அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 28, 2009

நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கத் தேவையில்லை: உ.பி. ஆளுநர் ராஜேஸ்வர் யோசனை

சென்னை, ஜன. 19 : நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கத் தேவையில்லை என்று உத்தரப் பிரதேச ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் யோசனை தெரிவித்தார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் 151-வது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:

சில தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விதிகளை மீறி கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி வருகின்றன. இதனால் கௌரவ டாக்டர் பட்டத்துக்கு மதிப்பு இல்லாமல் போகிறது.

பிரபல கலைஞர்கள் மற்றும் விளையாட்டுத் துறையினரை கௌரவிக்க பல வழிகள் உள்ளன. எனவே அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்து வந்த உயர் கல்வி இன்று அனைவருக்கும் சாத்தியமாகி இருக்கிறது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஆனால் கல்வியின் தரம் அவ்வளவாக இல்லை.

தற்போது தமிழகத்தில் 24 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றம் சிறுபான்மை கல்வி நிறுவனங்களை அரசு முறைப்படுத்த வேண்டும். மதம் மட்டுமல்லாமல் மொழி அடிப்படையில் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்களுக்கும் சிறுபான்மை அந்தஸ்து கிடைக்கிறது.

ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் பக்கத்து மாநிலத்தில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கி சிறுபான்மை அந்தஸ்தை பெற்றுவிடுகிறார்கள். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள யஷ்பால் கமிஷன் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

மயில்சாமி அண்ணாதுரைக்கு டாக்டர் பட்டம்:

சந்திரயான் திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் ஆகியோருக்கு கெüரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

தமிழக ஆளுநரும், வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா, உயர்கல்வி துறை அமைச்சரும், இணைவேந்தருமான க. பொன்முடி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

உத்தரப் பிரதேச ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் பட்டமளிப்பு விழா உரையாற்றினார். 76 மாணவர்கள் பதக்கங்களும், பரிசுகளும் பெற்றனர்.

சென்னை லயோலா கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை, தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, அஞ்சல்துறைத் தலைவர் (மெயில் மற்றும் மார்க்கெட்டிங்) க.ராமச்சந்திரன் உள்பட 287 பேர் பி.எச்டி பட்டம் பெற்றனர். மொத்தம் 40 ஆயிரத்து 575 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

சென்னை டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி மாணவி எம். லட்சுமி 5 பதக்கங்களையும், ஏ.எம். ஜெயின் கல்லூரி மாணவர் டி. ஸ்ரீவத்சன், காஞ்சிபுரம் பச்சையப்பா கல்லூரி மாணவி எம். பவானி, திருநின்றவூர் ஜெயா கலை, அறிவியல் கல்லூரி மாணவி வி. கார்த்திகா, சென்னை பல்கலைக்கழகத்தின் இந்திய இசைத்துறை மாணவி கே. பவ்யா ஆகியோர் தலா நான்கு பதக்கங்களையும் பெற்றனர்.

No comments: