அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, December 16, 2009

டென் மார்க், கோபென்ஹெகன் நகரம் தீப்பிடித்தது


கொபென்ஹெகேன் நகரில் கலவரத்தீ பற்றிக் கொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரை, இடதுசாரி இளைஞர்களுக்கும், போலீசுக்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.

டென்மார்க் தலைநகர் கொபென்ஹெகனில், ஐ.நா.கூட்டிய பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடும் பாதுகாப்புடன் வாரக்கணக்காக நடைபெற்று வருகின்றது. உலகத்தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டுக்கு வெளியே, சாமானியரின் மாநாடு வீதிகளில் கூட்டப்படுகின்றது. உலகம் முழுவதிலும் இருந்து வந்த இடதுசாரி ஆர்வலர்கள் கோபென்ஹெகன் நகரில் குழுமியுள்ளனர். பெரு வணிக நிறுவனங்கள் காலநிலை மாற்றத்தையும் லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாற்ற எத்தனிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்தனர். அனைத்து மக்களுக்குமான கருத்தரங்குகளில் Naomi Klein போன்ற தீவிர முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அனேகமாக ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் யாவும் கோபென்ஹெகன் நகரின் முக்கிய தெருக்களில் இடம்பெற்றுள்ளன.
அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் "கிறிஸ்டியானா" பகுதியில் இடம்பெற்றுள்ளன. இதனால் கோபென்ஹெகன் நகரின் கிறிஸ்டியானா வட்டாரம், டென் மார்க் போலிசால் முற்றுகை இடப்பட்டது. இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்படும் கிறிஸ்டியானா இளைஞர்கள் வீதித்தடைகள் போட்டு போலீசுடன் மோதினார்கள். (மோதலைக் காட்டும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.) கிறிஸ்டியானா பற்றி சில குறிப்புகள். 1970 ம் ஆண்டு, கோபென்ஹெகன் நகரின் மத்தியில் அரசாங்கத்தால் கைவிடப்பட்ட 34 ஹெக்டேயர் பகுதியில், டென் மார்க் இடதுசாரிகள் சென்று குடியேறினார்கள். இவர்களில் அநேகமானோர் ஹிப்பிகள். "கிறிஸ்டியானா" அல்லது "சுதந்திர நகரம்" என்று தமது பகுதிக்கு பெயரிட்டனர்.

வெளி உலகத்தில் இருந்து தம்மை துண்டித்துக் கொண்ட சுமார் 700 "கிறிஸ்டியானா பிரஜைகள்", அங்கே கம்யூன் ஒன்றை ஸ்தாபித்தனர். கூட்டுறவுப் பண்ணைகளை அமைத்தனர். தொழிலகங்கள், பாடசாலைகள், பொழுதுபோக்கு மையங்கள் எல்லாமே அதற்குள் இருந்தன. பணப்புழக்கம் இல்லை. முதலாளி, தொழிலாளி பேதமில்லை. எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும். முப்பது வருடங்களுக்கு மேலாக கிறிஸ்டியானா பிரதேசத்திற்குள் போலிஸ் நுழைவதில்லை. ஏனென்றால் அங்குள்ளவர்கள் அரசாங்க சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இருப்பினும் சில வருடங்களுக்கு முன்னர் கஞ்சா பாவனையை காரணமாக காட்டி, போலிஸ் நடவடிக்கை எடுத்தது. போலிஸ் கிறிஸ்டியானா குடியிருப்புகளை அப்புறப்படுத்த திட்டமிட்டது போல தோன்றியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இடதுசாரி கலகக்காரர்களின் புகலிடமாக திகழும் கிறிஸ்டீனா, அரச எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானா போராட்டங்கள் யாவும் அங்கிருந்து தான் வழி நடத்தப்படும்.

தற்போது நடைபெறும் காலநிலை மாநாட்டிற்கு போட்டி மாநாடு நடத்திக் கொண்டிருந்த கிறிஸ்டியானா பொலிசாரின் கெடுபிடிக்கு உள்ளானதில் வியப்பில்லை. டிசம்பர் 15 ம் தேதி, கிறிஸ்டியானா சுற்றுவட்டாரமெங்கும் போலிஸ் குவிக்கப்பட்டது. உள்ளே செல்வோர், வெளியே வருவோர் எல்லோரும் சோதிக்கப்பட்டனர். வீதிப் போக்குவரத்திற்கு தடை விதித்தனர். இதற்கு பதிலடியாக இடதுசாரி இளைஞர்கள் தமது குடியிருப்புகளை சுற்றி காவலரண்கள் அமைத்தனர். அங்கிருந்த படியே போலிஸ் மீது பெட்ரோல் குண்டுகள் வீசினர். வீதிகளில் நின்ற கார்களும் எரிக்கப்பட்டன.






No comments: