அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 31, 2009

மத்திய அரசுப்பணியில் மார்க்க அறிஞர்கள்

சமூகநீதியில் ஆழ்ந்த பிடிப்புள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங், உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு சட்டத்தை தடைகளை தவிடுபொடியாக்கி நிறைவேற்றிக் காட்டினார்.



சமூக நீதிப் பயணத்தில் இது ஒரு மைல் கல் ஆகும். மதரஸாவில் பயின்று வெளி வருவோரும் மத்திய அரசுப் பணிகளுக்கு தகுதியானவர்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டு அடுத்ததொரு மைல் கல்லைப் பதித்துள்ளனர் அர்ஜுன் சிங்.




மதரஸாக்களை பயங்கரவாதத் கூடங்கள் என்றும், மதரஸாக்கள் பயங்கரவாதத்தைப் போதித்து வருகின்றன என்றும் பா.ஜ.க ஆட்சியில் அரசு எந்திரங்களின் உதவியோடு அவதூறு பரப்பப்பட்டது. பல மதரஸாக்கள் சோதனைக்கு ஆளாகின.




மதரஸாக்களில் உயர்ந்த அறங்களும், மனிதகுலத்தை மேம்படுத்தும் திருமறைத் தத்துவங்களும் தான் போதிக்கப்படுகின்றன. இதை உணர்ந்ததாலோ என்னவோ, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்கள் வழங்கும் பட்டங்கள் மத்திய பள்ளிக் கல்வித்துறை (சி.பி.எஸ்.சி) சான்றிதழுக்கு இணையானவை என்றும் இந்திய அரசின் பள்ளிக் கல்வித்துறையின் அங்கீகாரத்திற்குரியவை என்றும் அறிவித்துள்ளார்.




ஜன 20, 2009 அன்று மாநில சிறுபான்மை ஆணையங்களின் ஆண்டு விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றும் போது, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பை அர்ஜுன் சிங் வெளியிட்டார். மேலும் மதரஸா பட்டங்களைப் பெற்றவர்கள் மத்திய அரசுப் பணிகள் உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு தகுதியானவர்கள் என்றும் அமைச்சர் அர்ஜுன் சிங் அறிவித்துள்ளார்.





இம்மாநாட்டில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் முஹம்மது ஹமீத் அன்சாரி உரையாற்றும் போது, தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான ஆணையம் ஆகியவற்றுக்கு இருப்பது போன்ற விசாரணை அதிகாரத்தை தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கும் வழங்க வேண்டும் என வ­யுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




மதரஸா பட்டங்கள் மத்திய அரசின் கல்வி நிறுவனச் சான்றிதழுக்கு இணையானவை என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மதரஸா பட்டம் பெற்றோரை மத்திய அரசுப் பணிகளில் அமர்த்திட, வெளியிட்ட அறிவிப்பை அரசாங்கம் செயல்வடிவமாக்க வேண்டும். மதரஸாக்கள் தமது கல்வித் திட்டத்தை உயர்கல்வி நிபுணர்களைக் கொண்டு மென்மேலும் தரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments: