ி
நாகர்கோவில், ஜன. 23: ஈரான் கடற்கொள்ளையரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என, நாகர்கோவில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம், அழிக்கால் பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்த அந்தோனியப்பன் மகன் மெதடிஸ் என்ற டியன்சன்.
சவுதி அரேபியாவில் கத்தீப் என்னும் இடத்தில் கடந்த 11 ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்துவந்தார். அங்குள்ள சாதீர் செயது அல்பராப் என்பவருக்கு சொந்தமான படகின் கேப்டனாக பணியாற்றிவந்தார்.
படகில் 5 மீனவர்களுடன் சவுதி அரேபியாவின் கடல் எல்லைக்குள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தார்.
படகை கடத்திச் செல்லும் முயற்சியில் ஈரான் நாட்டை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் படகை செலுத்திய கேப்டனை சுட்டுக் கொல்வதால் படகை எளிதாக கடத்தி செல்ல முடியும் என்ற எண்ணத்தில், படகை செலுத்திய டியன்சனை சுட்டனர். அதில் அவர் இறந்தார்.
படகிலிருந்த இதர மீனவர்கள் கடலில் குதித்து தப்பிவிட்டனர். ஆனால், கொள்ளையர்கள் படகின் அருகில் வராமல் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மரணமடைந்த டியன்சன் உடல் தம்மத்திலுள்ள மஸ்கஸி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உடலை உடனே சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க மத்திய அமைச்சர் வயலார் ரவிக்கும், ரியாத்திலுள்ள இந்திய தூதரகத்துக்கும் கடந்த 18-ம் தேதியே தொலைபேசியில் தொடர்புகொண்டும், பேக்ஸ் மூலம் கடிதங்கள் அனுப்பியுள்ளோம் என்றார் அவர்.
No comments:
Post a Comment