அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, August 23, 2011

ஏழு மாத போர் முடிவுக்கு வந்தது :கடாபியை காணோம்..

 டிரிபோலி: லிபியத் தலைநகர் டிரிபோலியை நேற்று எதிர்ப்பாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியதை அடுத்து, கடந்த ஏழு மாத காலமாக நடந்த உள்நாட்டுப் போர் அங்கு முடிவுக்கு வந்தது. எனினும், லிபியத் தலைவர் மும்மர் கடாபி, 69, எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. "அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்' என உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. கடாபியின் மூன்று மகன்களை எதிர்ப்பாளர்கள் கைது செய்துள்ளனர். டுனீஷியா, எகிப்து நாடுகளை அடுத்து லிபியாவில் அதன் தலைவர் மும்மர் கடாபியை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஓரிரு நாட்களில் அந்த ஆர்ப்பாட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தன.

டிரிபோலி விழுந்தது: கடந்த சில நாட்களாக, கடாபி ராணுவத்தின் வசம் இருந்த நகரங்கள் படிப்படியாக, எதிர்ப்பாளர்கள் வசம் வந்தன. இதையடுத்து நேற்று முன்தினம், தலைநகர் டிரிபோலியை நான்கு திசைகளிலும் அவர்கள் முற்றுகையிட்டனர். நேற்று டிரிபோலிக்குள் நுழைந்த எதிர்ப்பாளர்கள், எதிர்ப்பட்ட கடாபி ராணுவத்துடன் கடும் மோதலில் ஈடுபட்டனர். எனினும் இந்த எதிர்ப்பு மிகச் சிறிதளவே இருந்தது. நேற்று முன்தினம் வானொலி மூலம் பேசிய கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம், தங்கள் வசம் 65 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் எதிர்ப்பாளர்கள் டிரிபோலி நகருக்குள் நுழைந்த போது அவர்களில் பெரும்பாலோர், சரணடைந்ததால் எதிர்ப்பு பெருமளவின்றி, அந்நகர் விழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன், குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட கடாபியின் மகன் கமீஸ் கடாபி, நேற்று நடந்த தாக்குதலின் போது ராணுவத்தை முன்னின்று நடத்தினார் என செய்திகள் வெளியாயின. நகரின் 90 சதவீதம் தங்கள் வசம் வந்து விட்டதாகத் தெரிவித்த இடைக்கால அரசின் செய்தித் தொடர்பாளர், மீதமுள்ள 10 சதவீதம் பகுதிகள் மட்டும் கடாபி ராணுவம் வசம் இருப்பதாகத் தெரிவித்தார்.

கடாபி மகன்கள் கைது: கடாபியின் குடியிருப்பான பாப் அல் அஜீசியாவை எதிர்ப் படைகள் முற்றுகையிட்டபோது, குடியிருப்பு வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பீரங்கிப் படைகள் வெளிவந்து தாக்குதல் நடத்தின.
அதேபோல், டிரிபோலி துறைமுகத்திலும் கடாபி ராணுவம், பதில் தாக்குதல் நடத்தியது. டிரிபோலியின் பிரதான சதுக்கமான "கிரீன்' சதுக்கத்தில் நேற்று முன்தினம் இரவு வரை கடாபி ஆதரவாளர்கள், பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். ஆனால், நேற்று எதிர்ப்பாளர்கள் அங்கு சென்ற போது, அங்கிருந்தோர் அவர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து கொண்டனர். பாப் அல் அஜீசியாவிற்குள் புகுந்த எதிர்ப்பாளர்கள் அங்கு ஒரு வீட்டில் இருந்த, கடாபியின் மகன்கள், சயீப் அல் இஸ்லாம், அல் சாடி மற்றும் முகமது ஆகிய மூவரை கைது செய்தனர். கடந்த ஜூன் மாதம், சர்வதேச கிரிமினல் கோர்ட் விடுத்த வாரன்ட் பட்டியலில், சயீப் அல் இஸ்லாமும் சேர்க்கப்பட்டிருந்தார் என்பதால், அவரை கோர்ட்டிடம் ஒப்படைப்பது குறித்து லிபிய தேசிய இடைக்கால அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கடாபி எங்கே? : கடந்த மே மாதத்திற்கு பின் பொதுமக்கள் மத்தியில் நேரிலும், "டிவி'யிலும் தோன்றாத கடாபி, பாப் அல் அஜீசியா வளாகத்தில் இருக்கிறாரா அல்லது வேறு எங்கும் தப்பி ஓடிவிட்டாரா என்பது தெரியவில்லை.
நேற்று முன்தினம் அவர் வானொலியில் பேசிய போது, "நான் எங்கும் போய்விடவில்லை. கடைசி வரை உங்களுடன் இருப்பேன்' என்று தெரிவித்தார். அவர் டிரிபோலியில் உள்ள தஜூரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக "அல் ஜசீரா' தொலைக்காட்சி தெரிவித்தது. ஆனால் அச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. அதேநேரம் பாப் அல் அஜீசியாவில் கடாபி பல பதுங்கு குழிகள் வெட்டி வைத்திருப்பதாகவும், அவற்றில் ஏதேனும் ஒன்றில் பதுங்கியிருக்கலாம் எனவும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
கடாபி தப்பியோட, தென் ஆப்ரிக்கா விமானம் அளித்ததாக வெளியான செய்தியை அந்நாடு மறுத்துள்ளது.

அடுத்து என்ன? : கடந்த ஏழு மாத கால உள்நாட்டுப் போரில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், கடந்த இரு நாட்களில் மட்டும் டிரிபோலியில் 1,500க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், லிபியாவில் அடுத்து அரசு அமைப்பது குறித்து, தேசிய இடைக்கால கவுன்சில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அதிகார மாற்றம் ஜனநாயக ரீதியில் தேர்தல் வழிமுறையில் அமைதியான முறையில் நிகழும் எனவும் கவுன்சில் தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்: தேசிய இடைக்கால அரசின் தலைநகரான பெங்காசியில் உள்ள பிரதான சதுக்கத்தில், நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடி எதிர்ப்பாளர்களின் வெற்றியைக் கொண்டாடினர். டிரிபோலி வீழ்ந்ததை அடுத்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் எதிர்ப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, விரைவில் லிபியாவில் அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுவரை நடந்தது என்ன? : எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், பதவி விலகிய மூன்றாம் நாள், பிப்ரவரி 14ம் தேதி லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பெங்காசியில் லிபியத் தலைவர் மும்மர் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் துவங்கின. துவங்கிய ஓரிரு நாட்களிலேயே ஆர்ப்பாட்டங்கள் கலவரங்களாகவும் மோதல்களாகவும் மாறின.
மிஸ்ரட்டா, பெங்காசி உள்ளிட்ட கிழக்குப் பகுதி நகரங்கள் படிப்படியாக, எதிர்ப்பாளர்கள் வசம் வந்தன.
எதிர்ப்பாளர்களை அடக்க லிபிய அரசு வன்முறையைக் கையாளத் துவங்கியது.
அமெரிக்கா, ஐ.நா., மற்றும் ஐரோப்பிய யூனியன், லிபிய அரசு மற்றும் கடாபி மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.
கிழக்குப் பகுதியை நிர்வகிக்க, தேசிய இடைக்கால கவுன்சில் மார்ச் 5ம் தேதி உருவானது.
அமெரிக்கா தலைமையில், மார்ச் 7ம் தேதி முதல், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் இணைந்து வான்வெளிக் கண்காணிப்பில் ஈடுபட்டன. "நேட்டோ' படைகளும் அதில் இணைந்தன.
அமெரிக்காவில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக லிபிய கண்காணிப்புக்கான தலைமைப் பொறுப்பில் இருந்து அந்நாடு விலகியது. மார்ச் 24ம் தேதி "நேட்டோ' பொறுப்பேற்றது.
கடாபி குடியிருப்பு வளாகம் மீது "நேட்டோ' நடத்திய தாக்குதலில் அவரது கடைசி மகன் சயீப் அல் அரப் மற்றும் பேரப் பிள்ளைகள் பலியாயினர்.
கடாபி, அவரது மகன் சயீப் அல் இஸ்லாம், லிபிய உளவுத் துறைத் தலைவரும் கடாபியின் மருமகனுமான அப்துல்லா அல் சனுஸ்ஸி ஆகியோருக்கு ஜூன் 27ம் தேதி சர்வதேச கிரிமினல் கோர்ட் கைது வாரன்ட் பிறப்பித்தது.
இம்மாதத் துவக்கத்தில் இருந்து எதிர்ப்பாளர்கள், கடாபி ராணுவம் வசம் இருந்த நகரங்களைப் படிப்படியாகக் கைப்பற்றி வந்தனர்.
நேற்று முன்தினம் ( 21ம் தேதி), டிரிபோலியை மூன்று திசைகளிலும் முற்றுகையிட்டனர். வடக்கில் உள்ள கடற்பகுதியை "நேட்டோ' முற்றுகையிட்டது.
நேற்று தலைநகர் டிரிபோலிக்குள் எதிர்ப்பாளர்கள் நுழைந்து, கடாபியின் மூன்று மகன்களைக் கைது செய்தனர். நகரின் பெரும்பான்மையான பகுதிகள் எதிர்ப்பாளர்கள் வசம் வந்தன.

லிபியாவின் "புரட்சி வழிகாட்டி' : 1942, ஜூன் 7ம் தேதி லிபியாவின் சிர்ட் நகர் அருகில் உள்ள பாலைவனத்தில் ஒரு கூடாரத்தில் பிறந்தார். லிபியாவில் உள்ள சிறுபான்மை இனக் குழுவான "கடாப்டா' என்ற இனக் குழுவைச் சேர்ந்தவர் கடாபி.
லிபிய ராணுவ அகடமியில் 1965ல் பட்டம் பெற்றார். அக்காலகட்டத்தில் அரபு நாடுகளின் விடிவெள்ளியாகப் போற்றப்பட்ட எகிப்தின் கமால் அப்துல் நாசர் தான் கடாபியின் ஆதர்ச பிம்பமாக இருந்தார். அதனால், லிபியாவின் மன்னராட்சியைக் கவிழ்க்க படிக்கும் போதே திட்டமிட்டார்.
லிபியாவின் அப்போதைய மன்னர் இத்ரிஸ், சிகிச்சைக்காக துருக்கி சென்றிருந்த போது, 1969, செப்டம்பர் 1ம் தேதி தனது 27 வயதில் ரத்தம் சிந்தாத புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
ஆட்சிக்கு வந்த உடன், வெளிநாட்டவர்களை அவரவர் நாடுகளுக்கு விரட்டியடித்தார்.
1969, டிசம்பர் மாதம், லிபிய ராணுவ உயர் அதிகாரிகள் கடாபியைக் கவிழ்க்க முயன்றதை எகிப்து உளவு அமைப்பு தடுத்து நிறுத்தியது.
இதையடுத்து, ஆட்சி அதிகாரம் அனைத்தையும் தனக்கும் தனது குடும்பத்துக்குமாக மாற்றி அமைத்தார்.
தொடர்ந்து யாரும் செய்யாத "புதுமையாக' லிபியாவில் முதலாளித்துவம், கம்யூனிசம் இரண்டுக்கும் மாற்றாக,"நேரடி ஜனநாயகம்' என்ற பெயரில் மக்களின் ஆட்சியைக் கொண்டு வரப் போவதாக அறிவித்தார்.
அதன்படி தனது கொள்கைகளை வகுத்து "பச்சைப் புத்தகம்' என்ற பெயரில் வெளியிட்டார். அதன் அடிப்படையில் லிபியாவில் நிர்வாகம் அமைக்கப்பட்டது.
பெயருக்கு பிரதமர் என்பவர் நியமிக்கப்பட்டார். தன்னை நாட்டின் நிரந்தர "சகோதரத் தலைவர் மற்றும் புரட்சி வழிகாட்டி' என்று அழைத்துக் கொண்டார்.
பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாத அமைப்புகளை பணம் கொடுத்து ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.
சபலபுத்திக்குப் புகழ்பெற்றவர் கடாபி. இவரது மெய்க்காவல் படைகளில் உள்ளோர் அனைவரும் பெண்களே. சமீபத்தில் "விக்கிலீக்ஸ்' மூலம் இவரது பெண் சபலம் பற்றிய தகவல்கள் வெளியாயின.

கடாபிக்கு எதிர்ப்பு ஏன்? : ஜனநாயக ஆட்சி நடப்பதாகக் கூறப்படும் லிபியாவில் கடாபி தான் எல்லாமே.
மாணவர்கள் அவரது "பச்சைப் புத்தகத்தில்' உள்ள அரசியல் கொள்கைகளைப் படிக்கும்படி வற்புறுத்தப்பட்டனர்.
எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன.
கடாபியின் கடந்த 41 ஆண்டுக் கால ஆட்சியில் லிபியா எவ்விதப் பொருளாதார முன்னேற்றத்தையும் காணவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வந்தது.
அண்டை நாடுகளான எகிப்து மற்றும் டுனீஷியாவில் நிகழ்ந்த புரட்சிகள் தான் லிபிய மக்களுக்கும் தூண்டுதலாக அமைந்தன.

அடுத்து என்ன? : முதலில் கடாபியைக் கண்டுபிடிக்க வேண்டும். பின் அவர் சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
அவர் பிடிபடும் வரை, அவரது ஆதரவாளர்கள், கொரில்லாத் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும். அதனால் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
லிபியாவில் விரைவில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்தப்படும் என தேசிய இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் அதில், பல்வேறு இனக்குழுக்கள், கடாபியின் முன்னாள் ஆதரவாளர்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எனப் பலரும் உள்ளனர். அவர்களுக்கிடையில் ஒரு கருத்தொற்றுமை ஏற்படும் வரை லிபியாவின் அரசியல் ஸ்திரத் தன்மை சந்தேகத்திற்கிடமாகவே இருக்கும்.

உலகத் தலைவர்கள் கருத்து :

"கடாபியும் அவரது ஆட்சியாளர்களும் தங்களது ஆதிக்கம் முடிவுக்கு வந்து விட்டதை உணர வேண்டும். அதுதான் ரத்தம் சிந்தும் இப்பிரச்னைக்குத் தீர்வு. தான் எப்போதுமே ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கடாபி கைவிட வேண்டும். லிபியாவின் எதிர்காலம் இனி அந்நாட்டு மக்கள் கையில்'
- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

"லிபிய மக்களின் விருப்பத்தை சீனா அங்கீகரிக்கிறது. விரைவில் அங்கு நிலவரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்புகிறோம்'
- சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மா ஷாவோஷூ.

"டிரிபோலியில் நடக்கும் சம்பவங்கள், கடாபிக்கு இறுதிக் காலம் வந்து விட்டதைக் காட்டுகின்றன. தன் மக்கள் இனிமேலும் பாதிக்கப்படாமல் இருக்க அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். லிபிய மக்களைக் கொன்ற குற்றச் செயல்களை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும்'
- பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்.

"கடாபி தன் மீதான சர்வதேச கிரிமினல் கோர்ட் சுமத்தியுள்ள குற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். பயமில்லாத விடுதலையான, சர்வாதிகாரமில்லாத ஜனநாயகமான புதிய லிபியாவை இனி உருவாக்க வேண்டும். அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடக்க வேண்டும்'
- ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு.

"ஜனநாயக நாடுகள் எனத் தங்களைக் கூறிக் கொள்ளும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள், குண்டு வீச்சின் மூலம் டிரிபோலியைக் கைப்பற்றியுள்ளன. பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள், தொழிற்சாலைகள் என, அனைத்தின் மீதும் அவர்கள் குண்டு மழை பொழிந்தனர். லிபிய மக்கள் மீதும் உலக மக்கள் மீதும் அமைதி நிலவட்டும்'
- வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ்

எண்ணெய் வளமிக்க லிபியா : ஆப்ரிக்க கண்டத்தின், வடபகுதியில், எகிப்தின் அருகில் அமைந்துள்ள மிகப் பெரிய நாடு.
கி.மு., 8000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
லிபியாவின் கிழக்கில் எகிப்து, தெற்கில் சூடான், சாட், நைஜர், மேற்கில், அல்ஜீரியா, டுனீஷியா நாடுகள் உள்ளன. வடக்கில் மத்திய தரைக் கடல் உள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான பகுதி பாலைவனம்.
65 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடு. அவர்களில் 82 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். 97 சதவீதம் பேர் "சன்னி' முஸ்லிம்கள்.
பொருளாதாரத்தில் எண்ணெய் வளம் 95 சதவீத பங்கு வகிக்கிறது.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் 30 சதவீதம்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உள்ளனர்.

கடைசியில் அசைந்தார் கடாபி : வட ஆப்ரிக்க நாடான லிபியா, எண்ணெய் வளமிக்க நாடு. 1951 டிச., 24ல் இத்தாலி, பிரிட்டன் - பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிடியில் இருந்து சுதந்திரம் பெற்றது. முதலாம் இத்ரிஸ் என்பவர் சுதந்திர லிபியாவின் மன்னராக பதவியேற்றார். லிபியாவில் 42 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கடாபியின் முழு பெயர் முயாமர் அபு மின்யர் அல் கடாபி. 1942, ஜூன் 7ல், பிறந்தார். 1956ல் லிபியா சார்பில் இத்தாலிக்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்றார். ஏதென்சின் ஹெலனிக் ராணுவ அகடமியில் பயிற்சி பெற்றார். 1969, செப்.,1ல், லிபிய மன்னர் இத்ரிஸூக்கு எதிராக ராணுவ புரட்சி செய்து ஆட்சியை பிடித்தார். அன்று முதல் நேற்றுவரை இந்த பதவியை தொடர்ந்தார். இவருக்கு ஏழு குழந்தைகள்.
ஆறு மாதங்களாக, இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் பலியாகினர். இருப்பினும் உறுதியுடன் போராடிய கிளர்ச்சியாளர்கள் கடாபியின் ஆட்சிக்கு முடிவு கட்டினர்.

போரட்டத்தின் முக்கிய சம்பவங்கள்: 2011, பிப்.,15: அதிபர் கடாபி பதவி விலகக்கோரி லிபியா புரட்சியாளர்கள் பெங்காசி நகரில் போரட்டத்தில் குதித்தனர். இது நாட்டின் மற்ற நகரங்களுக்கு பரவியது. ஆயிரம் பேர் பலியாகினர்.
பிப்.,21: லிபிய அரசு, போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவி விடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என, பிரிட்டன் பிரதமர் கேமரூன் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் கண்டனம்.
பிப்., 22: எனது உயிரின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என அதிபர் கடாபி சவால்.
பிப்., 25: புரட்சியாளர்கள் மிசுரடா, ஜாவியா உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றினர்.
மார்ச் 17: புரட்சியாளர்கள் மீது லிபிய ராணுவம் தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்.
ஏப்.,30: கடாபியின் இளைய மகன் சயீப் அல் அராப், நேட்டோ படையினரின் வெடிகுண்டு தாக்குதலில் பலி.
ஜூன் 27: கடாபி மற்றும் மகன் சயீப் அல் இஸ்லாம் ஆகியோரை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் பிடிவாரன்ட்.
ஆக., 21: புரட்சியாளர்கள் கிரீன் சதுக்கம் உள்ளிட்ட தலைநகர் டிரிபோலி முழுவதையும் தங்கள் வசம் கொண்டு வந்தனர். கடாபியின் மகன்கள் சயீப் மற்றும் முகமது ஆகியோரை கைது செய்தனர்.
ஆக., 22: உச்சக்கட்ட போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேலானோர் திரண்டு, வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments: