அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, November 25, 2009

லிபரான் அறிக்கை: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் ப.சிதம்பரம். அயோத்தியில் தீவிர பாதுகாப்பு


டெல்லி: லிபரான் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்த அறிக்கையின் ஆங்கில நகலை மட்டும் மக்களவையில் தாக்கல் செய்தார். அதே போல மாநிலங்களவையிலும் இந்த அறிக்கை தாக்கலானது.

இந்த அறி்க்கையுடன் அதன் மீது மத்திய அரசு எடுத்த, எடுக்கவுள்ள நடவடிக்கை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியானது.

இந்த அறிக்கையில், மசூதி இடிப்பில் பாஜக தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் அமைப்புகளுக்கும் மற்றும் உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 68 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை லீக் ஆனதையடுத்து நாடாளுமன்றத்தில் பாஜக கடும் அமளியில் ஈடுபட்டது. இதனால் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந் நிலையில், லிபரான் அறிக்கை லீக் மற்றும் அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது ஆகியவை குறித்து விவாதிக்க இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் அவசரமாகக் கூடி விவாதித்தது.

கலவரம் வெடிக்கலாம் என மத்திய உளவுத்துறை மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததையடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருப்பதால் அவருக்குப் பதிலாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

அதில் லிபரான் கமிஷன் அறிக்கையை இன்றே நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

ஆங்கிலத்தில் உள்ள அறிக்கையை ஹிந்தியில் மொழி பெயர்க்க வேண்டியிருந்ததாலும், மேலும் இதன் மீது எடுக்கப்பட்ட, எடுக்கப்படவுள்ள நடவடிக்கை அறிக்கையையும் இணைத்து தாக்கல் செய்ய வேண்டியிருந்ததாலும் அறிக்கையை ஒரு மாதம் கழித்து தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால், அறிக்கையின் சில பகுதிகள் வெளியாகி விட்டதால், நாடாளுமன்றத்தில் இன்றே அது தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவே நாடாளுமன்றம் கூடும் முன் காலையிலேயே அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த அறிக்கையின் ஆங்கில நகல் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அறி்க்கை மீது மத்திய அரசு எடுத்த, எடுக்கவுள்ள நடவடிக்கை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்மீது வரும் வியாழக்கிழமை இரு அவைகளிலும் விவாதம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இந்த அறிக்கை லீக் ஆனதி்ல் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ப.சிதம்பரம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிப்பு:

இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் அயோத்தி, வாரணாசி, மதுரா நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: