நீண்ட 17 ஆண்டுகளுக்குப் பின்னர், பாபரி மஸ்ஜித் வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணைக் கமிஷன், கடந்த 30 ஜூன் 2009இல் தன் இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இதற்கு முன்னரும் பல்வேறு கலவரங்கள் தொடர்பாக விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப் பட்டன. அவற்றில் எல்லாம் சிறுபான்மை சமுதாயங்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் தொடர்பான விசாரணைக் கமிஷன்களின் அறிக்கைகள் அனைத்தும், இந்த மதசார்பற்ற நாட்டில் பரணில் தூங்குகின்றன. சிறுபான்மை சமுதாயங்களுக்கு நீதி என்பது எட்டாக் கனிதான் போலும்!
குறிப்பாக, பாபரி மஸ்ஜித் தகர்ப்புக்குப்பின் மும்பையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை! "மும்பைக் கலவரத்தில் பால் தாக்கரே முக்கிய குற்றவாளிதான்" என்று அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. ஆனால், இந்த நிமிடம்வரை பால் தாக்கரேக்கு எதிராக மத்திய-மாநில அரசுகளும் நீதிமன்றங்களும் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடத் துணியவில்லை. எனவேதான் இந்திய நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடும் அளவிலான பால் தாக்கரேயின் சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை பால்தாக்கரேயை மும்பைக் கலவரக் குற்றவாளி என மிகத் தெளிவாகக் கூறியதைப் போலவே, "அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, வாஜ்பாய், ஆகிய மூவரும் பாஜகவின் முக்கியத் தலைவர்களும் பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் குற்றவாளிகள்தாம்" என லிபரான் கமிஷன் அறிக்கை மிகத் தெளிவாகக் கூறுகிறது. முறித்தெறியப் பட்ட தடை வேலிகள் முதற்கொண்டு முதுகுசவாரிக் கேவலம்வரை எல்லாத் தொலைக்காட்சிகளும் உலகம் முழுக்க ஒளிபரப்பிய இந்திய தேசிய அவமான ரகசியத்தைச் சொல்வதற்குத்தான் 17 ஆண்டுகளில் மக்களின் வரிப்பணம் 8கோடி ரூபாய் இந்தக் கமிஷனுக்குச் செலவழிக்கப் பட்டது.
"வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூவரும் பா.ஜகவின் போலி மிதவாதிகள். அவர்கள் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு, தங்களுக்கே தெரியாமல் நடந்து விட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது, பாபரி மஸ்ஜித் தகர்ப்பு என்பது திடீரென்று நடந்ததல்ல; மாறாக, திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று தெரிகிறது".
"பாபரி மஸ்ஜிதைத் தகர்க்க வேண்டும் என்ற சங்பரிவாரின் முடிவுகளுக்கு இவர்கள் மூவரும் உடன்பட்டுள்ளனர். சங்பரிவாரின் திட்டம் அவர்களுக்குத் தெரியாது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.இன் கைப்பாவைகளாக செயல் பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.இன் கட்டளைகளை மீற முடியாதவர்களாக இருந்துள்ளனர் என்பது எவ்விதச் சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது. எனவே, சட்டச் சலுகையான சந்தேகத்தின் பலனை அளித்து அவர்களைக் குற்றத்திலிருந்து விடுவிக்க முடியாது".
"தங்களது அரசியல் லாபத்துக்காக, மிகப்பெரிய நாடான இந்தியாவைக் காட்டுமிராண்டித் தனத்துக்கும் சகிப்பற்றத் தன்மைக்கும் ஆளாக்கி உள்ளனர்".
"இதைவிடப் பெரிய துரோகம், ஜனநாயகத்தில் கிடையாது. அவர்கள் தெரிந்தே செய்த குற்றங்களைக் கண்டனம் செய்ய இந்தக் கமிஷனுக்குத் தயக்கமே கிடையாது. அவர்கள் அயோத்தி விவகாரத்தில் நாட்டை மத மோதலுக்கு இட்டுச் சென்றுள்ளனர்" |
என்று லிபரான் கமிஷன் விளக்கியுள்ளதோடு,
"அவர்கள், வாக்காளர்கள் (மக்கள்) வைத்திருந்த நம்பிக்கையையும் மீறி விட்டனர். இதைவிடப் பெரிய துரோகம், ஜனநாயகத்தில் கிடையாது. அவர்கள் தெரிந்தே செய்த குற்றங்களைக் கண்டனம் செய்ய இந்தக் கமிஷனுக்குத் தயக்கமே கிடையாது. அவர்கள் அயோத்தி விவகாரத்தில் நாட்டை மத மோதலுக்கு இட்டுச் சென்றுள்ளனர்".
எனக் கூறும் லிபரான் கமிஷன் அறிக்கை, ஊடகங்கள் கையில் கிடைக்காமல் நேரடியாகப் நாடாளுமன்ற விவாதத்துக்கு வந்திருந்தால் அன்றைக்கே பாஜக எனும் கட்சி, இந்திய அரசியலில் இருந்து துடைத்து எறியப் பட்டிருக்கும். அத்தகைய இழிவு நிலையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அறிக்கை வெளிவந்ததைத் தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியாகத் திசை திருப்பும் நாடகத்தில் பாஜக இறங்கி விட்டது. இந்தத் திசை திருப்பல் வெற்றி அடைந்து விட்டால், பால் தாக்கரேயைப் போலவே அத்வானி வகையறாக்களும் நிம்மதியாக அடுத்தக்கட்ட மதக்கலவரங்களை உருவாக்கும் வழிமுறைகளைக் குறித்து ஆலோசிக்கத் தலைப்படக் கூடும்.
அறிக்கை வெளியானதற்கே இந்த நிலைமை எனில், லிபரான் கமிஷனின் விசாரணைக் காலகட்டத்தில் இதனை விட சுவாரசியமான அநியாயங்கள் அதிகார, இந்துத்துவக் கூட்டணியால் நடத்தப்பட்டன. அவற்றுள் ஒன்று:
-o-
பாபரி மஸ்ஜித் வழக்குத் தொடர்பான லிபரான் விசாரணைக் கமிஷனின் அறிக்கையும் வழக்கமான கண்துடைப்பு ஏமாற்று நாடகம்தான் என்று ஐயங் கொள்வதற்கு இடம்பாடாக, இறுதி அறிக்கையை நீதிபதி லிபரான், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்த ஒருவார காலத்துக்குள் சான்றுகள் வெளிவந்தன.
உத்தரப் பிரதேச உள்துறைத் தலைமைச் செயலாளர் அதுல் குமார் குப்தா, கடந்த 7 ஜூலை 2009 அன்று லக்னவ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், "பாபரி மஸ்ஜித் தொடர்பான 23 கோப்புகள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னரே காணாமல் போய்விட்டன" எனக் குறிப்பிட்டிருக்கிறார். உள்துறைச் செயலர் ஜாவித் அஹ்மது தயாரித்த அந்த அறிக்கையில், "கோப்புகளின் எண்ணிக்கை, பதிவு செய்யப் பட்ட பட்டியிலில் மட்டுமே உள்ளது; கோப்புகளைக் காணவில்லை" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணைக் கமிஷன், காணாமல் போய்விட்டதாகச் சொல்லப் படும் 23 கோப்புகள் பற்றிக் கண்டு கொள்ளாமல் 48 தடவை கால அவகாச நீட்டிப்புப் பெற்று, 17 ஆண்டுகளாக நடந்த விசாரணையைக் கெட்டிக்காரத் தனமாக மூட்டை கட்டி விட்டது.
பாபரி மஸ்ஜித் தொடர்பான 23 கோப்புகள் காணாமல் போய்விட்டதாகச் சொல்லப் படும் கதையாவது:
உத்தரப் பிரதேச உள்துறை அமைச்சகத்தின் வகுப்புக் கலவரக் கட்டுப்பாட்டுத் துறையில் சிறப்புப் பணி அலுவலராகப் பணிபுரிந்த சுபாஷ் பன் சத் (Subhash Bahn Sadh), ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார். சுபாஷின் பொறுப்பில்தான் பாபரி மஸ்ஜித் தொடர்புடைய, காணாமல் போய்விட்டதாகச் சொல்லப் படும் 23 கோப்புகளும் இருந்தன!
2000ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி, உத்தரபிரப் தேசத்திலிருந்து டெல்லிக்குக் காசி-விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்ட சுபாஷ், "ரயில் டெல்லி திலக் ப்ரிட்ஜ் ரயில் நிலையம் வந்து சேர்ந்தபோது, கால் தடுமாறி ரயிலிலிருந்து கீழே விழுந்து காயமடைந்து, இரு நாள் சிகிச்சைக்குப்பின் இறந்தார்" என்று காவல்துறை அறிக்கை கூறுகிறது. பாபரி வழக்குத் தொடர்பாக லிபரான் விசாரணைக் கமிஷன் முன்னிலையில் 1.5.2000 அன்று வாக்குமூலம் கொடுப்பதற்காக டெல்லிக்கு வந்த சுபாஷ், அன்றைய தினம் டெல்லியிலுள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் பாதி உயிருடன் படுத்திருந்தார்.
தன் பொறுப்பில் இருந்த 23 கோப்புகளையும் சுபாஷ் எங்கு வைத்திருந்தார் என்பதும் தனது இறுதி டெல்லிப் பயணத்தின்போது அவற்றைத் தன்னுடன் எடுத்துச் சென்றாரா இல்லையா என்பதும் கேள்விக்குறிகளாகவே தொங்குகின்றன.
உத்தரப் பிரதேச உள்துறையின் சிறப்புச் செயலாளரான கே.பி. அகர்வால், டெல்லி காவல்துறையின் தலைமையக இணை ஆணையாளர் ட்டீ என் மோகனிடம் கடந்த 6.7.2000 அன்று சமர்ப்பித்த அஃபிடவிட்டில், "டெல்லிக்குப் போகும்போது கோப்புகளை உடன் கொண்டு செல்ல வேண்டும் என சுபாஷுக்குக் கட்டளை ஏதும் இடப் படவில்லை" என்று குறிப்பிட்டதோடு, 'விபத்து' நடந்த பின்னர் "சுபாஷின் உடமைகளைப் பரிசோதித்த வகையில் கண்டெடுக்கப் பட்டவை பயணத்துக்கான ரயில் டிக்கெட்டும் சில விசிட்டிங் கார்டுகள் மட்டுமே" என்று பதிவு செய்திருக்கிறார்.
சுபாஷின் ரயில் 'விபத்து'க்குப் பின்னர் மருத்துவமனையில் அவர் சேர்க்கப் பட்டிருந்தபோது அங்கு அவரைப் பார்க்கச் சென்ற உத்தரப் பிரதேச உள்துறையின் அன்றைய தலைமைச் செயலாளரும் தற்போது பண்டல்கண்ட் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமான வீ.கே. மிட்டல் கூறும்போது, "ஒரிஜினல் கோப்புகளை அவரோடு எடுத்துச் சென்றிருக்க வாய்ப்பில்லை. அப்படி எடுத்துச் செல்வதாயின் அதற்கு முன்னர் எனக்குத் தகவல் சொல்லப் பட்டிருக்கும். அப்படியே எனக்குத் தகவல் தராமல் ஒரிஜினல் கோப்புகளை எடுத்துச் சென்றிருந்தால் ஆவணக் காப்பகத்தில் அவற்றின் பிரதிகள் இருக்க வேண்டும். பிரதிகளை எடுத்துச் சென்றிருந்தால் ஒரிஜினல் இருக்க வேண்டும். ஆனால், காப்பகத்தில் ஒரிஜினலும் இல்லை; பிரதிகளும் இல்லை" என ஃப்ரண்ட் லைன் பேட்டியின்போது வியப்புத் தெரிவித்தார்.
இத்தனைக்குப் பிறகும் செத்துப் போனவர் திரும்பி வந்து மறுக்கப் போவதில்லை எனும் துணிவில், "பாபரி மஸ்ஜித் தொடர்பான 23 ஒரிஜினல் கோப்புகள் 9 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டன. அவற்றை டெல்லிக்குப் போகும்போது சத் எடுத்துச் சென்றிருக்க வேண்டும்" என்று உத்தரப் பிரதேச அரசின் தலைமைச் செயலர் அதுல் குமார் குப்தா உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 7 ஜூலை 2009 விளக்கத்தில் பூடகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், "அன்று வீட்டிலிருந்து புறப்பட்டபோது அவனது டெல்லிப் பயணத்துக்குத் தேவையான மாற்று உடைகளை மட்டுமே சிறு சூட்கேஸில் வைத்து எடுத்துச் சென்றான். கோப்புகள் எதையும் எடுத்துச் செல்லவில்லை" என்று சுபாஷின் தந்தையான பீர்பான் ஸத் கூறுகிறார்.
மேலும், "என் மகன் 'விபத்து'க்குள்ளானான் என்ற செய்தியறிந்து லக்னவிலிருந்து 1.5.2000 இரவு முழுக்கப் பயணம் செய்து அடுத்தநாள் டெல்லியை அடைந்தேன். நான் மருத்துவமனைக்குச் சென்று என் மகனைப் பார்த்தபோது தன்னினைவுடன் இருந்தான். தனக்கு அறுவைச் சிகிச்சை செய்வதில் ஆட்சேபணை இல்லை என மருத்துவமனை விண்ணப்பத்தில் கையெழுத்திட்டதாக என்னிடம் சொன்னான். 'விபத்து' நடந்து ஒரு நாள் முழுக்கக் கடந்தும் அவனிடம் டெல்லிக் காவல்துறையினர் எந்த விசாரணையும் செய்யாமல் அலட்சியப் படுத்தியது, நடந்தது 'விபத்து' அல்ல; அவனுக்கெதிரான அரசியல் சதியின் ஓர் அங்கமே என்பதை உறுதிப் படுத்துகிறது" என்று கூறினார்.
"அப்போது உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பிஜேபியும் அதன் தலைவர்களும் என் மகனுடைய சாவின் பின்னணியில் இருந்தது உறுதி" |
"அப்போது உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பிஜேபியும் அதன் தலைவர்களும் என் மகனுடைய சாவின் பின்னணியில் இருந்தது உறுதி" என்றும் பீர்பான் ஸத் கூறினார். அத்துடன்,
"ஓடிக் கொண்டிருந்த ரயிலிலிருந்து தன் மகன் சுபாஷை தண்டவாளத்தில் தள்ளிக் கொலை செய்து விட்டனர்" என்றும் டெல்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், அவ்வழக்குத் தொடர்பான மேல் விசாரணை வேளைகளில் சுபாஷின் இறப்புத் தொடர்பாக மட்டுமே நடந்த தொடர் விசாரணைகள், ரகசிய கோப்புகளைக் குறித்துக் கண்டு கொள்ளவே இல்லை.
'விபத்து' நடந்தபோது சுபாஷிடம் ரகசிய கோப்புகள் இருந்தனவா?
என்னென்ன ரகசியக் கோப்புகள் இருந்தன?
தற்போது காணாமல் போனதாகத் தலைமைச் செயலர் அதுல் குப்தா கூறியுள்ள இந்த ரகசியக் கோப்புகள்தாம் சுபாஷிடம் இருந்தனவா?
அல்லது அவரது மரணத்தைச் சாக்கிட்டு, காணாமல் 'ஆக்கப்பட வேண்டிய' ரகசிய கோப்புகளும் சுபாஷோடு சேர்த்துப் புதைக்கப் படுகின்றனவா?
சுபாஷின் மரணம் மிக மிக அசாதாரணமானது. திலக் பிரிட்ஜ் நிலையத்தில் ரயில் நிற்பதற்கு முன்னர் இறங்க முயன்று, ஊர்ந்து கொண்டிருந்த ரயிலுக்கும் ரயில் ப்ளாட்ஃபாரத்திற்கும் இடையில் விழுந்து அடிபட்டு, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டு, அடுத்த நாள் அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப் பட்டார்.
சுபாஷின் தந்தையின் புகார் அடிப்படையில் வழக்கை விசாரித்து 2000 ஆகஸ்ட் 22 க்குள் அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறையினருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உத்தரவின்படி காவல்துறை சமர்ப்பித்த அறிக்கையில் திருப்தியடையாத நீதிமன்றம், மீண்டும் மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டது. மறுவிசாரணைக்காக இரண்டு ஆண்டுகள் பொறுத்திருந்த நீதிமன்றம், 2002இல் சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், 9 ஆண்டுகள் கடக்கும் நிலையிலும் இதுவரை மறு விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. சி.ஐ.டி விசாரணையும் இந்த நிமிடம்வரை நடைபெறவில்லை!
பாபரி மஸ்ஜித் வழக்குத் தொடர்பான ஆவணங்களைக் கோரி, 2002 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்திலுள்ள சுன்னி வக்ஃப் போர்டும் மற்றும் சில அமைப்புகளும் இணைந்து சமர்ப்பித்த மனுவின் மீதான விசாரணையின்போதுதான் உத்தரப் பிரதேச மாநில அரசு முதன்முதலாக, "பாபரி வழக்குத் தொடர்பான முக்கிய 23 கோப்புகள் காணாமல் போய் விட்டன" என நீதிமன்றத்தில் தெரிவித்தது.
"சுபாஷின் மரணம் வெறும் 'விபத்து'தான் என்ற முடிவுக்குக் காவல்துறை வந்ததற்கான காரணமாகக் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், 'விபத்தில்' படுகாயம் அடைந்தபோதும் தன்னினைவுடன் இருந்த சுபாஷிடம் வாக்குமூலம் பெறாமல் எதிர் ப்ளாட்ஃபார்மில் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு வியாபாரியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். இந்த ஒரு வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக வைத்து, சுபாஷின் மரணத்தை வெறும் 'விபத்து'தான் என்ற முடிவுக்கு அவசரகதியில் வந்தக் காவல்துறை, நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்கூட, மிக முக்கிய ரகசிய ஆவணங்களுடன் வந்ததாகச் சொல்லப் படும் ஓர் உயர் அதிகாரி இறந்து, அவர் வைத்திருந்த ரகசிய ஆவணங்களும் காணாமல் போனதாகக் கூறப்படும் நிகழ்வைச் சந்தேகக்கண் கொண்டு பார்த்து, மறு கோணத்தில் விசாரிப்பதற்கு முன்வராமல் அடம்பிடிக்கிறது. இதுவே சுபாஷின் மரணத்தில் மிகப் பெரிய சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது" என அவருடைய குடும்ப வழக்கறிஞர் ரன்தீர் ஜெய்ன் கூறுகிறார்.
சுபாஷின் மரணம் தொடர்பாகக் காவல்துறை எழுதி வைத்துள்ள கதையில் பல முரண்பாடுகள் உள்ளன. சுபாஷ் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்திருந்ததாகக் காவல்துறை கூறுகிறது. ஆனால், அவருடன் பிரயாணம் செய்த சக பிரயாணிகளில் ஒருவரது வாக்குமூலத்தைக்கூட காவல்துறை பதிவு செய்யவில்லை. ரயில் நிற்பதற்கு முன்னரே அவர் இறங்க முயன்றாரா? இல்லையா? என்பது அவருடன் பிரயாணம் செய்த சக பிரயாணிகளால் மட்டுமே உறுதிப்படுத்த இயலும். சாதாரண ஒரு பாமரனுக்குக்கூட தோன்றும் இந்தச் சிந்தனை, காவல்துறைக்குத் தோன்றாதது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
1.5.2000 அன்று லிபரான் கமிஷன் முன்னிலையில் ஆஜராகச் சென்ற சுபாஷ், டெல்லியில் தான் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள், தன் குடும்ப வழக்கறிஞர் என முக்கியமான அனைத்துத் தொடர்பு எண்களையும் தன் வசம் வைத்திருந்தார். ஆனால், அவரது கைவசம் இருந்த தொலைபேசி எண்களில் எவரையும் காவல்துறை தொடர்பு கொண்டு அவரது மரண விவரத்தைத் தெரிவிக்கவில்லை. யாரோ ஒருவர் அழைத்த தொலைபேசி அழைப்பினூடாகவேதான் அவரது மரணச் செய்தியை அறிந்ததாக சுபாஷின் வழக்கறிஞர் ஜெய்ன் கூறுகிறார். அழைத்த நபர், சுபாஷை மருத்துவமனையில் சேர்த்தவர் என்று தன்னை அவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால், சுபாஷின் கையிலிருந்த அதி முக்கிய ரகசிய ஆவணங்களும் காணாமல் போன நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்ததாகக் கூறிய அந்த நபரைக் கண்டுபிடிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் காவல்துறை செய்யவில்லை என்பது எல்லாவற்றிலும் மிகப் பெரிய ஆச்சரியம்!
சுபாஷின் மரணம் தொடர்பான காவல்துறையின் முதல் விசாரணை அறிக்கையில், இது போன்ற பதிலில்லாத எண்ணற்ற கேள்விகள் எஞ்சி நின்ற காரணத்தினாலேயே டெல்லி உயர்நீதி மன்றம் மறு விசாரணைக்கும் பின்னர் சி.ஐடி. விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது என்பது திண்ணம். ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்கூட, சுபாஷின் மரண வழக்கும் அவர் கைவசமிருந்து காணாமல் போன ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணையும் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை.
இவை அனைத்திலிருந்தும், ரகசிய ஆவணங்கள் லிபரான் கமிஷன் கையில் கிடைக்காமல் இருப்பதற்காக ஏதோ சதிவேலை நடந்துள்ளது என்பதும் அதன் ஒரு பாகமாகவே சுபாஷ் கொல்லப்பட்டுள்ளார் என்ற சந்தேகமும் வலுப்பெறுகிறது. நீதிமன்றம் இரு முறை உத்தரவிட்ட பின்னர்கூட, காவல்துறையோ சி.ஐ.டி பிரிவோ இவ்வழக்கில் மேல்விசாரணை நடத்தாமல் இருந்ததிலிருந்து இவ்வழக்கில் மேல்மட்டத் தலையீடுகள் இருந்ததுள்ளன என்பது உறுதியாகிறது.
சுபாஷின் மரணம் குறித்த வழக்கு ஆரம்பித்துக் கிடப்பில் போடப்பட்ட நிலையில், அவர் கையிலிருந்த ரகசிய ஆவணங்கள் எங்கே சென்றன? என்ற ஓர் அதி முக்கிய கேள்வி இறுதியில் எஞ்சி நிற்கின்றது. மிக முக்கியமான அரசு ஆவணமாக இருந்த போதிலும்கூட, அவற்றைக் கண்டு பிடிக்க அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததும் லிபரான் கமிஷனின் விசாரணைக்கான முக்கிய ஆதாரம் ஒரு மரணத்தின் பின்னணியில் மறைக்கப்பட்டது குறித்து அரசு கண்டுகொள்ளாததும் வியப்பின் உச்ச கட்டமாகும். 17 ஆண்டுகளுக்குப் பின்னர், லிபரான் கமிஷன் தன் அறிக்கையைச் சமர்ப்பித்து விட்ட போதிலும் சுபாஷின் மரணத்திற்கான நீதி தேடி நீதிமன்றம் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றது சுபாஷின் குடும்பம். அவர் கைவசமிருந்து காணாமல் போன ரகசிய ஆவணங்களோ கேட்பார் எவருமின்றி எங்கோ மாயமாய் மறைந்து விட்டன.
இறுதியாக சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின்னர், பாபரி மஸ்ஜித் வழக்குத் தொடர்பான முக்கியக் கோப்புகள் காணாமல் போன நிகழ்வைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த அலஹாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்புகள் காணாமல் போனதை மிகவும் மோசமான நிகழ்வாகச் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், சி.பி.ஐ விசாரணையைப் பூர்த்தி செய்து அறிக்கை சமர்ப்பிக்க 2 மாத காலம் நிர்ணயித்தது. இதற்குள் ஆகஸ்டு 24 ஆம் தேதியன்று இடைக்கால அறிக்கையும் சி.பி.ஐ தாக்கல் செய்திருக்க வேண்டும்.
விசாரணைக்கிடையில் கோப்புகள் காணாமல் போனதில் "முக்கிய குற்றவாளியாகக் கருதப் படும் எத்தகைய உயர்ந்த அதிகாரியையாவது கைது செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ கருதினால், புதிய வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய எவ்விதத் தயக்கமும் காட்ட வேண்டாம்" எனவும் "இவ்வழக்கில் சி.பி.ஐக்கு முழு சுதந்திரம் வழங்குவதாகவும்" உயர்நீதி மன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. "விசாரணைக்கிடையில் ஏதாவது தடைகளோ, இடையூறுகளோ ஏற்பட்டால் நீதிமன்றத்திற்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்" எனவும் கூறியுள்ளது.
முக்கிய ரகசியக் கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விட்டு, மேல் விசாரணை நடத்தாமல் சி.பி.ஐக்கு அதனை ரெஃபர் செய்த மாநில அரசின் செயல்பாடு, காலம் கடத்துவதற்கான தந்திரமாகும். இத்தனை முக்கியமான ஒரு நிகழ்வைக் குறித்த பல ரகசிய கோப்புகள், தலைமைச் செயலகத்திலிருந்து மாயமான சம்பவம் சாதாரண விஷயமல்ல. மாநில அரசு, சர்வ சாதாரணமாக, "தலைமைச் செயலகத்திலிருந்து முக்கிய ரகசிய ஆவணங்கள் காணாமல் போய் விட்டன" எனக் கூறுவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது எனவும் உயர்நீதி மன்றம் கடுமையாகத் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
காணாமல் போன 23 கோப்புகளில், 1949ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில அரசுக்கும் பைஸாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்துகள், "பாபரி மஸ்ஜிதினுள் இரவோடு இரவாக அத்துமீறித் திருட்டுத் தனமாக வைக்கப்பட்ட ராமர் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும்" என அன்றைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மாநில அரசுக்கு அனுப்பிய டெலக்ஸ் செய்தி முதலான முக்கிய ஆவணங்கள் அடங்கியிருந்தன. சி.பி.ஐயின் இந்த விசாரணையில் அரசும் அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கடுமையாக உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-o-
இந்நிலையில் முக்கிய ஆதாரமான காணாமல் போன ஆவணங்களின் உதவி இல்லாமலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ள லிபரான் கமிஷன் அறிக்கை, லிபரான் விசாரணை வேளையில் விசாரிக்கப் படாத ஒருவரையும் பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் குற்றவாளியாகச் சேர்த்துள்ளது.
"பிரச்சனைக்குரிய இடத்தில் புதிதாகக் கட்டுமானப் பணிகளைச் செய்யத்தான் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. அங்குக் கரசேவைக்குத் தடையில்லை, பஜனை நடத்தவும் கீர்த்தனைகள் பாடவும் தடையில்லை. நீங்கள் நடமாடாமல் அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது".
"அங்கு (அயோத்தியில்) சும்மா நின்று கொண்டே இருக்க முடியுமா?. கற்களும் பாறைகளும் உள்ள அந்த இடத்தில் எப்படி உட்காருவது?. எனவே, அந்த இடத்தை நாம் சமப்படுத்தியே ஆக வேண்டும். அப்போதுதான் நாம் அங்கே அமர முடியும்".
"நாளை (டிசம்பர் 6ஆம் தேதி) என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. அதைத் தீர்மானிக்கப் போவது கர சேவகர்கள்தாம்"
என்றெல்லாம் வன்முறையைத் தூண்டி விட்டு, லக்னவில் 5.12.1992இல் கரசேவகர்களுக்கு மத்தியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு ஊக்கமளித்துப் பேசிய ஒருவரது வீடியோ பதிவைக் கடந்த 4.2.2004இல் வழக்கறிஞர் ஐ.பி. சிங், லிபரான் கமிஷன்முன் சமர்ப்பித்து, அவரை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்.
"நன்கு திட்டமிடப் பட்ட பாபரி மஸ்ஜித் தகர்ப்பு நடவடிக்கை குறித்து பாஜகவின் முன்னோடித் தலைவர்களுக்கு முழுமையாகத் தெரியும் - What is going to be most damaging for the BJP is that the Liberhan Report indicts its top leadership of being fully aware of 'the tailor- made exercise' that resulted in the demolition of the Babri Masjid" |
அப்போது அவரை விசாரிக்க மறுத்த லிபரான் கமிஷன், பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் பட்டியலில் 51ஆவதாக இப்போது அவரது பெயரைக் குறிப்பிட்டுள்ளது, " முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேய்" என்று.
மேலும், பாராளுமன்றத்தில் வைக்கப்படும் முன்னரே NDTV கைவசம் சென்று விட்ட லிபரான் கமிஷன் அறிக்கை, "நன்கு திட்டமிடப் பட்ட பாபரி மஸ்ஜித் தகர்ப்பு நடவடிக்கை குறித்து பாஜகவின் முன்னோடித் தலைவர்களுக்கு முழுமையாகத் தெரியும் - What is going to be most damaging for the BJP is that the Liberhan Report indicts its top leadership of being fully aware of 'the tailor- made exercise' that resulted in the demolition of the Babri Masjid" என்று கூறுகிறது.
"விசாரணைக் கமிஷன் என்றாலே மக்களின் வரிப் பணத்தைக் கோடி கோடியாகக் 'கொட்டிக் கொள்வதற்கு' மட்டும் அமைக்கப் படும் அமைப்பு; குற்றவாளிகளுக்கு என்னவகை தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்குக் கையாலாகாத அமைப்பு" எனும் இழிவுகள் இனியேனும் மாற்றப் படுமா?
பாபரி மஸ்ஜிதைத் தகர்த்த குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்களா?
பதினேழு ஆண்டுகளாக இந்திய நீதிபீடங்களின் மீது நம்பிக்கை வைத்து, நாட்டுக்கு இழைக்கப் பட்ட அவமானத்துக்கும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கும் நீதி தேடி அலையும் முஸ்லிம் சமுதாயத்திற்கு நீதி கிடைக்குமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!