கடந்த 16ம் தேதி கேரள தலைநகரம் திருவனந்தபுரத்திலுள்ள கடற்கரை கிராமமான சின்னதுறை மற்றும் பீமா பள்ளி பகுதிகளில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க முயன்ற காவல்துறை, ஒருதலைபட்சமாக ஒரு பிரிவினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள, மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
காவல்துறையின் நிதானமற்ற இச்செயலில் காவல்துறை உயரதிகாரிகளின் சதி இருப்பதாக முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பல்வேறு சமுதாய அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. காவல்துறையின் சதியே இவ்விஷயத்தில் உள்ளதால் உடனடியாக, 6 பேர் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அரசுக்குக் கோரிக்கையும் விடுத்து வருகின்றன.
துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவ இடத்தில் 4 பேரும் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ கல்லூரியில் வைத்து மறுநாள் இருவரும் மரணமடைந்திருந்தனர். இதில் ஃப்ரோஸ் என்ற 15 வயது சிறுவனும் உண்டு. துப்பாக்கி சூடு நடந்த நேரத்தில் காவல்துறை மனிதாபிமானமற்ற வகையில் கொடூரமாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், தற்போது இந்தச் சிறுவனைச் சுட்டு வீழ்த்திய காவல்துறையினர், உயிருக்குப் போராடும் நிலையில் உரிய மருத்துவ சிகிட்சைக்காக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் அனுமதிப்பதை விடுத்து, அச்சிறுவனை மிருகங்களை விடக் கேவலமாக உயிருக்குப் போராடும் நிலையிலேயே கடற்கரை சுடுமணலில் இரத்தம் சொட்டச் சொட்ட இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் சம்பவக்காட்சிகளை மொபைலில் படம் பிடித்த பொதுமக்களில் சிலர், இப்படக்காட்சிகளைப் பலருக்கும் அனுப்பி உள்ளனர். சுடப்பட்ட சிறுவனின் இரு கைகளையும் இரு காவல்துறையினர் பிடித்துக் கொண்டு தர தரவென மணலில் இரத்தம் சொட்டச் சொட்ட இழுத்துச் செல்லும் காட்சி, கொடூரமாக உள்ளது.
ஆரம்பத்தில், இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்டக் கலவரத்தில் தான் ஒரு பிரிவைச் சேர்ந்த 6 பேர் இறந்தனர் எனக் கூறி வந்தக் காவல்துறை, அனைவரின் உடலிலிருந்தும் எடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகளால் அவர்கள் கொல்லப்பட்டது காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டினால் தான் என்பது தெளிவிக்கப்பட்ட நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கின்றது.
சம்பத்தில் தொடர்புடைய காவல்துறையினரை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவுகளைக் கேரள அரசு வெளியிடும் என செய்திகள் கூறுகின்றன.
தற்போது வெளியாகியுள்ள இப்படக்காட்சிகள் கேரள அரசுக்கும் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
No comments:
Post a Comment