அத்வானியை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் பாகிஸ்தான் கோரிக்கை தாவூதுக்கு அத்வானியை கேட்கும் லஷ்கர்!! சனிக்கிழமை, டிசம்பர் 6, 2008, இஸ்லாமாபாத்: தாவூத் இப்ராகிமை ஒப்படைக்கக் கோரும் இந்தியா முதலில் அத்வானி உள்ளிட்டோரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என லஷ்கர் இ தொய்பா அமைப்பும், சில பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் குதர்க்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தான் இந்தக் கோரிக்கையை அரசியல்வாதிகள் சிலர் வைத்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட சில அரசியல் கட்சித் தலைவர்கள், தாவூத் இப்ராகிம், லஷ்கர் இ தொய்பா தலைவர், ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய அமைப்புகளின் தலைவர்களை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோருவது போல, எல்.கே.அத்வானி போன்றோரை நாமும் கேட்க வேண்டும்.
இவர்கள் பாகிஸ்தானின் மோஸ்ட் வான்ட்டட் பட்டியலில் உள்ளவர்கள். இவர்களை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க இந்தியா முன்வர வேண்டும் என்று கோரினார்களாம்.
இருப்பினும் பெரும்பாலான தலைவர்கள் இந்தியாவுடன் அமைதியாக போகலாம். இந்தியத் தரப்பில் நிலவும் கோபத்தைத் தணிக்க தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் இன்னொரு முகமான ஜமாத்துல் தாவா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹியா முஜாஹித் மற்றும் அந்த அமைப்பின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எல்.கே.அத்வானி மற்றும் இந்துத் தீவிரவாதிகளை நாடு கடத்தக் கோரும் உரிமை பாகிஸ்தானுக்கு சட்டப்படி உள்ளது.
லஷ்கர் இ தொய்பா தலைவர் சயீத் ஒரு மதத் தலைவர். அவர் எந்த நேரத்திலும், எப்போதும், தீவிரவாதத்தை ஆதரித்ததில்லை. அதுபோன்ற செயல்களிலும் அவர் ஈடுபட்டதில்லை.
அவர் எந்தக் குற்றத்தையும் செய்ததில்லை. பாகிஸ்தானிலும் சரி, உலகின் வேறு எந்தப் பகுதியிலும் சரி அவர் எந்தவிதமான தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்று கூறியுள்ளார்.
ஏன் அத்வானியை கேட்கிறார்கள்?:
அத்வானியை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் பாகிஸ்தான் தரப்பில் கோரப்படுவது இது 2வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தாவூத், சயீத், மசூத் அஸார் ஆகியோர் உள்ளிட்ட 20 பேரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசு விடுத்த கோரிக்கைக்குப் போட்டியாக அத்வானி உள்ளிட்ட சிலரின் பட்டியலை கடந்த 2001ம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவிடம் தந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், கராச்சி போலீஸ் ஆவணங்களின்படி அத்வானி உள்ளிட்ட 12 பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்.
1947ம் ஆண்டு பாகிஸ்தானின் தந்தையான முகம்மது அலி ஜின்னா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களைக் கொலை செய்ய முயற்சித்ததாக அவர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
இதுதொடர்பாக ஜாம்ஷெட் குவார்ட்டர்ஸ் காவல் நிலையத்தில் அத்வானி உள்ளிட்டோர் மீது 1947ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் முதல் தகவல் அறிக்கை எண் 4/47 ஆகும்.
முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தவர் இன்ஸ்பெக்டர் தூத்தி ராம். அத்வானி உள்ளிட்ட 18 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் மீது, முகம்மது அலி ஜின்னா, பிரதமர் லிகாயத் அலி கான், காஜா நசிமுதீன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டனர். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் 6 பேரும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர் என்றார் அவர்.
அத்வானியை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறையைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதை விட முக்கியமான பிரச்சினைகள் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது
|
No comments:
Post a Comment