டேலாரம், ஜன. 22: தலிபான் பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இடையே ஆப்கானிஸ்தானில் ரூ. 600 கோடியில் இந்திய கட்டிய நெடுஞ்சாலை பணி பூர்த்தியடைந்தது. இது இந்தியாவின் சாதனையாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் முன்னேற்றத்துக்கு சாட்சியாக விளங்கும் இந்த நெடுஞ்சாலையை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயிடம் வியாழக்கிழமை முறைப்படி ஒப்படைத்தார். இதற்கான விழா ஆப்கானிஸ்தானில் உள்ள டேலாராமில் நடைபெற்றது.
டேலாராமில் இருந்து ஜராஞ்ச் என்ற இடத்தை இணைக்கும் இந்த நெடுஞ்சாலை 215 கி.மீ. நீளம் கொண்டது. இது பொருளாதார, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தொடக்கத்தில் இந்தப் பணிக்கு ரூ. 740 கோடி என மதிப்பிடப்பட்டது. ஆனால் இந்திய எல்லை சாலைகள் கட்டட அமைப்பு ரூ. 600 கோடியில் இதை நிறைவேற்றி உள்ளது. அத்தோடு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று எல்லை சாலைகள் கட்டட அமைப்பு பொது மேலாளர் என்.ஆர்.கே. பாபு கூறினார்.
இந்த நெடுஞ்சாலை ஈரானையும் ஆப்கானிஸ்தானையும் சாலை மார்க்கமாக இணைக்கிறது.
இந்தியாவின் பொருள்களை ஆப்கானிஸ்தானுக்குக் கொண்டு செல்ல இனி பாகிஸ்தானின் தயவு தேவையில்லை. இந்தியப் பொருள்களை பாகிஸ்தான் வழியாக எடுத்துச் செல்ல அந்நாடு அனுமதிக்கவில்லை. இந்த சாலை அமைக்கப்பட்டதால் இனி ஈரான் வழியாக பொருள்களை ஆப்கானிஸ்தானுக்கு எடுத்துச் செல்ல முடியும்.
இந்த நெடுஞ்சாலைப் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டதிலிருந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா - ஆப்கானிஸ்தானின் உறுதி வெளிப்படுவதாக விழாவில் பேசிய பிரணாப் கூறினார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் கூட்டாக செயல்படுவதை எந்த சக்தியாலும் சீர்குலைக்க முடியாது என்பது இந்த நெடுஞ்சாலை பணி பூர்த்தியானதிலிருந்து தெரிந்துகொள்ளலாம் என்று ஆப்கன் அதிபர் கர்சாய் தெரிவித்தார்.
இந்த நெடுஞ்சாலைப் பணியை நிறைவேற்ற நாம் சந்தித்த சவால்கள் ஏராளம். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு மனித உயிரைப் பலி கொடுத்துள்ளோம். அவர்கள் சிந்திய ரத்தம் வீண்போகவில்லை என்றார் பிரணாப்.
இந்த நெடுஞ்சாலை அமைப்பதை தலிபான் இயக்கம் கடுமையாக எதிர்த்தது. எதிர்ப்பை மீறி சாலை அமைப்பு பணிகள் நடைபெற்றதால் அவ்வப்போது தொழிலாளர்கள் மற்றும் படையினர் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த நெடுஞ்சாலை அமைப்பதற்காக 6 இந்தியர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அதுபோல் ஆப்கானிஸ்தான் தரப்பில் 129 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நெடுஞ்சாலையைத் தவிர 58 கி.மீ. நீள சாலைப் பணிகளை இந்தியா முடித்துக் கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment