அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 16, 2009

சபரி மலை அய்யப்பன் மகரவிளக்கு மோசடி


பிளிட்ஸ் ஏடு அம்பலப்படுத்திய மகரவிளக்கு மோசடி;
சபரிமலையில் பக்தர்கள் தரிசிக்கும் மகர ஜோதிக்கு எந்த தெய்வீகமும் கிடையாது; அது ஒரு புரட்டு என்பது ஆதாரத்துடன் அம்பலமாகிருக்கிறது.
தானாக ஜோதி தெரிகிறது என்று நம்பி, அய்யப்பன் சக்தியோடு இந்த ஜோதியையும் முடிச்சுப் போட்டு பாமர மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.
அந்த ஜோதி எப்படித் தோன்றுகிறது? யார் எங்கே எப்படி உருவாக்குகிறார்கள்? என்பதை பம்பாயில் இருந்து வெளிவரும் பிளிட்ஸ் வார ஏடு (16-1-82) அம்பலப்படுத்தி விட்டது.
அதன் விவரம்:
மூடநம்பிக்கையுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் கடின உழைப்பால் சம்பாதித்த பணம் - கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் சுரண்டப்படுகிறது.
இந்தப் பகற்கொள்ளை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிவாளிகளின் ஒத்துழைப்பாலும், அரசியல்வாதிகளின் ஆலோசனைப்படியும், அரசாங்கத்தின் ஆதரவோடும் வெற்றிகரமாக நடந்து வருகிறது.
மகர ஜோதி- கேரளாவில் சபரிமலை கோயிலின் எதிர்ப்புறமுள்ள 2000 அடி உயரமுள்ள மலையில் சமதரையில் குளிர்காலமான டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தோன்றுமாம்.
இந்தக் கேலிக் கூத்தை வெட்ட வெளிச்சமாக்கும் வகையில் பகுத்தறிவாளர்கள் - இதன் பின்னணி என்ன? என்பதை பல ஆண்டுகளாகவே நிரூபித்து வருகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு இடுக்கி நீரியல் மின் திட்டத்தில் பணியாற்றிய இளம் இஞ்சினீயர் இந்தக் கட்டுக்கதையின் உண்மையை எடுத்துரைத்தார். ஆனால் அது எள்ளி நகையாடப்பட்டு பத்திரிகைகளால் புறக்கணிக்கப்பட்டு விட்டது. இந்தக் கேலிக்கூத்தின் சரித்திரத்தை வெட்ட வெளிச்சமாக்க முனைந்த பலருடைய முயற்சிகளும் இவ்வாறே வீணாயின.
கடந்த வருடம் மட்டும் 30 இலட்சம் பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றார்களாம். இதில் 10 லட்சம் பேர் இந்த மகரஜோதிக் கேலிக்கூத்தைக் கண்டு களித்தார்களாம். இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு 4 கிலா தங்கமும், 30 கிலோ வெள்ளியும், ரூபாய் இரண்டரை கோடியும் வருமானமாய் கிடைத்துள்ளதாம். கடந்த வருடம் இந்த மகரஜோதி கேலிக்கூத்து ஒரு தடவை மட்டுமல்ல ; பல தடவை தோன்றியதாம். இதை விட வெட்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அகில இந்திய வானொலியும் இதனை விமரிசையாக விளம்பரம் செய்ததாம்.
இந்த அதிசயக் கேலிக்கூத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு இல்லத்தை அடைந்த பக்தர்களில் சிலர் கொச்சியிலிருந்து வெளி வரும் இந்தியன் எக்ஸ்பிரசின் 18.1.1981 தேசிய பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்தார்கள். அதில் சொல்லப்பட்டிருப்பதாவது:
உண்டாக்குவது யார்?
மகரவிளக்கு என்று சொல்லப்படும் வெளிச்சத்தை கடந்த 10 வருடங்களாக உண்டாக்கிய, தோற்றுவிக்கும் மனிதனைப் பகுத்தறிவாளர்கள் கண்டு பிடித்துவிட்டனர். அவன் பெயர் கோபி. இவர் கேரள மின்துறையில் பணியாற்றி வருகிறார்.
அவர் பொன்னம்பலமேடு என்ற இடத்தில் சூடத்தை பானையில் நிரப்பி அதைக் கொளுத்தி கொழுந்து விட்டு எரியச் செய்து மகரஜோதியை உற்பத்தி செய்கிறார் என்பதையும் கண்டு பிடித்துள்ளனர்.
பகுத்தறிவாளர்கள் கண்டுபிடித்தனர்
இந்தப் புரட்டை - 2000-இல் கேரளப் பகுத்தறிவாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அவர்கள் எவரும் அணுகமுடியாத அந்த பொன்னம்பலமேடு என்ற இடத்தை மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து பல்வேறு இடர்ப்பாடுகளை அனுபவித்த பிறகே அடைந்தார்கள்.
அங்கே சென்றபோது வியப்பு காத்திருந்தது. 500 பேர் அங்கே குழுமியிருந்தார்கள். அரசாங்கத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஜீப்களும், தேவஸ்தானத்தைச் சார்ந்தவர்களும், அங்கே இருந்தார்கள். இதிலிருந்து அரசாங்கமே இந்த ஏமாற்று மோசடியின் பின்னணியில் இருந்தது என்பதை அறியலாம்.
அவர்களின் ஆலோசனையின்படி - கோபி என்கின்ற கோபிநாதன் (கேரள மாநில மின்துறையின் டிரைவர்) பானையில் உள்ள சூடத்தைக் கொளுத்தி பக்தர்கள் கூடி ஜோதியை தரிசிக்கக் காத்திருக்கும் சபரிமலை இருக்கும் பக்கத்தில் மூன்று முறை தூக்கிக் காட்டுவாராம். (கடந்த 10 ஆண்டுகளாக இந்த டிரைவர்தான் இந்த மோசடியை சாமர்த்தியமாக செய்து வருகிறார். அனுபவம் காரணமாக இந்தத் தொழிலுக்கு தொடர்ந்து அவரே நியமிக்கப்பட்டு வருகிறார்).
1973 ஆம் வருடம் மற்றொரு பிரிவினர் இந்தக் கேலிக்கூத்தை அம்பலப்படுத்திய பொழுது அவர்கள் தேவஸ்தான அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் சமூக நல விரோதி என்று கைது செய்யப்பட்டார்கள்.
தகுந்த சான்று இல்லாமையினால் உடன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
1979 இல் நடந்தது
1979 ஆம் வருடம் இந்த மகரஜோதி தோன்றவில்லை. மகரஜோதிக் கடவுள் வேறு எங்காவது முக்கியமான வேலையில் ஈடுபட்டது இதற்குக் காரணமல்ல; கோபி என்ற கோபிநாத நாயர் பொன்னம்பல மேட்டிற்குச் செல்லாததே காரணமாகும்.
இந்த மகரஜோதி கேலிக் கூத்து 40 வருடங்களுக்கு முன்பே தொடங்கியதாகும். பம்பா திட்டத்திற்கு கேரள மின்துறை அடர்ந்த காடுகளை கையகப்படுத்தி அழித்தது. அப்போது காடர், மலையர் என்ற மலைவாசிகள் அந்தக் காட்டை ஆக்கிரமித்திருந்தனர். இந்த மலைவாசிகள் தங்களைக் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், மாமிசத்தை வேக வைக்கவும் நெருப்பை உண்டாக்கினார்கள்.
ஆனால் இந்த வெளிச்சத்தை சபரி மலையில் உள்ள மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டும் கூட்டம் இதனைத் தங்களுக்குச் சாதகமாக பணம் திரட்டும் வழியாகப் பயன்படுத்திக் கொண்டது.
முதல்வருக்கு மனு
கேரளப் பகுத்தறிவாளர்கள் கழகம் கேரள இடது சாரி அணி முதல்வர் இ.கே. நயினாரிடம் ஒரு மகஜரை அளித்தார்கள். அதன் பிரதியை எல்லா எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கும் அனுப்பினர். இந்த மோசடியை அம்பலப்படுத்த விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டுமென்ற கோரிக்கை விட்டார்கள்.
ஆனால் அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. கோரிக்கை மனு தூக்கி எறியப்பட்டு விட்டது. எளிதில் ஏமாறும் அப்பாவி மக்கள் சபரிமலைக்கு வந்து ஜோதி தரிசித்து ஏமாறும் ஏமாற்றுவித்தை நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!
நன்றி: 'பிளிட்ஸ்' 16.1.1982
நன்றி; விடுதலை

No comments: