மாஸ்கோ, டிச. 6-
அணு விபத்து நட்டஈட்டு சட்டத்தில் காணப்படும் குறிப்பிட்ட சில அம்சங்களால்தான், கூடங்குளத்தில் மேலும் 2 அணு மின் உலைகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் 2 அணு மின் உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணு உலைகளில் முதல் பிரிவு 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் உற்பத்தியைத் தொடங்கும். அதற்கு அடுத்த ஆண்டுக்குள் இரண்டாவது பிரிவும் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இன்னும் இறுதிவடிவத்தைப் பெறவில்லை. அணு விபத்து ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ரூ.1,500 கோடி நட்டஈடு அளிக்க வேண்டும் என அணு விபத்து நட்டஈட்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற அம்சங்களில் உரிய முடிவு எட்டப்படாததே கூடங்குளத்தில் மேலும் அணுமின் உலைகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணம் என அணு உலையை நிறுவும் ரஷ்ய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே கருத்தை அமெரிக்க, பிரான்ஸ் நிறுவனங்களும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment