அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, July 28, 2011

2ஜி : ரிசர்வ் வங்கி ஆளுநரின் முடிவைத்தான் செயல்படுத்தினேன்: பெகுரா



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிதித்துறை முன்னாள் செயலாளரும் ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநருமான சுப்பாராவின் முடிவுகளின்படியே செயல்பட்டேன் தொலைத் தொடர்புத்துறையின் முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா கூறியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நடைமுறை கடந்த ஒரு வாரமாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஆ.ராசா சார்பில் இரண்டு நாள்களாக வாதாடப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதன்கிழமை காலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சித்தார்த்த பெகுரா சார்பாக வழக்கறிஞர் அமன் லேக்கி வாதாடினார். 2ஜி அலைகற்றை ஓதுக்கீடு மத்திய அரசின் கொள்கைப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டதாகக் கூறிய அவர், அதற்கான ஆதாரங்களையும் சுட்டிக் காட்டினார்.

தாம் தொலை தொடர்பு துறையின் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அத் துறையின் செயலாளராக இருந்த மாத்தூர் மற்றும் அப்போதைய நிதி அமைச்சகத்தின் செயலாளரும் ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநருமான சுப்பா ராவ் ஆகியோர், கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி எடுத்த முடிவுகளைத்தான் சித்தார்த்த பெகுரா நடைமுறைப்படுத்தி உள்ளார். இந்த கூட்டத்தில் அப்போதைய நிதி அமைச்சரான ப.சிதம்பரம் முன்னிலையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன என்று அமன் லேக்கி வாதிட்டார்.

அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான் அரசு அதிகாரிகளின் கடமையாகும். மத்திய அரசின் கொள்கைகள், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படும் முடிவுகளை மத்திய அரசின் அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் மத்திய அரசின் செயலாளர், மத்திய அரசின் கொள்கையை நடைமுறைபடுத்துவது எவ்வாறு தவறாகும்? இந்த விவகாரத்தில் ஏன் சித்தார்த்த பெகுரா பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளார் என்று லேக்கி கேள்வி எழுப்பினார். தனது வாதத்தை தொடர்ந்து வியாழக்கிழமை நடத்த உள்ளார்.

No comments: