அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, November 6, 2011

பெட்ரோல் விலையை குறைக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம் : மம்தா மிரட்டலுக்கு "பெப்பே!'

புதுடில்லி:"பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் பெறப்படாது. அதற்கான வாய்ப்பே இல்லை' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதே நேரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மிரட்டலுக்கும் "பெப்பே' காட்டி விட்டது.

பெட்ரோல் விலை கடந்த வியாழனன்று, லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகளும், மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளன. இந்நிலையில், உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை வாபஸ் பெறப்படாது என, மத்திய அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.


அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், "பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தான் எடுத்துள்ளன. அவர்கள் அந்த முடிவை எடுக்க, அரசை கலந்து ஆலோசிக்க வேண்டியதில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், இந்த முடிவை எடுத்துள்ளன' என்றன.

இதற்கிடையில், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிவிப்புக்கு, மத்திய அரசில் இடம் பெற்றுள்ள மூத்த கேபினட் அமைச்சர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை வாபஸ் பெறுவது என, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த அமைச்சர்களின் அதிகாரக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், அப்போது மத்திய அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவரின் ஒப்புதல் பெறப்பட்டே, வாபஸ் முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின்னரும் சில மாதங்கள் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்த மம்தா, ஆதரவை வாபஸ் பெறப்போவதாக மிரட்டல் விடுக்காதது ஏன்? மம்தாவைப் போன்றவர்கள் கூட்டணியில் இருந்தால், பா.ஜ., போன்ற எதிர்க்கட்சிகளே தேவையில்லை.மேற்கு வங்கத்தில், பெட்ரோல் மீது 26 சதவீத விற்பனை வரி விதிக்கப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் ஆளும் டில்லியில் 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. மம்தாவுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால், டில்லியில் உள்ள அளவுக்கு மேற்கு வங்கத்திலும் பெட்ரோல் மீதான விற்பனை வரியைக் குறைக்கலாம்.

இதேபோல், பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களும் விற்பனை வரியைக் குறைக்க வேண்டும்.கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்க வரி மற்றும் கலால் வரியை, இந்த ஆண்டு முற்பகுதியில் மத்திய அரசு குறைத்தது. இதன் மூலம் அரசுக்கு 49 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.வாகன எரிபொருட்கள் மீது, மத்திய அரசானது லிட்டருக்கு 2 ரூபாய் மட்டுமே வரி விதிக்கிறது. அதுவும், நெடுஞ்சாலை கட்டுமானப் பணிக்காகவே விதிக்கிறது. ஆனால், பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம், மாநில அரசுகள் கூடுதல் வரி வருவாய் பெற்று பகல் கொள்ளை அடிக்கின்றன.இவ்வாறு மூத்த அமைச்சர் கூறினார்.

அபிஷேக்சிங்விகாங்., தகவல் தொடர்பாளர்: ""பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெறும்படி காங்கிரஸ் கட்சி கோரவில்லை. இந்த விஷயத்தில் அரசு தான் முடிவெடுக்க வேண்டும். அரசின் அதிகார வரம்பிற்குள் நுழைய நாங்கள் விரும்பவில்லை. அரசு என்ன செய்ய வேண்டும். என்ன கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என, காங்கிரஸ் ஒரு போதும் சொல்வதில்லை. பிரச்னையை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

No comments: