அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, July 6, 2009

திக்கு தெரியாத காட்டில் தத்தளிக்கும் பா.ஜ.,

லோக்சபா தேர்தலில் பா.ஜ., படுதோல்வியை சந்தித்தது ஏன் என்பது பலரும் அறியாத புதிராக இருந்தது. அக்கட்சியில் நடந்த உட்கட்சி மோதல்கள், தோல்விக்கான காரணத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டன.


கட்டுக்கோப்பான கட்சியாகத் தோற்றமளித்த பா.ஜ., உண்மையில் அவ்வாறில்லை என்பதையும், அக்கட்சித் தலைவர்கள் தேர்தலில் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்பதையும் வெளியே வந்த சச்சரவுகள் காட்டி விட்டன.கட்சியின் இரும்பு மனிதராக முன்னிறுத்தப்பட்ட அத்வானியின் முன்னிலையில் இரண்டாம் நிலைத் தலைவர்கள் மோதிக்கொண்டது, இது தான் முதல் முறை. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டிய நேரத்தில், பா.ஜ.,வின் முழு கவனமும் கட்சியை சிதறாமல் காப்பாற்றுவதில் திரும்பிவிட்டது.மாற்றுக் கட்சியைச் சார்ந்த பிரதமர் மன்மோகன் சிங் கவலைப்படும் அளவுக்கு பா.ஜ.,வின் நிலை மாறியது விதிவசம் என்றே சொல்ல வேண்டும்.



லோக்சபா தேர்தலின்போது, மன்மோகன், சோனியா கூட்டுத் தலைமையில் காங்கிரஸ் பலவீனமாகக் காட்சியளித்தது. மாறாக, அத்வானி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவானதாகக் காணப்பட்டது. இயல்பு நிலையில், அது ஒரு போலித்தோற்றமே என்பதை, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் கண்டனங்கள் வெளிப்படுத்திவிட்டன. பா.ஜ.,வின் பலவீனம், காங்கிரசின் பலமாக மாறிவிட்டது.நடந்து முடிந்த தேர்தலை, பா.ஜ., கட்சி ரீதியாகவோ, கூட்டணி ரீதியாகவோ ஒருங்கிணைந்து சந்திக்கவில்லை. நவீன பிரசார உத்திகள் மட்டும் போதும் என்று பா.ஜ., தலைவர்கள் கருதிவிட்டனர். அதன் எதிரொலியாகவே தற்போது உயர்மட்டத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். "வெற்றிக்கு ஆயிரம் தந்தைகள்; தோல்விக்கு ஒரு அனாதை' என்ற ஆங்கிலப் பழமொழியை பா.ஜ., தலைவர்கள் நிரூபித்துவிட்டனர்.உட்கட்சிப் பூசல் களால்தான் உ.பி., டில்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியை இழந்தது; அம்மாநிலங்களில் எம்பி.,க்களின் எண்ணிக்கையும் சரிந்தது. இதை பா.ஜ., மத்தியத் தலைமை இன்னமும் சரிசெய்யவில்லை.



அதற்குள் உத்தரகண்ட், கர்நாடகாவிலும் பூசல்கள் துவங்கிவிட்டன. "மக்கள் சேவையே மகேசன் சேவை', "சுயநலமற்ற அரசியல் தனித்தன்மை' ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தீனதயாள் உபாத்யாய கட்டியமைத்த ஜனசங்கத்தின் தற்போதைய வடிவமான பா.ஜ., சுயநலமிகளின் கூடாரம் ஆனது எப்படி என்று அத்வானி சிந்திக்க வேண்டும். உட்கட்சிக் குழப்பம் இல்லாமல் இருந்திருந்தால் "இந்தி பெல்ட்' மாநிலங்களில் பா.ஜ., முழுமையான வெற்றி பெற்றிருக்கும்; அப்போது தேசிய அரங்கிலும் காட்சி மாறியிருக்கும். பா.ஜ., தற்போது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்துகொண்டு தவிக்கிறது. இந்த உண்மையை மறந்துவிட்டு, "இந்துத்துவமே உயிர்மூச்சு' என்ற தீர்மானத்துடன் பா.ஜ., தேசிய செயற்குழு கலைந்திருக்கிறது.



"தோல்விக்கான காரணங்களை உளப்பூர்வமாக ஆராய வேண்டும்' என்ற அருண் ஷோரியின் குரல், கட்சியைக் காக்கும் வேகத்தில் அமுக்கப்பட்டது. தோல்வி குறித்து ஆராய ரகசிய தனிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக, தலைவர் ராஜ்நாத் சிங் சப்பைக்கட்டு கட்டினார்.தேர்தல் முடிவு வந்து ஒரு மாதம் முடிந்த நிலையிலும் அதை பரிசீலிக்காமல் தவிர்ப்பது, பா.ஜ.,வின் மெத்தனத்தையே காட்டுகிறது. துடிப்புள்ள தலைவர் ராகுலின் தலைமையில் காங்கிரஸ் புத்துணர்வு பெற்றுவரும் நிலையில், பா.ஜ., கிழட்டுத்தன்மையுடன் தத்தளிக்கிறது.இது பா.ஜ.,வுக்கு சோதனையான காலகட்டம். அத்வானி கூறியதுபோல, இத்தேர்தல் முடிவு பா.ஜ.,வை 1984 போல துடைத்தெறிந்துவிடவில்லை; சிறு சரிவுதான்.



ஆனால், 1984ல் பா.ஜ., தலைவர்களிடமிருந்த கூட்டுத் தலைமையும், லட்சிய வேகமும், தற்போதைய தலைமுறையினரிடம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.வெறும் இரண்டு எம்.பி.,க்களாக இருந்த பா.ஜ.,வை தனது தலைமைப் பண்பாலும், அதிரடி வியூகத்தாலும் வளர்த்தவர் அத்வானி தான் என்பதில் சந்தேகமில்லை. "வாஜ்பாய் பிரதமராவதற்கு அத்வானி உழைத்தது போல, அத்வானி பிரதமராக அடுத்தநிலைத் தலைவர்கள் உழைக்கவில்லை' என்று, கட்சியின் சிந்தனாவாதி சுதீந்திர குல்கர்னி கூறியதும் உண்மையே. இந்த ஏற்றத்தாழ்வுக்கு என்ன காரணம் என்பதை தேசிய செயற்குழு ஆலோசித்திருக்க வேண்டும்.செயற்குழுவின் இறுதியில் பேசிய அத்வானி, இதைக் கோடிட்டுக் காட்டினார்; "மூன்றாம் நிலை, நான்காம் நிலைத் தலை வர்களை வளர்க்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டார்.



ஆலமரம் போன்ற முதிய தலைவர்கள் நிலைபெற்றிருக்கும் போது, அதன் நிழலில் புதிய கன்று முளைக் காது என்பதை அவர் மறந்துவிட்டார்.கட்சியின் முன்னாள் சித்தாந்தியான நானாஜி தேஷ்முக், "அறுபது வயதுக்கு மேல் அரசு ஊழியர்கள் போலவே அரசியல்வாதிகளும் ஓய்வு பெற வேண்டும்' என்று கூறியதுடன், அவரே அரசியலிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, சமூகசேவகராகி விட்டார். ஆனால், சித்தாந்த அடிப்படையிலானது என்று கூறிக்கொள்ளும் பா.ஜ., இன்னும் தனிநபர் சார்ந்து தான் செயல்பட்டு வருகிறது.உடல்நலச் சீர்கேட்டால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால், இம்முறையும் வாஜ் பாய் தான் அத்வானிக்கு பதிலாக முன்னிறுத்தப்பட்டிருப்பார். வாஜ்பாய், அத்வானி, ஜோஷி என்ற மும்மூர்த்திகளுக்கு பதிலாக புதிய தலைவர்கள் இனம் காட்டப்பட்டிருந்தால், பா.ஜ., தற்போது சந்திக்கும் பூசல்கள் நேரிட்டிருக்காது. இரண்டாம் நிலைத் தலைவர்கள் மிகுதியாக இருந்தபோதும், அவர்களது சக்தியை ஒருங்கிணைக்கவும், "ஈகோ' இல்லாமல் அவர்களை வைத்திருக்கவும் கட்சியால் இயலவில்லை.காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலைக் கண்டிக்கும் பா.ஜ.,வும், வாரிசு அரசியல்மயமாகி வருவது கவலைக்குரியது.



ஜஸ்வந்த் சிங், விஜயராஜே சிந்தியா, மேனகா, எடியூரப்பா ஆகியோரின் வாரிசுகள் புதிய தாரகைகளாக உதயமாகியிருப்பது, பல்லாண்டுகளாக உழைத்துவரும் தொண்டர்களை யோசிக்கச் செய்துள்ளது. தேசிய செயற்குழுவில் ஷாநவாஸ் கான், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரும் மேனகாவும் மோதிக்கொண்டதற்கு வாரிசு மீதான பாசம் தான் காரணம். கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதற்கும் வாரிசு அரசியலே காரணம். இதை விவாதிக்கவும் பா.ஜ., தேசிய செயற்குழு மறந்துவிட்டது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் தீவிர முயற்சிகளே காங்கிரஸ் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக மாறின என்பதை அக்கட்சி இன்னமும் உணரவில்லை.



காங்கிரசை பா.ஜ., முந்திவிடும் என்ற தோற்றம் ஏற்பட்டதால், அதன் எதிரிகள் காங்கிரஸ் பக்கம் ஒட்டுமொத்தமாக சாய்ந்தனர். நாகர்கோவில் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தோற்கடிக்கப்பட்டதை இங்கு நினைவுகூரலாம். நாடு முழுவதும், ஐம்பதுக்கும் மேற் பட்ட தொகுதிகளில் பத்தாயிரத்துக்கு குறைவான ஓட்டுகளில்தான் பா.ஜ., தோற்றது.சிறுபான்மையின விரோதத்தால், நாட்டு மக்கள் அனைவரது கட்சி என்ற தோற்றத்தை இழந்ததும் பா.ஜ.,வின் தோல்விக்கு காரணம். உபி.,யில் வருண் பேச்சால் முஸ்லிம் வாக்காளர்கள், காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். இதுகுறித்து, தேசிய செயற்குழுவில் விவாதம் நடந்திருப்பது ஆரோக்கியமான அறிகுறி.



பா.ஜ., மீதான மதவாத முத்திரை நீங்காத வரை, நாடு முழுவதும் சிறுபான்மையினர் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள 150 தொகுதிகளில் பா.ஜ.,வின் எதிரிகளே வெற்றி பெறுவர். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 150 தொகுதிகளை கைகழுவிவிட்டு, மீதமுள்ள தொகுதிகளில் வென்று ஆட்சியமைப்பது கனவாகவே இருக்க முடியும்.போதாக்குறைக்கு தென்மாநிலங்களிலும் (கர்நாடகா நீங்கலாக) வடகிழக்கு மாநிலங்களிலும் தக்க வளர்ச்சி அடையாமல் வடமாநிலங்களை மட்டும் நம்பினால், அதிர்ச்சித் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் புலம்ப வேண்டியது தான். இதைப் பற்றியும் பா.ஜ., தலைவர்கள் ஆலோசிக்கவில்லை. கட்சி நியமித்த குழுவாவது, இதுபற்றி ஆராய்வது பா.ஜ.,வுக்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் நன்மை தரும்.



எது எப்படி இருப்பினும், பா.ஜ., கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகம் சிறிதளவேனும் நிலவுவது திருப்தி அளிக்கிறது. சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா, முலாயம், பாதல், லாலு என்ற தனிநபர்களை சார்ந்துள்ள அரசியல் கட்சிகள் போலல்லாது, கட்சிக்கு மாறுபட்ட கருத்துகளையும் கூட தேசிய செயற்குழுவில் விவாதிக்க முடிந்தது, பா.ஜ.,வின் பலம். இந்நிலை இந்தியாவில் பா.ஜ.,- இடதுசாரி கட்சிகளிடம் மட்டுமே உள்ளது. இந்த உட்கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்தினால், பா.ஜ.,வின் தற்போதைய சரிவு, ஏணிப்படியாக வாய்ப்புண்டு.



அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜ., மட்டுமே வலுவான கட்சியாக இருப்பது, நாட்டின் அரசியலை நல்ல திசையில் திருப்பியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு, கட்சிக்குள் நிலவும் குழப்பங்களை சரிப்படுத்த வேண்டியது அவசியம்.எரிமலை போன்ற நிலையில் பா.ஜ., தவிப்பதாக, லோக்சபா எதிர்க்கட்சி துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். நடந்து முடிந்த பா.ஜ., தேசிய செயற்குழு, எரிமலை மீது சிறிதளவு தண்ணீரை மட்டுமே ஊற்றியுள்ளது; எரிமலையின் மையத்தை அமைதிப்படுத்துவது தான் அக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி மீது சுமத்தப்பட்டுள்ள சுமை; அதை அவர் மட்டுமே சுமக்க முடியாது.




No comments: