அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, June 20, 2009

பொய்த்துப்போன முதலாளித்துவம்! (பகுதி-2)


அச்செடுமின்னஞ்சல்

முதலாளித்துவம் – அடிப்படையிலேயே கோளாறு!

"உலகப் பொருளாதாரம் எந்தக் கொள்கைகள், சட்டதிட்டதிட்டங்களின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருக்கிறதோ, அவை குறைபாடுடையவை. விரைவிலேயே அவை சரிசெய்யப்படவில்லை என்றால், உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு அவையே காரணமாகி விடும்" என்றார் பொருளியல் நிபுணர் மாரிஸ் அலைஸ். ஆனால் இன்றைய உலகப் பொருளாதாரத்தின் பெரும்பகுதி முதலாளித்துவக் கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. மாற்றுக் கொள்கையான பொதுவுடைமைக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தியிருக்கும் நாடுகளில்கூட முதலாளித்துவத்தின் தாக்கம் மிகுந்தே காணப்படுகிறது. கம்யூனிஸ சீனா இன்று முதலாளித்துவ எஜமானர்களின் அபிமானத்திற்குரிய பிரதேசமாகவே ஆகிவிட்டது. அவ்வளவு பிரபலமான முதலாளித்துவத்தில் அப்படி என்ன குறைபாடு?

"முதலாளித்துவம் என்பது தனிமனித உரிமைகளை முழுமையாக அங்கீகரிக்கும் ஒரு சமுதாய அமைப்பு" என்கிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள். "தனிமனித உரிமை என்பது சொத்துரிமையையும் உள்ளடக்கியது. முதலாளித்துவத்தில் எல்லா சொத்துக்களுமே தனி மனிதர்களின் உடைமையாக மட்டுமே இருக்கும். உற்பத்தி, வர்த்தகம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் அரசு பங்கேற்காது. இதுவே அரசியல் சுதந்திரம்" என மேலும் விளக்கமளிக்கிறார்கள் இவர்கள்.

முதலாளித்துவத்தை "லெஸ்-ஸெய்-ஃபேர் கொள்கை" (laissez faire system) என்றும் அழைக்கிறார்கள். இந்த பிரெஞ்சு வார்த்தையின் பொருள் "அப்படியே விட்டு விடு" என்பதாகும். வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாமல் அவற்றைச் சந்தையின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும் என்ற முதலாளித்துவத்தின் அடிப்படையையே இது பிரதிபலிக்கிறது.

வர்த்தகத்தை, சந்தையின் போக்கிலேயே விட்டுவிடுவது எப்படி என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். ஒரு பழ வியாபாரி ஒரு மாந்தோப்பிலிருந்து மாம்பழங்களை வாங்கி, தனது ஊர்ச் சந்தையில் ஒரு பழம் ரூ.2 என்ற விலையில் விற்கிறார். நன்றாக வியாபாரம் நடக்கிறது. சில மாதங்கள் ஆன பிறகு இன்னொரு வியாபாரி அதே தோப்புப் பழங்களை அதே சந்தையில் ரூ.1.80-க்கு விற்கத் தொடங்குகிறார். தனியாளாக ஒருவர் மட்டும் வியாபாரம் செய்து வந்து வந்த பழச்சந்தையில் இப்போது போட்டி வந்து விட்டது. முதலாமவரின் வாடிக்கையாளர்கள் இப்போது இரண்டாமவரிடம் வாங்கத் தொடங்கி விட்டார்கள். வேறு வழியின்றி முதலாமவரும் தனது விலையை ரூ.1.80-க்கு குறைத்தார்.

இந்நிலையில் மூன்றாவதாக ஒரு வியாபாரி வருகிறார். அவரும் அதே பழங்களை ரூ.1.50-க்கு விற்கத் தொடங்கி விட்டார். போட்டி இன்னும் கடுமையாகி விட்டது. முதல் இருவரும் தங்கள் விலையையும் ரூ 1.50-க்கு குறைத்தாலன்றி வியாபாரம் செய்ய முடியாது என்ற நிலையில் அவர்களும் விலையைக் குறைத்தனர்.

முதலாமவர் கொஞ்சம் மாற்றி யோசித்தார். இப்படியே போய்க் கொண்டிருந்தால் போட்ட முதலைக்கூட எடுக்க முடியாது. ஒரே தரத்திலுள்ள பழத்தை வைத்துப் போட்டி போட்டுக் கொண்டிருப்பதை விட்டு நாம் சற்று உயர்தர பழத்தை விற்கலாமே என்ற யோசனை அவருக்குத் தோன்றியது. சிறிது தூரத்திலுள்ள வேறொரு தோப்பிற்குச் சென்று விசாரித்தார். அங்கு விளையும் பழம் சந்தையில் இருக்கும் பழத்தைவிட உயர்தரமானது. ஆனால் கொள்முதல் விலை கிட்டத்தட்ட அதேதான். அவர் அந்த உயர்தர பழங்களை வாங்கி வந்து தனது கடையில் அறிமுகப் படுத்தினார். விலை ரூ. 1.50. அதே விலைக்கு உயர் தரமான பழம் கிடைக்கிறது என்பதால் வாடிக்கையாளர்கள் திரும்பவும் அவரது கடைக்கு வரத் தொடங்கினார்கள். தான் ஏற்கனவே விற்றுக் கொண்டிருந்த பழத்தின் விலையையும் அவர் ரூ. 1.40 எனக் குறைத்தார்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்த நடவடிக்கையில் நிகர பலன் அடைந்தது வாடிக்கையாளர்கள்தான். சந்தையில் அவர்கள் வாங்கிக் கொண்டிருந்த பழத்தின் விலை ரூ 2.00-லிருந்து 1.40-க்கு குறைந்ததோடல்லாமல், ரூ.1.50-க்கு உயர்தர பழவகை ஒன்றும் கிடைக்கிறது. இவையெல்லாம் வெளியார் யாருடைய தலையீடும் இல்லாமல் சந்தையில் போட்டி ஏற்பட்டதன் விளைவு. முதலாளித்துவத்தால் கிடைக்கும் மிகச் சில பலன்களுள் இதுவும் ஒன்று!

ஆனால், முதலாளித்துவத்தின் இன்னொரு முகம் இதிலிருந்து வேறுபட்டது. பொதுநலம் கடுகளவுமின்றி, முழுக்க முழுக்கச் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பணக்கார முதலைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்பட்டது அது. இன்னொரு உதாரணம் பார்ப்போம்:

அமெரிக்காவில் கோடி கோடியாகச் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு ஒருவர் இந்தியா திரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்தியாவில் அவர் முதலீடு செய்வதற்கு ஏற்ற நூற்றுக் கணக்கான வாய்ப்புகள் இருப்பது அவருக்கு தெரிகிறது. அவற்றுள் தனக்குச் சாத்தியமான 10 துறைகளை அவர் தேர்ந்தெடுக்கிறார். அவற்றை மேலும் ஆராய்ந்ததில் மற்ற அனைத்தையும்விட இரண்டே இரண்டு துறைகளுக்கு மட்டுமே மிக வளமான எதிர்காலம் இருப்பது அவருக்குத் தெரிகிறது. அவற்றுள் ஒன்று மருந்துகள் தயாரிப்பு. மற்றொன்று மதுபான உற்பத்தி. இந்த இரண்டில் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இது போன்ற சூழ்நிலைகளில் அவர் மதுபானத் தொழிலை தேர்ந்தெடுக்கவே முதலாளித்துவம் வழி காட்டும். ஏன் அப்படி? மதுபானத் தொழிலுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். இதற்கு அதிக விளம்பரங்கள் தேவையில்லை. விற்பனைப் பிரதிநிதிகளும் அதிகம் பேர் தேவையில்லை. போட்டி நிறுவனங்கள் குறைவு. எனவே மருந்துத் தயாரிப்பைவிட இதில் செலவு குறைவு, லாபம் அதிகம். இதுதான் விஷயம். எதை உற்பத்தி செய்வது என்று முடிவெடுக்க வேண்டிய சூழலில், மற்றெல்லாவற்றையும்விட லாப நோக்கமே பிரதானமாக நிற்கும். மதுபானம் உற்பத்தி செய்வதால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பு, அதே சமயத்தில் மருந்துகள் உற்பத்தி செய்வதால் சமுதாயத்திற்குக் கிடைக்கும் பலன் என்பதெல்லாம் முக்கியமே அல்ல. முதலாளித்துவம் ஊக்குவிக்கும் "தலையீடற்ற பொருளாதாரச் சுதந்திரம்" என்பது இதுதான்!

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பணம் படைத்த முதலாளிகளும் மெகா கார்ப்பரேட் நிறுவனங்களுமே 'எதை உற்பத்தி செய்வது?, எதை யாருக்கு வினியோகம் செய்வது?' போன்றவற்றையும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளையும் தீர்மானிக்கிறார்கள். இந்த முடிவெடுத்தல்களில் அவர்களைச் செலுத்துவது ஒன்றேதான்: லாபம், அதிக லாபம், மேலும் மேலும் லாபம்.

நாம் இதுவரை பார்த்த 'தனியார் பொருளாதாரச் சுதந்திரம்' முதலாளித்துவத்தின் உயிர் மூச்சு என்றால், அதன் உடலெங்கும் ஓடும் இரத்தம் என வட்டியைச் சொல்லலாம். பொருளாதார இயந்திரம் சிக்கலில்லாமல் இயங்க உதவும் மசகு எண்ணெய்தான் வட்டி என முதலாளித்துவ ஆதரவாளர்கள் பெருமைப் பட்டுக் கொள்வார்கள். ஆனால் உண்மையில், பணக்காரர்கள் கொழுத்த பணக்காரர்களாகவும் ஏழைகள் பரம ஏழைகளாகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மென்மேலும் அதிகரிக்க வகை செய்யும் கருவியே வட்டி.

நாம் முன்பு பார்த்த அமெரிக்க ரிட்டர்ன் கோடீஸ்வரரை மீண்டும் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் சில காரணங்களினால் அவருக்குத் தயக்கம் உண்டானது. அதே சமயத்தில் மருந்துத் தொழிலில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவர் தனியாகத் தொழில் தொடங்க முயல்வதாகவும் அவரிடம் அதற்குப் போதுமான பண வசதி இல்லை என்றும் ஒரு தகவல் அமெரிக்காவிலிருந்து திரும்பிய கோடீஸ்வரருக்குக் கிடைக்கிறது. கோடீஸ்வரர் அவரிடம் போய், தனது பணம் 100 கோடியைக் கடனாகக் கொடுப்பதாகவும் அதற்கு அவர் 10% மட்டும் வட்டியாகக் கொடுத்தால் போதும் என்றார். அதற்கு அந்தத் தொழில் முனைவரும் சம்ம்மதிக்கவே, பணம் கை மாறுகிறது. விரைவிலேயே மருந்துத் தயாரிப்பும் தொடங்குகிறது.

தம்மால் சுமக்க முடியாத ஒரு பெரும் சுமை தம் தலைமேல் ஏற்றப் பட்டதை அந்தத் தொழில் முனைவர் மிகத் தாமதமாகவே புரிந்துக் கொண்டார். மருந்து வியாபாரம் எப்படி நடந்தாலும் கடனுக்கான வட்டி 10 கோடியை வருடா வருடம் கட்டாயம் கட்ட வேண்டி இருந்தது. மருந்துகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்ற அவரது திட்டத்தை ஓரம்கட்டிவிட்டு மருந்துகளின் விலையை உயர்த்தினார். அடுத்ததாக, செலவுகளை குறைக்க வேண்டி நிறையத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். அதற்கும் அடுத்து, விலை மலிவான தரம் குறைந்த மூலப் பொருள்களை உபயோகிக்கத் தொடங்கினார். அவர் செய்த ஒவ்வொரு மாற்றத்திற்குப் பிறகும் மருந்து வியாபாரம் மேலும் சரிந்துக் கொண்டே சென்றது. வட்டி கட்ட முடியாத நிலையில் அவர் தனது சொத்துக்களையும் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் நாட்டில் கடன் வாங்கி நொடித்து ஏழையாகிப் போனவர்களின் எண்ணிக்கையில் ஒன்று உயர்ந்தது.

முதலாளித்துவத்தின் இரத்த ஓட்டமான வட்டியின் யதார்த்த நிலை இது! வட்டியின் கொடுமைகளைப் பற்றி நாம் நிறையப் பேச வேண்டியுள்ளது. இப்போதைக்கு இதோடு நிறுத்திக் கொள்வோம்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்

No comments: