நடிகர் வடிவேலு மீது ஓய்வு பெற்ற வங்கி உதவி பொதுமேலாளர் பழனியப்பன் நிலஅபகரிப்பு புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரில்,
2006ஆம் ஆண்டில் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் ஒரு தொழில் முதலீட்டு நிறுவனம் சார்பில் 34 சென்ட் நிலம் ஏலத்துக்கு வந்தது. அந்த நிலத்தை எனது மகன் சொக்கலிங்கம் பெயரில் ரூ. 20 லட்சத்துக்கு வாங்கினேன். முன்னதாக, இந்த நிலத்தை அடமானமாக வைத்துத் தொழில் முதலீட்டு நிறுவனத்திடம் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த டி.கே.ராமச்சந்திரன் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. கடனை அவர் திருப்பிச் செலுத்ததால் அந்த நிலம் ஏலத்துக்கு வந்துள்ளது.
எனது மகன் வெளிநாட்டில் இருந்ததால் நான்தான் அந்த நிலத்தை அவ்வப்போது கண்காணித்து வந்தேன். இதற்கிடையே அந்த நிலத்தை நடிகர் சிங்கமுத்துவுக்குப் போலி ஆவணங்கள் மூலம் ராமச்சந்திரனின் மகன் பிரபு விற்றதாக கூறப்படுகிறது. சிங்கமுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேலுக்கு விற்றாராம். போலி ஆவணங்கள் அடிப்படையில் அந்த நிலத்தை இப்போது வடிவேலு தனது மகன் பெயரில் வைத்துள்ளார்.
2009ஆம் ஆண்டு அந்த நிலத்தில் நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர்கள் சுற்றுச்சுவர் கட்ட ஆரம்பித்தனர். அதைத் தடுக்க நான் முயன்ற போது எனக்கு அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.
அது குறித்து, அப்போதைய சென்னைப் புறநகர் காவல் ஆணையர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பழனியப்பன் தனது புகாரில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளான அந்த நிலத்தை திரும்ப ஒப்படைப்பதாக வடிவேலு கூறியதைத் தொடர்ந்து இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக காவல்துறை கூறியுள்ளது.
No comments:
Post a Comment