அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, December 7, 2010

போலீசார் கைது நடவடிக்கையை முதலிலேயே செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றம்


புதுடெல்லி, டிச. 7-

ஒரு வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவரை முதலிலேயே கைது செய்யக் கூடாது என்றும் போலீசாரின் கைது நடவடிக்கை என்பது கடைசி கட்ட வாய்ப்பாகவே இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா தொண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீதாராம் சத்லிங்கப்பா என்ற தலைவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு சீதாராம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் சீதாராம் அப்பீல் செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில், சீதாராம் சத்லிங்கப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. அப்போது, ஒரு வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவரை போலீசார் கைது என்பது கடைசிகட்ட நடவடிக்கையாகவே இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இது குறித்து உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது;-

தனி நபர் சுதந்திரம் என்பது மிகவும் மதிப்பு வாய்ந்த அடிப்படை உரிமையாக உள்ளது. மிகவும் தவிர்க்க முடியாத வழக்குகள் மற்றும் சூழ்நிலைகளின் விளைவுகளை கருத்தில் கொண்டே அதை மீறுவது குறித்து பரிசீலிக்க முடியும். அது போன்ற வழக்குகளை தவிர மற்றவற்றில் கைது நடவடிக்கை என்பதை கடைசி கட்ட வாய்ப்பாகவே போலீசார் மேற்கொள்ள வேண்டும். முதலிலேயே, கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. கைது நடவடிக்கை என்பது பெரிய அவமதிப்பு, துன்புறுத்தல், மரியாதைக் குறைவு போன்றவற்றுடன் இணைந்தது. இதனால், குறிப்பிட்ட நபருக்கு மட்டுமல்லாமல் அவருடைய ஒட்டு மொத்த குடும்பம் மற்றும் அவரைச் சார்ந்த சமுதாயத்திலும் தொடர் விளைவுகளை ஏற்படுத்தும். தண்டனைக்கு முந்தைய கைது அல்லது தண்டனைக்கு பிந்தைய கைது பற்றிய விசயங்களை பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை.

வழக்கில் விசாரணை முடியும் வரையில், சம்பந்தப்பட்ட நபருக்கு தொடர்ந்து முன்ஜாமீன் வழங்கப்பட வேண்டும். முன்ஜாமீன் என்பது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்க வேண்டும். அதன் பிறகு, வழக்கு விசாரணை முடியும் வரை சாதாரண வழக்கமான ஜாமீனை தொடர்ந்து அளிக்கலாம். வழக்கமான ஜாமீன் பெறுவதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சரணடைய வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் தேவையற்றது. முன்ஜாமீன் வழங்கப்படாத நிலையில் அரசு வக்கீலுக்கு தகவல் அளித்து விட்டு இடைக்கால ஜாமீன் அளிக்கலாம். ஜாமீன் வழங்கும்போது நிபந்தனைகள் விதிக்க நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் உண்டு. அதே நேரத்தில், நீதிமன்றம் அளித்த ஜாமீனை சம்பந்தப்பட்ட குற்றவாளி தவறாக பயன்படுத்தினால், நிபந்தனைகளை மாற்றியமைக்குமாறு அரசு வக்கீலோ அல்லது மனுதாரரோ (பாதிக்கப்பட்டவர்) நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்

No comments: