வாசிங்டன், டிச. 6-
தென்இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக, லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் தமிழ்நாடு மற்றும் கேரளாவை தளமாக பயன்படுத்த முயன்ற தகவலை, விக்கி லீக்ஸ் இணைய தளம் வெளியிட்டுள்ளது. மேலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல திட்டமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
விக்கி லீக்ஸ் என்ற இணைய தளம், அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது. அதில் இந்தியா தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந்தேதி அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட ரகசிய தகவல் ஒன்றில் பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் லஸ்கர்-இ-தொய்பா இயக்கம், தமிழகம் மற்றும் கேரளாவில் தளம் அமைக்க முயன்ற தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் அந்த இயக்கத்தின் மையம் ஒன்று செயல்பட தொடங்கிவிட்டதாகவும், தென் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவை தளமாக பயன்படுத்திக்கொள்ள அந்த இயக்கம் முயன்று வருவதாகவும் அந்த தகவலில் இடம் பெற்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் தனது பயங்கரவாத செயல்பாட்டை விரிவுபடுத்த முயன்ற தகவலையும் விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தி உள்ளது. விக்கி லீக்கின் இந்த தகவல்களை அமெரிக்க அரசு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாள நாடுகளில் உள்ள இயக்க உறுப்பினர்களின் ஆதரவுடன் தென்இந்தியாவில் ஷாபிக் கபா ஜி என்ற தளபதி மூலம் 2 குழுக்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தகவல்கள் உடனடியாக இந்தியாவுக்கு அதுபற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் தென் இந்தியாவில் தாக்குதலுக்காக அவர்கள் தேர்வு செய்த இடங்கள் பற்றிய விவரங்கள் அதில் இல்லை. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்துவதற்கான தகவல்களை திரட்டவும் தளபதி காபா முயற்சிகளை மேற்கொண்டார்.
குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியை படுகொலை செய்யும் திட்டத்தை அரங்கேற்றவும் அவர் திட்டமிட்டு இருந்தார். லஸ்கர் இயக்கத்தின் இந்தியாவை சேர்ந்த உறுப்பினர் ஹுசேன், சமீர் என்ற கூட்டாளியுடன் இணைந்து இதுபோன்ற சதித்திட்டங்களை தீட்டி உள்ளனர். இவ்வாறு விக்கி லீக்ஸ் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment