அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, May 27, 2009

இந்தியத்தேர்தல் முறையில் மாற்றாம் தேவை

ஜேர்மனியில் உள்ள தேர்தல் முறையை புரிந்து கொள்வது அப்படி ஒன்றும் கடினம் அன்று. ஜேர்மனியில் ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு வாக்குகள் உண்டு. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கோரப்படுகின்ற இரட்டை வாக்குமுறையோடு இதை ஒப்பிட்டுக் குழுப்பிக் கொள்ளக் கூடாது. அது வேறு. இது வேறு. இரண்டு வாக்குகளில் ஒன்று வேட்பாளருக்கும் மற்றது கட்சிக்கும் வழங்கப்படும்.



அதாவது, ஒருவர் ஒரு வாக்கை தான் விரும்பும் வேட்பாளர் ஒருவருக்கும், மற்ற வாக்கை தான் விரும்புகின்ற கட்சிக்கும் போடுவார். முதலாவது வாக்கைப் பெற்ற வேட்பாளர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், இரண்டாவது வாக்கைப் பெறும் கட்சி வேறொன்றாகவும் இருக்கலாம்.



உதாரணமாக தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் அதிமுக சார்பில் ஒரு வேட்பாளர் நிற்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் நல்லவராகவும், மக்கள் செல்வாக்குப் பெற்றவராகவும் இருக்கின்றார் என்றும் வைத்துக் கொள்வோம். அவருக்கு வாக்களிக்க விரும்புகின்ற ஒருவருக்கு சிலவேளைகளில் அதிமுக என்னும் கட்சியைப் பிடிக்காமல் இருக்கலாம்.



அப்பொழுது இந்த இரட்டை வாக்குமுறை மிகவும் பயனுள்ளதாக அமையும். முதலாவது வாக்கை நல்லவரான அதிமுக வேட்பாளருக்கும், இரண்டாவது வாக்கை திமுகவிற்கோ, வேறொரு கட்சிக்கோ போட்டு விட வேண்டியதுதான்.




முதலாவது வாக்கை வேட்பாளருக்குப் போடுவதன் மூலம் அந்த வேட்பாளர் வெற்றி பெறுகிறார். அந்த வேட்பாளர் சார்ந்துள்ள கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரு இடம் கிடைக்கின்றது. இந்த இரண்டாவது வாக்கால் என்ன பயன் என்ற கேள்வி உங்களுக்கு வரக் கூடும். இரண்டாவது வாக்குகள் எண்ணப்பட்டு விகிதாசர முறைப்படி இடங்கள் கட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதைச் சற்று புரியும்படியாக பார்ப்போம்.




ஒரு நாட்டில் நூறு தொகுதிகள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். ஜேர்மனியில் உள்ள தேர்தல் முறைப்படி அந்த நாட்டில் இருநூறு இடங்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். எத்தனை தொகுதிகள் இருக்கின்றதோ, அதே போன்று இரு மடங்கு இடங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும்.

(ஜேர்மனியில் 299 தொகுதிகளும் 598 பாராளுமன்ற இருக்கைகளும் உள்ளன)




இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக நாம் நூறு தொகுதிகள் என்ற கணக்கை எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு தொகுதிகளிலும் அதிகமான முதல் வாக்கைப் பெற்றவர்கள் வெற்றி பெற்று, அந்தத் தொகுதிகளின் சார்பில் பாராளுமன்றத்திற்கு செல்வார்கள்.



ஆனால், நூறு தொகுதிகள் இருந்தால் பாராளுமன்றத்தில் இரு மடங்காக இருநூறு இருக்கைகள் இருக்கும் என்று பார்த்தோம் அல்லவா? நூறு இருக்கைகளை நேரடியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ள, மிகுதி நூறு இடங்களும் கட்சிக்கு என்று வீழ்ந்த இரண்டாவது வாக்குகள் எண்ணப்பட்டு, விகிதாசார முறைப்படி பகிர்ந்து கொடுக்கப்படும்.




ஒரு கட்சி முதலாவது வாக்கு மூலம் நேரடியாகப் பெறுகின்ற இடங்களோடு, கட்சிக்கு என்று விழுந்த இரண்டாவது வாக்குகளின் அடிப்படையிலும் இடங்களைப் பெற்றுக் கொள்ளும். உதாரணமாக அறுபது இடங்களில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் வேட்பாளர்கள் மற்றக் கட்சியின் வேட்பாளர்களை விட அதிகமான முதலாவது வாக்குகளைப் பெறுகின்றார்கள்.



அதன்படி அந்தக் கட்சியின் அறுபது வேட்பாளர்கள் பாராளுமன்றம் செல்வார்கள். அத்தோடு இரண்டாவது வாக்குகளில் முப்பது வீதமான வாக்குகளை அந்தக் கட்சி பெறுகின்றது. அப்பொழுது விகிதாசரப்படி முப்பது இடங்கள் மேலதிகமாக அந்தக் கட்சிக்கு கிடைக்கும். இந்த முப்பது இடங்களுக்கான உறுப்பினர்களை கட்சியே தேர்வு செய்யும். இந்தக் கணக்கின்படி பாராளுமன்றத்தில் உள்ள இருநூறு இடங்களில் குறிப்பிட்ட கட்சி 90 இருக்கைகளை பெறும்.



அதே போன்று எந்த ஒரு தொகுதியிலும் நேரடியான வேட்பாளர்களை பெற முடியாது ஒரு கட்சிக்கு 25 வீதமான வாக்குகள் கிடைக்கின்றன என்றால், அந்தக் கட்சி இருநூறு பாராளுமன்ற இருக்கைகளில் இருபத்தைந்தை பெற்றுக் கொள்ளும். இந்த இருபத்தைந்து பேரும் கட்சியால் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றம் அனுப்பப்படுவார்கள்.


கட்சிக்கு என்று வழங்கப்படும் இரண்டாவது வாக்குகளை ஐந்து வீதத்திற்கும் குறைவாக பெறுகின்ற கட்சிகள் பாராளுமன்றத்தில் இடங்களைப் பெறமாட்டாது என்பது போன்ற சில விடயங்களும் இதில் இருக்கின்றன. இவைகளையும் பார்த்து அத்தனை ஆழமாக நாம் போக வேண்டியது இல்லை. இதுவரை கூறியவைகளை வைத்து ஜேர்மனியில் உள்ள தேர்தல் முறை உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.



இந்தத் தேர்தல் முறை இருப்பதால் ஜேர்மனியில் தேர்தலுக்கு முந்தயை கூட்டணிகள் கிடையாது. தேர்தல் முடிந்த பின்பு அதிக இடங்களைப் பெற்ற கட்சிக்கு பெரும்பான்மை போதவில்லையென்றால், ஒத்த கருத்துள்ள கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி ஆட்சியை அமைத்துக் கொள்ளும். இந்த முறையை இந்தியாவின் தேர்தல்களில் நடைமுறைப்படுத்துவதால் பல நன்மைகள் உண்டு.



இதற்காக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உள்ள இடங்களை அதிகரிக்கலாம். அல்லது தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில் நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் அதிகமான இடங்களைப் பெறுவது ஒன்றும் தவறு இல்லை.



ஜேர்மனிய தேர்தல் முறை மூலம் மக்களால் தாம் விரும்பிய வேட்பாளர்களையும் கட்சிகளையும் தேர்ந்தெடுக்க முடியும். ஜனாநயகமும் வலுப்பட்ட மாதிரி இருக்கும். முப்பது வீத வாக்குகளை பெற்ற கட்சி பத்து வீத வாக்குகளை பெற்ற கட்சியை விட குறைவான இடங்களைப் பெறுகின்ற கூத்துகள் பல முறை தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கின்றன.



இப்படியான நிகழ்வுகள் இந்தத் தேர்தல் முறையில் வரவே வராது. பெரிய கட்சிகள் ஒரு போதும் “படுதோல்வி” அடைய வேண்டிய அவசியமும் ஏற்படாது. 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக நான்கு இடங்களையே பெற்றது. 1996ஆம் ஆண்டுத் தேர்தலில் அதிமுக நான்கு இடங்களை பெற்றது. இத்தனைக்கும் இந்தக் கட்சிகள் ஏறக்குறைய முப்பது வீதமான வாக்காளர்களின் ஆதரவை பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



ஜேர்மனியைப் போன்ற ஒரு தேர்தல் முறை இருந்தால் இந்தக் கட்சிகள் இத்தகைய தோல்வியை பெற்றிருக்க மாட்டாது. இதை விட கட்சியின் முக்கிய தலைவர்கள் நேரடியாக ஒரு தொகுதியில் போட்டியிட்டு, தமது சக்தியை ஒரு தொகுதியிலேயே செலவழிக்க வேண்டிய தேவையும் ஏற்படாது.


பெரிய தலைவர்கள் இரண்டாவது வாக்கின் ஊடாக கட்சியால் தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ செல்லலாம். இந்தத் தலைவர்கள் தமது கட்சிக்காக அனைத்துத் தொகுதிகளிலும் பரப்புரை செய்வதில் தமது கவனத்தை செலுத்தலாம்.

சிறிய கட்சிகளும் தங்களின் சுயத்தைக் காத்துக் கொள்ள முடியும். கூட்டணிக்காக அலைய வேண்டியது இல்லை. தமிழ்நாட்டில் மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் குறிப்பிட்டளவு மக்கள் ஆதரவைக் கொண்டிருந்தும் இடங்களை வெல்ல முடியாத நிலையில் மாறி மாறி கூட்டணி அமைத்து பொதுவான வாக்காளர்களிடம் தமது பேரைக் கெடுத்துக் கொள்கின்றன. யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சொல்கின்ற தேமுதிகவும் மெது மெதுவாக அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி வருகின்றது.



ஜேர்மனிய தேர்தல் முறைப்படி இதைப் போன்ற சங்கடங்களை இந்தக் கட்சிகள் எதிர்கொள்ள வேண்டியது இல்லை. மதிமுக சந்தித்த முதலாவது தேர்தலில் ஏறக்குறைய ஏழு வீத வாக்குகளை பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் ஜேர்மனிய தேர்தல் முறைப்படி 468 சட்டமன்ற இருக்கைகள் என்ற வைத்துக் கொண்டால், அந்தத் தேர்தலில் மதிமுகவிற்கு 16 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும்.



ஆனால் எந்த இடமும் கிடைக்கவில்லை. தேமுதிக சந்தித்த முதலாவது தேர்தலிலும் ஏறக்குறைய அதே அளவு வாக்குகள் அந்தக் கட்சிக்கு கிடைத்தன. ஆனால் ஓரே ஒரு இடம்தான் அந்தக் கட்சிக்கு கிடைத்தது.


முப்பது வீத வாக்கை பெறுகின்ற கட்சி சட்டமன்றத்தில் எண்பது வீதமான இடங்களைப் பெறுவதும், இருபத்தெட்டு வீதமான வாக்குளை பெறுகின்ற கட்சி வெறும் இரண்டு வீதமான இடங்களைப் பெறுவதும், பத்து வீத வாக்குகளை பெறுகின்ற ஒரு கட்சி ஐந்து வீதமான இடங்களைப் பெறுவதும், அதே அளவு வாக்குகளைப் பெற்ற இன்னொரு கட்சி எந்த ஒரு இடத்தையும் பெறாமல் போவதும் எந்த வகையிலும் ஜனநாயகம் என்று ஆகாது.



ஆகவே இந்தியாவில் உள்ள கட்சிகள் ஜேர்மனிய தேர்தல் முறை பற்றி சற்றுக் கவனம் செலுத்துவது மக்களுக்கும், கட்சிகளுக்கும், ஜனநாயகத்திற்கும் நன்மையாக அமையும்.

No comments: