விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் வெளியான ரகசிய ஆவணங்களால் பெரிதும் நன்மையடையப் போவது இஸ்ரேல்தான் என்று துருக்கி கருத்துரைத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (02.12.2010) 'மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரையில், மேற்படி இணையதளம் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்களினால் இஸ்ரேலே அதிகளவு நன்மையடையப் போகின்றது' என துருக்கியின் உள்ளகத்துறை அமைச்சர் பஷீர் அதாலே குறிப்பிட்டுள்ளதாக ஏ.எஃப். பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதளமானது ஐக்கிய அமெரிக்காவின் ராஜதந்திர உரையாடல்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. துருக்கியின் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் உட்பட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்களை அவமானப்படுத்தும் வகையிலான ஆவணங்களும் இதில் அடங்கும்.
'இந்த நடவடிக்கையின் விளைவாக நன்மையடையப் போவது யார், பாதிக்கப்படப் போவது யார் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சினை நோக்கப்படல் வேண்டும்' என உள்ளகத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் சிலவற்றில் துருக்கியப் பிரதமர் 'குறைந்தளவு வாசிப்பை உடையவர்' 'போதியளவு ஆய்வுத்திறனோ முன்னோக்குந்திறனோ அற்றவர்' முதலான விமர்சனங்கள் உள்ளடங்கியுள்ளன.
துருக்கியின் பிரதமர் இது குறித்துக் கருத்துரைக்கையில், மேற்படி இணையதளத்தின் நம்பத்தன்மை குறித்துக் கேள்வியெழுப்பியுள்ளார்.
துருக்கியின் ஆங்கிலத் தினசரி 'டுடேய்ஸ் ஸமான்' தனது செய்தியில், 'அமெரிக்க- ஐரோப்பிய செய்தி மூலங்கள் என்றவகையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் வெளிநாட்டுத் தலைவர்கள் குறித்த பிழையானதும் கீழ்த்தரமானதுமான மனப்பதிவுகளை வெளிக்காட்டுவதாகவே அமைந்துள்ளன' என்று விமர்சித்துள்ளது
No comments:
Post a Comment