அமீரகத்தில் இந்தியாவின் 60 ஆவது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் விபரம் வருமாறு :
அபுதாபி
அபுதாபி இந்திய தூதரகத்தில் இந்திய தூதர் தல்மிஷ் அஹ்மத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் குடியரசு நாள் உரையினை வாசித்தார். இந்திய மக்களுக்கு இந்த நாள் ஒரு முக்கியமான நாளாகும் என்றார். நமது நாட்டுடன் அமீரகத்தின் உறவு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு முக்கியப் பங்கு வகித்து வருவது பெருமை கொள்ள வைப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்திய குடியரசுத் தலைவரின் உரையை வாசித்த அதில் குறிப்பிடப்பட்ட இந்தியாவின் வளர்ச்சி, தீவிரவாத தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டுக் காட்டினார்.
துபாய்
துபாயில் இந்தியாவின் 60 ஆவது குடியரசு தின விழா இந்திய துணைத் தூதர் வேணு ராஜாமணி இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து கொண்டாடப்பட்டது.இதில் நூற்றுக்கணக்கான இந்தியப் பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
துபாயில் கடுமையான போக்குவரத்து நெரிசல், வாகன் நிறுத்த போதுமான இடவசதியின்மை, பாதுகாப்பு சோதனை ஆகியன இருந்தும் இந்தியர்கள் தேசியக் கொடியுடன் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய துணைத்தூதர் வேணு ராஜாமணி தேசியக் கொடி ஏற்றிவைத்து, இந்தியக் குடியரசுத் தலைவரின் உரையினை வாசித்தார். பள்ளி மாணவர்கள் அதனைத் தொடர்ந்து தேசபக்திப் பாடல்களை பாடினர்.
அமீரகத்தின் பிற பகுதிகள்
ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ஃபுஜைரா, ராசல் கைமா, அல் அய்ன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்திய சங்கங்களிலும் இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
மேலும் அமீரகமெங்கும் உள்ள இந்தியப் பள்ளிகள் குடியரசு தின விழா வெகு விமரிசையாக தேசியக் கொடி ஏற்றி வைத்து கொண்டாடப்பட்டது.
No comments:
Post a Comment