ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜைப் பற்றிப் பாடப்பட்ட இஸ்லாமியப் பாடகரின் பாட்டைத்தான் தலைப்பாகத் தந்துள்ளேன். ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்த தியாகச் செம்மல் நபி இபுராஹீம் (அலை) அவர்களின் ஏகத்துவத் துணிவினைச் சோதித்த நிகழ்வு அது. அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க தம் அருமை மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிட அவர் நினைத்தபோது தடுத்தி நிறுத்தி, அன்னை ஹாஜிரா மனம் குளிர மகனுக்குப் பதிலாகக் கொழுத்த ஓர் ஆட்டினைப் பலியிட்டு, குர்பானி என்ற சடங்கினை நிறைவு செய்ய அண்ணல் இபுராஹீம் (அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். அந்தப் புனிதரின் அடியொற்றி நாமும் குர்பானி கொடுத்து உற்றார் உறவினர், எழை எளியோர் பகிர்ந்து உண்டு மகிழும் தியாகப் பெருநாள்தான் ஹஜ் பெருநாளாகும்.
அன்னை ஹாஜரா, தம் அருமை மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாகத்தினைத் தீர்க்க ஓடி அலைந்து களைத்திருந்த நேரத்தில் மகனின் காலுக்கடியில் உலக ஹாஜிகளின் தாகம் தீர்க்கும் ஒரு வெள்ளப் பிரளயம் பீறிட்டு வெளியானது. அதுதான் ஸம்ஸம் நீருற்று. அய்யாமுல் ஜாஹிலிய்யா என்ற இருண்ட காலத்தில் கஃபா என்ற இறைஆலயத்தில் ஏக இறைக்கு மாறு செய்யும் முன்னூற்றறுபது சிலைகள் வைத்து ஜோடித்து, அவற்றைக் கடவுளராக வணங்கியபோது, அவை அத்தனையும் வெறும் கற்சிலைகள் என்றும் அண்ட அகிலம் படைத்து அனைத்திற்கும் வாழ்வளிக்கும் இறைவன் அல்லாஹ் ஒருவனே என்றும் ஏகத்துவ முழக்கம் மீண்டும் கேட்டது. கஃபாவின் வரலாறு மீண்டும் ஒரு திருப்புமுனையைக் கண்டது.
மது, மாது என்று மயங்கிக் கிடந்து, ஞானம் இழந்து, அஞ்ஞானத்தின் ஆணிவேராக திகழ்ந்த அரபியரை நல்வழிப்படுத்த, அறியாமை இருளைக் கிழித்து அருமை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உதித்தார்கள். "அல்அமீன் - நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்" என அழைக்கப்பட்ட நபியவர்கள் தம் கண்முன்னே நடக்கும் அனாச்சாரங்களை கண்டு மனம் வெதும்பி, ஒரு காலகட்டத்தில் ஹிராக் குகையில் தனித்திருந்து தவமிருந்தபோது, வானவர் கோமான் ஜிப்ரீல (அலை) அவர்கள் பெருமானாருக்கு இறைவன் அருளிய இறைமறை வசனங்களை எடுத்துரைத்து, இறைத்தூதராக அறிவித்து, இன்று உலகம் முழுதும் 150 கோடி முஸ்லிம்கள் பின்பற்றி வாழும் மார்க்கமாக வளர்ந்தோங்க வித்திட்டு, சரித்திரப் புகழ் வாய்ந்த மகிமை மிக்க மக்கா-மதீனா நகர் நோக்கி லட்சோப லட்ச மக்கள் ஆண்டுதோறும் ஹஜ் என்ற புனித யாத்திரையான அமைதிப் படையெடுப்புக்கு அடித்தளமிட்டது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
அல்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் வருகிற மக்கா-மதீனா நகரங்களின் சிறப்புகளைப் படித்த, பள்ளிகளில் இமாம்கள் வாயிலாக கேள்விப்பட்ட, புனித ஹஜ் செய்த புண்ணிய ஹாஜிகள் கூறும் அதிய ஹஜ் அனுபவங்களைக் கேட்ட முஸ்லிம் மக்கள், "ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசமில்லாது வாழ்வில் ஒருநாளாவது அந்த உலக மக்கள் ஒன்றுகூடி முழங்கும் "லப்பைக்" எனும் ஒற்றுமை கீதத்தில் பங்கெடுக்க வேண்டும்; அந்த உன்னத நகரங்களைப் பார்த்து விட்டு மடிய வேண்டும்" என்று நிய்யத்துச் செய்கின்றனர். அவர்களின் வசதிக்காக அரேபிய அரசு தாராளமான 30 லட்சம் விசாக்களை வழங்கி யாத்திரீயர்கள் அதிகச் சிரமமின்றி வழிபட சிறப்பான ஏற்பாடுகளை ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்து தருவதினைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஒவ்வொரு இஸ்லாமிய நாடும் மத சார்பற்ற நாடுகளும் ஹஜ் பயனத்திற்காகப் பல்வேறு சலுகைகளையும் வழங்குகின்றன.
இந்தியாவினைப் பொருத்த மட்டில் இதற்காக மத்திய ஹஜ் கமிட்டியும் மாநில ஹஜ் கமிட்டிகளும் உள்ளன. அரசுவழி ஹஜ் கமிட்டிகள் ஹாஜிகளுக்குத் தங்கும் இடங்களைத் தேர்வு செய்து,கொஞ்சம்போல் மானியமும் வழங்குகிறது. அதேபோன்று செல்வந்தர்கள், வயதான வசதி படைத்தவர்கள் அரசு நிர்ணயிக்கும் செலவினைவிட இருமடங்கு செலவு செய்து ஹஜ் செய்யச் சிறப்பு ஏற்பாடுடன் கூடிய தனியார் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனங்களும் உள்ளன என்பதினை அனைவரும் அறிவர். இதுபோன்று சர்வீஸ்களை நடத்தும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அளவு அரசால் ஹாஜிகள் பயணச்சீட்டு ஒதுக்கப்படுகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே!
சமீப காலங்களில் ஹஜ் சர்வீஸில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட சில குழப்பங்கள் கவலை தருவதாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் 1999-2000 ஆம் ஆண்டு என நினைக்கிறேன் சாகுல் ஹமீது என்பவர் ஹஜ் சர்வீஸ் நடத்தி பலரின் பணத்தினைப் பெற்றுக் கொண்டு ஹஜ்ஜூக்கு அனுப்ப முடியாமல் போனதும், அது சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டியில் ஒரு வழக்கு நிலுவையிலிருந்ததும் அதன் பின்பு அவர் பெங்களூர் லாட்ஜில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்ததும் மிகவும் அதிர்ச்சி தந்த செய்தியாகும். அந்தக் கடிதத்தில், தான் ஹஜ்ஜூக்காக வசூல் செய்த பணத்தினை மண்ணடியில் தொழில் செய்த ஒரு ஏமாற்றுப் பேர்வழியிடம் பறிகொடுத்து ஏமாறிப் போனதாகவும் எழுதியிருந்தது பரபரப்பான செய்தியாக இருந்தது சிலருக்கு ஞாபகம் இருக்கும். காலப்போக்கில் ஆறின கஞ்சி பழைய கஞ்சி கதையாகப் பலருக்கு அந்த அதிர்ச்சி நிகழ்வு, நினைவுகளின் தடத்திலிருந்து தேய்ந்து போயிருக்கலாம். தோனலாம். ஆனால் ஈமானுள்ள எவருக்கும் ஏமாற்றப்பட்டுத் தற்கொலை செய்து கொண்ட ஒரு முஸ்லிமின் அந்தப் பரிதாபமான நிகழ்சி பசு மரத்தில் அடித்த ஆணிபோன்று என்றும் பசுமையாக இருக்கும்.
அதுபோன்ற தவறு இந்த வருடமும் ஏற்பட்டு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, அதற்கான விளக்கங்களை அந்த ஹஜ் பயண ஏற்பாடு செய்தவர்கள் பத்திரிகையாளர் மன்றத்தில் விளக்கம் அளித்ததும், அதனையடுத்து 23.11.2010 அன்று தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைத்து ஒரு சமூக அமைப்பு சென்னை மெமோரியல் ஹாலில் ஆர்ப்பாட்டம் செய்ததும் பொது சிந்தனையாளர்களை அதிர வைத்தது. தனியார் ஹஜ் சர்வீஸ்களுக்கு இடம் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் குற்றம் சாட்டி, கேரள உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கினை விசாரிக்க அனுமதித்ததாகவும் ஒரு செய்தி 7.4.2010 அன்று அனைத்துப் பத்திரி்கையிலும் வெளியானது.
Haj Committe of India (Under Ministry of External Affairs) Head Office, Mumbai Haj House, 7-A, M.R.A. Marg (Palton Road), Mumbai – 400 001, Maharashtra, India. Tele: 022-22612989 / 22610340 / 22613110 / 22611784 / 22610344 / 22610345 Fax: 022-22620920 / 22630461 E-mail: hajcommittee@hajcommittee.com /hajcommittee@mtnl.net.in Web: http://www.hajcommittee.com/ Liaison Office, Delhi Haj Committee of India, E-20 Hazrat Nizamuddin (West), New Delhi - 110 013, India. Tel: 011- 24359384 / 011- 24359386 Fax: 011- 24359385 Tamilnadu State Hajj Committee Third Floor, Rosy Tower. New No.13 Old No. 7 Mahathma Gandhi (Numgampakkam) High Road, Chennai - 600 034, Tamilnadu, India. Tel: 091-44-28227617 / 28252519 Fax: 091-44-28276980 Email: tnhajj786@vsnl.com / tnhajj786@bsnl.in Web: http://www.hajjtn.org/ |
இந்திய நாட்டிலிருந்து ஏறத்தாழ 1,20,000 ஹாஜிகள் ஹஜ் பயணம் செய்ததாகச் செய்தி கூறுகிறது. ஒரு பத்திரிகையில் ஆற்காடு நவாப், "வசதியுள்ளவர்கள் மட்டும் ஹஜ் செய்யவேண்டும்; வசதியில்லாதவர்கள் அரசு மானியத்துடன் ஹஜ் செய்வது கூடாது" என்றுஅறிக்கை விட்டார். அரசுப் பணம் என்பது அரசில்அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் பணமோ அரசை நடத்திச் செல்லும் அலுவலர்களின் பணமோ அல்ல. மாறாக அது அனைத்து மக்களின் வரிப்பணம்.
அரசுகள் மக்களுக்குப் பல்வேறு மத வழிப்பாட்டிற்குச் சலுகைகள் செய்து கொடுக்கின்றன. உதாரணமாக, திபேத் பக்கத்தில் மலையடிவாரத்தில் உள்ள மானஸரோவர் யாத்திரைக்குப் பயணச்சலுகை வழங்கியுள்ளது. ஏன் சீனாவரைக்கும் போக வேண்டும்? நம் காஷ்மீர் பக்கத்திலுள்ள பத்திரிநாத் கோயில் பயணத்திற்குப் பல சலுகை செய்து கொடுக்கிறது அரசு. அதற்காக ஓராண்டுக்கு 400கோடி ரூபாய் செலவழிக்கிறது. அப்படியிருக்கும்போது அரசு சலுகையினை வசதியில்லாத முஸ்லிம்கள் பெறக்கூடாது என்று வசதியுள்ள கோமான்கள் சொல்வது எந்தளவிற்கு நியாயமாகும்?
அரசு மானியம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட முஸ்லிம்களுக்குத்தான் ஹஜ் கமிட்டி மூலம் கொடுக்க முடியும். வசதியுள்ள முஸ்லிம்கள் அரசு மானியமில்லாது ஹஜ் பயணம் செய்து கொள்வதற்குத் தனியார் நிறுவனங்களையும் அரசு அனுமதித்திருக்கிறது. அதுபோன்ற தனியார் ஹஜ் சர்வீஸ்களைத் தடை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்வது, எலித் தொல்லையாக இருக்கிறது என்ற கவலையில் வீட்டையே கொளுத்திய கதைதான் என்றால் மிகையாகுமா? தனியார் ஹஜ் சர்வீஸ்களில் நடைபெறும் தவறுகளைக் களைய என்ன வழிகள் என்று ஆராய வேண்டுமே தவிர முஸ்லிம்கள் அதிகமாக ஹஜ் யாத்திரை செய்ய தடைக்கல்லாக எந்த சமூக அமைப்பும் இருக்கக் கூடாது என்ற ஆதங்கத்தில்தான் இதனை நான் எழுதுகிறேன்.
சில தனியார் ஹஜ் சர்வீஸ்கள் முறைகேடுகளுடன் நடக்கிறது என்பது ஒரு குற்றச்சாட்டு. அடுத்தக் குற்றச்சாட்டு, ஒருசில தனியார் ஹஜ் சர்வீஸ்களுக்கு இடையில் காட்டப்படும் பாரபட்சம் என்று கேரள உயர் நீதி மன்றத்தில் தாக்கப்பட்ட வழக்கு போன்றது ஆகும். அதுவும் ஒருசில இமாம்கள் ஹஜ் சர்வீஸ்கள் நடத்துவதாக வாக்களித்து, ஹாஜிகளை நட்டாற்றில் விட்டு விடுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு துபை போன்ற வளைகுடா நாட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் நம் மக்கள் கள்ளத்தோணியில் மும்பை வழியாகவும் இலங்கை வழியாகவும் செல்வர். அவர்களை அழைத்துச் சென்றவர்கள் வளைகுடா நாடுகளின் கழுத்தளவு தண்ணீரில் இறக்கி விட்டு, "மகனே உன் சமத்து" என்று நடுகடலில் விட்டு விட்டுச் சென்று விடுவர். அவ்வாறுதான் சிலர் ஹஜ் சர்வீஸ் நடத்துகிறோம் என்று சொல்லி ஆசை வார்த்தை கூறி பணம் வசூல் செய்து விட்டு, பின்பு, "போதிய விசா வரவில்லை" என்று சப்பைக்கட்டுக் கட்டுவது முறையில்லாத செயலாகும்.
அதுவும் பள்ளிவாசலில் இமாம் சேவை செய்ய வேண்டியவர்கள் தங்களது தலையாய பணியினை விட்டு விட்டு ஹஜ் சர்வீஸில் ஈடுபடுகின்றனர். அந்த இமாம் வெள்ளிக்கிழமை தோறும் குத்பா பிரசங்கம் நடத்துவதனை ஒரு தமிழ் டி.வி ரிக்கார்டிங் செய்து, கேசட்டாகவும் விற்கப்படுகிறது. அதனை வீடியோ எடுப்பவர் பள்ளிவாசல் நடுவில் தொழுகை நடத்துபவர்களுக்கிடையே ஸ்டூலில் ஏறி நின்று ரிக்கார்டிங் செய்கிறார். அவர் வேற்று மதத்தினவர் என்று அவரிடம் விசாரித்து தெரிந்து கொண்டேன். இளையாங்குடி வெப்சைட்டில் ஹஜ் பெருநாள் தொழுகையினை பள்ளிவாசலுக்குள் இருந்து கொண்டு செல்போனில் படம் பிடித்து வெளியிட்டவர்களுக்குக் கண்டனக் கணைகள் எழுப்பப்பட்டன. இளையாங்குடி பள்ளிவாசல் வளாகத்தில் நடக்கும் திருமண வைபவங்களை யாரும் வீடியோ எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடே இருக்கிறது. அப்படி இருக்கும்போது சென்னை மாநகர் மத்தியில் இருக்கும் பள்ளியின் நடுவே முஸ்லிமல்லாதவர் ஸ்டூல் மீது ஏறி நின்று வீடியோ எடுப்பது எந்த அளவு சரியானது என்று தெரியவில்லை.
சென்னை சீஃப் ஹாஜி சலாவுதீன் அவர்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு நிக்காஹ் துவா ஓத வரும்போது யாரும் வீடியோ எடுத்தால் அதனை அவர் அனுமதிப்பதில்லை. புளியந்தோப்பில் உள்ள ஹஜ் கமிட்டியில் நடக்கும் அனைத்து திருமணங்களுக்கும் இதுபோன்ற முறை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட பள்ளியின் இமாம் மட்டும் தம் குத்பா பிரசங்கத்தைப் பள்ளிக்கு நடுவே ஒருவர் வீடியோ சாதனங்கள் ஆக்கிரமிக்க ஏன் அதனை அனுமதிக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமாகயிருக்கிறது. அந்த இமாமைப் பற்றி நிர்வாகத்தினருக்கு 275 பேர் கையெழுத்திட்ட புகார்கள் கொடுக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு, இமாமுக்குச் சாதகமாக 800 பேர் ஆதரவு இருந்ததால் தன் பதவியினை தக்க வைத்துள்ளார் என்று நிர்வாகத்தால் நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு வெளியானது. நான் அந்த பள்ளிக்குச் செல்லும்போது என்னிடமும் ஒரு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதேபோன்று, மண்ணடியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை இமாம் ஒருவர் இரும்பு மற்றும் வீடு புரோக்கர் வியாபாரத்தில் ஈடுபட்டதால் அந்த இமாமைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்கள். இமாம்களுக்கு அரசு ஓய்வூதியம்கூட இருக்கும்போது இது போன்ற சர்ச்சைகளுக்கு இமாம்கள் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
வழக்கம்போல் ஆலோசனைகள் சில:
அரசு ஹஜ் கமிட்டிகள், தனியார் ஹஜ் கமிட்டிகளைவிட இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். மத்திய-மாநில ஹஜ் கமிட்டிகளில் பிரயாணம் செய்பவர்கள் தங்களுக்கான உணவினைத் தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆனால் தனியார் நடத்தும் ஹஜ் கமிட்டிகள் அதற்கான ஏற்பாடினை அவர்களே செய்கின்றனர். இப்போது மத்திய ஹஜ் கமிட்டிகள் ஒவ்வொரு ஹாஜிகளுக்கும் அவர்கள் மக்கா போய்ச் சேர்ந்ததும் கொடுக்கும் 2200 ரியால் பணத்தில் உணவுக்கென 700 ரியால் பிடித்தம் செய்து அந்த ஹாஜிகளுக்கு அவர்கள் தங்கும் இடத்தில் தரமும் சுவையும் உள்ள பொட்டலச் சாப்பாடு மூன்று வேளைகளுக்கும் அவர்கள் தங்கி இருக்கும் இடங்களில் வழங்கலாம். பர்மா, பங்களாதேஷ், கேரளா, தமிழ்நாட்டினைச் சார்ந்த மெஸ் நடத்துபவர்கள் அங்கு ஏராளமாக இருக்கும்போது இதுபோன்ற வசதிகளைச் செய்து கொடுப்பது எளிதாகச் சாத்தியமானதே. அல்லது ஹாஜிகளுடன் அழைத்துச் செல்லும் வழிகாட்டிகளோடு சமையல்காரர்களையும் அழைத்துச் சென்று ஹாஜிகளின் உணவிற்கு ஏற்பாடு செய்யலாம்.
அரசு ஹஜ் கமிட்டியின் மூலம் செல்லும் ஹாஜிகளுக்கு மினாவில் தங்கியிருக்கும் 5 நாட்களில் வெறும் பிஸ்கட், ரொட்டி, டீ தான் வழங்கப்படுகிறது. பிஸ்கட், ரொட்டிக்குப் பதிலாக மக்காவின் மினி லஞ்ச் ஆன 'கப்சா' உணவுப் பொட்டலங்களை ஹாஜிகளுக்கு வழங்கி அவர்கள் வயிறார உண்ண வழிசெய்யலாம்.
ஹஜ் நாட்கள் முடிந்ததும் ஹாஜிகள் தங்கள் நாடுகளுக்குத் திரும்புவதற்கு விமானத்துக்காகக் காத்துக் கிடக்கும் நாட்களில் அவர்களை ஜெத்தா நகர்ப்புறங்களுக்கு கைடுகள் துணையுடன் வாகனத்தில் அழைத்துச் சென்று மக்கா திரும்பலாம். அல்லது ‘முஅல்லிம்’ அனுமதி பெற்று ஜெத்தா சென்றுவர மிசன் உதவியாளர்கள் மூலம் அனுமதிச் சீட்டு வழங்கலாம்.
ஹாஜிகள் திரும்பும்போது அவர்களுடன் அவர்கள் பயணம் செய்யும் விமானத்திலேயே ஒரு குறிப்பிட்ட அளவு ஸம்ஸம் தண்ணீர் எடுத்துவர அனுமதிக்கலாம். இவ்வாறின்றி ஹாஜிகளின் ஸம்ஸம் தண்ணீர் வேறு விமானத்தில் சில நாட்கள் கழித்து அனுப்புவது நடைமுறையில் இருப்பதால் ஹாஜிகளைப் பார்க்கச் செல்பவர்களுக்கு தண்ணீர் வழங்க முடியாமல் போய் விடுகிறது.
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வசதியாக ஹஜ் செய்வதற்குத் தள்ளு வண்டிகளை அவர்கள் பயன்பாட்டிற்காக மத்திய ஹஜ் கமிட்டிகள் ஏற்பாடு செய்யலாம். இதனை ஒவ்வொரு மாநில அரசின், மத்திய அரசின் சமூக நலத்துறையே மாற்றுத்திறனாளிகளுக்கான மானியத்தொகை மூலம் அந்த வண்டிகளை வாங்க ஏற்பாடு செய்யலாம்.
மத்திய ஹஜ் கமிட்டிகள் தனியாருக்கு ஹஜ் சர்வீஸ் நடத்த அனுமதி வழங்கும்போது அந்தத் தனியார் கம்பொனிகளுடன் ‘கான்ட்ராக்ட் ரூல்ஸ் & ரெகுலேஷன்'படி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு தனியார் ஹஜ் சர்வீஸும் ஒரு குறிப்பிட்ட தொகையினைப் பிணைத்தொகையாகச் செலுத்த உத்திரவிடலாம். எந்தத் தனியார் ஹஜ் சர்வீஸ் முறைகேடுகளில் ஈடுபடுகிறதோ அவர்களது டெப்பாஸிட்டைப் பறிமுதல் செய்து அவர்கள் இனிமேல் ஹஜ் சர்வீஸ் நடத்த அனுமதி பெறமுடியாமல் பார்த்துக் கொள்ளலாம். எப்படி டெல்லி மெட்ரோ ரயில் புராஜக்ட்டில் கட்டப்பட்ட தூண் இடிந்து விழுந்து அதனைக் கட்டிய கேமன் கட்டிட கம்பனி பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டதோ அதே போன்ற நடவடிக்கை எடுக்கலாம்.
தனியார் ஹஜ் சர்வீஸில் ஹாஜிகளுக்கு வாக்குறுதி கொடுத்த சேவைகளைச் சரியாகச் செய்யவில்லையென்றால் அவர்களை நுகர்வோர் நீதிமன்றம் மூலம் நஷ்டஈடு் வழங்க இலவச சட்ட உதவி மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கீகரிக்கப் பட்ட ஹஜ் சர்வீஸ்களையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களையும் இணைய தளத்திலும், பிரபலமான மாநிலப் பத்திரிகையிலும் ஹஜ் கமிட்டி, பட்டியல் வெளியிட வேண்டும். எந்தத் தனியாரும் ஒதுக்கப்பட்ட இடங்களுக்குக் கூடுதலாக ஆள் சேர்க்காமலும் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேலாகப் பணம் வசூல் செய்யாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
எப்படி மாநில வக்ப் வாரியத்தில் உள்ள உறுப்பினர்கள் முஸ்லிம் அமைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் படுகிறார்களோ அதேபோன்று, நியமன முறை இல்லாமல் மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் அதன் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். வசதி படைத்த, அரசியல் செல்வாக்குள்ள சிலரே அந்தப் பதவிகளில் நியமனம் செய்யப்படுகின்றனர். தேர்நதெடுக்கப்பட்ட உறுப்பினர்களால்தான் முஸ்லிம்கள் தஙகள் கருத்துக்களை எடுத்துச் சொல்லி ஹஜ் கமிட்டிகள் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
மக்கா நகரின் இறையில்லத்தில் அழைக்கப்படும் "அஷ்ஹது அன்லாயிலாக இல்லல்லாஹ்; அஷ்ஹது அன்ன முஹம்மதர்ரஸூலுல்லாஹ்" என்ற பாங்குச் சப்தத்தினைக் கேட்டதும் உலகின் 30 லட்சம் ஹாஜிகளும் ஒன்று கூடி, "அல்லாஹு அக்பர்" என்று தக்பீர் கட்டி, ஒரு குண்டூசி விழுந்தால்கூட சப்தம் கேட்கிறதோ அதேபோன்று எந்தக் குறையும் மனசஞ்சலமும் இல்லாத ஹஜ்ஜினை இனிவரும் காலங்களில் நிறைவேற்றலாம் வாருங்களேன் என் சொந்தங்களே! எனக் கூறி நிறைவு செய்கிறே
No comments:
Post a Comment