அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, November 25, 2009

லிபரான் கமிஷன் கடந்து வந்த பாதை!



டெல்லி: 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கலவரத்தை உண்டாக்கி சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர்.

சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பின்னர், அப்போதைய நரசிம்மராவ் அரசு, நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்தது.

பாபர் மசூதி இடிப்புக்கு காரணமாக அமைந்தவர்கள், பின்னணியில் இருந்தவர் மற்றும் இச்சம்பவத்திற்கு தொடர்புடைய அத்தனையையும் விசாரித்து அறிக்கையாக அளிக்குமாறு லிபரான் கமிஷனை அரசு கேட்டுக்கொண்டது.

கூடிய விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்க அரசு அப்போது கேட்டுக்கொண்டது. ஆனால், லிபரான் கமிஷன் தனது விசாரணையை முடிக்கு 17 ஆண்டுகளை எடுத்துக் கொண்டு விட்டது.

லிபரான் கமிஷன் தனது விசாரணையை 1993ம் ஆண்டு மார்ச் மாதமே துவங்கிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், லிபரான் கமிஷன் விசாரணைக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என பலமுறை குற்றம்சாட்டப்பட்டது.

குறிப்பாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது இதுபோன்ற தகவல்கள் பரவலாக வெளியாயின. வாஜ்பாய் பிரதமராகவும், அத்வானி மத்திய உள்துறை அமைச்சராகவும் இருந்த காலகட்டம் அது.

லிபரான் கமிஷன் முன்பு ஆஜராக பல்வேறு சங் பரிவாரத் தலைவர்கள் நீதிமன்றத்தில் பெற்ற தடையாணைகளும் விசாரணைக்கு முட்டுக்கட்டையாக அமைந்தன.

லிபரான் கமிஷனின் 399வது விசாரணை அமர்வி்ல்தான் பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் அயோத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்களிடம் அவர்களின் கருத்தைக் கேட்டு பதிவு செய்ய முடிந்தது.

2004ம் ஆண்டில் கமிஷன் முன்பாக முதல்முறையாக கல்யான் சிங் ஆஜரான போது, 'பாபர் மசூதி இடிப்பு, கடவுளின் செயல். பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் எனக்கு எவ்வித வருத்தமும் கவலையும் இல்லை' என்று பகிரங்கமாக கூறினார்.

2005ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கடைசியாக பி.வி.நரசிம்மராவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோரிடமும் கமிஷன் விசாரணை நடத்தியது.

ஆரம்பத்தில் இக்கமிஷனுக்காக ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர் 48 முறை நீட்டிக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நீதிபதி லிபரான் தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு விசாரணை ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் தனியாக நடந்து வருகிறது. அத்வானி உட்பட பல முக்கிய தலைவர்களும் வழக்கில் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் லிபரான் கமிஷன் அறிக்கை வெளியாவது இந்த சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
source:thatstamil

No comments: