அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 31, 2009

ஆதிக்க தொலைக்காட்சிகளும் அபலைச் சிறார்களும்!


ஆதிக்க தொலைக்காட்சிகளும் அபலைச் சிறார்களும்!அமெரிக்காவில் தயாராகும் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஃப்ரான்ஸில் ஒளிபரப்பப் படுவதை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சாதாரணமாக இதைக் கேள்விப்படுபவர், "இதிலென்ன பெரிய ஆச்சரியம் இருக்கிறது?" என்பர்.

ஆனால், போராட்டம் நடத்தக்கூடிய ஃப்ரான்ஸ் நாட்டு மக்களின் கூற்று அடுத்த நாட்டவரின் புருவத்தை வியப்பில் உயர்த்த வைக்கிறது. அந்தக் கூற்று, "கீழ்த்தரமான கலாச்சாரத்தைக் கொண்ட அமெரிக்கா, தனது தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் ஃப்ரான்ஸின் பண்பாட்டைச் சீரழிக்கிறது"

"வன்முறையையும் சமூக சீர்கேட்டையும் ஒருங்கே அள்ளித் தெளிக்கும் அமெரிக்க தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள், ஃபிரான்ஸ் நாட்டின் இறையாண்மையை தலைகீழாக்கிக் கொண்டிருக்கிறது" என்பதே ஃபிரான்ஸின் இன்றைய சூடான விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

"ஒரு தனிமனிதனுக்கான கட்டுப்பாடுகள் என்பது அடுத்தவரின் சுதந்திரத்தில் தடையிடா அளவு இருந்து கொள்ளலாம்!" என்ற கேலிக்கூத்தான நியதிகளை வகுத்துக் கொண்ட ஃபிரான்ஸ் போன்ற நாடுகளின் கலாச்சாரம், பண்பாடு, சமூகக் கோட்பாடுகள் ஆகியவை மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எவ்விதத்திலும் முரண்பட்டதல்ல. இத்தகைய சூழலில் ஃபிரான்ஸில் எழுந்துள்ள இந்த கோஷமே உலக மக்கள் வியப்படைவதற்குக் காரணமாக உள்ளது.

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவரும், உளவியல் நிபுணருமான ஜீன் பெக்மேன் மேற்கொண்ட ஆய்வில் வெளியான புள்ளிவிபரங்கள்:
சராசரியாக வாரத்திற்கு 28 மணி நேரம் என்ற புள்ளிவிபரத்தின் அடிப்படையில்,

வன்முறைகளைத் தொடர்ந்து காண்பதால் 8 வயதை நெருங்கி விடும்போது ஒரு சிறாரின் மனப்பக்குவம் ஒரு வாலிபரின் மனோநிலையை எட்டுகிறது.

12 வயதை நெருங்கும் வேளையில் ஒரு சிறுவன் / சிறுமி 8,000 கொலைகளை கண்களால் பார்த்து விடுகிறது. 18 வயதை நெருங்குகையில் இந்த எண்ணிக்கை 200,000 ஆக உயர்கிறது.

ஒரு வருடத்தில் ஒரு சிறார் பார்க்கும் விளம்பரங்களில் 30 நொடி அளவுள்ள விளம்பரங்களின் எண்ணிக்கை மட்டும் 20,000

சிறார்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் வன்முறையும் குரோதங்களும் இயல்பான நிகழ்வை விட ஐந்து மடங்கு கொடூரமாக்கி காட்டப்படுகிறது.

சினிமா மற்றும் சீரியல்கள் ஒரு குடும்பத்தினுள் பிணைந்துள்ள உறவுகளுக்குள் சீரழிவை ஏற்படுத்த வல்லவை.

முறையான வாழ்க்கை என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் ஃபிரான்ஸ் போன்ற முற்போக்கு(?) நாடுகளே வன்முறையைத் தொலைக்காட்சியிலும் அள்ளித் தெளிக்கும் அமெரிக்காவிற்கு எதிராக இத்தகைய போராட்டத்தில் இறங்கி விட்டது எனில் இறைவன் வகுத்துத் தந்த வாழ்க்கை நெறியின்படி வாழ கடுமையான போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் சர்வதேச முஸ்லிம்களின் நிலை என்ன?

ஓரிறைவன், ஓர் மறை மற்றும் இறுதித் தூதரின் வழிமுறைகள் என்ற வரம்பில் வாழும் உலக முஸ்லிம்களுக்கு என்று சில கோட்பாடுகள் உள்ளன.

தவறான உறவு கொள்ளாமை, சக மனிதர் மீது வெறுப்பையும் வன்முறையையும் உமிழ்வதை தவிர்த்தல், நேரத்தை வீணடிக்காமை, மது அருந்தாமை, பெரியவர்களை மதித்தல், சிறியவர்களிடத்தில் அன்பு காட்டுதல் போன்ற இஸ்லாம் வலியுறுத்தும் சிலவற்றை இங்கே உதாரணமாக சொல்லலாம்.

ஆனால், மேற்கத்திய கோட்பாடுகள் அனைத்தும் இதற்கு நேரெதிரானவை என்பது சிறு பிள்ளைக்குக் கூட தெரியும். அமெரிக்க கலாச்சாரத்தைச் சிறிது சிறிதாக நேசிக்க ஆரம்பித்திருக்கும் முஸ்லிம்கள் தாம், எதிர்கொண்டுள்ள சவால்கள் பற்றி அறிவார்களா?

உலக நாடுகள் அனைத்திலும் தனது கலாச்சாரத்தைப் புகுத்த முயற்சிக்கும் அமெரிக்காவின் யுக்தி பற்றி, பெற்றோர்கள் மட்டுமின்றி இஸ்லாமிய சிறார்கள் கூட அறிந்து வைத்திருப்பது எதனைக் காட்டிலும் மிக மிக முக்கியமானதொன்றாகும். தொலைக்காட்சி குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் பாதகங்கள் பற்றி தனது எச்சரிக்கையை விடுத்துள்ள American Academy of Pediatrics (AAP) இன் கூற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அது, சிறார்களைப் பின்னிப் பிணைந்திருக்கும் சிலந்தி - சக்திவாய்ந்த கருவியான தொலைக்காட்சி என்கிறது.

பதப்படுத்தப் பட்ட உணவு வகைகளையும் (Processed Foods) தானியங்கி வாழ்வையும் (Automated Living) சினிமா, விளம்பரங்கள் போன்ற கவர்ச்சிகள் தந்த போதையில் அடிமையாகியிருக்கும் முஸ்லிம் சிறார்கள், ஏற்கனவே "தானியங்கி நாகரிகத்திற்கு" (Automated Culture)த் தம்மை இழந்து அடிமையாகி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய மோகத்தையும் அடிமைத்தனத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பது வீட்டினுள் அமைதியாக உட்கார்ந்திருக்கும் தொலைக்காட்சிதான்.

வீடியோ கேம் போன்ற விளையாட்டுக்கள், டி.வி.டி ப்ளேயர்கள், குழந்தைகளுக்கு இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வல்லவை என்றாலும் தொலைக்காட்சிகளில் வீணடிக்கப் படும் நேரங்கள் அதிகம். பள்ளிக்குச் செல்லும் போதும் பள்ளியை விட்டு வந்தபோதும் டி.வி முன்பு தன்னை இருத்திக் கொள்ளும் சிறார்களை ஒரு மாயவலை கொண்டு கட்டிப் போடுகிறது தொலைக்காட்சிப் பெட்டிகள். இதன் மூலம் Body Mass Index எனும் அளவையில், உயரத்திற்கேற்ற எடை இன்றி அதிக எடை கூடி, சமூக அளவில் எதிலும் போட்டி போட முடியாமல் பலவீனர்கள் ஆக்கப் படுகின்றனர்.

சென்சார் போர்டு அமைத்துள்ள பிரிவுகள் (கீழே) இதில் குழந்தைகளைக் கவரும் நிகழ்ச்சிகளை விட, பாதிக்கும் நிகழ்ச்சிகளே அதிகம் ஒளிபரப்பாகின்றன.

TV-Y அனைத்துக் குழந்தைகளுக்கும் பொருத்தமானது

TV-Y7 ஏழு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கானது

TV-Y7-FV சிறிதளவு வன்முறைக் காட்சிகள்

TV-G பொதுவான பார்வையாளர்களுக்கு

TV-PG பெற்றோர்களின் வழிகாட்டல் (இதன் உட்பிரிவாக V - வன்முறை, S - ஆபாசம், L - மோசமான வார்த்தைப் பிரயோகங்கள், D - புண்படுத்தும் உரையாடல்கள்)

TV-14 / TV-MA - விவரிக்க வேண்டியதில்லை.

சென்சார் போர்டு என்ற பெயரில் தணிக்கைக் குழு ஏற்படுத்திய ஏட்டுச் சுரைக்காய் விதிமுறைகள் எந்த அளவு ஒளிபரப்பைக் கட்டுப்படுத்துகிறது? புகைப் பிடித்தல் மனித இனத்திற்கே திங்கானது என்று தெரிந்தும் வயது வந்தோர் புகைத்துக் கொள்ள அனுமதி தந்திருக்கிறது இந்திய ஜனநாயக நாடு. வன்முறையையும், ஆபாசத்தையும் ஒரு குறிப்பிட்ட வயதில் பார்த்துக் கொள்ளலாம் என்ற சமூகக் கேட்டிற்கு வழி வகுக்கும் அளவுகோலை மாற்றியமைப்பது மட்டுமே வளமான எதிர்கால இந்தியாவை உருவாக்க வல்ல முயற்சியாக இருக்கும்.

அதிக நேரம் ஊன்றி கவனித்து மூழ்கிப் போவதனால் ஸ்பைடர்மேன் போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களுடன் மனதளவில் வாழ்ந்து வரும் குழந்தைகள், அது போன்ற செயற்கை உருவாக்கத்திற்குப் பின்னால் நடக்கும் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், கிராஃபிக்ஸ் போன்றவற்றினை அறிந்து கொள்வதற்குத் தயாராக இல்லை. சமீபத்தில் வட இந்திActive Imageயாவில் சக்திமான் என்ற தொடரினால் பாதிக்கப் பட்ட ஒரு சிறுவன், தன்னையும் வந்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தூக்கு மாட்டி இறந்து போனது இதற்கு ஒரு உதாரணமாகும். சமீபத்தில் Center on Alcohol Marketing and Youth (CAMY) மேற்கொண்ட ஆய்வில் வெளியான புள்ளிவிபரங்களின்படி 2001 க்கும் 2006 க்கும் இடைப்பட்ட காலத்தில் மது அருந்துதலை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 30% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ொலைக்காட்சி மனதளவில் ஏற்படுத்தும் மாறுதல்களின் மூலம் சிறார்கள் பொறுமையை இழக்கிறார்கள். பலம் கொண்ட எதிரிக்கு அடங்கிப் போகும் மனப்பான்மையும் உத்வேகம், மன எதிர்ப்புச் சக்தி ஆகியவை சிறுகச் சிறுக இழக்கின்றனர் என்றும் தன்னிச்சையாக சிந்திக்கும் மனப்பான்மையை முற்றிலுமாக இழந்து இடர்பாடுகள் ஏதுமில்லாத ஒரு ரெடிமேட் உலகத்திற்காக இவர்கள் தவிக்கின்றனர் என்கிறது இன்னொரு அறிக்கை.

விளைவு?

பள்ளியின் விளையாட்டுகள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் நாட்டமின்மை, (ஜமாஅத்) கூட்டுத் தொழுகைகளைத் தவிர்த்தல், குடும்பத்தினருடன் (மஷூரா) அமர்ந்து கலந்துரையாடுவதில் விருப்பமின்மை, புத்தகங்களைப் படிப்பதை வெறுத்தல் என அவர்களிடையே வளர்ந்து வரும் மாறுதல்களின் பட்டியல் நீள்கிறது.

மொத்தத்தில், சமூகத்துடன் ஒன்று சேர்ந்திருக்கும் செயல்களில் இருந்து இத்தகைய செயல்கள் தூரமாக்குகின்றன என்பதே அதிர்ச்சி தரும் அறிக்கைகளின் முடிவுரையாக உள்ளன.

மனதளவிலும் உடலளவிலும் சோர்வைப் போக்கி புத்துணர்ச்சியைப் பெற்றுத்தரும் மேற்கூறிய அனைத்து வித உடல், உள்ளம் மற்றும் சமூக ரீதியிலான செயல்களில் இருந்தும் தூரமாக்கப் படுகிறார்கள்.

சுய சிந்தனை, கற்பனைத்திறன் என்பது குறைந்து, தொலைக்காட்சிகளில் போதிக்கப்பட்டதைப் பற்றி சிந்தனைகள் சுழல வைக்கப்படுகின்றன. குழந்தைகளின் நடை, உடை, முக பாவனைகள், பேச்சுத்திறன் என ஒவ்வொரு மனோபாவமும் மாற்றியமைக்கப்படுகிறது. சினிமா மற்றும் சீரியல்களில் காண்பிக்கப்படும் ஹீரோக்களின் துணிச்சல்(?) மிகு சாகசங்களின் பின்னணியில், பச்சைப் பொய்யை உண்மை போலாக்க ஒரு தொழிற்சாலையே இயங்குகிறது என்ற உண்மை குழந்தைக்குப் புலப்படுவதில்லை.

இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்த சுப்ரீம் கோர்டின் கண்டனம்!
"டிவி'க்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. "குடும்பத்தாருடன் அமர்ந்து பார்க்கும்படி ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் பெயரைச் சொல்ல முடியுமா?" என, மத்திய அரசை என கடந்த 21-10-2008 அன்று கடுமையாகச் சாடியுள்ளது சுப்ரீம் கோர்ட்.

"டிவி'க்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தரமில்லாதவையாக இருக்கிறது. இதைத் தடுக்க, "டிவி' நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு வரைமுறையைக் கொண்டு வர வேண்டும்" எனக் கோரி ஒரு தன்னார்வ அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வி, ஆஃப்தாப் ஆலம் ஆகியோர் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், "டிவிக்களில் வரும் நிகழ்ச்சிகளில் ஆட்சேபகரமான மற்றும் ஆபாசமான நிகழ்ச்சிகள் வருகின்றன. இதை தடுக்க, சில விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும்' என வாதிட்டார்.

சராசரியாக தொலைக்காட்சி பார்க்கும் ஒரு மாணவன் அல்லது மாணவி, காட்சிகளில் இடம்பெறும் கதாபாத்திரமாக தம்மை உருவகப் படுத்திக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் குரோதத்துடன் தாக்கி அழிக்கும் காட்சிகள், படுகொலைகள், தோல்வி - பொறாமை போன்ற உணர்வுகளினால் உள்ளுக்குள் உடைந்து சிதறுதல் மற்றும் அழுகை போன்ற காட்சிகளில் தம்மையும் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். செயற்கை உலகில் சஞ்சரிக்கும் இந்த சிறார்கள் இத்தகைய வார்ப்பு இயந்திரங்கள் மூலம் செயற்கையாகவே மனதளவில் முதிர்ச்சியடைய வைக்கப் படுகிறார்கள்.

சராசரியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் குழந்தைகள் பள்ளிப்பருவத்தை அடையும் முன்பாகவே 5000 மணி நேரத்தையும், பள்ளிப் பருவத்தை முடிக்கும் முன்னரே 19,000 மணி நேரத்தையும் தொலைக்காட்சிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதை எத்தனை பேர் அறிவோம்? இது இவர்கள் கல்வி கற்கும் சராசரி காலத்தை விட அதிகமாகும். ஆய்வின்படி சராசரியாக ஒரு குழந்தை 28 மணி நேரங்களை தொலைக்காட்சி முன் செலவு செய்கிறது. இந்த 28 மணி நேரமும் பார்ப்பதையும் மனதில் பதியவைப்பதையும் தவிர வேறு எந்த ஒரு சிறு நகர்த்தலையும் அது செய்யவில்லை என்பது இங்கே கவனிக்கத் தக்கது. தொலைக்காட்சி நீங்கலாக டி.வி.டி, வீடியோ கேம்ஸ், ஆடியோ ஸிடிக்கள் போன்றவற்றில் செலவு செய்யும் நேரங்கள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட வில்லை.

இந்தத் தலைப்பின் அடிப்படையில் புள்ளிவிபரங்கள் சேகரிக்கும் நிறுவனங்கள், "அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ஒரு குழந்தை, மூர்க்கத்தனமாகவும் புதிதாக படைப்புக்களை உருவாக்கும் உற்பத்தித் திறன் குறைவாகவும் பொறுமையற்றதாகவும் கற்பனைத் திறனற்றதாகவும் உடல் மற்றும் உள்ளப்பூர்வமாக மிகவும் பலவீனமாகவும் உருவாகிறது" என்பதைத் தமது ஆய்வறிக்கையின் முடிவுகளாக சமர்ப்பித்துள்ளன.

சரி பாதகங்களைப் பற்றி நிறைய பேசியாகி விட்டது. இதனைத் தடுத்து பாதாளத்தில் விழும் சிறார்களை மீட்கும் வழி தான் என்ன?

எந்த ஒரு கல்வி நிறுவனமும் செய்யாத சிறந்த செயல்களைச் சீரமைத்துத் தரும் பயிற்சிக் கூடமாக விளங்குவது ஒரு குழந்தையின் "இல்லம்" மட்டுமே!

உலகில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல் பெட்டிப் பாம்பாக மாறி, தொலைக்காட்சி உட்பட அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு கல்வியை மட்டுமே போதிக்க வேண்டும் என நாம் பரிந்துரைக்கவில்லை. தொலைக்காட்சிகளின் தீமையை எடுத்துரைக்கும் அதே வேளையில் அவை ஏற்படுத்த நன்மைகளையும் இழந்துவிடாமல் இருக்க, தொலைக்காட்சியினால் அடிமைப்படும் மனதை கட்டுப் படுத்தும் வழிகளையே இங்கு முன்வைக்கிறது. எனவே, இதற்கு ஒரு முறைப்படுத்தப் பட்ட சீரமைப்புள்ள திட்டம் தேவைப்படுகிறது.

பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

1. குழந்தை வளர்ப்பில் முழுப் பொறுப்பாளிகளான பெற்றோரே இந்தச் சீரமைப்பைச் செய்ய வல்லவர்கள். தங்கள் பிள்ளையின் காலை கண்விழிப்பு முதல் இரவு உறங்கும் வரையிலான அனைத்து அசைவுகளையும் நேரடியாகக் கண்காணிக்கும் பெற்றோர் குழந்தையின் தொலைக்காட்சி காணும் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும். அத்துடன் குழந்தைகள் காணும் நிகழ்ச்சிகள், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆகிய அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

2. ஒரு குழந்தை, தொலைக்காட்சி முன் அமரும் நேரத்திற்குச் சற்றும் குறையாமல் தன் குடும்பம், நண்பர்கள், சமூகம், உடற்பயிற்சி, விளையாட்டு, நல்ல நூல்களை வாசித்தல், பொது அறிவு, கூட்டுத் தொழுகைகள், இஸ்லாமிய அறிவுப்போட்டிகளில் கலந்துகொள்ளல் ஆகியவற்றிலும் நேரம் செலவழிக்கும்படி பார்த்துக் கொள்ளல் அவசியம்.

3. குழந்தைகளுடனான பரஸ்பர உரையாடல் மிகவும் பலன் அளிக்கும். ஆங்கிலத்தில் இதனை "Not to them, but with them" என்பார்கள். அதாவது, அவர்களது முகம் பார்த்து - முக்கியத்துவம் தந்து உரையாடும் பேச்சுக்களினால் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகின்றன. இந்த வகை ஈர்ப்புகள் தரும் சுவையினால் குழந்தைகள் தொலைக்காட்சியின் வீணான நிகழ்ச்சிகள் ஏற்படுத்தும் மாற்று களியாட்ட வழிகளை தவிர்க்கும்.

4. குழந்தைகளை அடிக்கடி ஆர்வமூட்டும் செயல்களில் ஈடுபடுத்துதல் நலன் சேர்க்கும். குறிப்பாக அவர்களின் எண்ணங்கள், கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், அவை பயனற்றதாக இருந்தாலும் கூட. இத்தகைய செயல்கள் குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்க்கும்.

5. உலகில் அவர்களுக்கு முன் நடக்கும் எந்த ஒரு செய்கைகளாக இருந்தாலும் அதன் தர்க்க முறையிலான விளக்கத்தையும் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இது அவர்களின் படைப்புத் திறனை ஊக்குவிப்பதாக அமையும்.

6. சிறந்த, நல்ல புத்தகங்கள் வாசிப்பதை ஒரு வாடிக்கையாக ஆக்குதல் மிகுந்த பலன் விளைவிக்கும். நூல்களின் முக்கியத்துவத்தினை அவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துக் கூறுதல் சிறந்தது.

7. பெரியவர்கள் சொல்வதை குழந்தைகள் கவனிக்க வேண்டும் என்று முரட்டுத்தனமான அழுத்தத்தை அவர்கள் மீது பிரயோகிக்காமல், அவர்கள் சொல்லுபவற்றை பெரியவர்கள்/பெற்றோர்கள் கேட்கப் பழகுங்கள். அன்போடு மென்மையான முறையில் அணுகினால் எதையும் சாதிக்கலாம்.

செயற்கை உலகத்தில் மனதளவில் ஒரு சிறாரை வசிக்க வைக்கும் தொலைக்காட்சிக் குப்பைகளை விட்டு ஒதுங்கி குழந்தைகளில் முதல் உலகமான பெற்றோர்களைச் சுற்றி வலம் வர வைக்கும் மாயாஜாலங்கள், நிச்சயமாக பெற்றோர்களிடம் தான் உள்ளது. தரமான நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் அதே வேளையில் இவ்வாக்கத்தின் துவக்கத்தில் எடுத்துரைத்த தீங்குகளிலிருந்து நமது இளைய தலைமுறையினரை மீட்டு நேர்வழிப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

செய்திக்கட்டுரை: அபூ ஸாலிஹா





No comments: