அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 31, 2009

வேரின் பலா - பாரில் உலா!!


 உடன்கட்டை ஏறுதலும் உள்ளம் தடுமாறுதலும்
உயிர்துறக்க முடிவுசெய்யும் உயிரற்ற நிகழ்வுகளும்
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கியே நிற்பதற்கும்
கடுமையான பாவத்தின் கருவாய் அமைவதற்கும்
காத்திருக்கும் அறிவிலிகள் கடவுளுக்கு நன்றிசொல்லி
காட்டாற்று பூவொத்த கைம்மை நோன்பேற்பதற்கும்
சாத்திரங்கள் சடங்கெல்லாம் சத்தியம் என்றுரைத்து
சலிக்காமல் விதவையரை சாகடித்தே ஓய்ந்திடுவர்!

(ஆனால்)

இஸ்லாத்தில் இம்மடமை என்றுமே இருந்ததில்லை!

எங்கேனும் விதவையவர்கள் இருக்கின்ற வீட்டினிலே

"இத்தா"-வின் காலம்வரை இதயம் பொறுத்திருந்து (மீண்டும்)
எல்லா பெண்களைப்போல் இணைந்திடலாம் இல்லறத்தில்!

முஸ்லிம் பெண்கள் முழுமதியாய் ஒளிர்வதற்கும்

முறையற்ற பாவம்விட்டு முத்தாய்ப்பாய் வாழ்வதற்கும்
மூச்சு காற்றினைப்போல் முடிவிலா நற்கருத்தை
முழங்கிடுதே அல்குர்ஆன் முழுநன்றி இறைவனுக்கே!

கைம்பெண்கள் மறுவாழ்வு கனவான காலத்திலே

கற்புநெறி காத்திடவும் கடுந்தனிமை நீங்கிடவும்
கண்டவர்கள் ஏச்சும் பேச்சும் காதில்கேட்காமல்
காற்றில் கலப்பதற்கும் கைம்மைநிலை மறைவதற்கும்

கைம்பெண்கள் துயரங்கள் காட்டுத்தீயாய் பரவும்முன்பே

கடல்நீராய் அதையணைக்க கருத்துரைத்த அண்ணல்நபி
மெய்யாக மணமுடித்து மாந்தர்க்கு முன்மாதிரியாய்
மெய்சிலிர்க்க வைத்தஒளி மேதினியில் உலவிடுதே!

சுதந்திரமாய் கைம்பெண்கள் சுயமாய் முடிவெடுக்க

சொத்தாக ஓருரிமை சுவையாய் உள்ளதிங்கே
சொல்லாலும் செயலாலும் தாம்சொன்னபடி நாம்நடந்தால்
சுவர்க்கநன்மை உண்டென்று சொன்னவர்தான் நபியவர்கள்!

ஒப்புதல் இல்லாமல் மறுமணத்தில் இணைவதற்கு

ஒருபோதும் இஸ்லாம் உரிமை அளிக்கவில்லை (பெண்ணின்)
ஒப்புதல் இசைவொன்று உறுதியான பின்பே
உருவாகி நிறைவேறிடுமாம் பெண்ணுரிமை மறுமணமே!

வேரின்பலா கோரிக்கையற்று பாரில் வீழ்வதனால்

வெளிச்சம் காணாமல் இருட்டறைக்கே சொந்தமென
போரில் தோல்வியுற்ற புகழ்பெற்ற ராணியர்போல்
புலம்புகின்ற பெண்களுக்கு புகலிடம்தாம் எங்குளதோ?

ஏழையாய் பிறப்பதினால் என்றுமே மணமில்லையென்றால்

எங்குதான் மனிதநேயம் இயல்பாய் பூத்திடுமோ?
வாழையாய் வாழ்ந்தால்தான் வறுமைநிறம் மாறுமென்றால்
வாரிக்கொடுத்து விட்டு வள்ளல்போல் மணமுடிப்போம்!

விதவையருக்கு பாடுபடும் விவேக முஸ்லிம்கள்

வீரமிகு அறப்போரின் வெற்றிகொள் வீரனைப்போல்
விடியும்வரை இறைதொழுது விடிந்தபின்னே நோன்பிருந்து
விண்சுவர்க்கம் கரமேந்தும் வியத்தகு மனிதரைப்போல்,

வெளிச்சத்துடன் வாழ்வரென்று வித்தகர் நபிசொன்ன

வியக்கவைக்கும் நற்செய்தி திக்கெட்டும் ஒலிக்கிறதே!
களிப்பான இச்செய்தி நாட்டில் காட்சியாக்கப்பட்டால்
கனிவான நற்கூலி நம்கைமேல் கிடைத்திடுமே!

இல்வாழ்க்கை கடலினிலே ஈமான், தொழுகைநோன்பு

இன்னும் ஜக்காத், ஹஜ் ஐங்கடமையெல்லாம்
நல்வாழ்க்கை வாழ்வதற்கே நாயன் படைத்ததினால்
நன்குநாம் வாழுகின்றோம், நம்பிக்கையுடன் உள்ளோம்!

வாழ்க்கைப்பெருங்கலத்தை வழிநடத்தும் தலைவன் மாண்டால்

வறண்டுவிடும் துணைவிவாழ்க்கை வாய்மை நாமறிவோம்!
வற்றியஜீவநதி மீண்டும் வளைந்தோடல் காண்பதற்கு
வரலாற்று மறுமணத்தை வரவேற்று போற்றிடுவோம்!

தூய நிலவொளியை துய்த்திருக்கும் தும்பைப்பூ

தூக்கம் மறந்துபோன துணையற்ற இருவிழிகள்
நேயர் மறைந்ததினால் நேசம் மறந்துபோய்
நீலவானத்தை நித்தம் நித்தம் நோக்குதிங்கே!

பாயத் துடித்திருக்கும் பாவையெனும் பொன்னருவி

பயமென்ற அணைத்தடுப்பில் பரிதவித்து நிற்கிறதே!
மேயத் துடித்திருக்கும் மிடுக்கான கன்றினைப்போல்
மேதினியில் அவள்துள்ள மேடைபோட முன்வருவோம்!

கொடிதுகொடிது தனிமைகொடிது அதனிலும் கொடிது

கொழுகொம்பற்ற மகளிர்தம் கோரமானதொரு தனிமை
படிப்பினையை நன்குணர்ந்து பாரினிலே யாவருமே
பரிதவிக்கும் விதைவையர்க்கு பார்வைக்கண்ணாய் ஒளிரலாமே!!
ஆக்கம் : அப்துல் ரஹீம்.

No comments: