அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, December 7, 2010

பாராளுமன்ற முடக்கத்தால் ரூ.78 கோடி இழப்பு: அமைச்சர் நாராயணசாமி


புதுச்சேரி, டிச. 6-

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருவதால் அரசுக்கு ரூ.78 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக, மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

புதுச்சேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி நாராயணசாமி கூறியதாவது:-

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்டு எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்கி வைத்துள்ளன. இதனால் அரசுக்கு ரூ.78 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய மந்திரியான ராசாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை விசாரணையும் நடக்கிறது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இயங்கும் பாராளுமன்ற பொது கணக்கு குழு விசாரணை நடத்தும் என்று அறிவித்தும் எதிர்க்கட்சியினர் கூட்டுக்குழு விசாரணை கேட்டு பாராளுமன்றத்தை முடக்கி வைத்துள்ளனர். போபர்ஸ், பங்கு சந்தை ஊழல் என்பன போன்றவற்றில் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட்டு முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. போபர்ஸ் விசாரணையில் இருந்த எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதை தேர்தலுக்காக பயன்படுத்தினார்கள். அதேபோல் இப்போதும் தவறை கண்டுபிடிப்பது முக்கியமல்ல. அரசு மீது களங்கம் கற்பிக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி நாடகமாடுகிறார்கள். இந்த விசயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயார் என்று பிரதமரும், சோனியாகாந்தியும் உறுதியாக உள்ளனர். அரசியல் நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் செயல்படுவது அவர்களது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

பாரதிய ஜனதாவுக்கு ஊழலைப்பற்றி பேச தகுதியில்லை. அவர்கள் காலத்தில்தான் தெகல்கா ஊழல், சவப்பெட்டி ஊழல் நடந்தது. இதுகுறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை. பாராளுமன்றம் என்பது விவாத மேடை. அங்கு விவாதத்துக்கு தயாராக இருக்கவேண்டும். பாராளுமன்றம் முடக்கப்பட்டதால் மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதா, தொழிலாளர் பாதுகாப்பு சட்ட மசோதா, ஜிப்மர் சட்ட மசோதா போன்றவை நிறைவேற்றப்படாமல் உள்ளன. இவ்வாறு மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி ரங்கசாமி தனிக்கட்சி தொடங்குவது பற்றி வெளியான தகவல் பற்றி கேட்டதற்கு, "அவர் காங்கிரசில் தான் இருக்கிறார். சமீபத்தில் சோனியாகாந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் பங்கேற்றதும், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டு இருப்பதும் அதற்கு சிறந்த உதாரணமாகும்" என்று நாராயணசாமி பதில் அளித்தார்..

No comments: