும் மைக்கல் ஹார்ட் குறிப்பிடுகிறார் - Michael Hart (THE 100, pages 261-265). இஸ்லாமியப் பொருளாதாரம் ஸகாத் என்ற சொல்லின் நேரடிப் பொருள் ‘வளர்ச்சி’ மற்றும் ‘தூய்மை’ என்பதாகும். ஸகாத் வழங்குவது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்று. அதனால் இது இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு (நிஸாபுக்கு) மேல் தங்கம், வெள்ளி, ரொக்கப்பணம், அசையும் அல்லது அசையாச்சொத்து வைத்திருக்கும் முஸ்லிமுக்குக் கட்டாயக் கடமையாகிறது. இவற்றின் மொத்த மதிப்பில் இரண்டரை சதவீதம் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்பதும் நபிபொழிகளின் மூலம் தெரிகின்றன. இப்படி வழங்கப்படும் ஸகாத், பொது நிதியில் (பைத்துல் மால்) சேர்க்கப்பட்டு, எட்டு வகையினருக்குப் பங்கிடப் படுகிறது. இதன் மூலம் செல்வம் சிலரிடம் மட்டும் தேங்கிக் கிடக்காமல், ஏழைகளுக்கும் பங்கிடப்படுவதால் வறுமை ஒழிப்பில் ஸகாத் ஒரு பெரும்பங்கு வகிக்கிறது. இதனால் ஸகாத் கொடுப்பவருக்கு என்ன லாபம் என்றால், அவருடைய பொருள் தூய்மையடைவதுடன், இம்மையிலும் மறுமையிலும் நன்மை வளர்ச்சியும் அடைகிறது. கனிமத் என்பது போரில் கிடைக்கும் செல்வம். இதில் ஐந்தில் ஒரு பங்கு பொது நிதியில் சேர்க்கப்படுகிறது. ஜிஸ்யா என்பது இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிம் அல்லாதவர்கள் செலுத்த வேண்டிய வரி. பெண்கள், வாலிப வயதை எட்டாத ஆண்பிள்ளைகள், முதியோர் ஆகியோரின் மீது ஜிஸ்யா கடமையல்ல. முஸ்லிம்களுக்கு ராணுவப்பணி கட்டாயமானதாக இருந்தது. ஆனால் முஸ்லிமல்லாதவர்களுக்கு ராணுவப்பணி கட்டாயமானதல்ல. அவர்கள் செலுத்தும் வரியும் முஸ்லிம்கள் செலுத்த வேண்டிய ஸகாத்தை விட மிகக் குறைந்த அளவே நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் இஸ்லாமிய அரசின் முழுப்பாதுகாப்பையும் பெற்றவர்களாக இருப்பார்கள். கரஜ் என்பது இஸ்லாமிய நாட்டினால் கைப்பற்றப்பட்ட நாடுகள் செலுத்த வேண்டிய வருடாந்திர வரி (கப்பம்). மேற்கண்ட விதத்தில் கிடைக்கும் வருமானம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்படும். அதன் பெயர் ‘பைத்துல் மால்’ என்பதாகும். நபி (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின் ஆண்ட நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் ஆட்சிகளில் பைத்துல் மால் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகித்தது. இந்தப் பொதுநிதியிலிருக்கும் செல்வம் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் தர்மஸ்தாபனங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன. இதனால் நாளடைவில் ஏழைகள் மிகுந்திருந்த அரபுத் தீபகற்பத்தில் ஏழைகளே இல்லாத அளவிற்குச் செழிப்பு ஏற்பட்டது. இது மந்திரமோ மாயமோ அல்ல. ஈமானும் இறையச்சமும் கொண்ட செல்வந்தர்கள், ஸகாத்தைச் சரியாகக் கணக்கிட்டு உரிய காலத்தில் பைத்துல் மாலில் சேர்ப்பித்ததுடன், இறையருளை நாடி தாராளமாக அதிகப்படியான விருப்ப தர்மமான ஸதகாவையும் அளித்தார்கள். அது மட்டுமல்லாமல் பைத்துல் மாலின் பொறுப்பாளர்கள் இறையச்சத்துடன் அச்செல்வத்தை அமானிதம் என உணர்ந்து கவனமாகக் கையாண்டார்கள். இதனால் இஸ்லாமிய நாடுகளின் செழிப்பும் வாழ்க்கைத் தரமும் வியக்கத்தக்க அளவில் உயர்ந்தன. அது மட்டுமல்ல இந்தப் பொதுநிதி, பள்ளிவாயில்கள், கல்விச்சாலைகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள் போன்றவற்றை நடத்தவும் உதவியாக இருந்தது. இப்படிப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளால் இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளி குறைந்தது. செல்வம் ஒரே இடத்தில் தேங்கிக் கிடப்பது தவிர்க்கப்பட்டது. இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடைப்பட்டது. இவ்விருகொள்கைகளிலும் உள்ள குறைகளை விடுத்து நன்மைகளை மாத்திரம் நடைமுறைச் சாத்தியமாக்கியது. நேற்று மட்டும் அல்ல இன்றும் என்றும் வெற்றி தரக் கூடியது இஸ்லாமியப் பொருளாதாரமே! இது ஏட்டில் படிப்பதைக் காட்டிலும் செயல்முறைப் படுத்தும்போது அதன் மூலம் எல்லாத்தரப்பினரும் பயனடையலாம். ஆக்கம்: Mrs.ஷம்ஷாத் |
Saturday, June 20, 2009
உலகப் பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment