உணவுப்பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கஸ்ஸாவுக்குள் கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் தடை செய்துள்ள நிலையில், ஒரு பக்கம் நீண்ட இஸ்ரேலிய பிரிவினைச் சுவரும் மறுபக்கம் எகிப்திய செக்போஸ்ட் அடைப்பும் இருக்க, மனிதர்களைக் கூண்டுக்குள் அடைத்து வைத்து, குண்டுகளைப் பொழிந்ததற்குச் சமமாக சுமார் 16க்கும் மேற்பட்ட எஃப்16 ரக யுத்த விமானங்களின் மூலம் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து "கஸ்ஸா ஆட்சியாளர்களை அழிப்பதாக"க் கூறி வெறியாட்டம் ஆடியிருக்கிறது. எல்லா மருத்துவமனைகளும் இறந்துபோன உடல்களாலும் படுகாயமுற்று உயிருக்குப் போராடும் ஃபலஸ்தீன் மக்களால் நிறைந்து விட்டன. [இஸ்ரேலின் அத்துமீறல்கள் பற்றி அறிய சத்தியமார்க்கம்.காம் தேடல் பகுதியைக் காண்க]
ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்கள் கஸ்ஸாவினுள் செல்வது இஸ்ரேலால் தடுக்கப்பட்டுள்ள நிலையில், எகிப்திலிருந்து வந்த மருந்துப் பொருட்கள் அடங்கிய ஒரு ட்ரக் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அழித்தது. காயமுற்றவர்களின் காயங்களுக்கு இடுவதற்குப் போதிய மருந்தின்றி மருத்துவமனைகளில் காயங்களுடன் ஃபலஸ்தீனியர்கள் அலறித் துடித்தவாறு உள்ளனர்.
மத்தியக் கிழக்கில் 40களின் இறுதியில் ஆரம்பித்த இஸ்ரேலின் மனிதத் தன்மையற்ற இத்தகைய அட்டூழியங்கள், தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்கவும் போராடவும் செய்கின்ற இக்காலகட்டத்திலும் ஃபலஸ்தீனியர்களின் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத்தில் எவ்விதத் தொய்வும் இல்லாமல் தொடர்கின்றது.
அப்பாவி ஃபலஸ்தீன் மக்களின் மீது இஸ்ரேலின் நாசகாரப் படைகள் குண்டுமழை பொழிந்து நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீனரைக் கொன்றொழிக்கும் ஒவ்வொரு முறையும் விழித்துக் கொண்டு, ஒன்றுக்கும் உதவா அறிக்கைகளை வெளியிடும் உலக நாடுகளும் அரபுச் சோற்றுப் பண்டாரங்களும் இம்முறையும் வெற்று அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் மெக்டொனால்டின் ருசியையும் இஸ்ரேலின் கோலாவையும் ருசித்துப் பருகி, கூடிக் குலாவிப் பிரியும் அரபுலீக், இன்று புதன்கிழமை இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளது. வழக்கம் போன்று ஒரு வெற்று அறிக்கையினை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம்.
இஸ்ரேல் செய்யும் அனைத்து மனிதவிரோத பயங்கரவாதங்களுக்கும் சுக்கான் பிடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செருப்பைத் தொடக்கூட தைரியம் அற்ற 'ஐக்கிய நாடுகள் சபை' என்ற பெயரைத் தாங்கியுள்ள அமெரிக்க நாடுகள் சபையின் செயலர் பேங்கிமூன் இஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக அடக்கமாகத் திருவாய் மலர்ந்துள்ளார்.
தனக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட தீர்மானங்களில் ஒன்றைக்கூட மதிக்காமல், தொடர்ந்து அராஜகத்தில் தெனாவெட்டாக ஈடுபட்டு வரும் உலகின் ஒரே நாடு இஸ்ரேலாகும். ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஏதாவது ஓர் ஏழைநாடோ அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சிம்மசொப்பனமாகத் திகழும் தென் அமெரிக்காவின் ஏதாவது ஒரு நாடோ இதுபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மதிக்காமல் இருந்திருந்திருந்தால், அதற்கு ஆயிரம் பொருளாதாரத் தடைகளும் அமெரிக்கப் பெரியண்ணனின் வல்லூறுப் படைகளின் படையெடுப்புகளும் நிகழ்ந்திருக்கும்.
இருநூற்றுச் சொச்சம் குர்து மக்களைக் கொன்றமைக்காக ஒரு நாட்டின் அதிபரான சத்தாம் ஹுசைனைச் சர்வதேசச் சட்டங்களை மதிக்காமல் தூக்கிலேற்றியதை நியாயப்படுத்தும் அமெரிக்காவிற்கு, நினைக்கும்போதெல்லாம் நூற்றுக்கணக்கான மக்களை எறும்புகளை நசுக்குவது போன்று சின்னாபின்னப்படுத்திக் கொலை செய்யும் இஸ்ரேலின் அதிபர்கள் அமைதியின் தூதுவர்களாகத் தெரிவதில் வியப்பொன்றுமில்லை.
ஃபலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இந்த மனிதவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடந்த இரு நாட்களாக ஐக்கிய அரபு அமீரகங்களின் துபை மற்றும் அபுதாபியில் நடந்த பேரணி மற்றும் போராட்டங்களில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி கூறிய வாசகங்கள் இதயம் உள்ளவர்களின் மனதைச் சிதற வைக்கும்:
"நாங்கள் ஏன் இனியும் வாழவேண்டும்?. இஸ்ரேலின் மனித வேட்டைக்காகவே தண்ணீர் தெளித்து விடப்பட்டுள்ள எங்களுக்கு இனியும் வாழவேண்டும் என்ற எண்ணம் ஏதும் இல்லை. எங்கள் குழந்தைகளின், பெண்களின் உயிர்கள் இஸ்ரேலுக்கு விளையாட்டுப் பொருளாக ஆக்கப்பட்டுள்ளது போலும்! நியாயத்திற்கும் நீதிக்கும் குரல் கொடுக்கும் ஒரு நாடு கூட இவ்வுலகில் இல்லையா?. இத்தகைய மனிதத் தன்மையற்ற உலகில் வாழ்வதைவிட நாங்கள் இறப்பதை விரும்புகின்றோம்".
விரக்தியின் விளிம்பிற்கு ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக இஸ்ரேலின் அராஜக, அடாவடித்தனம் கொண்டு சென்று நிறுத்தியுள்ளது. கேட்பதற்குத்தான் நாதியில்லை!
இஸ்ரேல் செய்யும் அடாவடி, அக்கிரமங்களுக்கு அந்த நாட்டுடன் உறவு வைத்துக் கொள்வதை விரும்பும் நாடுகள் மறைமுகமாக ஆதரவு அளிப்பதால், பயங்கரவாதத்திற்கு எதிராக உலகம் திரண்டிருக்கும் இக்காலத்திலும் மனிதத்தன்மையற்ற இத்தகைய அராஜகங்களை எவ்வித அச்சமோ, கூச்சமோ இன்றிச் செய்ய இஸ்ரேல் துணிந்து நிற்கிறது.
பாதிக்கப்படும் மக்களுக்காகப் பரிதாபப்படும் நிலைகூட இன்று மாறியுள்ளது. ஒரு காலத்தில் ஃபலஸ்தீனின் சுதந்திரத்திற்காகவும் அந்நாட்டு மக்களின் அமைதி வாழ்விற்காகவும் யாசர் அரஃபாத்துடன் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி, ஃபலஸ்தீன் மீது அக்கிரமம் புரியும் இஸ்ரேலை அங்கீகரிக்காமல், எதிர்க்குரல் கொடுத்த நாடு நமது இந்தியாவாகும்.
பாதிக்கப்படுபவனின் குரலாக அணிசேராக் கொள்கை மூலம் உலகில் தலை நிமிர்ந்து நின்ற இந்தியா, இன்று அமெரிக்க மோகத்தில் தத்தளிக்கும் சிங்குகளின் கைகளில் சிக்குண்டு அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் காவடி தூக்கி, ஃபலஸ்தீனில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டும் காணாததுபோல் தலையைக் குனிந்து கொண்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரே அங்க அரபு நாடான லிபியா அழைத்த அவசர அழைப்பில் கூடிய ஐநா சபை கூட்டத்தில் பிரான்ஸ், ரஷ்யா உட்பட பலநாடுகள் இஸ்ரேலின் அக்கிரமத்தைக் கண்டித்த அதேவேளை, "ஹமாஸின் தாக்குதலுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடி இது"வென்று வெட்கமின்றி அமெரிக்கா கூறியது. இதனைக் கேட்டு, தான் அதிர்ச்சியடைந்ததாக வெனிசுலா அதிபர் ஹ்யூகோ ஷாவேஸ் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபரைத் தொலைபேசியில் அழைத்து இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த வேண்டும் என சவூதி அரசர் கெஞ்சியிருக்கிறார். இத்தனை நடந்த பின்னரும் எவ்வித வெட்கமும் இன்றி இப்பொழுதும் அமெரிக்காவின் வாயசைப்பிற்காகக் காத்து நிற்கும் சவூதி உட்பட அனைத்து அரபு நாடுகளின் மீதும் லிபிய அதிபர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
இஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக லண்டன், லபனான், சிரியா, ஜோர்டான், இரான் உட்பட உலகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போப்பும் கண்டனம் தெரிவித்தார். உயிரைக் காத்துக் கொள்ள பிறந்த மண்ணிலிருந்து தப்பியோட முயல்பவர்களைத் தடுத்து, இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எகிப்தைக் குற்றம் சாட்டி, யமனிலுள்ள எகிப்துத் தூதரகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜோர்டானில் 30க்கு மேற்பட்ட எம்பிக்கள், "இஸ்ரேலியத் தூதரை வெளியேற்ற வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர். ஒரு எம்பி பாராளுமன்றத்தில் இஸ்ரேலின் கொடியினை எரித்தார். லபனானில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா தாகுதல் நடத்தவேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.
அக்கிரமத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, அக்கிரமக்காரர்களை எதிர்த்துப் போராடுவதையும் குணங்களாக வார்த்தெடுக்கும் இஸ்லாத்தின் ஆன்மீகக் கொள்கைகளை அரசியல் சட்டங்களாக ஏற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் பெயர் தாங்கி அரசுகள், தமது சொந்தச் சகோதரர்கள், சகோதரிகள், குழந்தைகள், முதியவர்கள் ஃபலஸ்தீனில் கொத்துக் கொத்தாகச் செத்து விழும்போதும் அமெரிக்க அண்ணனின் திருவாய் மலர்தலுக்காக கூனிக் குறுகிக் காத்துக் கிடக்கின்றன.
அந்தோ! என்னே பரிதாப நிலை!
தனிமனிதன் சுயநலத்தில் சிக்குண்டு, தான்-தனது என்ற நிலைக்குக் குறுகித் தன்னுள்ளே சுருங்கிய காலம்போய், இன்று நாட்டு மக்களை ஆளும் அரசாங்கங்கள் அந்நிலைக்கு மாறியுள்ளன. ஒரு ஹீப்ருக் கவிதையை இங்குச் சுட்டுவது பொருத்தமாக இருக்கும்:
''நேற்று அவன் எதிர்வீட்டுகாரனைத் தாக்கி அழித்தான்!
இன்று அவன் பக்கத்து வீட்டுக்காரனைத் தாக்கி அழித்தான்!
நாளை உன்னைத் தாக்கி அழிக்க வருவான் - அப்பொழுது
உனக்கு உதவ உன் எதிர்வீட்டுக்காரனோ
உன் பக்கத்து வீட்டுக்காரனோ இருக்கமாட்டார்கள்.''
இன்றுவரை எவ்விதக் கட்டுப்பாடும் அச்சமும் கூச்சமும் இன்றி மனித உயிர்களை ஒரு பொருட்டாகவே கருதாமல் மிருகத் தாண்டவம் ஆடிவரும் இஸ்ரேலை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் யாரெல்லாம் முன்வராமல் இருக்கின்றார்களோ அவர்களெல்லாம் தங்கள் மீதும் இஸ்ரேலின் அநியாயத்தை ஒருநாள் எதிர்பார்க்கட்டும்.
அப்பொழுது இவர்களுக்காகக் குரல்கொடுக்க எவரும் இருக்க மாட்டார்கள்!
No comments:
Post a Comment