அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, November 10, 2011

'கோமாதா'வை பாதுகாக்க கோஷம் போடும் தினமணி.

untitled.bmp
ந்துக்கள் வழிபடும் கடவுளர்களின் பட்டியலில் பசுவும் ஒன்று. அதை நாம் குறைகாண முடியாது. அது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். ஒருவர் தனக்கு சொந்தமான எந்த ஒரு பொருளையும் விற்கும் உரிமை படைத்தவர். அந்த அடிப்படையில் மாடு வளர்க்கும் ஒருவர், அந்த மாட்டின் மூலம் பலனில்லை என்றால் அதை விற்பதற்கு அவருக்கு அனுமதியுண்டு. அதே போல் அவர் விற்கும் மாட்டை விலைக்கு வாங்கிச்செல்லும் ஒருவர் அதை இறைச்சியாக்கி விற்பதற்கும் உரிமையுண்டு. இதில் அடுத்தவர் தலையிட எந்தவித நியாயமுமில்லை. ஆனால், ஒரு நேரத்தில் பசுவதை என்று பசுவுக்கு மட்டும் வக்காலத்து வாங்கிய 'அவாள்கள்' இப்போது காளை மாட்டிற்கும் ஆதரவுக் கரம் நீட்டத் தொடங்கியுள்ளார்கள். இதுபற்றி ''தடை விதத்தால் தான் என்ன?'' என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ள தினமணி நாளிதழ் தலைகால் புரியாமல் உளறியுள்ளது.
 
''அண்மையில் கேரள அரசு வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம் அம்மாநில மக்களின் உணவுப்பழக்கம் தொடர்பானது. அந்தப் புள்ளிவிவரம் தரும் தகவல்கள் தமிழர்களுக்கு மகிழ்ச்சி, அதிர்ச்சி இரண்டையும் சேர்த்துத் தருகின்றது. கேரள மாநில மக்களுக்கு ஒரு நாளைக்கு மொத்தம் 5,034 டன் இறைச்சி தேவைப்படுகிறது. இதில் 45 விழுக்காடு இறைச்சி கறிக்கோழி வகை. கறிக்கோழிக்காக மட்டும் கேரள மக்கள் 2009-10 நிதியாண்டில் ரூ. 2,844 கோடி செலவிட்டுள்ளார்கள். இதில் ரூ. 1,752 கோடி வெளிமாநில கறிக்கோழிகளுக்காகச் செலவிட்டது. அதாவது இதில் 90 விழுக்காடு கறிக்கோழி வணிகம் தமிழ்நாட்டுக்குரியது என்பதால், இவ்வளவு பெரிய வணிக வாய்ப்பை கேரளத்தின் மூலம் தமிழர்கள் பெறுகிறார்கள் என்கிற வகையில் மகிழ்ச்சி'' என்று கூறும் தினமணி, உணவுக்காக கோழிகளின் உயிர்கள் பறிக்கப் படுவதையோ, உணவுக்காக கோழிகள் கேரளாவுக்கு விற்கப்படுவதையோ குறைகாணவில்லை. மேலும் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கொலைகளால் கிடைக்கும் வருமானத்தை தமிழர்கள் பெறுவதை வரவேற்பதன் மூலம் கோழியை உணவுக்காக கொல்வதை சரி காண்கிறது தினமணி. ஆனால் அடுத்து தனது கடவுளான[?] கோமாதா விற்பனையை பற்றி கூறும்போது,
 
''கேரள மக்களின் பிரியமான அசைவ உணவான மாட்டிறைச்சி பெரும்பகுதியாக உள்ளது. இந்த மாட்டிறைச்சித் தேவையை அண்டை மாநிலங்கள்தான் முழுமையாகப் பூர்த்தி செய்கின்றன. 2009-10 நிதியாண்டில் அண்டை மாநிலத்திலிருந்து 61 லட்சம் மாடுகள் சுங்கச்சாவடிகள் வழியாக முறையாகவும், 18 லட்சம் மாடுகள் கடத்தப்பட்டும் கொண்டுவரப்பட்டன என்றும் கூறப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு 79 லட்சம் மாடுகள் கேரள மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. 90 விழுக்காடு மாடுகள் தமிழகத்திலிருந்துதான் கேரளத்துக்குச் செல்கின்றன என்பதும், தமிழ்நாட்டில் மாடுகள் எண்ணிக்கை அண்மையில் வேகமாகக் குறையத் தொடங்கிவிட்டது என்பதும்தான் அதிர்ச்சியைத் தருகிறது. கர்நாடக மாநிலத்திலிருந்து கேரளத்துக்கு அதிக அளவில் மாடுகள் கடத்தப்படுகின்றன என்கிற பிரச்னை எழுந்தபோது, அந்த மாநில அரசு எடுத்த முதல் நடவடிக்கை அடிமாடுகள் அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்குத் தடை விதித்ததுதான். தற்போது கர்நாடக மாநிலத்திலிருந்து கள்ளத்தனமாக மாடுகள் கடத்தப்படலாமேயொழிய, சட்டப்படி கொண்டு செல்லப்படுவதில்லை. இதனால், கேரளத்தின் மாட்டிறைச்சி தேவை முழுக்க முழுக்கத் தமிழகத்தைச் சார்ந்துள்ளது. தமிழக மக்களோ விவசாயத்துக்கு மாடுகளை வளர்க்கும் வழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வந்து, தற்போது இருக்கின்ற மாடுகளையும் அதிக விலை கிடைக்கும் ஒரே காரணத்தால் அடிமாட்டு வியாபாரிகளுக்கு விற்று வருகின்றனர். பால் வணிகத்துக்காக கறவை மாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு, காளைகள் அனைத்தையும் கேரளத்துக்கு அனுப்பும் போக்கு எத்தகைய பிரச்னையைத் தமிழகத்துக்கு நாளை கொண்டு வந்து சேர்க்கும் என்பது தெரியவில்லை. தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாடு, ஆடு வழங்கும் திட்டத்தில், மாடு என்பது கறவை மாடு என்பதாகவே இருக்கிறது. கால்நடை மருத்துவமனைகளில் உறைவிந்து இருப்பதால், காளைகளே தேவையில்லை என்ற நிலைமையை நோக்கித் தமிழகம் செல்லுமேயானால் இதன் எதிர்வினைகள், மாடுகளுக்கான புதுப்புது நோய்கள்போல என்னவெல்லாம் நேருமோ யார் அறிவார்?'' நம் பாரம்பரிய மாடுகளான, காங்கேயம், மணப்பாறை மாடுகளை ஏறக்குறைய நாம் இழந்துவிட்டோம் என்கின்ற நிலையில், தற்போது காளை மாடுகள் அனைத்தையும் கேரள மாநிலத்தின் இறைச்சித் தேவைக்காக இழப்பது சரியான செயல்தானா? ஏன் தமிழக அரசும், கர்நாடக அரசைப்போல அடிமாடுகள் விற்பனைக்குத் தடை விதிக்கக்கூடாது?'' என்று தனது நீண்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தி இறுதியாக இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படக் கூடாது; அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது; அதற்கு தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தனது சங்பரிவார கருத்தை சமயம் பார்த்து நுழைக்கிறது தினமணி.
 
தினமணி இந்த தலையங்கத்தை தீட்டியதன் நோக்கம் ஜீவகாருண்யம் என்றால், அந்த ஜீவகாருண்யம் கோழிகள்-ஆடுகள் விசயத்தில் காணோமே? கோழிகள் ஏற்றுமதியை குதூகலித்து வரவேற்கும் தினமணி, தனது கோமாதா'வின் ஜோடியான காளை விசயத்தில் மட்டும் கண்ணீர் உகுப்பதேன்? உலகின் பணக்கார கடவுள் என வர்ணிக்கப்படும் திருப்பதி தேவஸ்தானமே, 'மாடுகளை பராமரிப்பது சாத்தியமில்லை என்பதால் மாடுகளை காணிக்கையாக பெறுவதை நிறுத்தவில்லையா? கோடிக்கணக்கான ரூபாய்களும், தங்கமும்-வெள்ளியும் நாள்தோறும் கொட்டப்படும் ஒரு கோவில் நிர்வாகத்தால் மாடுகளை பராமரிப்பது இயலாத காரியம் எனில், ஒரு ஏழை உபயோகமற்ற ஒரு மாட்டை அடிமாட்டிற்கு விற்காமல் அதை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்க வேண்டும் என்கிறதா தினமணி?
 
அடுத்து தனது மாட்டு பாசத்தை காட்ட அறிவியலையும் துணைக்கழைக்க தவறவில்லை தினமணி. ''ஆடுகள், மாடுகள், கோழிகள் வெறும் இறைச்சிக்காக வளர்க்கப்படும்போது இவற்றின் உணவுக்காக அழிக்கப்படும் தாவரங்கள், புவிவெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றன. ஆகையால், இறைச்சி உணவுத் தேவை குறையக் குறைய புவிவெப்ப அபாயமும் குறையும் என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லிக்கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் யாருமே இல்லை'' என்கிறது தினமணி. 
 
சிந்தித்து பார்த்துத்தான் இதை சொல்கிறதா தினமணி? ''ஆடுகள், மாடுகள், கோழிகள் வெறும் இறைச்சிக்காக வளர்க்கப்படும்போது இவற்றின் உணவுக்காக அழிக்கப்படும் தாவரங்கள், புவிவெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றன என்ற தினமணியின் கூற்று உண்மை என்றால், இறைச்சிக்கு மட்டுமே பயன்படும் உபயோகமற்ற மாடுகளை சீக்கிரம் அடிமாட்டிற்கு விற்றுவிடுங்கள்; பூமி வெப்பமாவதை தடுங்கள் என்றல்லவா தினமணி சொல்லவேண்டும். ஆனால், உபயோகமற்ற மாட்டை விற்காமல் வீட்டில் வைத்துக் கொண்டிருந்தால் அதற்காக தினந்தோறும் தாவரங்கள் அழிக்கப்படுமே? அப்போது பூமி வெப்பமாகாதா?  இது தினமணியின் சிந்தனைக்கு எட்டவில்லையா?
 
அடுத்து, ''ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதன் வாழ்விடம், உணவு, இனப்பெருக்க அளவு போன்றவற்றை இயற்கை சமநிலையில் வைத்திருக்கிறது. இதில் குறைவு அல்லது மிகை இரண்டுமே பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதிக்கும்''என்கிறது தினமணி. மனிதனின் தேவையறிந்து இயற்கையே அதாவது இறைவனே ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் வாழ்விடம், உணவு, இனப்பெருக்க அளவு போன்றவற்றை சமநிலையில் வைத்திருக்கிறான் எனும் போது, அடிமாட்டிற்காக மாடுகள் விற்கப்படுவதால் மாடுகள் எண்ணிக்கை குறைகிறது என மாய்ந்து மாய்ந்து தினமணி எழுதவேண்டிய அவசியமென்ன?
 
இறுதியாக, இப்படியெல்லாம் உளறி, ஜெயலலிதாவை பசுவதை தடைச் சட்டம் கொண்டுவரச் செய்ய  தினமணி முயற்ச்சிப்பதை விட நேரடியாகவே தனது கோமாதா கோரிக்கையை தினமணி வைக்க வேண்டியதுதானே? ஆனாலும் ஏற்கனவே கோயிலில் கோழி ஆடு மாடு வெட்டக்கூடாது என சட்டம் போட்டு அதனால் ஏற்பட்ட விளைவை  உணர்ந்துள்ள முதல்வர், தினமணியின் கழுத்து மணி ஒலிக்கும் ஓசையை காதில் வாங்கமாட்டார் என்றே நம்புகிறோம்.

No comments: