பெங்களூர், டிச. 6-
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா-கர்நாடக கவர்னர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தனது குடும்ப உறுப்பினர்களுக்கு நிலம் ஒதுக்கி கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக லோக்அயுக்தாவிடம் புகாரும் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் லோக்அயுக்தா விசாரணை நடத்த தொடங்கியது. இதற்கிடையே தேவேகவுடா ஆட்சி காலத்தில் இருந்து நிலஒதுக்கீடு தொடர்பாக நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பத்மராஜ் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. நில முறைகேடு வழக்கை லோக்அயுக்தா விசாரிக்க வேண்டுமா? அல்லது நீதி விசாரணை கமிசன் நடத்த வேண்டுமா? என்பது தொடர்பான பொதுநலன் மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கவர்னர் பரத்வாஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நில முறைகேடு வழக்கை லோக்அயுக்தா விசாரித்து வரும் நேரத்தில், அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. மாநில மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே அரசு இவ்வாறு நடந்து உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்து உள்ளது. அதன்படி லோக்அயுக்தா அமைப்பு விசாரித்தால் தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும். லோக்அயுக்தா மற்றும் அரசிடமும் போலீஸ் உள்ளது. போலீஸ் அமைப்புகள் விசாரணை நடத்துவதே மிகச்சரியாக இருக்கும். இதுபோன்ற குற்றங்களை விசாரிக்க போலீசாருக்கு தான் அதிகாரம் உள்ளது. லோக்அயுக்தா மற்றும் போலீஸ் அமைப்புகளை அரசே அமைத்தது. இந்த அமைப்புகள் மீது அரசுக்கே நம்பிக்கை இல்லை என்றால், பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும். இதன் மூலம் லோக்அயுக்தா அமைப்பை சீர்குலைக்க அரசே முயற்சிக்கிறது.
மந்திரி கட்டா சுப்பிரமணிய நாயுடு ராஜினாமா குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை. மந்திரிகள் எனது அறிவுறையை கேட்பதில்லை. சட்டவிரோத சுரங்க பிரச்சினை குறித்து நான் குரல் கொடுத்த போது என்னை பதவியில் இருந்து நீக்க முயற்சி நடந்தது. நான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்கள். இந்த பிரச்சினையை நான் மக்களின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன். நான் எந்த ஒரு வேளையிலும் அரசுக்கு எதிராக செயல்பட்டதில்லை. அதேநேரத்தில் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறி அரசு செயல்படும் போது நான் மவுனமாக இருந்தது கிடையாது. எனது கடமையை சரியாகவே செய்தேன். தவிர்க்க முடியாத நேரத்தில் அரசின் நிர்வாகத்தில் தலையிட நான் தயக்கம் காட்டியது கிடையாது. கர்நாடகத்தில் நடந்து வரும் அனைத்து விவகாரங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு ஜனாதிபதிக்கு அறிக்கை தாக்கல் செய்து வருகிறேன். இவ்வாறு கவர்னர் பரத்வாஜ் கூறினார்
No comments:
Post a Comment