இந்நிலையில் கடந்த ஜூலை 23ம் தேதி காலையில், இம்பால் நகரின் சட்டசபை வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் க்வைரம்பான்ட் கெய்தல் கடைவீதிப்பகுதியில் மணிப்பூர் போலிஸ் கமாண்டோப் படை தீவிரவாதிகள் மீதான தேடுதல் வேட்டையை நடத்தியது. அப்போது அப்பகுதியில் சஞ்சித் இருந்துள்ளார்.

கமாண்டோ படையினர் அவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

கமாண்டோ படையினருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அவர் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அவரிடம் ஆயுதங்கள் இருந்ததற்கான அறிகுறியே தெரியவில்லை.

அவர் முகம் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் மிகவும் இயல்பாக இருந்தது.

திடீரென சஞ்சித்தை வளைத்துப்பிடித்தனர் கமாண்டோ படையினர்.

அவரை அருகிலிருந்த மைமு மருந்துக்கடையினுள் இழுத்துச் சென்றனர்.


சஞ்சித்தை விசாரிக்க முனைந்தபோது அவர் 9எம்எம் கைத்துப்பாக்கியால் சுட முயற்சி செய்ததாகவும், எனவே வேறு வழியின்றி கமாண்டை படையினரின் தற்காப்புக்காக அவர் கொல்லப்பட்டார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆனால் சஞ்சித்தின் குடும்பத்தினரோ, நோயுற்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவரது உறவினருக்கு மருந்து வாங்குவதற்காகவே சஞ்சித் அப்பகுதியில் இருந்ததாகவும், அவரிடம் ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர்.

இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரர், அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அச்சம் இருப்பதால் இந்த புகைப்படத்தை வெளியிட துணியவில்லை. ஆனால் டெஹல்கா பத்திரிகையின் செய்தியாளர் தெரசா ரஹ்மானுக்கு இந்த சம்பவம் குறித்தும், புகைப்படம் குறித்தும் தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிப்பூர் கமாண்டோ படையினரின் இந்த வீரசாகசம்டெஹல்கா, 8 ஆகஸ்ட் 2009 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சி நடப்பதாக கூறும் இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளே நடந்து வருகின்றன. ஆனால் இதுபோன்ற புகைப்பட ஆதாரங்கள்தான் சிக்குவதில்லை.
நன்றி : இந்திய மக்களாகிய நாம்...
No comments:
Post a Comment