உள்ளம் தூய்மை பெற ஒரே வழி நோன்பு என்று உலக முஸ்லிம்கள் உன்னதமாய் அதனை நோற்க வள்ளல் அல்லாஹ்வே வாஞ்சையுடன் முடிவு செய்து வழங்கிய அருட்கொடைதான் வளமான ரமளான் நோன்பு! ஈகைத் திருநாள் என்று எல்லோரும் இறைபுகழ் பாடும் இந்த ரமளான் நாளில் இயன்றவரை பொருள் கொடுத்து வாகைசூழ் அல்லாஹ்வின் வானமுத அருளைப் பெறவே வாருங்கள் தோழர்களே வலுவாக கரம் சேர்ப்போம்!!
சுவனம் திறந்திருக்கும் ரமளானில் சுமைகள் குறைந்துவிடும் சோம்பல் ஷைத்தான்கள் சுருண்டு நிற்பர் விலங்கிற்குள்ளே எவரும் அடையும் வண்ணம் ஏற்றமிகு ஓர் இரவு இருக்கின்ற முப்பதில் எப்படியும் வந்தே தீரும்!
ஆவலுடன் அதை அடைய அன்றாடம் நோன்பு நோற்றால் அல்லல் பல தீரும் அவனருள் தினம் கிட்டும் நாவதனை அடக்கி நற்செயல் நிதம் புரிந்தால் நாயன் மன்னிப்பை நமக்கு நல்கியே மகிழ்ந்திடுவான்!!
கையிலுள்ள ரமளானை காற்றில் பறக்க விட்டு நிலையில்லா வரும் ஆண்டில் நோன்பிருக்க எத்தனித்து காத்திருந்த பல பேரை காணவில்லை இப்போது காற்றான உயிர் மூச்சு நின்று விடும் எப்போதும்!
காலத்தை உணர்ந்து இங்கே கடமை ஆற்றி கருத்தாக நோன்பு நோற்றால் - மாதங்கள் ஆயிரத்தின் சாலச்சிறந்த நன்மைபல சாற்றப்படும் நம்மீது சரியான பாதை செல்ல சலிக்காதீர் தீனோர்களே!!
வியக்க வைக்கும் மருத்துவத்தை விஞ்ஞானம் காணும்முன்பே விந்தை நோன்பின் மூலம் விடியலை கொண்டு வந்து தயக்கமின்றி எல்லோரும் தாரணியில் நலம் பெறவே தக்கதோர் மருத்துவத்தை தந்ததுதான் அல் குர்ஆன்!
அண்ணல் நபி வாழ்முறையும் அவர் சொன்ன நன்னெறியும் அன்றுமுதல் இன்று வரை அகலாமல் இருப்பதற்கு எண்ணம் கொண்ட இஸ்லாத்தை யாரேனும் வெறுப்பாரோ எளிதாய் வாழ்ந்திடவே இன்றே உறுதி கொள்வீர்!!
இஸ்லாத்தில் இருப்பதினால் இச்சலுகை கிட்டுமென்றால் எல்லோரும் இஸ்லாத்தை ஏற்பதற்கு தயக்கம் ஏனோ? முஸ்லிமாய் வாழ்ந்திடவே முடிவு செய்துவிட்டோம் என்றால் முகத்தழகும் அகத்தழகும் முத்துபோல் பளிச்சிடுமே!
ஒன்றுபட்ட இஸ்லாத்தில் உயர்தாழ் பேதமில்லை உலகில் உள்ளோர் போற்றும் உன்னத நெறியிதுவே தொன்றுதொட்டு இன்றுவரை எல்லோரும் சோதரரே துடிதுடிக்கும் பகைமையினி தோற்றுவிடும் நம்மிடமே!!
நாடிய காரியத்தை நடத்தி வைக்க "இறை" இருக்க நாம் ஏன் அஞ்ச வேண்டும் நானிலத்தில் பயத்துடனே தேடிய பொருள் கொடுத்து தேவையை பூர்த்தி செய்ய தென்றலாய் அல்லாஹ்வே திக்கெட்டும் வருவானே!
நன்றி சொல்லி நாம் தொழுவோம் - நாயனுக்கே புகழனைத்தும் - நபியவர்கள் மொழி மழையில் நனைந்திடுவோம் தினம் தோறும் - நாட்டிலுள்ள முஸ்லிம்கள் நலம் பெறவே நல்லபல துவா கேட்போம்!! ஆக்கம்: அபு ஷமீம் |
No comments:
Post a Comment